Subscribe

Thamizhbooks ad

இசை வாழ்க்கை 92: இசையே பாய் கொடு – எஸ் வி வேணுகோபாலன்

காலை வேளைகளில் சமையல் அறையில் பாடல் கேட்டுக்கொண்டே வேலையில் மூழ்கி இருக்கையில் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் சில பாடல்களைக் கேட்கும்போது, ஆஹா..இந்தப் பாட்டுக்கு என் உயிரைக் கொடுப்பேன் என்று சொல்வது வழக்கம்…. இணையர் ராஜி கேட்பார், இப்படி எத்தனை பாட்டுக்கு உயிர் கொடுத்துக் கொண்டே இருக்கிறது என்று! பல ஆயிரம் உயிர் வேண்டும் போலத் தான் தோன்றுகிறது, இசையின் வரம் உயிரைக் கோரும்போது கொடுக்கத்தானே வேண்டி இருக்கிறது….

நான்கு நாட்கள் தொடர் வேலைகளுக்குப் பிறகு இந்திய வங்கி ஊழியர் சம்மேளன மாநாட்டு மண்டபத்தில் இருந்து வீடு திரும்பத் தயாராகிக் கொண்டிருந்த மையப் பொறுப்பாளர்களை அந்தி சாயும் அந்த நேரத்தில் அங்கே சென்று அவர்கள் பணிகளுக்காக வாழ்த்தப் போயிருந்தேன். என்னையும் அழைத்துக் கொண்டு அவர்கள் புறப்பட்ட நேரத்தில், முற்றிலும் வேறு திசையில் இசைக்கு உரையாடலை மாற்றி, மலையாள இசைக் கலைஞர் ஷரத் அவர்களது காணொளி ஒன்றைத் தொட்டேன் அலைபேசி தொடுதிரையில்.

 

ஒரு பாடலுக்காகத் தனது உயிரைக் கொடுக்குமளவு ரசனையும் கொண்டாட்டமும் வியப்பும் பொங்கிப் பெருகும் கவித்துவமான மொழியில் தமிழ்ப் பாடல் ஒன்றை அவர் விவரிக்கும் பதிவு அது. குறிப்பிட்ட ராகத்தின் அசத்தலான ஸ்வர சுவாரசியங்கள் எல்லாம் பாடிக்காட்டி விட்டு, அதில் அமர்க்களமான பாடலை அமைத்த இசைஞானியின் மேதைமையை வஞ்சனையற்ற சொற்களில் வாழ்த்தி விவரித்து அந்தப் பாடலின் ஒரு சரணத்தை மட்டும் அபாரமாக இசைத்தார் ஷரத்……

‘தூறல் போடும் இந்நேரம் … ‘ என்ற வரிகள் வருகையில் வெளியே மழைத் தூறல் சிதறி விழத் தொடங்கி இருந்ததைக் குறும்பாகச் சொன்னபடி, ‘பார்த்து இறங்கிக் கொள்ளுங்கள் உங்கள் இடம் வந்துவிட்டது’ என்றார் தோழர் என் ராஜகோபால் ! அந்த இடத்தில் இருந்து பாடலைத் தொடர்ந்து பாடிக்கொண்டே வீடு வந்து சேர்ந்த பின்னும் பாடல் ஓடிக் கொண்டிருக்கவே செய்கிறது இரண்டு வாரங்களாக நெஞ்சில்!

தனக்குப் பிடித்த பாடல்கள் சிலவற்றைப் பற்றி ஷரத் பேசும் காணொளிப் பதிவுகள் மிகவும் தற்செயலாகச் சில மாதங்களுக்குமுன் ஏதோ ஒரு பாடலைத் தேடுகையில் தட்டுப்பட்டது. அப்படி ரசிக்கிறார் மனிதர். அசாத்திய…என்ற சொல் அப்படி உச்சரிக்கிறார். சொல்லற்று உச்ச ரசனை தொண்டையைக் கவ்வும்போது…உஃப் என்று உறைந்து போகிறது அவரது குரல்! பாடலை அவர் ரசிக்க ரசிக்கப் பேசுவதே ஓர் இசையாக ஒலிக்கிறது. நவில் தொறும் நூல் நயம் என்றார் வள்ளுவர். இசை நயம், ஷரத் கண்கள் இமைக்கும் தொறும் தெறிக்கிறது காணொளியில்.

தென்றல் வந்து என்னைத் தொடும் (தென்றலே என்னைத் தொடு) பாடலை, 2050இல் கூட….நான் உயிரோட இருந்தால்… அப்போதும் ரசிப்பேன் என்று எழுதுகிறார் யூடியூபில் .ஒருவர். இது தான் பாடலுக்காக உயிர் தரித்தல்! வாலியின் பாடல் இது. அவரைப் பற்றி சொல்லணுமா என்ன, அவர் எழுதுகிறார் என்றாலே போதுமே, கேட்கணுமா என்று குறிப்பிடுகிறார் ஷரத். யார் யார் பாடியது…..நம்மட பிரியப்பட்ட என்ற வார்த்தைகள் போதாதா….. எஸ் ஜானகியும், தாஸேட்டனும் என்று பாதாம் அல்வாவைச் சுவைக்கும் ருசியில் சொல்கிறார். ஆம், எஸ் ஜானகி, கே ஜே யேசுதாஸ் பாடிய பாடல் தான் அது! பிறகு கம்போசிங் யாரு என்று நிறுத்தி….அங்கிருந்து வியப்பை விரிக்கிறார் ஷரத், இளையராஜா இந்தப் பாடலில் வழங்கி இருக்கும் அந்த சுகானுபவத்தை! பின்னர் எடுத்துக்காட்டுக்கு ஒரு சரணத்தை மட்டும் இனிமையாக இசைத்து விடை பெறுகிறார்.

கடற்கரை மணலில் ஒரு மாலை நேர மென்னடை தான் இந்தப் பாடல்…. காதல் எப்போதும் இப்படி மிகுந்த பதத்துடன் பணிவாகத் தான் தொடங்குகிறது. இதமான காற்று வீசுகிறது. கடல் நீர் பட்டுக் குளிர்ந்து வீசும் காற்று…. நேரம் செல்லச் செல்ல இருள் போர்வையைக் கடல் போர்த்திக் கொள்ளவும், நிலவில் மின்னும் அலைகளின் ஈரமும், இலேசான மழைச் சாரலும் தெறிக்க, இப்போது காதல் கடலருகே போய் ஒட்டி நின்று மணலில் தனது பெயரைக் கால் விரல்களால் எழுதியபடி இன்னும் குழைந்திருக்க, அந்தப் பெயரை ஆசீர்வதிக்கும் அலைகள் கால்களை மெல்லத் தழுவி விளையாடியபின் கடலுள் சென்று மோகத்தைப் பெருக்கிக்கொண்டு மீண்டு வந்து உற்சாகம் பொங்கக் காதலை முற்றுமாகக் கட்டித் தழுவி மேலும் சிலிர்க்க வைக்கும் விளையாட்டு தான் இந்தப் பாடல்.

 

தொடக்க இசையோடு புறப்படும் கிடார் மீட்டல், தா னா னே தா னா னே தானா…என்று காதலின் கதவைத் தட்டி அழைக்கிறது. தனனன்ன னன்னா என்று இறங்கிக் கிளர்ச்சியுற வைக்கும் நேரம், வயலின் இசை தானாகக் கதவை விசையோடு திறந்து கைப்பிடித்து வெளியே கொண்டு வந்து நிறுத்தி விடுகிறது. பிறகென்ன… யேசுதாஸ்… மலரின் உடன்பிறப்பு அவரது குரல். ‘தென்றல் வந்து என்னைத் தொடும்….’ ஆஹா என்று நாம் சொல்ல வேண்டாம்…பாடலிலேயே அதைக் கொண்டு வந்துவிடுகிறார் வாலி…’சத்தம் இன்றி முத்தம் இடும்’ ! சரி, தடையாக இருக்கும் பகலை என்ன செய்யலாம்…பணிவாக வழியனுப்பு! ‘பகலே போய்விடு’ பகல் போயாகிவிட்டது. அப்புறமென்ன? ‘இரவே பாய் கொடு’! இரவின் இயல்பான நேரத்திற்கும் அப்பால் விரியும்படி ‘பா…..ய் கொடு’ என்று இருளையே விரிப்பாக்கிக் கொள்ள வைக்கிறார் யேசுதாஸ். ‘நிலவே….’ என்கிற விளியில் அத்தனை காதலுறவு கொஞ்சுகிறது…..’பன்னீரைத் தூவி ஓய்வெடு..’ இதிலும், பன்னீரை எந்திரமாகத் தெளிக்காமல் நிதானமாக முழுக்கத் தூவவும், இடையே மீண்டும் வந்து மேவவும் அருகேயே ஓய்வெடுக்கச் சொல்கிறார். அதை வழிமொழிய வரும் எஸ் ஜானகி சுருக்கமாக முதல் இரு வரிகளோடு முடிக்கிறார்.

முதல் சரணத்தை நோக்கிய கடற்கரை மணல் நடையில் இப்போது வயலின் சில்லென்ற காற்றைச் சற்று வேகமாக வீசித் தர, ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் நிலவின் மொழியில் வீணை பேசத் தொடங்குகிறது. அந்த இடத்தில் புல்லாங்குழல், காதல் மேல் அருள் பாலிக்கிறது. அலைகளைப் பார்த்தவண்ணம் மணல் மேல் வாட்டமாக அமரும் காதல் மீது அடிக்கும் காற்றில் ஈரப்பதம் கூடியிருக்கிறது.

‘தூறல் போடும் இந்நேரம்…தோளில் சாய்ந்தால் போதும்’ என்கிறார் யேசுதாஸ். நானென்ன செய்யட்டும் மழை வருகிறது, வேண்டுமானால் என் மீது சாய்ந்து கொள் என்பது எப்பேற்பட்ட சுவாரசியமான காதல் மொழி! ‘சாரல் பாடும் சங்கீதம்…கால்கள் தாளம் போடும்’ என்னும் ஜானகியின் குரலில் தான் எத்தனை வசீகரம்! இப்போது காதல் மெல்ல எழுந்து அலைகள் வந்து தொட்டுப் போகும் இடத்தில் நிற்கிறது….’தெரிந்த பிறகு திரைகள் எதற்கு….’ அலைகள் வந்து தழுவும் இசையை வயலின் மெல்லப் பின்னணியில் ஒலிக்கிறது. ‘நனைந்த பிறகு நாணம் எதற்கு..’இப்போதும் வயலின் வந்து தழுவிப் போகிறது. ‘எதற்கு’ என்ற சொல்லை, இருவரும் எத்தனை சங்கதிகளோடு அபாரமாக இசைக்கின்றனர் ! ஓர் இளநகை கொடுத்துத் தான் ‘நாணம்’ என்னும் சொல்லை எடுக்கிறார் ஜானகி. அலைகள் இப்போது ஆர்ப்பரிப்போடு வந்துகொண்டிருக்க, ‘மார்பில் சாயும் போது’ என்று யேசுதாஸ் முடிக்கக் காத்திருந்து வயலின் இசை முற்றாகப் பெருகி உடல் நனைத்து மீள்கிறது.

பல்லவிக்கு இருவரும் திரும்ப, இரண்டாம் சரணத்தை நோக்கிய திசையில் மீண்டும் கரையேறி நிற்கும் காதல், புல்லாங்குழல் மொழியில் தரதத் தரதத் தரதத் தரதத் தரதத் தரதத் தா…என்ற விளையாட்டில் இறங்கிவிட, மெல்ல இணையும் வயலின் இசை, காதலைச் சுற்றி ஒரு வட்டமடித்து ஒரு விசில் கொடுத்து மீண்டும் அலைகள் பக்கமே தள்ளிவிடுகிறது. காதலின் மொழி இன்னும் கனியத் தொடங்குகிறது,

இரண்டாம் சரணத்தில்! ‘தேகம் எங்கும் மின்சாரம் பாய்ந்ததேனோ அன்பே…’ என்பது தேன் பொங்கும் கேள்வி. ‘மோகம் வந்து என் மார்பில் வீழ்ந்ததேனோ கண்ணே’ என்பது மதுவாகவே ததும்பும் பதில். ‘மலர்ந்த கொடியோ மயங்கிக் கிடக்கும்’ என்பதில் அந்த ‘மயங்கி’ என்பதில் எத்தனை கிறக்கம் இறக்கி வைக்கிறார் ஜானகி. ‘இதழின் ரசங்கள் எனக்குப் பிடிக்கும்’ என்ற வரியில் யேசுதாஸ், ‘கள்’ளில் அத்தனை அழுத்தம் தந்து விடுகிறார். ஜானகியின் வீச்சான குரலில் ‘சாரம் ஊரும் நேரம்’ என்கிற அடியின் நிறைவில் மீண்டும் வயலின் அலைகள் பொங்கியெழுந்து காதலைக் குளிப்பாட்டிக் கொண்டாடுகின்றன!

பாடலின் தாள கதி இதயத் துடிப்பாகவே ஆர்ப்பாட்டமின்றி உள்ளூரத் துடித்துச் செல்கிறது. பாடல் நிற்கும்போது அதுவும் காதலை இதமாக அணைத்துக் கொண்டு விடை பெறுகிறது.

இப்படியான பாடலை இசைக்கலைஞர் ஷரத் போல ராகங்கள், ஸ்வரங்கள், சங்கதிகள், இசைக்கோவை பற்றியெல்லாம் ஞானம் இராதவர்களும் கொண்டாட முடிவது தான் இந்த இசையின் அற்புதம்.

பகலை இரவாக்கவும், இரவை நீட்டிக்கவும், கனவை மெய்யாக்கவும், காதலைப் பரவசப்படுத்தவுமான மாயங்களை இசை செய்விக்கிறது. வெறுப்பைத் துடைத்தெறிந்து அன்பை விதைக்கவும், இறுக்கமான இதழ்களை இலேசாகத் திறந்து கொடுத்து மலர்த்தவும் முடிகிறது! இசையால் மானுடம் தன்னைச் சிறப்பித்துக் கொள்கிறது. இயற்கையோடு இன்னும் நெருக்கம் காண்கிறது.

(இசைத்தட்டு சுழலும் ……)

Latest

அத்தியாயம் 21: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலையாப்பின் தரம் “இந்தியா முழுவதிலும் உற்பத்தித் துறையில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களில்...

நூல் அறிமுகம்: தோட்டியின் மகன் – சுரேஷ் இசக்கிபாண்டி‌‌

"யார் வர்க்க எதிரி, ஏன் ஒன்றுசேர வேண்டும்"   ஆலப்புழா நகராட்சியில் தோட்டியாக (துப்புரவு...

தொடர்: 24 : பிணைக்கைதி மீட்பும்,பாலஸ்தீன ஆதரவும்- அ.பாக்கியம்

பிணைக்கைதி மீட்பும் பாலஸ்தீன ஆதரவும் அமெரிக்காவில் வியட்நாம் போர் எதிர்ப்பாளராக, சிவில் உரிமை போராளியாகவும், ஆப்பிரிக்க நாட்டில் கருப்பின தேசியவாதியாகவும் பார்க்கப்பட்ட முகமது அலி அரபு நாடுகளில் முஸ்லிம் அடையாளங்களால் வரவேற்கப்பட்டார். ஆனால், மேற்கண்ட மூன்றையும் கடந்த பொது தன்மையுடனும் உலகம் முழுவதும் அறியப்பட்டவர் முகமது அலி என்பதை மறுக்க இயலாது. அரபு நாடுகளை  எண்ணெய் வளத்திற்காக...

நூல் அறிமுகம்: டா வின்சி கோட்- இரா.இயேசுதாஸ்

"டா வின்சி கோட் " ஆசிரியர்: டான் பிரவுன் (இங்கிலாந்து) வெளியீடு :சான்போர்ட் ஜெ...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

அத்தியாயம் 21: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலையாப்பின் தரம் “இந்தியா முழுவதிலும் உற்பத்தித் துறையில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களில் 42% பேர் தமிழ்நாட்டில் பணியாற்றுகிறார்கள்; தமிழ்நாட்டில் முறைசார் பொருளாதாரத்தில் பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு இந்தளவுக்கு அதிகமாக உள்ளது” - 2023...

நூல் அறிமுகம்: தோட்டியின் மகன் – சுரேஷ் இசக்கிபாண்டி‌‌

"யார் வர்க்க எதிரி, ஏன் ஒன்றுசேர வேண்டும்"   ஆலப்புழா நகராட்சியில் தோட்டியாக (துப்புரவு பணியாளராக) வேலை செய்து, அங்கு பரவிய தொற்று நோயால் உயிரை இழந்து தான் செய்த பணியை தன் மகன் சுடலைமுத்துவிற்கு...

தொடர்: 24 : பிணைக்கைதி மீட்பும்,பாலஸ்தீன ஆதரவும்- அ.பாக்கியம்

பிணைக்கைதி மீட்பும் பாலஸ்தீன ஆதரவும் அமெரிக்காவில் வியட்நாம் போர் எதிர்ப்பாளராக, சிவில் உரிமை போராளியாகவும், ஆப்பிரிக்க நாட்டில் கருப்பின தேசியவாதியாகவும் பார்க்கப்பட்ட முகமது அலி அரபு நாடுகளில் முஸ்லிம் அடையாளங்களால் வரவேற்கப்பட்டார். ஆனால், மேற்கண்ட மூன்றையும் கடந்த பொது தன்மையுடனும் உலகம் முழுவதும் அறியப்பட்டவர் முகமது அலி என்பதை மறுக்க இயலாது. அரபு நாடுகளை  எண்ணெய் வளத்திற்காக அமெரிக்க ஏகாதிபத்தியம் இஸ்ரேல் என்ற கருவியைக் கொண்டு கூறுபோட்டு வேட்டையாடியது. அமெரிக்காவின் இந்த வேட்டையாடலில் அரபு நாடுகள் பலியாகிக் கொண்டிருந்தன....

2 COMMENTS

  1. சிறப்பான முறையில் உருவாக்கப்பட்ட விமர்சனம். நன்றி🙏💕

  2. Trillion of viewers are there for new songs. But these new songs are losing the charm and becoming outdated after some time.
    Thendral vandhu ennai thodum song is unique. We can enjoy it anytime. My favourite song. SVV Sir has rightly chosen that song and dedicated the full article for it. 👍

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here