என்றோ வசித்த
ஒரு தெருவைக்
கடப்பது
அத்தனை எளிதல்ல
ஒரு தெருவைக்
கடப்பது
சமயங்களில்
ஒரு வாழ்வைக்
கடப்பது போல
– சுந்தர்ஜி பிரகாஷ்
மூன்றாவது கட்டுரை எண்ணற்ற அன்பர்களுக்கு உற்சாக வாசிப்பு அனுபவமாக அமைந்தது உண்மையில் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. ஒரு நண்பர், “வாழ்க்கையின் பின்னணியே இசை என்று சொல்லி இருக்கிறீர்களே, வாழ்க்கையின் முன்னணியே இசை தானே?” என்று திருத்தம் முன்மொழிந்து செய்தி அனுப்பி இருந்தார். இசை என்றாலே நாம் அனைவரும் ஓரணி தான் என்று கூவத் தோன்றியது.
பலரும் அந்நாளைய நினைவுகளில் ஆழ்ந்ததைக் குறிப்பிட்டுள்ளனர். அன்பர் ஒருவர், “எங்கள் தாய், அன்பில் மலர்ந்த நல் ரோஜா கண் வளராய் என் ராஜா பாடலைப் பாடித் தான் எங்களைத் தூங்க வைப்பார்…. நாங்கள் அண்ணன் தம்பிகள் 9 பேர். ஒரே ஒரு ராணி பெற்றாள் ஒன்பது பிள்ளை அந்த ஒன்பதிலே ஒன்று கூட உருப்படி இல்லை என்ற பாட்டை வென்று எங்கள் அனைவரது வாழ்க்கையும் நன்கு அமையும்படி வளர்த்தனர் பெற்றோர்” என்று எழுதி இருந்தார். கணவனே கண் கண்ட தெய்வமாகவும், படிக்காத மேதையாகவும் வாழ்ந்த முன்னோர் நினைவுகள் அவை….
வசந்தங்களை மட்டும் அல்ல வாழ்க்கையின் வருத்தங்களையும் மறுவாசிப்பு செய்ய வைக்கின்றன பாடல்கள். “1000 பாடல்கள் ஒலிக்கும், ஆனால், சில பாடல்கள் நமக்காகவே எழுதப் பட்டது மாதிரி தோன்றும். மனம் அந்த 10 பாடல்களையே கேட்க விரும்பும். ஒரு தருணத்தில் வெறுக்கவும் தோன்றிவிடும்” என்று ஒரு வாசகர் வாட்ஸ் அப்பில் எழுதி இருந்தார்.
உண்மைதான்… மிகவும் நேசிக்கும் பொருள்கள், நட்பு அல்லது உறவுகளை ஒரு தருணத்தில் வெறுக்கவும் நேர்கிறது. அதனால் தானோ என்னவோ, சந்தோஷமாகப் பாடும் அதே பாடல் வரிகளை, நாயகனோ நாயகியோ திரைப்படத்தின் வேறொரு காட்சியில் சோகமயமாகப் பாடவும் கேட்கிறோம். அம்மாடி, பொண்ணுக்குத் தங்க மனசு (ராமன் எத்தனை ராமனடி) என்று பொங்கிய வரிகள், வருத்தமாகப் பாடும்பொழுது, என்னவோ நடந்தது நடப்பு, ஏதோ நினைவிலும் இருக்கு என்று பாதை மாறுகிறது. அடி என்னடி ராக்கம்மா (பட்டிக்காடா பட்டணமா) என்ற பல்லவியில் முன்பு ஜொலித்த மாணிக்க சிவப்பு பின்பு கண்ணீரில் கரையுதடி என்றாகிறது. போவோமா ஊர்கோலம் (சின்ன தம்பி) என்ற இன்பத் துள்ளல், நீ எங்கே என் அன்பே என்று குமுறி வெடிக்கிறது.
சென்ற வார எழுத்தில், டிரான்சிஸ்டர் என்று தட்டுப்பட்ட ஒற்றைச் சொல் எத்தனை மாயம் விளைவித்து விட்டது. ஒரு பாடலை வாசிப்பது, கேட்பது, பார்ப்பது மூன்றுமே வெவ்வேறு அனுபவங்களைத் தருகிறது. பாடல் வரிகளை மீண்டும் தானாக விரும்பும்போது பாடிக்கொள்ளவும், சொந்தம் கொண்டாடிக் கொள்ளவும் உருவானவை போலும், பாட்டு புத்தகங்கள்….
ஆஹா.. ஆஹா…சினிமா கொட்டகை வாசலில், இருட்டில் ஒரு காடா விளக்கை ஏற்றி வைத்துக் கொண்டு, அழுக்குச் சட்டையும், நைந்த வேட்டியோ, லுங்கியோ கட்டி அமர்ந்திருக்கும் ஒரு நபர், சாக்குப் பையை விரித்து ஒன்றன் கீழ் ஒன்றாக ஐந்தாறு வரிசைகளில் கறுப்பு வெள்ளை அட்டைப்படங்களில் அந்தந்த திரைப்படத்து நட்சத்திரங்கள் படத்தோடு பாட்டு புத்தகங்கள் விற்றுக் கொண்டிருப்பார். அந்த இடத்தில் இளவட்டக் கும்பல் முண்டியடித்துக் கொண்டு வாங்கிய காலங்கள். உள்ளே இடைவேளை நேரத்தில், டீ, முறுக்கு, சுண்டல், வேர்க்கடலை வகையறாக்களோடு, (ஆமாம், தொகையறா வந்தால் வகையறா வர வேண்டாமா) பாட்டு புத்தகத்தையும் பையன்கள் தியேட்டருக்குள் விற்பனை செய்வார்கள்.
பாட்டு புஸ்தகம் அல்லது பொஸ்தவம் அல்லது புத்தகம் இருக்கிறதே…. அடடா……போனால் போகிறது என்கிற மாதிரியான ஒரு காகிதத்தில் (மலிவான நியூஸ் பிரிண்ட் என நினைக்கிறேன்), பட்டும் படாத அச்சில், தெரிந்தும் தெரியாத மாதிரி எழுத்துருவில் அச்சடிக்கப்பட்டு வரும் என்றாலும், பத்து பைசாவுக்கு ஒரு புத்தகம் எந்தக் காலத்தில் வாங்க முடியும், இனி? பாட்டாளியின் கேளிக்கை இலக்கியம், அந்தப் பாட்டு புத்தகம். தனக்கு பீடி கிடைக்கும் பெட்டிக் கடையில் பாட்டு புத்தகங்கள் ஒரு கயிற்றில் தொங்கவிடப்பட்டிருந்தால், ஒரு தொழிலாளி அதை ஒரு கையால் தொட்டுப் பார்க்காமல் அடுத்த கையில் தேநீர்க் கோப்பையைப் பிடித்து நிற்பதில்லை. பின்னாளில் கதை வசனம் கூட புத்தகமாகக் கிடைத்தது ரசிகர்களுக்கு போனஸ் மாதிரி.
யார் கதை வசனம், யார் இயக்கம், யார் யார் எல்லாம் நடித்தது, முதல் பக்கத்தில் கதைச் சுருக்கம், உள்ளே ஒவ்வொரு பாடலும் ஆண், பெண் என்று பிரித்து வரிகள், மேலே யார் எழுதிய பாடல், பாடியது யார் யார் என்ற குறிப்புகள், அடடா இதை விட வேறென்ன தேடி அலைகிறார் ரசிகர். அன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம் தங்கம் இது தானே…தெய்வப் பிறவி அல்லவா?
தொகையறா என்ற சொல்லை முதன்முதலில் கற்றுக் கொடுத்ததே இந்தப் பாட்டு புத்தகங்கள் தானே…..தாளக்கட்டு, இசை எல்லாம் இல்லாது பாடும் வரிகளை அப்படி தனியே கொடுத்து, அப்புறம் பாடல் கீழே தொடங்கும் இடம் தனித்துக் காட்டப்பட்டிருக்கும். பண்ணின் நேர் மொழியாள் உமை பங்கரோ…. என்று தொடங்கும் திருநாவுக்கரசர் திருப்பதிகம், தொகையறா (திருவருட் செல்வம்). அப்புறம், தாள் திறவாய், மணிக் கதவே தாள் திறவாய் என்று பாடல் புறப்படும்.
அன்னக்கிளி படம் வந்த போது, என் உறவினர் ஒருவர், அன்னக்கிளி உன்னத் தேடுதே என்ற முதல் வரியை அப்படியே பாடி விட்டு, அடுத்த வரியில், ஆறு மாசம், ஒரு வருஷம் அவரன்பு மேனி வாடுதே என்று பாடிக்கொண்டிருந்தார். அவரன்பு இல்லை, ஆவாரம் பூ மேனி வாடுதே என்று சொன்னால் மனிதர் ஒப்புக் கொள்கிற வழியாகத் தெரியவில்லை. யார் சரி என்று நிரூபிக்க பாட்டு புத்தகம் தான் கை கொடுத்தது. ஆனால், அப்பொழுதும் அவர் அசரவில்லை. பாட்டு புத்தகத்தில் தப்பா அச்சாகியிருக்கும். அப்படியே இருந்தால் தான் என்ன, அவரன்பு மேனி வாடுதே என்றால் இன்னும் எவ்வளவு இலக்கியமா இருக்கு என்று முணுமுணுத்துக் கொண்டு போனார் அவர். ஒரு பாடல் பிறந்த பின்னும் கூடவே எத்தனை புதிய பாடல் ஆசிரியர்களை பிரசவிக்கிறது அது.
பாட்டு புத்தகத்தைத் திருத்தமாகக் கொடுத்த பதிப்புகளும் உண்டு, வருத்தி எடுத்த கொடுமைகளும் உண்டு. பாடல் கண்ணதாசன் என்று மேலே போட்டிருக்க, வேறு ஓர் எண்ணதாசன் தனக்குத் தோன்றிய மாதிரி நடுநடுவே இஷ்டத்திற்கு எழுதி அச்சு கோத்து அடித்துத் தள்ளிய புத்தகங்கள் தனி சுவாரசிய கதை.
நாங்களும் இந்தி பாட்டு பாடுவோம் என்று என் அண்ணன் யாதோன் கீ பாராத் படம் வந்தபோது, தமிழில் வெளியிட்ட பாட்டு புத்தகத்தை வாங்கி வந்தார். ‘லேகர் ஹம் திவான தில்’ என்ற பாட்டைப் பாடிக்கொண்டிருந்தார். ஃபிர் தே ஹை மஞ்சில் ரெண்டு என்றார் திடீர் என்று. அது என்ன நடுவில் தமிழ் வார்த்தை என்று பார்த்தால், மன்ஜில் மன்ஜில் என்று இரண்டு தடவை அச்சிட வேண்டிய இடத்தில்,. பாட்டு புத்தகத்தில் மன்ஜில் 2 என்று அச்சாகி இருந்தது. அதைத்தான் கிண்டலாக அண்ணன் அப்படி இசைத்தார்.
பள்ளி திறந்ததும், பாட புத்தகங்கள் வாங்குவதற்கு ஏற்படும் ஆர்வம் போல, படம் வெளியானதும், பாட்டு புத்தகம் வாங்கும் மோகம் இருக்கும். பழைய பாட்டு புத்தகங்களை இரவலாகக் கூடத் தர மாட்டேன் என்று ஒரு சொத்து போல சேகரித்து வைத்தவர்கள் உண்டு. சில படத்திற்குப் பாடல் புத்தகங்கள் விற்றுப் போய் கிடைக்காது தேடும் அன்பர்கள் இந்த மாதிரி புத்தகக் காப்பாளர்களிடம் குறையிரந்து நின்று கேட்டு அங்கேயே வாசல் திண்ணையில் அமர்ந்து இரண்டு முறை படித்துப் பாடிப் பார்த்து விட்டுத் திருப்பிக் கொடுத்துப் போனவர்களும் உண்டு.
வீட்டுக்குள் பாட்டுப் புத்தகத்தை வீட்டுப் பெரியவர்களுக்குத் தெரியாமல் ஒளித்துவைத்து எடுத்துப் பார்ப்பது, வீட்டுக்குள்ளேயே புத்தகம் களவு போவது, தகராறில் கிழிபடுவது, அதன் மீது சண்டையில் மண்டை உருள்வது…..பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள் என்றால் பின் எப்படி? வீரத் திருமகன் கதை எல்லாம் இப்படித்தான்.
மனப்பாடப் பகுதியில் வரும் திருக்குறள், செய்யுள் எல்லாம் அடி பிறழாமல் எழுத வேண்டும் என்று தேர்வில் கேட்பார்கள். திரைப்படப் பாடல்களை மட்டும் என்னவாம், வானொலியில் ஒலிக்கும்போது, கூடவே தங்களது குரலை இழைய வைத்து இனிமையாகப் பாடும் எண்ணற்றோர் மைக்கின் முன் பாட வாய்ப்பு பெற்றதில்லை.
பாடல் தொடங்குமுன் கேட்கும் இசைக்கருவிகளின் குறிப்பை வைத்தே பாடலைச் சட்டென்று சொல்லக்கூடிய நினைவாற்றல் கொண்டிருப்போர் உண்டு. அந்தப் பெருமைக்கு ஈடு இணை கிடையாது. இன்னும் சிலர், கேட்கவே வேண்டாம், டிங் டிங் டிங், டடடட….டம் டம் டம்;..என்று அப்படியே அந்த வாத்தியங்களின் ஓசையையும் சேர்த்துப் பாடத் தொடங்கி விடுவார்கள். வயலின் இசை, தாளக்கட்டு, குதிரை குளம்படி ஓசை எல்லாம் இசைத்து, ‘அழகுக்கும் மலருக்கும் சாதியில்லை’ என்று சமையலறை களைகட்டும். நெஞ்சம் மறப்பதில்லை தானே….
நமது விருப்பமான பாடல்களின் வீதியைக் கடப்பது நம் வாழ்க்கையை மீண்டும் கடப்பது…. இசை, ஒரு கால எந்திரம். பயணத்தைக் தொடர்வோம். .
தொடர் 1 – ஐ வாசிக்க..
https://bookday.in/music-life-series-1-venugopalan-sv/
தொடர் 2 – ஐ வாசிக்க..
https://bookday.in/music-life-series-2-venugopalan-sv/
தொடர் 3 – ஐ வாசிக்க…
https://bookday.in/music-life-series-3-venugopalan-sv/
(இசைத்தட்டு சுழலும் ……)
கட்டுரையாளர் அலைபேசி எண் 94452 59691
மின்னஞ்சல் முகவரி: sv.ven[email protected]
எனது இளமைக்காலத்தையே மறுவாசிப்பு செய்த அழகான அனுபவத்தைப் பெற்றேன். வேணுகோபாலனின் எழுத்து எத்தனை சுவையானது என்று சொல்லித் தெரிய வேண்டுமா?
Music is music is what ever language it is. But the singer adds life to that.you too