isai vazhkai 90: kaathula soodam pola karaainthavarukkaga - s.v.venugopaalan இசை வாழ்க்கை 90: காத்துல சூடம் போலக் கரைந்தவருக்காக... - எஸ் வி வேணுகோபாலன்
isai vazhkai 90: kaathula soodam pola karaainthavarukkaga - s.v.venugopaalan இசை வாழ்க்கை 90: காத்துல சூடம் போலக் கரைந்தவருக்காக... - எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 90: காத்துல சூடம் போலக் கரைந்தவருக்காக… – எஸ் வி வேணுகோபாலன்

உன்னுள் நான் 

என்னுள் நீ 

நமக்குள் பிரபஞ்சம் 

– சௌம்யா தீபக் பீடு (1979-2023)

நூறுக்கு மேல் இருக்கும், நாற்காலி போதாது போய் நிறைய பேர் நின்று கொண்டிருக்க மேடையேறும் தீபக் பீடு,  ‘இது இரங்கல் கூட்டம் அல்ல, அவளது  வாழ்க்கையைக் கொண்டாடும் தருணம்’ என்று ஆங்கிலத்தில் அறிவிக்கிறார். ‘தனது வலிகள், வேதனைகள் எல்லாம் தாங்கிய அவள் ஒரு போதும் புகார் செய்ததில்லை, எனவே துயரத்தில் மூழ்காமல், நினைவுகளை இங்கே பகிர்ந்து கொள்ள வாருங்கள்’ என்று தொடர்ந்து கேட்டுக்கொள்ளவும் செய்தார்.

இன்னார் என்று அறியாத, ஒரு முறை கூட நேரில் பார்க்கவோ பேசவோ கேள்விப்பட்டிருக்கவோ செய்யாத ஒரு மனுஷியின் மறைவை அடுத்து அந்த நினைவு கூரல் நிகழ்வில் கலந்து கொள்ள, சென்னை அண்ணா நகர் டிவிஎஸ் காலனி சிற்றரங்கு உள்ளே சென்று அமர்ந்திருந்தேன், ஜூலை 9 அன்று மாலை.

சொல்லப்போனால், அவர் மறைந்த இந்த ஜூன் 22 அன்று இரவு பத்து மணிக்கு மிகவும் தற்செயலாகத் தான் அவர் பெயரை, அவரது அசாத்திய ஆளுமையை அறிந்து கொண்டு இப்படியான ஒருவர் உடல்நலக் குறைவு காரணமாக 43 வயதில் மறைய நேர்ந்த பெருந்துயரத்தில் ஆழ்ந்தேன்.  வங்கி அதிகாரி ரஃபி கான் அவர்களோடு அன்றிரவு பேசுகையில் தனது வகுப்புத் தோழருடைய மனைவி காலமானார் என்றார். மேற்கொண்டு தொடர்ந்த உரையாடலில், “அவங்க உங்க ஆளுங்க தான்….அதான்…இசை, எழுத்து, பாட்டு, ஓவியம்…அது தான் சௌம்யா” என்றார்.

மிகுந்த வேதனைக்குள்ளானேன் நானும். வாட்ஸ் அப்பில் உடனே இரண்டு பதிவுகள் பகிர்ந்து கொண்டார்.  மூன்று மூன்று நிமிடங்கள் தான்…..ஆனால் கேட்டு அசந்து போனேன், அந்தக் குரலே ஓர் இசைக்குரல்…ஓர் இசைப்பாடலை வருணிக்கும் இயல் தமிழ் கூட இசைத் தமிழாக ஒலிக்கும் அற்புதம். இளையராஜாவின் இசையை, கங்கை அமரன் வாலி பாடல்களின் அருமையை, பாடகர்களின் குரலினிமையை, ரஹ்மானிசம் என்று ஏ ஆர் ரஹ்மான் இசையை அவர் கொண்டாடிப் பேசுவதைக் கேட்கவே நூற்றாண்டுகள் வாழத் தோன்றும், அவரோ ஐம்பதே தொடாது உதிர்ந்த மலரானார்.

பாடலை எல்லோரும் தான் கேட்கிறோம். ரசிக்கிறோம். திளைக்கிறோம். சௌம்யா ஒரு பாடலை நதியாக உருக்கொள்ளவைத்து அதில் படகோட்டிப் பார்க்கிறார். மற்றொன்றைக் காற்றாக உணர்ந்து அதன் திசையெல்லாம் தானும் நுழைந்து வெளியேறி வருகிறார். ஒரு பாடலின் தொடக்க இசையை, நமது வீட்டுக் கூரை மீது விழும் ஆலங்கட்டி மழை என்கிறார். பாடலில் பித்தாவது இல்லை அவர், ரசனையின் வரைபடத்தைச் சொற்களில் வார்க்க வருகிறது அவருக்கு சுவாரசியமாக. அதன் பெருமிதமோ, செருக்கோ இன்றி இயல்பாகப் பேசிக் கொண்டே இருக்க முடிகிறது.

‘பொத்தி வச்ச மல்லிகை மொட்டு’ பாடலை விவரிக்கையில், (1979இல் பிறந்தவரான சௌம்யா) ‘எண்பதுகளில் இந்தப் பாடல் ஒலிக்காத தேநீர்க் கடை இருந்திருக்காது. தேநீரே, மண் வாசனை சுமந்து தன்னிலை இழந்து இசையில் கலந்து கோப்பையை நிரப்பி இருக்கும்’ என்று தொடங்குகிறார். கர்ணா படத்தின் புகழ் பெற்ற ‘மலரே மௌனமா’ பாடல் குறித்த வருணிப்புகளில் நிறைவாகச் சொல்லுமிடத்தில், மலரின் மௌனத்தை மட்டுமல்ல, மனத்தின் மௌனத்தையும் கலைத்து நம்மை ஹம்மிங் செய்யவைக்கும் மாயாவி…’ என்று கவிதை மொழி சரளமாக வருகிறது.

இரண்டு பாடல்களிலும் எஸ் ஜானகி பற்றியும் எஸ் பி பி பற்றியும் சுவாரசியமான பாராட்டு மொழிகள் சொல்லிக் கொண்டு வருகையில், ‘எஸ் பி பி… இந்த மூன்றெழுத்து மந்திரம், மாயக் குரலோன் இன்னும் கொஞ்ச காலம் வாழ்ந்திருக்கலாம் என்ற ஏக்கம் நம்மை அடைக்காமல் இருக்காது’ என்கிறார் சௌம்யா. அவரது குரலை இப்போது கேட்கையில், இன்னும் எத்தனையோ காலம் வாழ்ந்திருக்க வேண்டியவர் ஏன் இத்தனை வேகமாகப் பிரிந்தார் என்ற வேதனை நெஞ்சை அரிக்கிறது.

ராகங்கள் குறித்தும், இசைக்கருவிகள் குறித்துமான அவரது ஞானம் வானொலி பண்பலை வரிசையில் அவர் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் ஆறாகப் பெருகி ஓடுகிறது. ஹிந்தோளம் ராகத்தைப் பற்றிச் சொல்கையில் அது ஒரு நீரோடை ராகம், தங்கு தடையின்றி ஓடிக் கொண்டே இருக்கும் என்று அவர் சொல்வது போலவே, சௌம்யா அவர்களது பேச்சும் ஆற்றொழுக்கு நடை தான். அந்த ஆறு, கவிதையாக மட்டுமல்ல அவரது கலைத்திறனுக்கேற்ப ஓவிய மொழியாக, காட்சி மொழியாகவும் கூட விரிகிறது.

அந்த நிகழ்வில் முதலாகப் பேசிய அவரது உயிர்த்தோழி ஷோபனா, சௌம்யா பாடல்கள் குறித்துப் பேசிய பதிவுகள் சில அடுத்த நாள்  அனுப்பி இருந்தார். முன்னதாக ரஃபி கான் அவர்களும் இரண்டு பதிவுகள் பகிர்ந்திருந்தார்.

கோவை ரெயின்போ பண்பலை நிலைய அறைக்குள் தொகுப்பாளர் எதிரே மைக் முன் அமர்ந்து அவர் பாடலை விவரிக்கும் காணொளிப் பதிவு அசத்தியது. மாயாமாளவகௌளை ராகத்தில் என்று தொடங்குகிறார். அம்மன் கோயில் கிழக்காலே படத்தில் இடம் பெற்ற ‘பூவ எடுத்து ஒரு மால தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா….’ பாடல் பற்றிய ரசனை அது.

ஜெயச்சந்திரன், எஸ் ஜானகி இருவரின் குரலில் மிகவும் கொண்டாடப்படும் பாடல் அது. எழுதியவர் கங்கை அமரன். அந்தப் பாடலின் அழகு, இசையைக் கற்பிக்கும் ஆசிரியர் நாயகன். மாணவி, நாயகி  என்று சௌம்யா சொல்கிறார்: ‘கற்றுக் கொடுக்கும் ஒரு குருவைப் போல் பாடுவார் ஜெயசந்திரன், அதே வரிகளைக் காதலோடு இசைப்பார் ஜானகி’.  எத்தனை நுட்பமான கேட்டல்.

 

‘பூவ எடுத்து ஒரு மால தொடுத்து வச்சேனே ….’ என்கிற அந்த மெட்டே, மலர்களை ஒவ்வொன்றாக எடுத்துத் தொடுக்கும் இடத்திற்கு நம்மைக் கொண்டுபோய் சேர்த்துவிடுவது. தான தனன தன தான தனன தன்னனா….என்ற தத்தகாரத்திற்கு கங்கை அமரன் எடுத்திருக்கும் சொற்கள் எத்தனை கிராமிய சொல்வழக்கில் காதல் வண்ணமும் பூசிக்கொண்டு உருண்டோடி வருகின்றன….. ‘உன் தோளுக்காகத் தான் இந்த மால ஏங்குது’ என்ற அடுத்த வரி, தொடுத்து வைத்த காதல் மாலையை அடையாளப்படுத்த, ‘கல்யாணம் கச்சேரி எப்போது’ என்கிற பல்லவியின் நிறைவு வரி, குறும்பின்  பன்னீர் தெளிக்கிறது தொடுத்து வைத்திருக்கும் காதல் மாலையில்!

இதயத்தில் பாயும் இரத்த நரம்புகளை கிடார் தந்திகள் கொண்டு மீட்கிறார் ராஜா. காதல் தாபத்தைப் புல்லாங்குழல் இசை உருக்கி வார்க்கிறது சரணங்களை நோக்கிய திசையில்.

‘காத்துல சூடம் போலக் கரையறேன் உன்னால’ என்று எடுத்துக் கொடுக்கிறார் ஜெயசந்திரன். ‘காத்துல சூடம் போலக் கரைந்தே’ விடுகிறார் ஜானகி. அதோடு  நில்லாது, ஆசிரியர் கற்றுக் கொடுக்கக் காத்திராத சூட்டிகை மாணவியாக, ‘கண்ணாடி வள முன்னாடி விழ என் தேகம் மெலிஞ்சாச்சு’ என்று அடுத்த அடிக்குப் போகிறார். ‘கல்யாண வரம் உன்னால பெறும் நன்னாள நெனச்சாச்சு’ என்று அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறார் கங்கை அமரன் காதல் திசையை. ஒற்றை ஒற்றைச் சொற்களாகத் தெறிக்கும் வேகம் பாடல் முழுக்கக் காதல் துடிப்பின் பிரதிபலிப்பாக ஒலிக்கிறது ஜானகி குரலில். அடுத்துத் தொடரும் ஜெயசந்திரன், ‘சின்ன வயசுப்புள்ள கன்னி மனசுக்குள்ள வண்ணக் கனவு வந்ததே’ என்று வியப்பை விரிக்க, பல்லவியின் கடைசி வரியை எடுக்க வைக்கிறார் ராஜா, அம்சமாக, ‘கல்யாணம் கச்சேரி எப்போது’ என்று!  அந்த சொற்கள் ஒவ்வொன்றிற்கும் தாளக்கட்டின் ஆமோதிப்பு அபாரமாக இருக்கும்….

இரண்டாவது சரணம், வாடையா வீசும் காத்து…வளைக்குதே எனைப் பாத்து’  என்கிற இடத்தில் ஜெயசந்திரன் குரல் இப்போது ஆசிரியரும் கற்பிப்பதை நிறுத்திவிட்டு, மாணவியிடம் காதல் கற்றுக் கொள்ளத் தொடங்கிய இடத்தைக் காட்டும். அப்புறம் மாணவியின் பாய்ச்சலுக்குக் கேட்பானேன்… ‘வாங்களேன் நேரம் பாத்து…வந்து என காப்பாத்து’ என்று ஜானகி அபாரமாக எடுப்பார்.  ‘காப்பாத்து’ என்கிற சொல்லில் எத்தனை வேட்கையை நிரப்புகிறார் ! ‘குத்தால மழ எம் மேல விழ அப்போதும் சூடாச்சு….’ என்பதில் காதல் வம்பு இன்னும் ஆழமாகிறது. ‘எப்போதும் என கொத்தாக அண என் தேகம் ஏடாச்சு’  என்கிற இடத்தில் வேகம் பிடிக்கும் ஜானகியின் குரல், ‘மஞ்சக் குளிக்கையிலே நெஞ்சு எரியுதுங்க…கொஞ்சம் அணச்சிக் கொள்ளய்யா ..’ என்று போய், ‘கல்யாணம் கச்சேரி எப்போது’ என்று காரியத்தில் கண்ணாக இருக்க, அந்த மூன்று சொற்களில் தாளக்கட்டு, காதல் மனத்தின் சிறகடிப்பைப்  பிரதிபலிக்கிறது. பாடல் பல்லவிக்கு மீள்கிறது, குதூகலமாக நிறைவு பெறுகிறது.

சொர்ணலதா அவர்களது மிகவும் பேசப்படும் பாடல்களில் முக்கியமானது, சத்திரியன் படத்தின் ‘மாலையில் யாரோ….மனதோடு பேச’. இதுவும் ராஜா இசையமைத்தது. கவிஞர் வாலியின் பாடல். முந்தைய பாடல் காதல் ஏக்கம். இந்தப் பாடல், மோக மயக்கம். இதன் தொடக்க இசையைத் தான் ஆலங்கட்டி மழை என்று விவரிக்கிறார் சௌம்யா.  கடல் சார்ந்த காட்சியொன்றில் இந்தப் பாடலின் இரண்டாம் சரணம் அலை புரளுகையில், சௌம்யா, நெய்தல் நிலத்து விவரிப்பு என்று வாலியைக் கொண்டாடுகிறார்.

 

சொர்ணலதா பாடலைத் தொடங்கும் சுருதி முதல் இந்தப் பாடலின் பயணத்தில் அவரது ஒவ்வொரு சிறப்பம்சத்தையும் சௌம்யா படம் பிடிக்கிறார். முதல் சரணத்தில் வளையல் என்ற வார்த்தையிலிருந்து மேலெழும்பிப் போகும் அழகையும், இரண்டாம் சரணத்தில், அதே மெட்டில் அடடா என்ற வார்த்தையில் அந்தப் பக்குவத்தை அவர் பிடிப்பதன் சுவாரசியத்தை அம்சமாக ரசிகர்களுக்கு எடுத்துக் காட்டுகிறார் சௌம்யா. ‘நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது’ என்ற சொர்ணலதாவின் உத்தரவுக்கு, ரசிகர்களும் உடன்படுவார்கள் என்கிறார். ‘தேகம் பூத்ததே…ஓ ஓ ஓ …மோகம் வந்ததோ…மோகம் வந்ததும் ஓ…ஓ…ஓ…மௌனம் வந்ததோ…’ என்ற இடத்தில் கரைந்து மிதப்பீர்கள், பாடல் முடிந்தாலும், நாள் முழுவதும் என்று நிறைவு செய்கிறார்.

‘மாலையில் யாரோ….மனதோடு பேச…’ உண்மையில் கேட்டுமுடித்த பின்னும் உள்ளூர ஒலித்துக்கொண்டே இருக்கும் பாடல்களின் வரிசையில் இருப்பது. பல்லவியின் இரண்டாவது வரி  ‘மார்கழி வாடை மெதுவாக வீச’  என்றெடுக்கும் போதே, பாடல் சிருங்கார ரசத்தின் இசைப்பொழிவாக உருப்பெற இருப்பதை அடையாளப்படுத்தி விடுகிறது. ‘நெஞ்சமே பாட்டெழுது’ என்பது மனத்திற்கான உத்தரவு போல் தோன்றினாலும், உடல் உணர்ச்சிகளுக்குமான தூண்டுதலாக இருப்பதை, அந்த வரியின் நிறைவிலும்  ‘அதில் நாயகன் பேரெழுது’ என்ற அடுத்த அடியிலும், கடைசி சொல்லின் உகார நீட்சியில் சொர்ணலதா பிடிபட வைத்துவிடுகிறார்.

முதல் சரணத்தை நோக்கிய இசைப்பயணம், நீரில் சொகுசான ஒரு மிதவையில் போகும் அனுபவம். ‘வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற’ என்பது, தூது அவளுக்கு நேரே சொல்லிவிட்டுப் போகும் சேதியைச் சொல்கிறது. ‘வரட்டும் வாசல் தேடி என்று காவல் மீற’ என்பது இவளது பதிலாகிறது. ‘வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்துப் பாடலை’ என்கிற இடம் கேட்போரை சௌம்யா விவரிப்பது போலவே வேறு கிரகத்தில் கொண்டு சேர்த்து விடுகிறது. ‘ஒரு நாள் வண்ண மாலை போட வளர்த்தேன் ஆசைக் காதலை’ என்கிற இடம் இன்பக் கிளர்ச்சியில் தத்தளிக்க விடுகிறது. அங்கிருந்து பல்லவியின் நிறைவு வரிகளான, ‘நெஞ்சமே’ தொடங்குகிறது. அதனூடாக இழையும் வயலின்களின் இசை சொர்ணலதாவின் குரலினிமைக்கு வணக்கம் போடுவது போல் இயங்குகிறது.

இரண்டாவது சரணத்தில் கிடார் இன்னும் நெருக்கமான காதல் தாபத்தை ஊட்டுகிறது. குழல் குழைக்கிறது. வயலின்கள் இதய ஓசையை இசையாக மாற்றத் துடிக்க, உள்ளத்தைக் கிள்ளும் மென்மையான இசைக்கருவிகள் சேரவும், ‘கரைமேல் நானும் காற்றை வாங்கி விண்ணைப் பார்க்க’ என்று இதமாக எடுக்கிறார் சொர்ணலதா. அந்தக் காற்று, போன சரணத்திலேயே காதல் தேவன் வருகையைச் சொன்ன தோழன் தானே…’கடல் மீன் கூட்டம் ஓடி வந்து கண்ணைப் பார்க்க’ என்பதில் நீரில் அலையும் தனது பிம்பத்தில் ஆழும் ரசனை உள்ளடக்கமாக நின்று மோகப் பெருக்கை மேலும் பெருக்குகிறது. ‘அடடா நானும் மீனைப் போலக் கடலில் பாயக் கூடுமோ’ என்பது சிருங்கார ரசத்தின் அடுத்த கட்டம். ‘அலைகள் வெள்ளி ஆடை போல உடலில் ஆடக் கூடுமோ’ என்ற வரியின் சொற்கட்டு வாலியின் அபாரக் கவியாற்றலைப் பேசும். ‘நெஞ்சமே’ என்ற இடத்தில் மேலே சிறகடிக்கிறார் சொர்ணலதா மீண்டும்.

தொடக்க இசையைத் தொடரும் மெல்லிய புல்லாங்குழல் இசை, பாடல் முழுவதும், சரணங்களின் ஒவ்வோர் அடியின் நிறைவிலும் காதல் சூழ்வது போலவே சூழ்ந்து நிரப்புகிறது உள்ளத்தை. வயலின் இசை, கடற்கரை மணலில் வந்து காதலோடு கால்களைத் தழுவிச் செல்லும் அலைகள் போலவே இழையும் இந்தப் பாடல் நெடுக. பாடலின் தாளக்கட்டு, மனவோட்டத்தை ஓர் இதமான பயண வேகத்தில் லயிக்க வைத்துவிடுவதால், பாடல் முடிந்தபின்னும், மனவோட்டம் நிற்பதில்லை. இசை அங்கே தான் நிலைத்து விடுகிறது.

ந்த இரண்டு பாடல்கள் என் வாழ்க்கையில் பெறாது நான் பெற்ற ஒரு தோழமை இதயத்திற்கான எளிய அஞ்சலியாகவே இங்கு படைக்கப்படுகிறது. காலம் சில நேரம் சோதித்துவிடுகிறது. இயற்கை தன்னை மெய்ப்பித்துக் கொண்டே இருக்கிறது. வாழ்க்கையின் உண்மை கொஞ்சம் ஈவிரக்கமற்றே வெளிப்படுகிறது.

ஜூலை 9 சந்திப்பில், நெல்லை மருத்துவர் ராமானுஜம் தனது குழலிசையால் அஞ்சலி தெரிவித்தார். கவிதைக் குழுவில் இழந்த தோழிக்கான இரங்கற்பா, மும்பையிலிருந்தபடி வினோத் கண்ணன் உருக்கமாக அனுப்பியதை, யோகேஷ் எனும் இளைஞர் நெஞ்சதிர வாசித்தார். சௌம்யா அவர்களது  விருந்தோம்பலை, புலம்பல் அற்ற துணிவான வாழ்க்கையை, அபார ஓவியத் திறனை, கொண்டாட்டமான நட்பை சிலிர்க்கச் சிலிர்க்க நண்பர்கள் சொல்லிக் கொண்டே இருக்க, இழப்பின் தவிப்பை மெல்ல ஆற்றிக் கொள்ளப் போராடிக் கொண்டிருந்தார் கணவர் தீபக் பீடு. உடன் கரைந்து நின்றவர்களாக மகன் ஹிதேஷ், மகள் ரித்து, தாய் சாந்தா அம்மாளும்!

சொர்ணலதா மறைவையும் பாடல் விவரிப்பில் குறிப்பிட்ட சௌம்யாவின் மறைவையும் சேர்த்தே இசை தொடர்ந்து பரவுகிறது. அது காற்றில் ஓவியத்தைத் தீட்டுகிறது. அதன் வண்ணங்களில் நாம் இழந்த அற்புதமான மனுஷிகளில் ஒருவரான சௌம்யாவின் கனிவான புன்னகை முகமும் மின்னுகிறது.

 

 

(இசைத்தட்டு சுழலும் ……)

கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691

மின்னஞ்சல் முகவரி: sv.ven[email protected]

Show 4 Comments

4 Comments

  1. Dinesh

    I can’t understand as to why God gives such a short term life to some good human beings. This article is really a great honour to the departed soul 🙏🙏🙏

  2. Raju K

    இசைவாழ்க்கை 90-கடந்து சென்ற திசையை நோக்கி ஆயிரம் கும்பிடுகள். சௌம்யாவுக்கு
    சிறப்பான அஞ்சலி…

  3. Ravi Ramanujam

    இந்த பாடலை பலமுறை தேநீர் கடைகளில் கேட்டிருக்கிறேன்…. ஆனால் இன்று தான் அதன் சுவை அறிய முடிந்தது….ஆஹா…என்ன அருமையான விவரிப்பு…. வாழ்க வளர்க…வாழ்த்து வதற்கு வயது தேவை இல்லை என நினைக்கிறேன்.

  4. ந மனோகரன்

    அற்புதமான பதிவு. பாடல்களின் சிறப்பு நளினம் இவைகளை விட இந்த இருவரது இழப்பு பேரிழப்பு. கண்ணீர் அஞ்சலி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *