நூல் அறிமுகம்: மனித குலத்திற்கு இஸ்லாமின் பங்களிப்பு – மு.சிவகுருநாதன்

 

இஸ்லாமின் வரலாற்றுப் பாத்திரம் – எம்.என்.ராய் 

(எம்.என்.ராய் எழுதிய, வெ.கோவிந்தசாமி மொழிபெயர்ப்பில், பாரதி புத்தகாலயம் வெளியிட்ட ‘இஸ்லாமின் வரலாற்றுப் பாத்திரம்’ என்னும் நூல் குறித்த பதிவு.)

     1999 அக்டோபரில் விடியல் பதிப்பகம் வெளியிட்ட இந்நூலை 2012 டிசம்பரில் பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. 80 பக்கமுள்ள இந்தக் குறுநூல் மிகுந்த முக்கியத்துவம் உடைய ஒன்று. ‘சர்வதேச பயங்கரவாதமாக’ இசுலாமை முன்னுறுத்தி ‘இஸ்லாமியபோபியா’வை உலக அரங்கில் படித்தவர்களிடம் கூட வல்லரசு ஊடகங்கள் கொண்டு சேர்த்துள்ளன. கிழக்கிலும் மேற்கிலும் இசுலாம் பற்றிய தவறான அவதானிப்புகள் வரலாற்று நெடுகிலும் உண்டு. இவற்றை இந்நூல் தகர்க்கிறது.

     வி.எம். தார்க்குண்டே குறிப்பிடுவதைப்போல, “ஒரு நடைமுறைப் போராளி என்ற முறையில் இவர் அர்ப்பணிப்பும், பற்றார்வமும் கொண்ட புரட்சிக்காராகவும், ஒரு சிந்தனையாளன் என்ற முறையில் ஓர் ஆழமான சுயமான சமூகத் தத்துவவாதியாகவும்”, (பக். 05) இருந்த எம்.என்.ராய், 1931-36 காலகட்டத்தில் தனது சிறைவாழ்க்கையில் எழுதி 1939 இல் வெளியிட்டது ‘இசுலாமின் வரலாற்றுப் பாத்திரம்’ என்ற இந்த நூலாகும்.

தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் ...

    இசுலாம் குறித்த வரலாற்றுப் புரிதல்கள் இல்லாமல், வெறுமனே ‘வாளோடு வந்த மதம்’, ‘வந்தார்கள் – வென்றார்கள்!’ என்று சொல்வதெல்லாம் அபத்தம். “இசுலாமை இராணுவவாதத்தோடு சேர்த்துக் குழப்புவது, வரலாற்றை மொத்தமாக மிகத் தவறாகப் புரிந்துகொள்வதாகும்”, (பக்.23) என இங்குள்ள அவலத்தைச் சுட்டுகிறார்.

     இன்று நாம் இந்து, இஸ்லாம் மதங்களைப் பற்றி அவற்றின் கொள்கைகள், லட்சியங்கள் வழியாக அல்லாமல் அரசியல் இயக்கங்கள் வழியே தெரிந்து கொள்கிறோம் என்பது கெடுவாய்ப்பு, என அஸ்கர் அலி என்ஜினியர் கூறியுள்ளது மிகப்பொருத்தமே. காலனிய மற்றும் இந்துத்துவ வரலாற்றாளர்கள் இஸ்லாம் பற்றிய ஒரே பார்வைகளையே முன்வைத்தனர். எங்கேனும் எழுந்த மாற்றுக் கருத்துகளை யாரும் செவிமெடுக்கவில்லை.

    “கிரேக்க, ரோமப் பண்பாடுகளினால் மட்டுமல்ல, பாரசீகம், சீனா, இந்தியா ஆகியவற்றின் அழுகிப்போன பழம் பண்பாடுகளினாலும் உருவாகியிருந்த அவநம்பிக்கைச் சூழலிலிருந்து அம்மக்களை விடுவித்த இசுலாமின் திறமையும், அதன் புரட்சிகர முக்கியத்துவமே “, (பக்.15) இசுலாமின் அற்புதமான வெற்றிக்கு முதன்மைக் காரணமாக இந்நூல் சொல்கிறது.

   “மதம் என்ற சொல்லின் கறாரான பொருளின்படி பார்த்தால், இசுலாம் ஒரு மத இயக்கம் என்பதைக் காட்டிலும், ஓர் அரசியல் இயக்கமாகவே எழுச்சி பெற்றது”, (பக்.18) என்கிறார். அதற்கான அரசியல், சமூக, பொருளாதாரச் சூழல்கள் அமைந்ததும் மேற்கில் கிறித்தவ ஆட்சியாளர்கள், இந்தியாவில் இந்து ஆட்சியாளர்கள் மீதிருந்த மக்களின் வெறுப்பு இதை சாத்தியப்படுத்தியதையும் விவரிக்கிறது.

   கீழ்க்கண்ட ஆறு தலைப்புகளில் சுருக்கமான, ஆனால் செறிவான மதிப்பீடுகளை முன்வைக்கிறது.

  • இசுலாமின் இலட்சியப் பணி
  • இசுலாமின் சமூக, வரலாற்றுப் பின்னணி
  • வெற்றிக்கான காரணங்கள்
  • முகமதுவும் அவர் போதனைகளும்
  • இசுலாமியத் தத்துவம்
  • இசுலாமும் இந்தியாவும்

    “பைசாண்டியப் பேரரசின் ஊழல், பாரசீகப் பேரரசின் கொடுங்கோலாட்சி, கிறித்தவத்தின் மூடநம்பிக்கை  ஆகியவற்றால் ஒடுக்கப்பட்டும், கொடுமைப்படுத்தப்பட்டும், வதைக்கப்பட்டும் வந்த மக்கள் அனைவருமே அராபியப் படையெடுப்பாளர்களைத் தங்களை விடுவிக்க வந்தவர்களாக வாழ்த்தி வரவேற்றனர்”, (பக்.20)

   “இசுலாமின் நம்பமுடியாத வெற்றிக்கு ஆன்மீகக் காரணங்கள் இருந்தது போலவே, சமூக–அரசியல் காரணங்களும் இருந்திருக்கின்றன”, (பக்.45) என்று வரலாற்றாசிரியர் கிப்பனையும் “இசுலாமின் கண்கவர் வெற்றிக்கு அதன் தொடக்ககாலத் தொண்டர்களின் இராணுவ வலிமையைக் காட்டிலும், அதன் விடுதலை, சமத்துவக் கோட்பாடுகளே காரணமாக இருந்திருக்கின்றன”, (பக்.46) என்று வரலாற்றாசிரியர் பின்லேவை மேற்கோளாகக் காட்டுகிறார்.

No One From Our Community Helped Us': 20 Muslims In UP's Baghpat ...

      இந்தியாவில் பார்ப்பனிய ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு உள்ளாகியிருந்த ஜாட்டுகள் உள்ளிட்ட வேளாண் சாதிகளின் உதவியுடன் முகமது பின் காசிம் சிந்துப்பகுதியை வென்றதும், பவுத்த வீழ்ச்சிக்குப் பின், மோசமானப் பொருளாதாரச் சீரழிவு, அறிவுஜீவிகளின் அராஜகம், ஆன்மீகக் குழப்பம் போன்றவற்றில் நாடு வீழ்ந்து கிடந்ததும் நூலில் பதிவாகிறது. பெரும்பான்மையான அடித்தட்டு மக்களுக்கு சமூக சமத்துவம் வழங்கப்படவே இல்லை. ஒடுக்கப்பட்ட இந்து முஸ்லீமாக மாறிய பிறகு அவர்களுக்கு அனைத்து உரிமைகளும் கிடைத்தது. ஆனால் இந்து மதம் அவர்களை தீண்டத்தகாதவர்களாகவே நடத்தியதும் (பக்.74) இதற்கு முதன்மையான சமூகக் காரணிகளாகும்.

    பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த வானவியலாளர் அபுபக்கர்; இவர் தாலமியை நிராகரித்தவர். கோள்களின் அமைப்பு, இயக்கம் பற்றிய இவரது கண்டுபிடிப்பு பின்னாளில் ஜியோர்டானா, புருனோ, கலிலியோ, கோபர்நிகஸ் ஆகியோரால் வளர்த்தெடுக்கப்பட்டது. அராபிய தத்துவச் சிந்தனையாளர்கள் அல்கண்டி, அல்பராபி, அல்கஜாலி, அவ்ரோஸ் என நீண்ட வரிசையைக் கொண்டதும் விளக்கப்படுகிறது.

   இஸ்லாம் சகிப்புத்தன்மையற்ற மதம் என்பது அபாண்டக் குற்றச்சாட்டு. ‘இறைவன் ஒருவனே’ என்ற கோட்பாடே சகிப்புத் தன்மை வளரக் காரணம் என்கிறார். பார்ப்பனீய வைதீகத்திற்கு எதிராக கபீர், குருநானக், துக்காராம், சைதன்யர் போன்ற சீர்திருத்தக்காரர்களின் எழுச்சிக்கு முகமதிய படையெடுப்பின் வழி நிலைநாட்டியிருந்த சமூகப் பாதிப்புகளே காரணமாக இருந்திருக்கின்றன. முஸ்லீம்களின் மதம், பண்பாடு குறித்த இந்துக்களின் அகந்தைப் பார்வை அபத்தமானது என்கிறார். (பக்.80)

   இஸ்லாமியர்களிடம் கற்றுக் கொண்ட அய்ரோப்பா இன்று நவீனப் பண்பாட்டின் தலைவனாக மாறிவிட்டது. இன்றும்கூட அவர்கள் இதை ஒப்புக்கொள்கின்றனர். அதைப்போல புரிந்துணர்வு, அறிதல் மூலம் இந்துக்களும் முஸ்லீம்களும் மனித குல வரலாற்றின் மறக்க முடியாத அந்த அத்தியாயத்திலிருந்து லாபகரமான ஊக்கத்தைப் பெற முடியும் என்று முடிக்கிறார்.

     ஆனால் இன்றைய சூழல் எவ்வாறு இருக்கிறது? வெறுப்பரசியல் ஏற்படுத்தும் பகைமையின் ஊடாக இந்த இரு சமூகங்களுக்குள்ளான பிளவை அதிகரிக்கவே மதவாத சக்திகள் விரும்புகின்றன. இதுவரையிலான காலத்தில் இத்தகைய சிந்தனைகள் அதிகம் பரவவில்லையென்றாலும் இனியாவது இவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்து கருத்துப் பரவலை முன்னெடுக்க வேண்டும். அந்த வகையில் பாரதி புத்தகாலயத்திற்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

நூல் விவரங்கள்:

இசுலாமின் வரலாற்றுப் பாத்திரம்

எம்.என்.ராய்

(தமிழில்) வெ.கோவிந்தசாமி

வெளியீடு: 

பாரதி புத்தகாலயம்

முதல் பதிப்பு: டிசம்பர் 2015

பக்கங்கள்: 80

விலை:  50

 

தொடர்பு முகவரி: 

 பாரதி புத்தகாலயம்,

7, இளங்கோ சாலை,

தேனாம்பேட்டை,

சென்னை – 600018.

 தொலைபேசி: 044 24332424, 24332924, 24356935

மின்னஞ்சல்: [email protected]

இணையம்: www.thamizhbooks.com

 

மு.சிவகுருநாதன்

திருவாரூர்

9842402010