மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு இந்தக் கட்டுரை. இசை வாழ்க்கை எழுதாவிட்டாலும் இசை இல்லாமல் வாழ்க்கை இல்லை. வாசகர்கள் என்னை எத்தனை தண்டித்தாலும் தகும். உங்கள் சினத்தைத் தணிக்கும் என்ற நம்பிக்கையில் சுழலத் தொடங்குகிறது இந்த வார எழுத்து.How Vijayakanth repaid Nadigar Sangam's debts and helped Tamil film industry - India Today
ரயில் பயணத்தில் இருக்கையில்தான் திடீர் என்று வந்தது கேப்டன் விஜயகாந்த் மரணச் செய்தி. அதுவரை அவரது வசனங்கள், அடியுதை காட்சிகள், அரசியல் நுழைவு, மேடை பேச்சுகள்….. எல்லாம் பேசிக்கொண்டிருந்த சுவாரசியம் அந்த நொடியில் சட்டென்று விடைபெற்று, எப்போதும் ரசித்துக் கேட்கும் அவரது படங்கள் பலவற்றின் பாடல்கள் ஓடத் தொடங்கி விட்டன மனத்திற்குள்.
அவரது மறைவின் வருத்தத்தைச் சிறிய பதிவாக அப்போதே வாட்ஸ் அப்பில் பகிர்ந்து கொள்ளவும், தி இந்து மூத்த செய்தியாளர் திரு ப.கோலப்பன் அவர்களோடு பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவராக அழைப்பது எப்போதும் வித்தியாசமான விஷயங்களைக் காதலுறப் பகிர்ந்து கொள்வதற்காகவே அமையும். அவர் சொல்லச் சொல்லக் கேட்டுக் கொண்டே இருந்தேன்.
ஆங்கில மாலை நேர ஏடு ஒன்றின் செய்தி நிருபராக அவர் சென்றது விஜயகாந்த் படப்பிடிப்பு ஒன்றிற்காகத் தான் என்றார்.  பிறகு எத்தனையோ சந்திப்புகள், காலம் ஏற்படுத்திக் கொடுத்தது.  விஜயகாந்த் மறைவின் தாக்கத்தில் தான் உடனுக்குடன் எழுதி அனுப்பிய செய்திக் கட்டுரைகளின் இணைய இணைப்புகளையும் அனுப்பிய அவர், பாடல்களை மையமாக வைத்து எழுதியது நீங்கள் எடுத்து வாசிக்கணும் என்று கேட்டுக் கொண்டார்.
பிறகு, வரிசையாக, விஜயகாந்த படத்தின் அருமையான பாடல்கள் சிலவற்றின் பல்லவியை, அபாரமான இசையை எல்லாம் அவர் சொல்ல, பதிலுக்கு நானும் ஒரு பட்டியல் போட அந்த உரையாடல் அருமையாக அமைந்தது.
தான் விஜயகாந்திடம் நேரடியாக இப்படிக் கேட்டதையும் குறிப்பிட்டார் கோலப்பன்;  “உங்களுக்கு மட்டும் இளையராஜா எப்படி அத்தனை சிறப்பான பாடல்களை அமைத்துக் கொடுத்தார் என்று அவரிடமே நேர்ப்பட ஒரு முறை கேட்டுவிட்டேன்…..அதற்கு விஜயகாந்த் சொன்னார், ஏன் ராமராஜன் படத்திற்கு அமைக்கவில்லையா, வேறு கலைஞர்களுக்கும் வாய்க்கவில்லையா, அது ராஜாவோட சிறப்பு சார் என்றார்” என  மிகுந்த மதிப்போடு சொன்னார் கோலப்பன், அவர் எழுதியிருந்த செய்திக்கட்டுரையிலும் இந்த விஷயம் இடம் பெற்றிருந்தது.
அண்மையில், என்னுடைய இணையர் ராஜேஸ்வரியின் சக ஊழியர் ஒருவரது பணி நிறைவு அன்று அவர் இல்லத்திற்குச் செல்கையில், அவருடைய கணவர் திரையில் ஸ்டண்ட் கலைஞராகப் பல படங்களில் பணியாற்றியது அறிந்து பேசிக் கொண்டிருந்தோம். ‘உணவு நேரத்தில் முக்கிய கலைஞர்கள் எல்லாம் இலை போட்டு அமர்ந்து சாப்பிடுவார்கள், எங்களைப் போன்ற ஸ்டண்ட் கலைஞர்களுக்குப் பொட்டல உணவு தான்….ஆனால், விஜயகாந்த் படப்பிடிப்பில் அதை கவனித்துவிட்டு, இதென்ன பாகுபாடு, அவர்களையும் சமமாக இலையில் அமர்ந்து சாப்பிட வையுங்கள் என்று சொல்லி அதை உறுதியும் செய்தார், பெரும்பாலும் சண்டைக் காட்சிகளில் டூப் வேண்டாம் என மறுத்துத் தானே செய்வார், உடன் பணியாற்றும் கலைஞர்களுக்கு அடிபட்டு விட்டால் சிகிச்சை எடுத்துக் கொள்ள வற்புறுத்திப் பணமும் கொடுத்து அனுப்புவார்’ என்றார். Vijayakanth: A man of steel with a heart of gold! - The South First
மறைவிற்குப் பிறகு இன்னும் அதிகம் கொண்டாடப்படும் மனிதர்களில் ஒருவராக நிலைபெற்று இருக்கிறார் விஜயகாந்த். அவரது பாடல்கள் சிலவற்றை யூ டியூபில் போய்ப் பார்த்தால் கோடிக்கணக்கான பார்வைகள், கோடிக்கணக்கான உள்ளங்கள், கோடிக்கணக்கான கொண்டாட்டங்கள் கண்டிருப்பது தெரிகிறது. நாற்பது ஆண்டுகளுக்கு முந்தைய பாடல்களில் ராஜா, தேவா உள்ளிட்டு எத்தனையோ இசையமைப்பாளர்கள் வழங்கிய அந்தப் பாடல்களுக்கு இன்றைய தலைமுறையும் வசப்பட்டு நிற்பது அபாரமானது.
நாங்கள் பம்மலில் குடியிருந்த காலத்தில்தான் குரோம்பேட்டை வெற்றி தியேட்டரில் பார்த்தது, ‘என் ஆசை மச்சான்’ திரைப்படம்.  இசையமைப்பாளர் தேவா அற்புதமாகப் படைத்திருந்தார் பாடல்களை. திரைப்படம் பார்த்துவிட்டு வந்த நாட்களில், ‘கருப்பு நிலா…நீ தான் கலங்குவதேன்…’ பாடல் உள்ளத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது. அதன் அருமையான மெட்டும், பாடல் வரிகளும் ஆட்கொண்டுவிட, அன்றாடம் கண்ணீர் மல்க அதைத் திரும்பத் திரும்பப் பாட வைத்துவிட்டார் கே எஸ் சித்ரா.
சிறு வயது முரளிக்கான   பாடலாகத் தான் அது தொடங்குகிறது, ஆனால், விஜயகாந்துக்கு எழுதப்பட்டதாகவே நிறைவு பெறுகிறது. வயலின்கள் இழைக்கும் உருக்கமான இசையும், குழலிசையில் துளிர்க்கும் நம்பிக்கையும் சேர்த்து ஏந்திச் செல்லும் தாளக்கட்டில் சித்ராவின் குரல் நெகிழ வைத்துக் கொண்டே இருக்கும். எந்தக் காரணமும் இன்றி அமர்ந்து கேட்போரையும் உருக வைத்துவிடும்.

கருப்பு நிலா என்று கொஞ்சியழைக்கும் புதுமையில் தொடங்கும் பாடலில், அந்தக் கருப்பு நிலா என்ற விளி பல்லவியில் எத்தனை முறை ஒலிக்கிறது…ஒலிக்கும் ஒவ்வொரு முறையும் உணர்ச்சிகளை எப்படியெல்லாம் கூட்டுகிறது! En Aasai Machan - Wikipedia
‘கருப்பு நிலா நீ தான் கலங்குவதேன்…துளித்துளியாய்க் கண்ணீர் விழுவது ஏன்…’ என்கிற இடத்திலிருந்தே பாடல், கேட்கும் ரசிகர்களுக்கும் அந்தத் துயரத்தைப் பகிர்ந்து அல்லது அவர்களது துயரத்தைத் தான் பகிர்ந்துகொண்டு பரஸ்பரம் ஆற்றுப்படுத்திக் கொண்டே நகர வைத்துவிடுகிறது. ‘சின்ன மானே மாங்குயிலே ஒன் மனசுல என்ன குறை…பெத்த ஆத்தா போலிருப்பேன் இந்த பூமியில் வாழும் வரை’ என்கிற வரியில் சித்ராவின் குரல் அருளாகப் பொழிகிறது.  பல்லவியின் கடைசி வரி காலகாலமாக அன்னையர் தங்கள் குழந்தைக்கு ஊட்டிவரும் நம்பிக்கை மொழி.
‘கலங்குவதேன்….’ என்ற இடத்தை தேவா எப்படி கண்டடைந்தார், சித்ரா எப்படி அதை அப்படி பரிமளிக்க வைத்தார் என்பது எண்ணியெண்ணி வியக்க வைக்கிறது. தானே இளவயதில் இருக்கும் ஒரு சிறுமி, தன்னினும் இளைய சிறுவனை ஆற்றுப்படுத்தப் பாடும் பாடலது.  தங்கள் மீது கவிந்துவிட்ட வாழ்க்கை சோகம் குறித்த கவலையும், தன்னையும் சேர்ந்தோரையும் தற்காத்துக் கொண்டுவிட முடியுமென்ற நம்பிக்கையும் தான் அந்த வயலினும், புல்லாங்குழலுமாகப் பாடல் முழுக்க உருப்பெற்று இருக்கிறதோ என்று கூடத் தோன்றுகிறது.  இதயத் துடிப்பு தான், வழக்கம்போல தபலா தாளக்கட்டு.
சரணங்களில் சொல்லப்படும் சேதி என்ன என்பதைவிடவும், அவற்றைக் கடத்தும் சித்ராவின் குரலழகும், இசைக்கருவிகளின் அரவணைப்பும் பாடலை நிலைபெறச் செய்துவிடுகிறது. நிறைவாகப் பல்லவியில், ‘கலங்குவதேன்…’ என்ற சொல்லை சித்ரா இழைக்கும்போது, தங்களுக்கான தேறுதல் சொல்லாகவே கேட்போரை உணரச் செய்துவிடுகிறார்.  அவரவர் மனவோட்டங்களில் இருந்து கேட்கும் ரசிகர்களுக்குமான ஆறுதல் மொழியின் தாலாட்டாக நிறைவடைகிறது பாடல். Raasithan Kai Raasithan Song Lyrics
அதே படத்தில் இடம் பெற்ற, ‘ராசி தான் கைராசி தான் உன் மொகமே ராசி தான்’ காதலிசைப் பாடல் தான் என்றாலும், அதனூடாகவும் உணர்வுகளின் இழைகள் நெருக்கமாகப் பின்னிய குரலில் பாடலை வார்த்திருப்பார்கள் சித்ராவும் எஸ்பிபியும்.  ஒரு கிராமத்து வயற்காட்டுக் காதல் கிளிகளின் கீதம் என்பதற்கு ஏற்ற அற்புதமான தாள லயத்தில் சுவையாக வடித்திருந்தார் தேவா.  பெண் மனத்தின் பரவசம் பொங்கும் பாடலாக அமைந்திருந்ததால், சித்ராவின் திறமை மிக்க சங்கதிகளும், இனிமையான பாவங்களும் முன்னுரிமை பெற்றிருக்க, பாலு அந்தக் காதலை அப்படியே கிறங்கி ஏற்றுக் கொள்ளும் நாயகனுக்கான குரலை மென்மையாக எடுத்திருப்பார்.
பல்லவியின் சுகம், சித்ராவின் குரலில் மட்டுமின்றி, அவர் கடைசி வரியிலிருந்து மீண்டும் முதல் வரிக்குத் திரும்புமிடத்தில் ஒலிக்கும் அபாரமான தாள ஒலிக்குறிப்பில்  இன்னும் கூடிவிடுகிறது. பாடல் நெடுகவும் ஒவ்வொரு முறை பல்லவியின் முதல் வரியை எடுக்குமுன் அதே சுவாரசியமான தாளக் குறிப்பு, ‘தாம் தத் தாம் தாம் தாம்’ என்று  உள்ளத் துடிப்பாக ஒலிக்கிறது.  பாடலின் வெற்றிக்கான கடவுச் சொல்லை, ‘உன் மொகமே ராசி தான்’ என்ற இடத்தில் வைத்திருக்கிறார்கள்.  ஒவ்வொரு முறை அந்த வரியை இசைக்கும்போதும் சித்ராவும், பாலுவும் செய்யும் ரசவாதம் அபாரமானது. அதற்கு முன்பான ‘கை ராசி தான்’ என்ற சொற்கள் தவமோ தவம் செய்திருக்க வேண்டும், அப்படி இழைத்து வழங்குவார்கள் இருவரும்.
‘ராசி தான் கை ராசி தான்…உன் மொகமே ராசி தான்’  என்று எடுக்கும் பல்லவியில், ‘ஆத்தாடி….’ என்ற வியப்பின் விரிப்பில் ‘உன் அருமையும் பெருமையும் அறிஞ்சவ இவ தான் தெரியாதா..’.என்று மடித்துக் கட்டிக்கொண்டு, ‘பூச்சூடி’ என்ற இழைப்பில், உன் நினைப்புல மிதப்புல இருப்பவ இவ தான் புரியாதா… என்ற வரிகளின் அடுக்கிலேயே தெரிந்துவிடுகிறது கவிஞர் வாலி என்று! எந்நாளும் என் ஆசை மச்சானே  உன் கூடத் தான் நானிருப்பேன்…உன் துணையாக நல்ல இணையாக என்றும் வாழப் பிறந்தேன்.. என அதே துள்ளோட்டத்தில் பல்லவி அமைகிறது.  இதில், ஆத்தாடி என்கிற உற்சாக சொல்லுக்கும், பூச்சூடி என்ற கொண்டாட்ட சொல்லுக்கும், புல்லாங்குழலில் இருந்து பீறிட்டு வரும் இசை, ஒரு மின்னல் தோரணம் கட்டுவது பாடலின்பத்தைக் கூட்டுகிறது.
சித்ராவின் நீரோட்டக் குரலில் ‘ஊர்ச்சனம் போற்றும் ராஜகுமாரன் உனக்கொரு குறையேது’ என்று தொடங்கும் முதல் சரணத்தின் முதல் வரி, கேப்டனின் அரசியல் நுழைவுக்கான கட்டியம். ‘மாமனில்லாமல் பூமியின் மீது எனக்கொரு துணையேது’ என்று போகும் இரண்டாம் வரி, காதலின் சுகம். அந்த ஓட்டத்திலிருந்து காதல் பந்தாட்டத்திற்கு மாறும் தாள லயத்தில் நுழையும் எஸ் பி பி, ‘கண்டாங்கி புடவை கொண்டாடும் நிலாவ, கையோடு அணைச்சேனே…’ என்கிற கொஞ்சலும், ‘என் பேரை மறந்து உன் பேரைத்தானே எப்போதும் நெனைச்சேனே’ என்று ததும்பலுமாக இழைக்க, மீண்டும் நீரோட்ட கதியைப் பற்றிக் கொண்டு சித்ரா, பனிப்பூப்போல் சிரிக்குது பால் போல் இருக்குது பாவை மனம் தானே’ என்று அபாரமாக சரணத்தை முடிப்பார். கடவுச் சொல் காத்திருக்கும் பல்லவிக்கு ஒயிலாகச் செல்வார். கை ராசி தான் என்ற இடத்தில் அத்தனை சிற்ப வேலைகள் செய்து வடிப்பார்கள் ஒவ்வோர் எழுத்தையும், பாடகர்கள் இருவரும்.ராசிதான் கை ராசிதான் | Raasithan Kai Raasithan | Vijayakanth Hits | Tamil Movie Song HD - YouTube
இந்தப் பாடல், தபலாவும், வயலினும், புல்லாங்குழலும் அமைத்த வெற்றிக் கூட்டணி. பாடலை முன்மொழிந்து வழி நடத்தி நிறைவுரை ஆற்றுவதும் வயலின்கள் தான்! ஆனால் இரண்டாம் சரணத்திற்கு முன்பு சிறப்பு விருந்தினராக அழைக்கப்படும் இடத்தில் புல்லாங்குழலின் சிறப்புரை ஒரு கலக்கு கலக்குகிறது. இரண்டாம் சரணத்தை பாலு தொடங்கி வைக்கிறார், காதலின்பத்தின் பெருவெளியில்…அத்தனை கிறக்கமாக! ஒவ்வொரு சொல்லும் அழகு….அதை அப்படியே பந்தாட்ட கதிக்கு மாற்றும் சித்ராவின் குரல்!  அந்த வரிகளில், ‘கண்ணாடி போலே கல்லால அடிச்சா தண்ணீரும் உடையாது’ என்கிற இடம் சிறப்பானது. என்ன வீச்சான குரல் அது. அங்கே வந்து இணையும் பாலு, ‘பட்டுப் பாய போட்டது, பன்னீர் தூவுது பூக்கள் நமக்காக’ என்று அந்தக் கடைசி வரியை எத்தனை காதலுற இசைக்கிறார்!
நூறு முறை கேட்டாலும் அலுக்காத பல்லவியை இருவரும் மேலும் மெருகேற்ற, சுவாரசியமாக, பாடல் அங்கு முற்றுப் பெறுவதில்லை. வயலின்கள் கொண்டு பல்லவியை நம் நினைவு அடுக்குகளில் குடியேற வைத்துப் பாடலை முடிக்கிறார் தேவா. பாடலுக்கு அத்தனை கம்பீரம் சேர்த்திருப்பார்,  விஜயகாந்த் – ரேவதி இணை அற்புதமாக அமைந்திருக்கும். ரேவதி. பாடல்களுக்கு அத்தனை உயிரோட்டமான நடிப்பை வழங்கி இருப்பார். பாடல் நிறைவில், தபலா இசைக்குறிப்பின் முடிச்சை அத்தனை பாந்தமாகக் கைவிரல்களில் கொண்டுவந்து இருப்பார்.
இசையஞ்சலி, விஜயகாந்த் அவர்களுக்கு மட்டுமல்ல….மிக அதிகம் பாடியிராவிட்டாலும், நெஞ்சில் நிலைபெற்றுவிட்ட பாடலில் என்றும் குடியிருப்பவர் ஆனார் அண்மையில் மறைந்துவிட்ட பவதாரிணி. Ilayaraja's daughter Bhavatharini Raja dies at 47 in Sri Lanka - The Statesman Bharathi Movie: Showtimes, Review, Songs, Trailer, Posters, News & Videos | eTimes
மகாகவி பற்றிய அருமையான அந்தப் படைப்பில் கவிஞர் மு.மேத்தாவின் அற்புதமான பாடல் வரிகளுக்குத் தன்னுடைய தந்தை ராஜாவின் இனிய இசையில் அப்படி பாடியிருந்ததால், அந்த அதிர்ச்சி செய்தி வந்தபோது, அவரே ‘மயில் போலப் பொண்ணு ஒன்றாகிப்’ போனார்.
இயற்கையைக் கொண்டாடும் இளங்காதல் உருக்கத்தை அப்படி வார்த்திருந்தார் அந்தப் பாடலில். சொற்களின் உச்சரிப்பும், கிராமிய இழைப்பும், சங்கதிகளுமாக இனிதாக வாய்த்துத் திரும்பத் திரும்பக் கேட்டு லயித்திருக்க வைத்த குரல் அது.

‘சிறு ஓலையிலே உன் நெனப்ப எழுதி வச்சேன்…ஒரு எழுத்தறியாத காத்து வந்து இழுப்பதுமென்ன’  என்ற வரியை இதற்குமுன் பாடியபோது கிடைக்காத பொருள், இப்போது விம்ம வைத்து வந்தடைகிறது.  ‘மந்தார மல்லி மருக்கொழுந்தே செண்பகமே முனை முறியா பூவே என முறிச்சதேனடியோ’ என்ற வரி, இனி, அவர் நினைப்பில் விசும்ப வைப்பதாயிற்று….
ராஜாவிற்கோ, முதுமையில் மகளை இழக்கும் அவலமும் சோகமும் ஆட்கொண்டிருக்க, இந்தப் பாடலை இசைத்து மகளை வழியனுப்ப நேர்ந்த கொடுமை வேதனைக்குரியது.
இசை, நினைவுகளை மீட்டு எடுக்கிறது. இன்பமாகவோ, துன்பமாகவோ கழிந்த நினைவுகள்!  மறுவாசிப்பு போலவே மறு இசைப்பு அப்போதைய உணர்வுகளின்வழி  முற்றிலும் வேறான அனுபவங்களைப் பரிமாறத் தொடங்கி விடுகிறது. அன்பில் ததும்ப வைக்கிறது. மகிழ்ச்சியின் கண்ணீர் வெளியேற்றி நிதானம் கொள்ள வைக்கிறது. துயரப் பெருக்கில் தாராளமாகக் கதறியழ வைத்து கனம் குறைத்து அமைதி கொள்ள வைக்கிறது. மனிதத்தைத் தக்க வைத்து அருள் பாலிக்கிறது.
(இசைத்தட்டு சுழலும் ……)
             எழுதியவர் 

 

Tamil writers: எழுத்தாளர் எஸ். வி. வேணுகோபாலன்

எஸ் வி வேணுகோபாலன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

  

7 thoughts on “இசை வாழ்க்கை 95 – “இசை முறிச்சதேனடியோ”? – எஸ் வி வேணுகோபாலன் ”
 1. அருமை அற்புதமான பதிவு. விஜயகாந்த் பற்றியும் பவதாரினி பற்றி யும் சிறப்பாக இருந்தது. விஜயகாந்த் மரணித்த பின்னர் தான் மிக மிக கொண்டாடப்பட்ட உள்ளார். முக்கிய காரணி எம்ஜிஆர் ஈகை இவர் பின்பற்றியதே. இவருக்கு பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் வாய்ஸ் பக்கபலம். மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி🙏💕

 2. பாடல் ஏற்கனவே தேன். உங்கள் வர்ணனை பலா.இப்பொழுது பாடல் தேனில் ஊறிய பலா!!

 3. இசை நினைவுகளை மீட்டு எடுக்கிறது..இன்பமாகவோ துன்பமாக வோ..
  என்ற நிறைவு பத்தி அருமை.அற்புதமான பதிவு.வாழ்த்துக்கள்.ரவீந்திரன்

 4. மறைந்த கருப்பு நிலா விஜயகாந்த் அவர்களைப்பற்றியும், பவதாரணி அவர்களைப்பற்றியும் சிறப்பாக எழுதியதற்கும், பாலு, சித்ரா மற்றும் பவதாரணியின் பாடல்களையும் ஞாபகப்படுத்தியதற்கு நன்றி.

 5. கேப்டன் அவர்களுக்கு ஒரு அற்புதமான அஞ்சலி.‌ அவருடைய நற்குணங்களைப் புகழ்ந்து அப்படியே‌ எங்களை அவருடைய பாடல் உலகிற்கு அழைத்துச் செல்வது சிறப்பான யுக்தி.
  பாடல் வரிகளின் அழகிலும், தமிழின் இனிமையிலும் திளைத்து, பாடல் ஆசிரியரின் சாமர்த்தியத்தை சிலாகித்து, இசையமைப்பாளரின்
  திறமையைப் புகழ்ந்து, பாடலின் ராகம், ஆலாபனை ஹம்மிங் மட்டுமன்றி, பாடலின் இடையே அவர் பயன்படுத்திய இசைக்கருவிகளின் நுணுக்கங்களை அணுஅணுவாக ரசித்து, (இசைக்கருவிகள் பற்றிய உங்கள் புலமையையும் வெளிப்படுத்தி)
  பாடகர்களின் குரல் இனிமை, குரலின் ஏற்ற‌இறக்கங்கள் மற்றும் குரல் வெளிப்படுத்தும் உணர்ச்சிக் கொந்தளிப்புகள்‌ அனைத்தையும் மனமாரப் பாராட்டி, இது மட்டுமா, பாடலுக்கு உயிர் கொடுக்கும் நடிகர்களுக்கும் நன்றி சொல்லி,…….
  அப்படியே ஒரு இசை சொர்க்கத்துக்கே எங்களை அழைத்துச்சென்று விடுகிறீர்கள். இசைப் பயணத்தில் உங்களைப்பின் தொடர்வது ஒரு சுகானுபவம்.
  வளரட்டும் உங்கள் இசைப்பணி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *