ஒரு இலக்கியவாதி சமூகத்திற்கு எதிரான தனது கோபத்தை தனது படைப்பின் ஊடே வெளிக்கொணர்வது சுதந்திர கவி பாரதி கால காலந்தொட்டே வழக்கத்தில் உள்ள ஒன்று. இதன் நீட்சியாக ஆசிரியரும் குறுநாவல் வழியாக தனது ஆற்றாமையை கோபத்தோடு வெளிப்படுத்தியுள்ளார். இவ்வுலகில் இன்று வரை பெண்களின் அடிமனதில் நீங்காது புகைந்து கொண்டிருக்கும் விடயம் தான் நாவலின் மைய கருவாகி இருக்கிறது.
சென்ற வருடம் ஒரு மாத இதழில் பெண்கள் அலுவலகத்தில் பெண்கள் அனுபவிக்கும் பாலியல் சீண்டல்கள் குறித்த கட்டுரையை எழுதி முடித்த வேகத்தில் குறுநாவலையும் எழுத ஆசிரியருக்கு சூழல் அவசியத்தையும் கட்டாயத்தையும் உண்டு பண்ணியிருக்கிறது.
ப்ரீத்தியின் பார்வையில் எங்கோ எறும்பு போல ஊறும் மனிதர்களை போல அவர் சந்திக்கும் இன்னல்கள் அத்தனை சிறியவை அல்ல, அதேசமயம் அவை எறும்பின் கடியை போல கனமானவை அசௌகரியத்தை தரக்கூடியவை.
“தவறான எண்ணத்துடன் தொடுவதைப் போல, தவறான பார்வையும் ஒரு பெண்ணின் உணர்வுகளை காயப்படுத்தும் என்பதை எந்த ஆணும் புரிந்து கொள்வதில்லை” என்ற ஆசிரியரின் வரிகள் தற்காலத்தில் சமூகத்தில் பெரும்பான்மையான ஆண்களின் குணத்தையே காட்டுகிறது.
நீந்தத் தெரியாது கடலில் தத்தளிக்கும் ஒருவனுக்கு தன்னை மிதக்கச் செய்யும் மரக்கொப்பு எத்தகைய பாதுகாப்பான உணர்வை தருமோ அது போல ராஜின் நடத்தையால் மனம் குழம்பியிருந்த ப்ரீத்திக்கு அஷ்வினுடைய நட்பு ஆறுதலாகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கிறது.
குடும்பத்தில் பொருளாதார சமநிலை வேண்டி கணவன் மனைவி இருவருமே பணிக்கு செல்லும் கட்டாயத்தில் உள்ள இன்றைய சூழலில் பிள்ளைகளுக்கு ஏற்படும் உளவியல் சிக்கலை அஷ்வினின் கதாபாத்திரம் மூலமாக வாசகர்களுக்கு கடத்தியுள்ளார் ஆசிரியர். அஷ்வின் தனது சட்ட கல்வி பயிலும் ஆசையை தெரிவிக்கும் போது பிரீத்தியின் பயம் கலந்த ஆச்சரியம் வழக்கறிஞராக உள்ள தனது கணவரின் அணுகுமுறையால் அவளுக்கு ஏற்பட்ட சங்கடங்களை வெளிக்காட்டுகிறது. அதே நெருக்கடிதான் தனக்குள்ள அலுவலக பிரச்சனையை கணவனிடம் வெளிப்படுத்த தடையாகவும் நிற்கிறது.
அஷ்வின் உரையாடலில் பின்வரும் வசனங்கள்,
“உக்காந்து பேச ஆள் இருக்க மாட்டாங்க”, “அவங்களோட அருகாமை எனக்கு தேவபடறப்ப அவங்க என்கூட இல்ல”, “பணத்துக்கு கொடுத்த முக்கியத்துவம் எனக்கு கொடுக்கல”, “அந்த தேடல் எனக்குள்ள ஒரு வெறுப்ப ஏற்படுத்திடுச்சு”
“கொடிது கொடிது இளமையில் வறுமை கொடிது” என்று பாடிய ஓளவை பாட்டி கூற்றுக்கிணங்க அஷ்வின் பெற்றோர்களின் பாசவறுமையில் ஏங்குவது எல்லா பெற்றோர்களுக்கான எச்சரிக்கை.
“அத்தனை அத்துமீறல்களையும் தாங்கிக்கொண்டு சிலையாக இருக்கும் பெண்களின் மனமானது கல்லால் ஆனது” என்ற ஆசிரியரின் வாதம் சமூகத்திற்கான சாட்டையடி, அதேசமயம் “இது போன்ற பிறவிகளை எதிர்த்து எதுவும் செய்ய உனக்கு துணிச்சல் இல்லை. அழுவது ஒன்றுதான் தீர்வா? என்று கேள்வி பெண்களின் ஆற்றாமைக்கான சாட்டையடி.
தனது முதல் படைப்பை சமூக பொறுப்போடு எழுதிய ஆசிரியர் டிஎல்சி காந்தி அவர்களுக்கு பிரியா ஜெயகாந்த் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி நன்றி!
நூலின் தகவல்கள்
நூல் : “இசை”
ஆசிரியர் பெயர் : பிரியா ஜெயகாந்த்
வெளியீடு : முகவரி வெளியீடு
விலை : ரூ.100
பக்கங்கள் : 72
வெளியான ஆண்டு : 2023
எழுதியவர்
கௌரிசங்கர். ச
(தமுஎகச – அறம் கிளை)
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.