உலகப் பெண்கள் தின வாழ்த்துகளில் தொடங்குகிறது இசை வாழ்க்கை. மகாகவி பாரதியிடத்தில் இளவயதில் கற்றுக் கொண்டது பாலின சமத்துவம் குறித்த முதற்பாடம். ‘அருளுக்கு நிவேதனமாய் அன்பினுக்கோர் கோயிலாய் ….. புன்மை தாதச் சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய தாய் நிவேதிதையைத் தொழுது நிற்பேன்’ என்று அவர் கொண்டாடும் இடத்தில் பெண் விடுதலை பற்றிய புரிதலைக் கண்டடைந்தார் என்று சொல்லப்படுவதுண்டு.
அண்மையில், புகழ் பெற்ற ஆங்கிலக் கவி ஷெல்லி படைப்புலகம் மீதான அருமையான ஆய்வு ஒன்றை, தனது 77ம் வயதில் தொடங்கி முடித்து முனைவர் பட்டமும் பெற்றுள்ள அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் இயக்கத் தலைவர் கோவை தோழர் கிருஷ்ணமாச்சாரி அவர்களது ஆய்வறிக்கையை அருமையான தமிழில் வழங்கியுள்ள எழுபதே வயது நிறைவடைந்த இன்சூரன்ஸ் தோழர் ரமணன் அவர்களது புத்தக அறிமுக நிகழ்வுக்காக வாசிக்கையில், பெண்ணியக் கருத்துகள், பாலின சமத்துவம் பற்றிய சிந்தனைகள் அவரிடத்திருந்தும் பற்றி இருக்கும் பாரதிக்கு என்று பட்டது. ஏனெனில், தனது ஆங்கில எழுத்துகளுக்கு ஷெல்லி தாசன் என்று புனைபெயர் சூட்டிக் கொள்ளுமளவு ஆழ்ந்திருந்தவன் நமது மகாகவி.
மிகச் சிறந்த இலக்கியவாதி தொமுசி ரகுநாதன் அவர்கள் 1960களிலேயே படைத்த பாரதியும் ஷெல்லியும் எனும் மகத்தான புத்தகம் பற்றி ஷெல்லியின் கண்ணோட்டம் நூல் அறிமுகக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் இயக்கத் தலைவர் தோழர் ஜி செல்வா கண்களில் மின்னல் வெட்டக் குறிப்பிட்டார். தனது கவிதைகள் பலவற்றை இசைப்பாடல்களாக ராகம், தாளம் பற்றிய குறிப்புகளோடே மகாகவி வடித்தது கூட, இசை கொண்டாடியான ஷெல்லியின் தாக்கத்தில் இருந்திருக்கக் கூடும். ஷெல்லியின் இசைப்பாடல்கள் பற்றி அழகாகப் பேசுகிறது அந்த ஆய்வறிக்கை.
பாவேந்தர் பாரதிதாசனும் ஷெல்லியின் இதயம் பறிகொடுத்து இருந்தவர் தான். துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ எனக்கின்பம் சேர்க்க மாட்டாயா என்பது உழைப்பாளி மக்கள் பாடுகளை உணர்ந்து புரட்சிகர கலகக் குரல் எழுப்பிய உலகளாவிய இலக்கியவாதிகள் வரிசையில் எதிரொலிப்பது என்றே கொள்ள வேண்டியிருக்கிறது.
சுரங்கத் தொழிலாளர்கள் தங்களது அன்றாடப்பணி முடித்துக்கொண்டு பூமிக்கடியில் இருந்து வெளியேறி வருகையில் தகவல் பலகையில் தங்களுக்கான மாகவி பாப்லோ நெருடா எழுதி வைத்துச் சென்றிருக்கும் கவிதைகளை நின்று வாசித்துவிட்டுத் தான் நகர்வார்கள் என்று வாசிக்கிறோம். இசையின் மொழி அது.
பெண் விடுதலைக்கான குரல்கள் இசையில் ஆகப் பெரிய அளவில் வந்துவிடவில்லை. இதுவரை எழுதப்பட்டவை, இசையில் மலர்ந்தவை, பரவலாகச் சென்றடைந்தவை போதாது. பெண்களின் காதல் பாடப்பட்டு இருக்கிறது. கண்ணீர் பேசப்பட்டு இருக்கிறது. தன்னை ஓர் ஆணிடம் ‘ஒட்டு மொத்தக் குத்தகையா‘ ஒப்படைத்துப் ‘பூரிக்கும்‘ பாடல்களுக்கும் குறைவில்லை. தன்னை மனுஷியாக நிலை நிறுவிக் கொள்ளும் பெண்ணின் இருப்பை உரக்க எடுத்துச் செல்லும் கீதங்கள் நிறைய மலர வேண்டியிருக்கிறது.
ஓர் ஆண் வெளியூர் செல்லும்போது அவன் மட்டும் செல்கிறான், பெண்ணோ வீட்டையும் சேர்த்து சுமந்து கொண்டு போகவேண்டி இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. காலையில் வீட்டை விட்டுப் புறப்படும் ஆண், மாலை உணவு பற்றியோ மறுநாள் சமையலுக்கான ஏற்பாடுகள் குறித்தோ எந்த சிந்தனையுமின்றி வீடு திரும்ப முடிகிறது. பணிக்குச் செல்லும் பெண்ணின் பொறுப்புகள் அவளது காலடித் தடத்தில் இதயத் துடிப்பு கேட்குமளவு நிரம்பியிருக்கிறது. இன்னும் பேசப்பட வேண்டிய கதைகளும், எழுதப்பட வேண்டிய பாடல்களும், மாற வேண்டிய சிந்தனைகளும் கொட்டிக் கிடக்கிறது.
கலகக் குரலில் ஒலித்த பழைய சில பாடல்கள் எல் ஆர் ஈஸ்வரியின் அதிரடிக் குரலில் மின்னுகின்றன. இயலாமையின் விளிம்பிலும் கம்பீரம் குறையாது நிற்கும் பெண் மனத்தின் குரல்கள் சில பி சுசீலாவிடமிருந்து ஒலித்திருக்கின்றன. சுதந்திர உணர்வின் தெறிப்பில் வாணி ஜெயராம் குரலில் வந்திருக்கும் பாடல்களிலும் பெண்ணிய சிந்தனை சென்றடைந்திருக்கிறது.
வெவ்வேறு விதமான பெண்களின் வாழ்க்கையை ஒரே வீதியில் இருந்து பேசும் அவள் ஒரு தொடர்கதை படத்தின் ‘அடி என்னடி உலகம்…இதில் எத்தனை கலகம்‘ பாடல் ஈஸ்வரியின் குரலுக்காக, ஒரு சுதந்திர உணர்வை பிரதிபலிக்கும் மெல்லிசை மன்னரின் இசைக்காக அதன் கருத்துகளில் மாறுபடுவோர் உள்ளிட்டுப் பலராலும் இப்போதும் அதிகம் கேட்கப்படும் பாடல்கள் வரிசையில் இருப்பது.
‘விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்தச் சிட்டுக்குருவி போலே‘ என்றான் மகாகவி. ‘சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு‘ (சவாலே சமாளி) பாடலை, ஆஹா…எத்தனை பரவசம் பொங்க இசைத்திருப்பார் பி சுசீலா.
சம் சம் சம்சம்
சம் சம் சம்சம்
சம் சம் சம்சம்
லல்லல்ல….
என்று சுதந்திர உணர்வின் குதூகலமும், கொண்டாட்டமும் நுரை ததும்பும் ஹம்மிங் எல்லாம் அத்தனை ஒயிலாகக் கொண்டு சுசீலா தொடங்க, கண்ணதாசன் அவர்களது அபாரமான பாடலை ஒரு காட்டாறு போல் பொங்கிப் பெருகும் இசையில் வழங்கி இருப்பார் எம் எஸ் விஸ்வநாதன். தாளக்கட்டின் லயம் பாடல் முடிந்தபின்னும் உள்ளே ஓடிக்கொண்டே இருக்க, குருவிகளின் விடுதலைக் குரல்கள் எதிரொலித்துக் கொண்டே இருக்கும்.
‘அறம்‘ திரைப்படம் ஒரு சிறுகதை போன்றது தான். காட்சிப்படுத்தலில் ஏராளமான செய்திகளைக் கடத்தியது. மாவட்ட அதிகாரப் பொறுப்பில் ஒரு பெண் இயங்கும் தன்மையை ஒரு சிற்றூர் எதிர்கொள்ளும் நெருக்கடியின் பின்னணியில் எடுத்துக் பேசிய அந்தப் படக் கருவை எடுத்துச் சொல்லும் பாடலின் வரிகள் (கவிஞர் உமாதேவி), ஜிப்ரான் இசையில் ஒலிப்பது முக்கியமாக எடுத்துப் பேச வேண்டியது.
‘புது வரலாறே…புற நானூறே‘ என்று தொடங்கும் இடத்திலிருந்து ‘கொடுவாள் கூறே, நெடுநாள் போரே‘ …என்றும், ‘தடை உடைக்காமல் படை அமைக்காமல் விடை கிடைக்காதே‘ என்றும் இரண்டிரண்டு சொற்களாக வளர்ந்து கொண்டே செல்லும் விவரிப்புகள் இதுவரை திரையில் கேட்கப்படாதவை.
வயலின்களில் இருந்து சிதறும் இசை கல்லான உள்ளத்தையும் அசைத்து அதிர வைக்கும். இசைக்கலைஞரும் ஆசிரியருமான சுந்தரய்யரின் குரல் பாடலுக்கேற்ற உணர்ச்சிகளின் கலவையாய் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
‘இறுதிச் சுற்று‘ படம் விளையாட்டில் தனது திறனை வெளிப்படுத்தும் ஒரு போராளியின் சவால்களையும், வெற்றியையும் பேசும் கதை. மாய விசை பாடல் (விவேக்) அந்தப் போராட்ட வேகத்திற்கான பாடலாக சந்தோஷ் நாராயணன் இசையில் அவரோடு விஜய் நாராயண், ஷியாமலங்கன் இணைந்து பாட உருவாகி இருப்பது. நம்பிக்கையின் தெறிப்பைக் காட்சிப்படுத்தும் இசையாக வெளிப்படுகிறது.
பெண் குடும்பத்தில் பொதுவெளியில் அமைப்புகளில் சுமக்கும் பெரும்பொறுப்புகளை வசதியாக நழுவவிட்டு ஒரு பண்டமாகக் காட்சிப்படுத்துவதில் இருக்கும் லாபத்தை நவீன தாராளமயம் இன்னும் அதிகரிக்கும் வாசல்களைத் திறந்துகொண்டே போகிறது. இன்னொருபுறம் காலகாலமாக போதிக்கப்படும் பெண்ணடிமை தத்துவம் இப்போது நவீன வேடங்களில் புதுப்பிறவி எடுத்து ஆட்டம் போடுகிறது.
இவற்றினூடே ஆதிக்க உணர்வுகளைத் தகர்க்கும் குரல்கள் எழுந்து கொண்டே இருக்கின்றன. அவை, போலியான துதிகளை, விளம்பரப்படுத்தலுக்கான வாசகங்களை, அனுதாப சுரங்களை அடையாளங்கண்டு புறமொதுக்கி உரிய திசையில் முழக்கமிட்டுக் கொண்டிருக்கின்றன.
இசை என்பது மனத்தின் விடுதலை உணர்வில் இருந்தே பிறப்பது. இருளைக் கிழித்துப் பாதையைக் கண்டடையும் வெளிச்சத்தைக் காட்டுவது. சமத்துவத்தின் குரலே இதமான இசை. மனத்துக்கண் மாசிலன் ஆதல் என்பது இசையின் கொண்டாட்டம். உலகப் பெண்கள் தினம், மாசு துடைத்துத் தூய்மைப்படுத்தும் இசையை எழுப்பட்டும்.
(இசைத்தட்டு சுழலும் ……)
எஸ் வி வேணுகோபாலன்
மின்னஞ்சல் முகவரி: sv.ven[email protected]
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
தாமதமாக எழுதினாலும் மிகச்சிறந்த முறையில் இசை வாழ்க்கை யை சுழல வைக்கிறார். ஒரு அதி அற்புதமான படைப்பு. மிக்க மகிழ்ச்சி. நன்றி🙏💕