Isaivazhkai 93
Isaivazhkai 93

இசை வாழ்க்கை 93: சபையேறும் பாடல் – எஸ் வி வேணுகோபாலன்

சபையேறும் பாடல்

அந்த நிகழ்வுக்கும் இசைக்கும் நேரடியாகத் தொடர்பு இருந்ததா என்றால் இல்லை என்பது தான் பதில். ஆனால், இசை இல்லாத இடம் எது… மறைந்த ஒரு படைப்பாளியின் பெயரால் இரு எழுத்தாளர்களுக்கு விருது வழங்குதல், படைப்பாளியை அவர் வாழ்க்கையைப் பார்த்த விதத்திலேயே கொண்டாட்டமான முறையில் நினைவு கூரல் என்று சிந்தித்திருந்தனர் நிகழ்ச்சியை வடிவமைத்தவர்கள்.

ரசிகர்களின் உள்ளன்பைப் பெற்றிருந்த கவிஞர் அவர். அவரது நாவலும் தமிழின் முக்கிய படைப்புகளில் ஒன்று என அன்று பேசப்பட்டது. அவரோடு பழகிய நண்பர்களும், அவர் மீது ஈடுபாடு கொண்டிருந்தோருமாகக் குழுமி இருந்த அந்த சங்கமத்தில் அவரது கவிதை வரிகளை நாடகமாக நிகழ்த்தினர் முகமூடிகள் அரங்கம் குழுவினர். அவரது படைப்புகள் எதற்கும் வரைந்திராத, ஆனால் அவரைப் பற்றி அறிந்திருந்த ஓவியர் ஸ்யாம் பேச அழைக்கப்பட்டிருந்தவர், பேச்சை விட, அந்தப் படைப்பாளியை வரைந்துவிடுகிறேன் என்று நான்கு நிமிடம் 37 நொடிகளில் அபாரமாகத் தீட்டினார்.

சேத்துமான் பட இயக்குநர் தமிழ் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வுக்கு திரை இயக்குநர் சுசீந்திரன் வந்திருந்தார். அவரது படமொன்றில் ஒரு பாடல் எழுதி இருந்தார் மறைந்த படைப்பாளி. பின்னர் பேசிய எழுத்தாளர் பெருமாள் முருகன், அந்தப் பாடலை எண்ணற்ற முறை யூ டியூபில் போட்டுக் கேட்டுக் கொண்டே இருப்பேன் என்றார். ஒரு சுதந்திர வாழ்க்கையைத் தான் விரும்பி ஏற்றுக்கொண்டதை அந்தப் பாடல் மூலம் குறியீடாக வெளிப்படுத்தி இருந்தாரோ என்று தோன்றும் என்றார்.

முன்னதாகப் பேசிய எழுத்தாளர் கவின் மலர், மறைந்த படைப்பாளியைக் குறித்த பாடல் ஒன்று பாடுமாறு தன்னை எழுத்தாளர் பாக்கியம் சங்கர் கேட்டுக் கொண்ட 3 திரைப்பாடல்களில் இது நெருக்கமாகத் தெரிகிறது என்று ஒரு பாடலை அங்கே பாடியது நிகழ்வின் உருக்கமான தருணங்களில் ஒன்றானது.

கவிஞர் ஜெ பிரான்சிஸ் கிருபா பற்றித் தான் இத்தனை விவரங்களும்…..

பாஸ்கர் சக்தி எழுத்தில் அழகர்சாமி குதிரை திரைப்படமாக உருவானதில் ‘குதிக்குது குதிக்குது குதிரக் குட்டி’ பாடல் உள்ளபடியே வித்தியாசமான பாடல் தான். படத்தின் கதை, உள்ளடக்கம் எல்லாம் கேட்டறிந்து பாராட்டி இசை அமைத்த இளையராஜா, தானே பாடவும் செய்திருக்கும் (ஆனால், எத்தனை மாற்றம் குரலில்…) அந்தப் பாடல், பிரான்சிஸ் கிருபா எழுதியது.

அப்புக்குட்டி ஆசையோடு வளர்க்கும் குதிரைக் குட்டிக்கும் அவனுக்குமான தோழமை உறவு தான் இந்தப் பாடல். ..குதிரை சவாரி செய்ய விரும்பும் உள்ளமல்ல அது… குதிரையைக் கொஞ்சி உடன் வாழும் உலகம் அவனது. தன்னை அந்த எளிய தோழனில் அடையாளம் காணும் ஒரு வெகுளிச் சிந்தனை தான் இந்தப் பாடல். தானே அதுவாகக் கலந்து கரைந்துருகும் இதய கீதத்தை ஒரு வித்தியாசமான துள்ளாட்டத்தில் கட்டி அமைக்கிறார் ராஜா. அந்தத் தாளக்கட்டு இலகுவாக உருவானதும் பாட்டு தனக்கான மெட்டைத் தானே கட்டியமைத்துக் கொண்டுவிட்டது போல் தோன்றுகிறது. அந்த லயத்தில் மிக சுகமாக வந்து அமர்ந்து விடுகிறது பிரான்சிஸ் கிருபா பாடல் வரிகள்.

ஒரு சிற்றூர்ச் சூழல் தான்…காடுகளும் மலைகளும் மேடு பள்ளங்களுமான காட்சிகள் தான். காதலர்கள் அல்ல அவர்கள் இளம் பருவத்து வகுப்புத் தோழர்கள், அந்தக் குதிரைக் குட்டியும் அவனும்!

 

 

குழந்தைகள் மலைகளை வரையும்போது, வான் மேகங்களைத் தீட்டும் போது, சூரியனுக்கு வண்ணம் கெட்டிப்படுத்தும் போது வண்ணப் பென்சிலைக் குறிப்பிட்ட இடத்தில் வைத்து வேக வேகமாகத் தேய்த்து மெருகேற்றுவது போல், வயலின்கள் மீது வில்லை வேக வேகமாக இழைத்துத் தீட்ட வைக்கிறார் ராஜா, பாடலுக்கான இசைச் சீலையில்! பிறகு வளரும் இசையோடு பற்றிக் கொள்கிறது சுவாரசியமான தாளக்கட்டு, அது அப்புக்குட்டியின் ஆசைக் குதிரைக் குட்டிக்கான ராஜ நடைக்கான தாளக்கட்டு. அதில் சலங்கையின் துள்ளலும்.

‘குதிக்குது குதிக்குது குதிரக் குட்டி ….என் மனசக் காட்டுது.. .’ இது அப்புக்குட்டியின் சொந்த அறிமுக வாசகம். ‘அது துடிக்குது துடிக்குது வயசுப்படி..என் உசிர மீட்டுது’ என்பது அடுத்த அற்புதமான வரி. ஒரு குதிரைக் குட்டி தனது தோழனின் மனத்தைக் காட்டுவதும், உயிரை மீட்டுவதும், ‘உயிர்களிடத்து அன்பு வேண்டும்’ என்கிற மகாகவி கவிதை வரியின் உணர்ச்சிகர தரிசனம் அன்றி வேறென்ன….

பால் போல..பனி போல நெறம் தானே…தேர் போல அசஞ்சாடும் நடை தானே…இது ஓர் அழகு. அடுத்த வரி…அட நெலத்துல நடக்குது நெலவுக் குட்டி இது நெசம் தானே என்கிற இடம் எத்தனை அற்புதம்…. திச எடுக்குது படிக்குது தவுலு கட்டி சுகம் தானே…இது அடுத்த படிக்கட்டு.

பாடலை, ராஜா முற்றிலும் வேறு தினுசான குரலில் எடுத்திருப்பது இந்த வரிகளுக்காகவே தானோ….அல்லது…இந்த தினுசாகவே பாடல் மொத்தமும் அமைந்து விட்டது அவரது குரலுக்காகவே தானோ என்று தோன்றவைக்கும் சுகம் அது.

நிகழ்காலம், எதிர்காலம் பற்றியெல்லாம் பெரிய புரிதலோ திட்டமிடுதலோ அற்ற ஓர் இளம் வெள்ளந்தி உள்ளத்தின் கற்பனைப் பசும் புல்வெளி, மலை சிகரங்கள், நீர் நிலை எங்கும் திரிந்து திரும்புகிறது பாடல். அப்புக்குட்டியின் மனத்தைப் போலவே விரிந்த சாம்ராஜ்யப் பரப்பில் அந்தக் குதிரைக் குட்டியின் இருப்பு தான் ஆகப் பெரியது.

‘பதறாம நட போடு… ஒலகம் நமதாச்சு…கடிவாளம் கெடயாது..துணிவே துணையாச்சு…’ என்ற இடம் ஏராளமான செய்திகளைச் சொல்கிறது! ‘உன்ன பாத்து என்ன பாத்து தெருவே சிரிக்காய்ங்க…. நட பாத்து எட பாத்து தனியா ரசிப்பாய்ங்க….’ என்ற வரிகள் இன்னும் நுட்பமான உளவியலைச் சொல்கின்றன.

இந்த வரிகளைத் தான் பெருமாள் முருகன் ஃபிரான்சிஸ் கிருபா தன்னுணர்வு உந்துதலில் எழுதியவையோ என்று அன்றைய நினைவுக் கூட்டத்தில் குறிப்பிட்டார்!

‘சட்டியில் சட்டியில் பழஞ்சோறு…தொட்டுக்கத் தொட்டுக்க கருவாடு…’ என்பதில் அந்த வாழ்க்கையின் ரசம் ததும்புகிறது….’தந்தது தந்தது அட யாரு…தங்கமே தங்கமே வெளயாடு’ என்று போகும் சந்தம் குதிரைக் குட்டியை எல்லோரும் கொண்டாடும் மனநிலைக்கு எடுத்துச் செல்கிறது. ‘அப்புக்குட்டி அப்பன்…கட்டிருக்கு கட்டேன் …எட்டு திக்கும் கட்டவிழ்த்துத் திரியலாமுடா…’ என்கிற பதங்கள் இன்னுமே சுதந்திர உளவியலின் மூச்சாக ஒலிப்பவை.

இரண்டாவது சரணத்தை நோக்கிய இசை வெளியில் இந்த எட்டு திக்கும் சுற்றித் திரியும் மனநிலையின் இசையோட்டம் பெருக, அப்படியே பல்லவியை சுகமாக இசைக்கும் இசைக்கருவிகளினூடே, ‘அடியாத்தி அடியாத்தி பசியே மறந்தாச்சு..’ என்று சரணம் தொடங்குகிறது. இது அப்புக்குட்டியின் திருமண யோகத்தைப் பேசும் இடம். ‘ராசாத்தி ராசாத்தி கனவே நெனப்பாச்சு….மனசாட்சி உனதாச்சு எல்லாம் புதுசாச்சு. பெருமூச்சு அனலாச்சு…இரவே பழுதாச்சு .’ என்கிற வரிகள் தலைகால் புரியாத புளகாங்கித உளவியலின் உற்சாக சங்கீதம். ‘உள்ளுக்குள் உள்ளுக்குள் சிறுவாணி’ என்பது சிறப்பான சிலேடை. நீரூற்றையும் பேசுகிறது, வாணியையும் சுட்டுகிறது. சரணத்தின் கடைசி வரிகள் இணை சேரும் கனவின் மயக்கக் கிறுக்கின் தெறிப்பில் விழுகின்றன.

பெரிய ஜோடனைகள் அற்ற வரிகள்…ஆனால் உள்ளத்தினுள் நிகழும் உரையாடலைப் பேசும் பாடல், அதற்கான சந்தம், அதற்கேற்ற தாளம், அதை வாங்கிப் பொங்கும் இசை என்று சிறக்கிறது. சுசீந்திரன் அதைக் காட்சிப்படுத்தியுள்ள விதம் அபாரமானது.

இதற்கு முற்றிலும் வேறான சூழலுக்கான இசைப்பாடல் தான், கவின் மலர் தேர்வு செய்து பிரான்சிஸ் கிருபா நினைவுக்கு அர்ப்பணித்து அன்று இசைத்தது. அதுவும் ராஜா இசையமைத்தது. கவிஞர் மு மேத்தா புனைந்தது. கற்பூரம் இலக்கியத்தில் பேசப்படுவது அதன் மணத்திற்காக… கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ என்று நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் எழுத்தில் பார்க்கும் இடம் வேறு. கற்பூரத்தின் இயல்பியல் தன்மை சுவாரசியமானது. திடப்பொருள் ஒன்று திரவ நிலைக்கு மாறாமல் நேரடியாக வாயு நிலைக்குச் செல்வதை, பதங்கமாதல் என்று எழுதி இரண்டு மதிப்பெண்கள் வாங்கி இருப்போம் பள்ளி நாட்களில். காத்துல சூடம் போல கரையறேன் ஒன்னால .. என்ற திரைப்பாடல் வரி (பூவ எடுத்து..) மிகவும் பேசப்படுவது.

கற்பூர பொம்மை ஒன்று என்ற உருவகம், சோகமயமாக மனத்தில் உருக்கொண்டுவிடுகிறது, அது குழந்தைக்கான சோகமல்ல, தாயைக் குழந்தை பறிகொடுக்கும் சோகம். ஒரு தாயின் அழுத்தமான உணர்ச்சி சிதறல்களைப் பேசும் பாடல் வரிகளை வாசித்ததும் பி சுசீலாவைத் தேர்வு செய்திருக்கக் கூடும் ராஜா.

 

 

கற்பூர பொம்மை ஒன்று பாடல், தாயின் உள்ளன்பைக் காலகாலத்திற்கும் நினைவில் சுமக்க இருக்கும் மகளின் பார்வையில் இருந்தே புனையப்பட்டிருப்பதால் உருக்கமான குரலில் விளைகிறது பாடல். தொடக்க ஹம்மிங் அதன் குறியீடாகச் சொல்லிவிடுகிறது. அந்தத் துயரச் சாயை, சிதார் சிந்தும் இசைத்துளிகளில் வெளிப்படவே செய்கிறது. ‘கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று…’ என்ற வரிகளைத் திரும்பத் திரும்ப இழைத்து இழைத்து சங்கதிகள் கூட்டி உள்ளத்திற்கு அத்தனை நெருக்கமாக்குகிறார் சுசீலா. ‘கலந்தாடக் கை கோக்கும் நேரம்….’ என்ற வரியை எத்தனை அனுபவித்து நேரமெடுத்து இசைக்க வைக்கிறார் ராஜா…. ‘கண்ணோரம் ஆனந்த ஈரம்’ என்பது அடுத்த வரி. ‘முத்தே என் முத்தாரமே’ என்பதில் அந்த முத்து எப்படி பளிச் என்று வந்து விழுகிறது…. ‘சபையேறும் பாடல்…நீ பாடம்மா… நீ பாடம்மா’ என்று பல்லவி அமைகிறது.

சரணங்களும் மனத்தை வருடும் வண்ணம் நீட்டித்துப் பாடும்படியான மெட்டில் வார்த்திருக்கிறார் ராஜா…. முதல் சரணத்தில் ‘பூந்தேரிலே நீ ஆடவே….’ என்கிற வரி ஊஞ்சலில் குழந்தையை வைத்து உந்தித் தள்ளுவதாக அமைகிறது. ‘உண்டான அன்பே ஒரு ராஜாங்கம்’ என்ற அடுத்த வரி, மீண்டும் தன்னிடமே திரும்பும் ஊஞ்சலைப் பின்னோக்கி நின்று ஏந்திக் கொள்வதாக உருப்பெறுகிறது. அடுத்த இரு வரிகளும் இந்த ஆட்டத்தின் தொடர்ச்சி. பின்னர் ஒரு வேக கதிக்கு மாறுவதை உணர்த்தும் தபலா நாதத்தைத் தொட்டு, ‘மானே உன் வார்த்தை ரீங்காரம்’ என்ற இடத்தில் சுசீலாவின் குரலினிமை ரீங்கரிக்கிறது. அதிலும் அந்த ‘ரீங்காரம்’ தான் எத்தனை அழகு! ‘மகளே என் நெஞ்சில் நின்றாடும்’ என்பது மற்றுமோர் அழகு! அங்கிருந்து பல்லவியின், முத்தே என் முத்தாரமே வரி வழியாக இன்னும் மனத்தை நிறைக்கிறார் சுசீலா.

இரண்டாவது சரணத்தைச் சென்றடையும் திசையில் வயலின் இசையும், புல்லாங்குழலும் பேசிக்கொள்ளும் பரிபாஷை அமர்க்களமானது. வேகமெடுத்துப் பறந்து தலைக்குமேல் வட்டமிடும் பறவைகள் போல் வயலினும், அந்த ஆனந்தத்தில் துள்ளும் கன்றுக்குட்டி போல் புல்லாங்குழலுமாக அது நிகழும். தாயன்பின் மகத்துவம் பற்றிய சரணம் அது. குழலிசை பரவுகையில் அதை வருடும் வயலின் துணுக்கு இசை, ‘நாவால் நக்குது வெள்ளைப் பசு பாலை நன்றாய்க் குடிக்குது கன்றுக்குட்டி’ என்கிறாற்போல் தோன்றும். உருக்கத்தின் நிறைவு இரண்டாம் சரணம். அதன் நிறைவில் மீண்டும், ‘முத்தே என் முத்தாரமே சபையேறும் பாடல் நீ பாடம்மா…நீ பாடம்மா ‘ என்று போய்ப் பல்லவியைப் பிடிக்கிறார் சுசீலா.

சபையேறும் பாடல் என்பது ஃபிரான்சிஸ் கிருபா தான் என்று கண்ணீரைத் துடைத்தபடி தனது பேச்சை அன்றைய கூட்டத்தில் முடித்துக் கொண்டார் கவின் மலர்.

இசை, துயரத்தைத் துயர கீதத்தால் ஆற்றுப்படுத்தும் மாயம் புரிகிறது. இன்பத்தை இன்ப நாதத்தால் பெருக்கவும் முடிகிறது. இசை நினைவுகளை ஆவணப் படுத்தி விடுகிறது. அதன் ஜனநாயகத் தன்மை ஒரே இசை வெவ்வேறு ரசிகர்களுக்கு அவரவர் ஆவணப் பதிவுகளாகி விடும் ஜாலத்தையும் செய்கிறது. ஒரு மனிதரை, ஒரு கலைஞரை, ஒரு படைப்பாளியை நினைவு கூர்வதில் அன்று உரையாளர்களும், ஓவியரும், இசைக் கலைஞரும் இயங்கிய விதம் வித்தியாசமானது. இசையின் தனித்துவம் அதில் முக்கியமானது.

 

(இசைத்தட்டு சுழலும் ……)

கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691

மின்னஞ்சல் முகவரி: [email protected]

Show 1 Comment

1 Comment

  1. ந மனோகரன்

    அருமை. கற்பூர…. பாடல் நெகிழ வைத்துவிட்டது. சிறப்பாக பட்டை தீட்டும் வருகிறார். நன்றி🙏💕

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *