இசை வாழ்க்கை 94: இசையில் அடங்குதம்மா - எஸ் வி வேணுகோபாலன் isaivazhkai-94-isaiyil-adanguthamma-web-series-written-by-s-v-venugopalan

 

 

 

அண்மையில் நெருங்கிய உறவினர் இல்லத் திருமணத்தில் உறவினர்களோடு அதிகம் பேசியது இசை பற்றியானது என்பது உண்மையில் எதிர்பாராதது. குறிப்பாக, மதுரையிலிருந்து வந்திருந்த மோகன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் முதன்மை மேலாளராகப் பணியாற்றியவர், பாண்டியன் கிராம வங்கியிலும் தோழர் மாதவராஜ் உள்ளிட்ட தலைவர்கள் அன்பைப் பெற்று வந்தவர், அவரோடு திரை இசைப் பாடல்கள் பற்றிய நேர்த்தியான உரையாடலில் ஈடுபட்டது மறக்க முடியாதது. சூப்பர் சிங்கர் போட்டிகளில் வித்தியாசமான பாடல்களை எடுத்துச் சிறப்பாகப் பாடும் குழந்தைகள், முந்தைய சில ஆண்டுகளின் முக்கிய பாடகர்கள் பற்றியெல்லாம் இலகுவாக அடுத்தடுத்து நினைவுகூர்ந்து பாராட்டி அவர் சொல்லிக் கொண்டிருக்கக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போலிருந்தது.

மேக்னா எனும் சுட்டிப் பெண் பற்றிச் சொல்லவும், ஆமாம், ஏற்கெனவே மலையாளம் சானலில் புகழ் பெற்ற குட்டிப்பெண் என்றார் மோகன். பெரிய பெரிய பாடகர்களை புருவம் உயர்த்த வைத்தவர். ‘கொஞ்ச நேரம் கொஞ்சம் நேரம்’ (சந்திரமுகி) பாடலை அவர் மது பாலகிருஷ்ணனோடு பாடிய காட்சியைப் பல லட்சம் பேர் பார்த்திருப்பார்கள் யூ டியூபில்!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அண்மையில் இரு வாரங்களுக்குமுன் மேக்னா எடுத்துக் கொண்டது, இப்போதைய தலைமுறை அதிகம் கேட்டிருக்கவே செய்யாத டூயட் பாடல் ஒன்று. தேவா இசையில் தாய் மனசு படத்திற்காக அந்தப் பாடலை எழுதியிருப்பவர் இயக்குநர் கஸ்தூரி ராஜா என்பது மலைக்க வைத்த கூடுதல் செய்தி. மூக்குத்தி முருகனோடு இணைந்து பாடி இருந்தார் குழந்தை மேக்னா.

முருகன் ஓர் எளிமையான மனிதர், மலேசியா வாசுதேவன் பாடல்கள் சில அவர் குரலில் கேட்க அத்தனை இன்பமாக இருக்கும். ஒரு முறை, எஸ் பி பாலசுப்பிரமணியன் அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற நிகழ்ச்சியில் வாசுவின் புகழ் பெற்ற, ‘ஒரு கூட்டுக் கிளியாக’ பாடலை அத்தனை அமர்க்களமாகப் பாடியவர், அதே நேரத்தில் பாடியவாறே பாடலிலும் பிசிறு இன்றி, வரைதலிலும் பிசிறு இன்றி ஒரு பலகையில் ஒட்டிய தாளில் எஸ் பி பி அவர்களை அற்புதமாக வரைந்து முடித்து பாலுவையே அசத்தியவர்.

முருகன் அருமையாகத் துணை நிற்க, மேக்னா பாடியது, திரைப்படத்தில் மனோவும் எஸ் ஜானகியும் இசைத்திருந்த, ‘தூதுவளை இலை அரைச்சு’ என்ற பாடல். ‘எங்க பக்கம் எண்பதுகளில் டவுன் பஸ்களில் மிகவும் பிரசித்தம் தோழர் இந்தப் பாடல்’ என்று மறு நாள் சந்தித்த போது சொன்னார், மார்க்சிஸ்ட் இயக்கத் தோழர் முரளி. யூ டியூபில் பார்த்தால், டவுன் பஸ் ஓட்டுநர்கள் தாங்களே காதலில் ஈடுபடுவது போன்ற கிறக்கத்தில் இந்தப் பாடலை ஒலிபரப்பி வந்த சுவாரசியமான கதைகள் கொட்டிக் கிடக்கின்றன.

அப்படி என்ன அந்தப் பாடலில் இருக்கிறது என்றால், அத்தனை காதல் கொட்டிக் கிடக்கிறது. ஒரு கிராமத்துப் பருவப் பெண்ணின் ஏக்கம் கொட்டி வைத்திருக்கிறது. மாமன் மீதான அவளது மையல் பரவிப் பொங்குகிறது. ஈடு கொடுக்க இயலாது திணறும் மாமன் அவளது தொல்லை தாங்க மாட்டாது மெல்ல நெருங்க நினைக்கையில், எல்லை வரைந்து நிற்கவைத்து இன்னும் சீண்டிக் கொண்டே போகும் வாலைக் குமரியின் கொஞ்சல் ஓங்கி ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

ஓயாது பேசிக் கொண்டிருக்கத் தொண்டைக்குத் தூதுவளை இலையை அரைத்துப் பக்குவம் செய்து கொள்ளத் தூண்டும் காதல், தூண்டா மணி விளக்கைத் தூண்டி விட்டு எரிய வைத்து நாள் கணக்காக மாமன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருக்க வேட்கையுறும் காதல் தான் சொக்க வைக்கும் பல்லவியின் முதல் வரிகள். இந்த வித்தியாசமான கற்பனையும், அந்த மெட்டும், இசையும், பாடகர்கள் குரல்களும் திரும்பத் திரும்பக் கேட்கும் வண்ணம் அமைந்து விடுவது தான் பாடலின் சிறப்பு.

இசையேதுமற்று எஸ் ஜானகி குரலில் பாடல் கிறக்கமாக ஒலிக்கவும், இசைக்கோவை இணைந்து, பதமான தாளக்கட்டில் உள்ளத்திற்கு நெருக்கமாகக் கேட்கத் தொடங்கிவிடுகிறது. பாடல் முழுவதும் புல்லாங்குழல் இசை காதலைக் கொண்டாடிக் கொண்டே இருக்கிறது.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அன்று ஆஷிஷ் அத்தனை அற்புதமாக வாசித்தார். பல்வேறு இசைக்கருவிகளை அத்தனை அம்சமாக வாசிப்பவர் அவர்.

‘தூதுவளை இலை அரைச்சுத் தொண்டையில தான் நனைச்சு மாமன் கிட்டப் பேசப் போறேன் மணிக்கணக்கா….தூண்டா மணி விளக்கத் தூண்டி விட்டு எரிய வச்சு உம் முகத்தப் பார்க்கப் போறேன் நாள் கணக்கா….’ என்பதை மேக்னா மழலை கொஞ்சும் மொழியில் அபாரமாக எடுத்தார். ‘அந்த இந்திரன் சந்திரனும் மாமன் வந்தா எந்திரிச்சே நிக்கணும், ரம்பையும் ஊர்வசியும் மாமனுக்குத் தொண்டுகள் செஞ்சிடணும்’ என்கிற அடுத்த வரிகளை விடவும், வேகமெடுத்து, ‘நான் காத்தாகி ஊத்தாகி மாமனத் தழுவிக் கட்டிக்கணும்’ என்கிற பல்லவியின் கடைசி வரி அருமையாக வந்து விழுகிறது. தொடர்ந்து முழு பல்லவியையும் மனோ பாடி இருப்பார், மூக்குத்தி முருகன் முதல் இரு வரிகளோடு முடித்துக் கொண்டார்.

இரண்டு சரணங்களிலும் வரிகளில் பரவும் நேசமும், தாபமும் குரல்களில் பன்மடங்கு பிரதிபலிக்க, எஸ் ஜானகியின் குரலின் சுவாரசியமான ஏற்ற இறக்கங்களும் ரகசியப் பரிமாற்றம் கடத்தும் இலாவகமும் மேக்னா அப்படியே சுட்டியாக உள்வாங்கி இசைத்தார் என்பது அபாரமானது. சொற்கள் சுத்தமாக ஒலித்தது மட்டுமல்ல, இரண்டாம் சரணத்தின் நிறைவில் ஸ்வரங்களுக்குள் ஒரு சிரிப்பொலியும் பிசிறு இன்றி அப்படியே கொணர்ந்தார் மேக்னா !

எஸ் ஜானகியின் குறும்பான இசை மொழியை, குட்டிப் பெண் மேக்னா தனது பாணியில் பாடல் நெடுகக் கொண்டு வந்தது அதற்காகவே திரும்பத் திரும்பக் கேட்க வைப்பது. நடிகை ராதாவும், பாடகி சித்ராவும் அசந்து போய்க் கொண்டாடிக் கேட்டதும் மறக்க முடியாதது.

இசையின் அசாத்திய அனுபவங்கள் எத்தனையோ திரைப்பாடல்களிலும் ஒளிர்வதைக் காணவும், கேட்கவும், உணரவும் முடியும் ! கடந்த பல வாரங்களாக ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது அப்படியான ஒரு பாடல்…

ஹே ராம் திரைப்படத்தை மிக அண்மையில் தான் பார்க்க நேர்ந்தது ஒரு பெரும் குற்ற உணர்ச்சி. எங்கள் அன்பு மகன் எண்ணற்ற முறைகள் நுட்பமாக லயித்துப் பார்த்தவன் சொல்லித் தான், ஆகஸ்ட் மாதம் பெங்களூர் சென்றபோது தற்செயலாக அவனோடு அமர்ந்து பார்த்தது. இந்திய விடுதலைப் போராட்டம் குறித்த சில முக்கிய புத்தகங்கள், குறிப்பாக ‘நள்ளிரவில் சுதந்திரம்’ எனும் அருமையான நூல் வாசிப்பு அனுபவங்களை அவனோடு பகிர்ந்தபடியே காட்சிகளில் ஆழ்ந்து பார்த்த தருணம் மறக்க முடியாதது.

ஹே ராம் படத்தில் இசையின் பாத்திரம் விவரிப்புக்கு அப்பாற்பட்டது. பாடல்கள் மட்டுமல்ல, பின்னணி இசையும் அபாரமானது. முதலில் ஒப்பந்தமான இசையமைப்பாளரோடு பிணக்கு ஏற்பட்டுவிட, பிறகு தான் இசைஞானியிடம் சென்றடைந்ததை கமல் ஹாசன் குறிப்பிட்டிருக்கிறார். முன்னதாகவே பதிவான பாடல்களை மீண்டும் வேறு வடிவில் ராஜா எப்படி கொணர்ந்தார் என்பதன் மாயா ஜாலத்தையும் சிறப்பாகச் சொல்லி இருந்தார் அவர். அதில் ஒன்று, கமல் ஹாசன் எழுதிய பாடல்! ஆஷா போஸ்லே, ஹரிஹரன் பாடி இருப்பார்கள்…..

தொடக்கத்தில் பாடலின் மெட்டு ஒலிக்கிறது பியானோ வரிசையில்…..மெல்ல ஒரு வங்க மொழி இசைக்கவிதை வரிகளைக் காதலார்ந்த மெல்லிய தொனியில் ராணி முகர்ஜியே அருமையாக இசைத்திருப்பார்…. .பிறகு தொடங்குகிறது பாடலுக்கான இசையும், ஆஷா போஸ்லே குரலில் பல்லவியும்……இரண்டாம் சரணத்தில் இணைகிறார் ஹரிஹரன்….என்னமான குரல்கள்….எத்தனை அம்சமான மெல்லிசை….எத்தனை பொருள் பொதிந்த வரிகள்…. பாடல் ஒரு துயரமான சூழலில் பின்னோக்கிக் கொண்டு போகும் ஒரு தொலைந்து போன வசந்த வாழ்க்கையை நினைவு கூறும் வண்ணம் அமைந்திருக்கும்!

‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி….நமைச் சேர்த்த இரவுக்கொரு நன்றி…’ இரண்டும் ஒரே நிதான கதியில் ஒலிக்க, அடுத்த வரியில் மேல் நோக்கிப் போகிறது குரலோசை: ‘அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி….’ அதற்கேற்ற எதுகை மோனை இயைபின் சுகத்தோடு ஒலிக்கிறது அடுத்த வரி: ‘அகலாத நினைவு சொல்லும் நன்றி……நன்றி’ அதற்கு அடுத்த இரண்டு சொற்கள் என்ன என்று போட …..’உயிரே வா…….’ ஆஹா…எப்பேற்பட்ட தேர்வு! அந்த ‘உயிரே வா….’ என்பது ஒரு காதலுயிர் தனது காதலுயிரை நோக்கி அழைக்கும் ஓசை…காதலின் ஓசை, உயிரின் இசை!

பியானோவின் மென் வரிசை, கிடார் தந்திகளின் கொஞ்சலைத் தொடர்ந்து சரணத்தைத் தொடங்கும் ஆஷா, ‘நான் என்ற சொல்லே இனி வேண்டாம்….’ என்று இசைத்தல் ஓர் அழகு எனில், ‘நான் என்பதே இனி நீ தான்’ இன்னும் கூடுதல் அழகு அல்லவா! ‘இனி மேலும் வரம் கேட்கத் தேவையில்லை’ என்பது ஒரு பிரகடனம் எனில், ‘இது போல் வேறெங்கும் சொர்க்கமில்லை’ என்பது சாசனம்! ‘உயிரே வா….’ என்று இழைக்கிறார் உயிரின் அழைப்பை! சரணத்தின் வரிகளூடாக மெலிதாக ஒலிக்கும் ஆஷாவின் ஹம்மிங், உயிர்க்காதலின் அனல் மூச்சு காற்றில் கரைதலின் சோகத்தையும் உணர்த்திவிடுகிறது.

ஹரிஹரன் அத்தனை மென்குரலில் இரண்டாம் சரணத்தை எடுக்கிறார், ‘நாடகம் முடிந்த பின்னாலும், நடிப்பின்னும் தொடர்வது என்ன….’ என்று நிதான கதியிலும், பின் மேல் நோக்கி, ‘ஓரங்க வேடம் இனி போதும் பெண்ணே….உயிர் போகும் மட்டும் உன் நினைவு கண்ணே’ என்று வளர்த்து, ‘உயிரே…வா’ என்று தனது பங்கிற்கு அந்த உயிரின் அழைப்பை உருகி வார்க்கிறார்.

பல்லவியை ஆஷா மென்மையாக மீண்டும் எடுக்க, அதன் மேலொட்டி அந்தக் காதலை முழுமைப்படுத்தும் குரலில் ஹரிஹரன் அதே வரிகளை வேறொரு வரிசையில் தொடுக்க இருவரும் ஒன்றிணைந்து ‘உயிரே வா….’ என்று சிலிர்ப்பு மேலிட வைக்குமிடத்தில் நிறைவு பெறுகிறது பாடல்.

இந்த அற்புதமான பாடலை ஸ்டாண்ட் அப் காமெடியன், பன்முக ரசனையாளர், சிறப்பான பாடகர், திறமையான மனிதர் அலெக்ஸ் (அலெக்சாந்தர் பாபு) கொண்டாடி விவரிப்பதைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம்…… அலெக்ஸ் யூ டியூப் பக்கம் கவனத்தை ஈர்த்து நிறைய ரசிக்க வைத்தற்கும், இந்தக் குறிப்பிட்ட காணொளியை அருகே அமர்ந்து சுவைக்க வைத்தற்கும் அன்பு மகன் நந்தாவுக்குத் தான் அன்புக் கடன்பட்டிருக்கிறேன்.

ஆனால், என்னைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கும் பாடல் வேறொன்று….யூ டியூபில் கேட்டு நிறுத்திவிட்டு நிமிர்ந்தாலும் உள்ளூர ஓடிக் கொண்டே இருக்கும் பாடல் அது. சொல்லப் போனால், கமல் அந்த இடத்தில் யோசித்திராத பாடல் அது! ஆனால், இசைஞானியின் கண்களுக்கு அங்கே தட்டுப்பட்டிருக்கிறது இசை…. அந்த இசையில் தொடங்குதம்மா தான் என்னை அலைக்கழித்துக் கொண்டிருக்கும் பாடல்!

ராஜாவே எழுதி இருந்த அந்தப் பாடலை இசைத்தவர்…. ஆஹா… ஆஹா… அஜய் சக்கரவர்த்தி (அஜோய் சக்ரபோர்த்தி, வங்க மொழி உச்சரிப்பில் ) ! இந்தப் பாடல் பதிவுக்காக அவர் சட்டென்று வந்திறங்கி நிமிடங்களுக்குள் கேட்டு அறிந்து அசாத்தியக் குறுகிய நேரத்தில் பாடிப் பதிவு செய்ய வைத்துப் புறப்பட்டுப் போனார் என்கிற செய்தியெல்லாம் இன்னும் கூடுதல் சிலிர்ப்பை ஏற்படுத்தும்.

‘ராம் லீலா’ கொண்டாட்டச் சூழலில் இயங்குகிறது பாடல். தனக்கான அரசியல் எதிரியை வரித்துக் கொண்டு அதில் தீ மூட்டி விடும் தத்துவார்த்த வெறிக்குத் தன்னை ஒப்புக் கொடுத்துவிடும் நாயகன், தவிர்க்க முடியாத குடும்ப நிர்ப்பந்தத்தில் தன்னை வந்தடைந்த இளம் மனைவி மீதான இச்சைக்கும் தன்னைத் துரத்திக் கொண்டிருக்கும் கடந்த காலக் கசப்பு நினைவுகளுக்கும் இடையே தடுமாறிக் கொண்டே இருக்கும் வேளையில் அந்தக் காட்சிக்கான இசையையும், பாடலையும் அங்கே பரவ விட்டு விடுகிறார் ராஜா.

பாடலின் தொடக்கம், வசீகரமான கோரஸ், ஹேய் ஹேய்…ஹே ஹே ஹே ஹேய்…அந்தக் கொண்டாட்டக் கூட்டுக் குரலிசையை அபாரமாகத் தாங்கி ஒலிக்கும் தாள ஓசை….. அங்கே நுழைகிறார் அஜய் சக்ரவர்த்தி !

‘இசையில் தொடங்குதம்மா ..’ என்கிற வரியை ஹ ..என்று ஒரு மெல்லிய ஆலாபனை கொடுத்து விட்டு, ‘விரக நாடகமே’ என்கிற வரிக்குப் போகையில், நாடகமே என்பதில் எத்தனை சங்கதிகள்…. ‘வசந்தம் கண்டதம்மா’ என்கிற அடுத்த அடியில் கண்டதம்மாவில் தான் எத்தனை சுகம் வழங்குகிறார் அஜய்! ‘வாடும் வாலிபமே’ என்பதில் வாலிபத்தைக் கொண்டாடுகிறார்….’வசந்தக் கோலங்களை…’ என்று இழைத்து, ‘வானில் தேவதைகள்…’ என்று மேலும் குழைத்து, ‘வந்து கூடி விட்டார்…இங்கு நமக்கு ஹோ…’ என்று கோரஸ் குரல் கொடுக்க அந்தப் பல்லவியே பற்றிக் கொண்டு விடுகிறது நெஞ்சை!

பாடலின் தாளக்கட்டிலும், பின்னணியில் ஒலிக்கும் டிரம்ஸ் உள்ளிட்ட அதிர்வுக் கருவிகளும் பாடல் முழுக்க நிகழ்த்தும் மாயா ஜாலம் உள்ளத்தை உண்டு இல்லை என்றாக்கி விடுகிறது.

சரணத்தை நோக்கிய திசைக்கு ஷெனாய் அழைக்கிறது. அதனூடே அஜய் உருக்கி வார்க்கும் ராக ஆலாபனை சொக்கவைக்கிறது. அது போய் சந்திக்கும் முனையில், ஜெய் ராம சந்திர கி ஜெய் என்கிற முழக்கங்கள் ஒலிக்கின்றன….தொடரும் அதே தாளக்கட்டில் அசாத்தியமாக வந்து நுழையும் அஜய், ‘தேய்ந்து வளரும் தேன் நிலாவே மண்ணில் வா’ என்று விளிக்கும் அடியில் நிகழும் ரசவாதம் அள்ளியள்ளிப் பருக வேண்டியது! அதையும் விஞ்சிப் போகிறது ‘தேய்ந்திடாத தீபமாக ஒளிர வா’ ஈன்றெடுக்கும் இடம். ஆனால் ரசிகருக்குப் பெருவிருந்து அதன் பிறகான சொல்லில் காத்திருக்கிறது, ‘வானத்தில்….’ அந்த ல் ….ல்…..அந்தரத்தில் உருண்டுருண்டு மிதந்து இன்பக் கடலில் மூழ்கி மூச்சுத் திணறடிக்கிறது. ‘வானத்தில் மின்னிடும் வைரத்தின் தாரகை தோரணங்கள் பூமிக்குக் கொண்டு வா’ என்ற வரியை, அஜய் சக்ரவர்த்தி அவராகவே இசையில் தோரணம் கட்டி ஆட வைக்கிற கதியில் இசைப்பதைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

அதன் பின் அதே பல்லவி, ஆனால் அதே பல்லவியாக அல்ல, இன்னுமின்னும் சொற்களுக்கு மந்திரம் போட்டு, இன்னுமின்னும் சங்கதிகளில் முக்கியெடுத்து அவர் இசைக்கும் பல்லவி. மூன்றாம் நான்காம் வரிகளில், கோரஸ் ஊடாக இசைக்கும் தன தீம் தீம் தன தன தீம் தீம் தன …மத்தள ஒலி போலவே கேட்பவரின் உடல் மொழியிலும் மாற்றம் கொணரும் வண்ணம் முழங்க, இரண்டாம் சரணம், இன்னும் நெருக்கமாக எடுக்கிறார் அஜய். எந்தக் குறுக்கீடும் அனுமதிக்காது ஆழ்ந்து கேட்டு உணர்ந்து அனுபவிக்க வைக்கும் பாடல் அது….

ராஜாவின் அபாரமான கற்பனை வளம், இசை ஞானம் …. யோசிக்க யோசிக்க மலைக்க வைத்துக் கொண்டே இருப்பது. அஜய் சக்ரவர்த்தி அவர்களைத் தேடிப் போகப் போக, யூ டியூபில் வியந்து நோக்கிய அவரது மேதைமையில் மட்டுமல்ல, இளம் குழந்தைகள் உள்ளிட்டுப் பலரையும் ஊக்கப்படுத்திக் கொண்டாடி இணைய வழி வகுப்புகள் எடுக்கும்போது, ‘நான் கற்றுக் கொடுக்க மட்டுமல்ல, உங்களிடமிருந்து கற்றுக் கொள்ளவும் தான் ஆர்வமாக இருக்கிறேன்’ என்று சொல்வதில் தெறித்த அவரது எளிமையில் இன்னும் ஆழ்ந்து போனது மனம். நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம் மலையின் மாணப் பெரிது அல்லவா!

பலரும் முயற்சி எடுத்து அருமையாக இந்தப் பாடலைப் பாடிக் கொண்டிருக்கின்றனர் என்றாலும், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஒன்றில் முன்னர் அபிலாஷ் பாடுவதன் காணொளியைத் தற்செயலாகப் பார்த்த பின்னர், அன்றைக்கு அவருக்கு அமைந்த அபாரமான கோரஸ் குழுவின் உயிரோட்டமான குரல்கள், மதன் இசைக்குழுவினரின் அபார ஆர்கெஸ்ட்ரா இவற்றின் கம்பீரத் துணையோடு அவர் பாடியது ஒரு சரணம் மட்டும் தான் என்றாலும், ஆலாபனைகளும், ஸ்வர சுவாரசியங்களும், உணர்ச்சி ஆவேச முக பாவத்தோடு திளைத்து அவர் பாடியது மறக்க முடியாதிருக்கிறது.

 

திரைப்பாடல்களை ராக ஸ்வரங்களோடு புரிய வைத்துக் கற்பிக்கும் டாக்டர் லாவண்யா, இந்தப் பாடல் பிறந்த பின்னணியோடு அருமையாக விவாதிக்கும் காணொளியை அந்த ரசனை மிக்க அன்பர்களுக்காகப் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது.

அக்டோபர் நான்காம் வாரம் நானும் இணையரும் கடும் காய்ச்சலில் உழன்று கொண்டிருந்த நாட்களில், எப்போதேனும் எழுந்து உட்கார்ந்து எதையேனும் கேட்கலாம் என்று எண்ணிய போதெல்லாம் இசைப் பாடல்களே எங்களை ஆட்கொண்டிருந்தது. எங்களை எங்களுக்கே மீட்டு எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்த பாடல்களைத் தான் இந்த வாரம் இங்கே பதிவு செய்திருப்பது.

இசையின் ரகசியம் வெளிப்படையானது. அதன் அனுபவம் தனித்துவமானது. அதன் கட்டுமானம் நுட்பமானது. ஆனாலும், கேட்டு ரசித்தலுக்கு எந்த முன் நிபந்தனையும் அற்றது. அதனாலேயே ஜனநாயக பூர்வமானது. அதன் காரணமாகவே எல்லோருக்குமானது. இசை பரவட்டும்.

(இசைத்தட்டு சுழலும் ……)

மின்னஞ்சல் முகவரி: sv.ven[email protected]

 

 

 

One thought on “இசை வாழ்க்கை 94: இசையில் அடங்குதம்மா – எஸ் வி வேணுகோபாலன் ”
  1. என்ன ஒரு அற்புதமான பதிவு. இசை மேதைகளே இவரிடம் கற்க வேண்டியவை ஏராளம். 94 ல் கிட்டத்தட்ட 190 பாடல்களுக்கு மேல் பிரித்து மேய்ந்து இருக்கிறார். இந்த தொடர் 100 ஆவது வெளிவந்த தும் இரண்டு பாகங்களாக புத்தகம் வரவேண்டும். ஆனால் ஆடியோவை எப்படி கொண்டு வந்து சேரும் என்பது தான் பிரச்சினை. அதையும் மாற்று வழியில் ஏற்பாடு செய்து விடுவார். அரிய பொக்கிஷம் நன்றி🙏💕 வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *