(மூவாலூர் ஆ.இராமாமிர்தம் எழுதிய, ‘இஸ்லாமும் இந்தியர்களின் நிலைமையும்’ என்ற ‘கருப்புப்பிரதிகள்’ வெளியிட்ட நூல் குறித்த பதிவு.)
‘இசுலாமின் வரலாற்றுப் பாத்திரம்’ என்ற நூல் எம்.என்.ராய், 1931-36 காலகட்டத்தில் தனது சிறை வாழ்க்கையில் எழுதி 1939 இல் வெளியிட்டதாகும். இதன் ஆங்கிலப் பதிப்பாளர் (எஸ்.பல்வந்த்) குறிப்பாக இடம்பெறும் சில வரிகள்.
“இந்நூல் வெளிவந்ததற்குப் பின் நடந்த நிகழ்ச்சிகளைப் பின்னோக்கிப் பார்க்கும் போது நாடு விடுதலை அடைவதற்கும் அதையொட்டி நடந்த பிரிவினைக்கும் ஒரு பத்தாண்டுகள் முன்பே, இந்தியத் துணைக்கண்டத்தில் இந்தப் புத்தகம் மிக விரிவாகப் படிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றே ஒருவர் விரும்பக்கூடும். இசுலாம் வரலாறு குறித்த ஒரு நல்ல அறிவும், உளச்சாய்வுமற்றப் புரிதலும் முசுலீம்கள், முசுலீம் அல்லாதவர்கள் மத்தியில் இருந்திருந்தால், பிரிவினையின் போது நடந்த அவலமான நிகழ்ச்சிகளையும், மனித இழப்புகளையும் தவிர்த்திருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்”. (தமிழில்: வெ.கோவிந்தசாமி)
இந்திய அளவில் இஸ்லாமை நேர்மறையாக எதிர்கொண்டு கொண்டாடிய ஒரு இயக்கம் உண்டென்றால் அது பெரியாரது சுயமரியாதை இயக்கம் (திராவிட இயக்கம்) மட்டுமே. “இன இழிவு ஒழிய இஸ்லாமே நன்மருந்து”, இஸ்லாம் சமத்துவ மதம், திராவிட மதம் என்றெல்லாம் பொதுக்கூட்டங்களில் பேசியும் குடி அரசு இதழ்களில் தொடர்ந்து எழுதியும் வந்தார். எம்.என்.ராய் நூல் வெளியான அதே ஆண்டில் (1939) சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த வீராங்கனை மூவலூர் இராமாமிர்தம் ‘இஸ்லாமும் இந்தியர் நிலைமையும்’ என்ற குறுநூலை தமிழில் எழுதி வெளியிடுகிறார். இவர் ‘தாசிகளின் மோச வலை அல்லது மதிபெற்ற மைனர்’ என்னும் நாவலை எழுதியவர். அவரது இந்தக் குறு நூல் சுயமரியாதை இயக்கக் கொள்கைகளை அடியொற்றி அமைந்துள்ளது.
“இந்துத்துவத்திற்கு எல்லா வகையிலும் ஒரு எதிர்க் கோட்பாடாக உருவான சுயமரியாதை இயக்கம், இஸ்லாத்தின் இந்தச் சிறப்பை சரியாகவே இனங்கண்டது. இஸ்லாத்தின் இந்த ஆதிச் சமத்துவத்தை இனங்கண்ட இன்னொரு தரப்பினர் கம்யூனிஸ்டுகள். ஃப்ரான்சிஸ் மாக்சிம் ரோடின்சன், இந்தியாவில் எம்.என்.ராய் முதலான கம்யூனிஸ்டுகளும் கூட இஸ்லாத்தை இந்தக் கோணத்தில் வரவேற்று எழுதி இருந்த போதும் “மதம் மக்களின் அபின்” எனும் அவர்களின் அணுகல்முறை அவர்களை ஒரு எல்லைக்குள் நிறுத்தியது”, (பக்.19) என்று முன்னுரையில் அ.மார்க்ஸ் மிகச்சரியாக மதிப்பிடுகிறார்.
“பெரியாரும் சுயமரியாதை இயக்கமும் இந்துத்துவ பாசிசத்திற்கு எதிர் நிலையாக இஸ்லாத்தை உயர்த்திப் பிடித்தபோதும் எந்நாளும் ஒரு மதம் என்கிற வகையில் அதில் கலந்து போயிருந்த பிற்போக்குக் கூறுகளைக் கண்டிக்கத் தவறவில்லை”, (பக்.20) என்பதையும் அ.மார்க்ஸ் குறிப்பிடத் தவறவில்லை.
பெரியாரும் சுயமரியாதை இயக்கமும் இஸ்லாத்தை அணுகிய விதம் குறித்த சில எடுத்துக்காட்டுகளை பெரியாரில் மொழியில் கீழேக் காணலாம்.
“ஆரிய சமாஜம் என்பதும் ஒரு வேஷந்தான். உதாரணமாக, வைக்கம் சத்தியாகிரகத்தில் ஆரிய சமாஜத் தீயர்களையும். கிறிஸ்தவப் புலையர்களையும் தெருவில் நடக்கவிடவில்லை. இஸ்லாமானவன் தாராளமாய் விடப்பட்டான். பாலக்காட்டிலும் அப்படியே நடந்தது. ஒருநாள் பாலக்காட்டில் செருமான் என்கின்ற இழிவுபடுத்தப்பட்ட சாதியாயிருந்த தீண்டப்படாதவன் ஒருவன், இஸ்லாம் ஆகி, தடுக்கப்பட்ட தெருவழியாகப் போனான்.
அப்போது அவனை சவுளிக்கடைப் பார்ப்பனரும், வெற்றிலைக்கடை நாயரும் தெருவுக்கு வந்து நின்று பார்த்தார்கள். உடனே அங்கு இருந்த மாப்பிள்ளை (இசுலாம்) எந்தடா! பன்னிக்கூத்தச்சி மகனே, அவனே நோக்குன்னு! என்று கேட்டான். அதாவது, என்னடா பன்றித் தேவடியாள் மகனே, அவனைப் பார்க்கிறாய் என்று கேட்டான். செருமானாயிருந்த முசுலிம் சிரித்துக்கொண்டே போனான். பார்ப்பனரும் நாயரும் தலை குனிந்துகொண்டார்கள். இது உணமையில் நடந்த சம்பவம்.
ஆகவே, இசுலாம் மார்க்கம் செய்கின்ற நன்மை இந்து மார்க்கம் செய்வதைவிட அதிகமா, இல்லையா?
ஆனால், நான் இஸ்லாம் மதக்க்கொள்கைகள் முழுவதையும் ஒப்புக் கொண்டதாகவோ அவைகள் எல்லாம் சுயமரியாதைக் கொள்கைகள் என்பதாகவோ யாரும் தீர்மானித்து விடாதீர்கள். அதிலும் பல விரோதமான கொள்கைகளைப் பார்க்கின்றேன். இந்து மதத்தில் எதை எதைக் குருட்டு நம்பிக்கை, மூடப்பழக்கம், பாமரத்தன்மை என்கின்றோமோ அவை போன்ற சில நடவடிக்கைகள் இஸ்லாம் மதத்திலும் சிலர் செய்கிறார்கள். சமாதி வணக்கம், பூசை, நைவேத்தியம் முதலியவை இஸ்லாம் சமூகத்திலும் இருக்கின்றன.
மாரியம்மன் கொண்டாட்டம் போல், இஸ்லாம் சமூகத்திலும் அல்லாசாமி பண்டிகை நடக்கின்றது, மற்றும் நாகூர் முதலிய ஸ்தல விசேஷங்களும், சந்தனக்கூடு, தீமிதி போன்ற உற்சவங்களும் நடைபெறுகின்றன. இவைகள் குர்-ஆனில் இருக்கின்றதா, இல்லையா என்பது கேள்வியல்ல. ஆனால் இவைகள் ஒழிக்கப்பட்ட பின்புதான் எந்தச் சமூகமும் தங்களிடம் மூடநம்பிக்கை இல்லை என்று சொல்லிக் கொள்ள முடியும்”, (பக்.247&248, குடி அரசு 02/08/1931, ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான்… பசு.கவுதமன் தொகுப்பு பாகம் 01 லிருந்து…)
“இஸ்லாம் மக்களிடத்தில் தங்களுக்குள் சமத்துவம், சகோதரத்துவம், ஒற்றுமை, அன்பு முதலிய குணங்கள் இருக்கின்றது. வீரம் என்றால் இலட்சியத்திற்கு உயிரைவிடத் துணிவது என்பதுதான்.
இஸ்லாம் மதத்தில் உயர்வு தாழ்வு இல்லை. அவர்களுக்குள் தீண்டாதவன் இல்லை. அவர்களது தெருவில் நடக்கக்கூடாதவன், குளத்தில் இறங்கக்கூடாதவன், கோவிலுக்குள் புகக்கூடாத மனிதன் இல்லை. இதை யோக்கியமான இந்துக்கள் ஒப்புக் கொண்டுதான் ஆகவேண்டும்”. (பக். 246, மேலது)
“நமது வியாதி – நோய் (‘சூத்திரர்கள்’,‘வேசிமக்கள்’ என்ற நோய்) பெரிது, மிகமிகப் பெரிது. இது புற்று (Cancer), தொழுநோய் போன்றது; வெகுநாளைய நோய். இதற்கு ஒரே ஒரு மருந்துதான் – அது இசுலாம்தான்! இதைத் தவிர வேறு மருந்தில்லை. இது இல்லாவிட்டால் வேதனைப்பட வேண்டியது தான். தூக்க மருந்தும் போதி மருந்தும் கொண்டு, நோய் இம்சை தெரியாமல், நாமும் பிணம் போல் கிடக்க வேண்டியதுதான். நோய் தீர்ந்து எழுந்து நடக்க, இன்றைய நிலையில் இசுலாம் (‘இந்து மதத்தை விடுவது’ எனும்) மருந்துதான். இதுதான் நாடு கொடுக்கும், வீரம் கொடுக்கும், நிமிர்ந்து நடக்கச் செய்யும் மருந்தாகும்”. (பக்.53, பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், பதிப்பு: வே.ஆனைமுத்து, 18/03/1947 திருச்சி உரை, இன இழிவு நீங்க இசுலாமே நன்மருந்து 1947, குடி அரசு பதிப்பகம்)
“எர்ணாகுளத்தில் ஒரு மாநாடு என் தலைமையில் கூட்டப்பட்டது. அதில் சாதி ஒழிப்புக்காக, சாதியில்லாத மதமாகிய இசுலாம் மதத்தில் இந்துக்கள் சேர்ந்து விடுவது என்று தீர்மானம் நிறைவேற்றக் கொண்டுவரப்பட்டது. சில செல்வாக்கு உட்பட்டவர்கள் கிறித்தவ மதத்தில் சேருவது என்று தீர்மானம் கொண்டு வந்தார்கள். மாஜி மந்திரி அய்யப்பன் அவர்கள் இசுலாம் மதத்திற்கு போய்ச் சேர்வது என்பதாகத் திருத்திப்போட வேண்டுமென்று சொல்லி ஏகமனதாய் நிறைவேறச் செய்தார்.
இசுலாத்தில் சேருவது என்ற தீர்மானம் வந்த அன்றைக்கே ஒரு அய்ம்பது பேர்களைப் போல முசுலிம்களாகிவிட்டார்கள்; பிறகு வெளியிலும் பலர் மதம் மாறிவிட்டார்கள்; இது ஒரு பெரிய கலக்குக் கலக்கிவிட்டது”, (பக்.111, பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், பதிப்பு: வே.ஆனைமுத்து, கன்னியாகுமரி மாவட்ட மார்த்தாண்டம், இரணியல் கூட்ட சொற்பொழிவுகள்: விடுதலை 08/09/1959)
“மதம் வேண்டுமானால், மதம் வேண்டும் என்பவர்கள், மதத் தத்துவங்களையும் அவசியத்தையும் ஆராய்ச்சி செய்து பார்த்து ஒரு மதத்தைத் தழுவுவது என்பது அறிவுடைமையாகும்”, (பக்.182, மேலது, குடி அரசு 13/01/1945)
“நபிகள் கொண்டாடப்பட்ட இந்தக் கூட்டம் மற்ற மதக்காரர்கள் கொண்டாடுவட்துபோல் சடங்குமுறைக் கூட்டமல்ல; திருநட்சத்திரம் கொண்டாடும் கூட்டமல்ல; படம் இல்லை, அபிசேஷகம் ஆராதனை இல்லை; பசனைப் பாட்டுகள் இல்லை.
முசுலீம்கள் தங்கள் கடவுளை, ‘பகுத்தறிவு’ ஆத்திகர்கள் எப்படிக் கருதுகிறார்களோ அதுபோல உருவமற்றவர், இணையற்றவர் என்று கருதுகிறார்கள்
இந்துக்கள் தங்கள் கடவுள்களுக்கு ஏற்படுத்தாத உருவமே இல்லை. இணைவைக்காத வாஸ்துவே இல்லை.
முசுலிம்கள் தங்கள் கடவுளுக்கு உயர்ந்த குணங்களைக் கற்பிக்கிறார்கள்.
இந்துக்கள் தங்கள் கடவுள்களுக்கு ஏற்றாத இழி குணங்களும், இழி செய்கைகளும் உலகில் கிடையவே கிடையாது.
முசுலிம்கள் மதம் மூலம் அவர்கள் சமுதாயத்துக்குள் ஓர் ஒற்றுமையும், ஒரு சமத்துவமும் இருக்கிறது.
இந்துக்களுக்குத் தங்கள் மதம் மூலம் வேற்றுமையும், பேதமுமே நிறைந்திருக்கிறது.
இந்துக் கடவுள்களை அன்புமயம் என்கிறார்கள். ஆனால் இந்துக்களின் கடவுள்கள் கொடுமை மயமாகவே இருக்கின்றன”, (பக். 493, மேலது, குடி அரசு: 25/03/1944)
விடுதலைக்குப் பின் அம்பேத்கர் மத மாற விரும்பி அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டபோது இஸ்லாத்துக்குச் செல்ல வலியுறுத்தினார். அண்ணல் அம்பேத்கரின் முன்னுரிமைப் பட்டியலில் கிறித்துவம், இஸ்லாம் ஆகியன இல்லை. அவரது முதல் தேர்வு சீக்கிய மதமாகவே இருந்தது. வேறு காரணங்களினால் பவுத்தத்தைத் தழுவியது வரலாறு. ஆனால் பெரியாரின் பரிந்துரையில் இஸ்லாத்திற்கு மட்டுமே இடம் கிடைத்தது.
சாதி இழிவு நீங்க இஸ்லாம் எனும் சமத்துவ மதமே சிறந்தது என்று வலியுறுத்தியது சுயமரியாதை இயக்கம். தாம் அதில் இணைய விரும்பவில்லை என்ற போதிலும் பிறர் மதம் மாற விரும்பினால் இஸ்லாமே சரியான தீர்வாக இருக்க முடியும் என்று அடையாளம் காட்டியது. இந்நூலிலும், “இஸ்லாம் என்றால் சாந்தி, சமாதானம் என்று பெயர். தமிழ் மக்கள் கொள்கையே இஸ்லாம் கொள்கை ஆனதால் இதை எழுதத் துணிந்தோம். அம்மதத்தில் சேருவதற்கல்ல”, (பக்.21) என்று தொடக்கத்திலேயே இராமாமிர்தம் தெளிவுபடுத்தி விடுகிறார். அதுவே பெரியார் மற்றும் சுயமரியாதை இயக்க நிலைப்பாடாகவும் இருந்தது.
சாதி ஒழிந்த நிலை, தீண்டாமையின்மை, மதுவிலக்கு, சமதர்மம், வறுமை நீக்கல், பெண்கள் சுதந்திரம், சகோதர வாஞ்சை ஆகிய இஸ்லாம் மதத்தின் நோக்கங்களைப் பட்டியலிட்டு விளக்குகிறார்.
சொத்துரிமை, விவாகரத்தில் பெண்களுக்கு ஜீவனாம்சம், விதவா விவாகம், மநு தர்மம் போலின்றி கல்வி இருவருக்கும் சமம் போன்ற இஸ்லாத்திலுள்ள பெண் சுதந்திரத்தைப் பட்டியலிட்டு விளக்குகிறார். (பக்.36)
“ஆரிய மதத்தைப்போல் எதைச் சொன்னாலும் நம்பத்தான் வேண்டும் என்ற கட்டாயமில்லை” (பக்.24)
“ஈரான் தேசத்தில் நெருப்பை வணக்கிப் பல பாபச் செயல்களைச் செய்து வந்தனர்” (பக்.24) (நெருப்பிற்குப் பதிலாக செருப்பு என்றுள்ளது!)
“இஸ்லாமியத்தில் திரு நபி அவர்கள் தனக்கு நபித்துவம் கிடைத்த சமயத்தில் உரோமாபுரி ஏகாதிபத்தியம் வீழிச்சியின் கடைசி எல்லையை அடைந்திருந்தது”,
“சிற்றின்பத்தின் நிலைமை உச்சம் பெற்றிருந்தது”,
“கிறிஸ்து மதத்தில் பிளவு பட்டு யுத்தம் ஏற்பட்டிருந்தது”, (பக்.25)
இத்தகைய சூழலில் கெட்டகாலம் என்று கூறப்பட்ட (இந்தியாவின் புராண காலம் தொடக்கம் கி.பி.500) காலத்தில் திரு நபி (ஸல்) அவர்கள் கி.பி.571 ஏப்ரல் மாதம் பிறந்ததைக் குறிப்பிடுகிறார்.
“அறிவை மழுங்கச் செய்பவன் மதத்தலைவனாக இருந்தான்”,
“பெண், புருஷன் இருவரையும் நிர்வாணமாக்கி வணங்கி வந்தனர்”, (பக்.25)
“கடவுளில் பேரால் பெண்களை விபச்சாரியாக்கி விபசாரம் செய்பவர்களுக்கு மோஷமுண்டு என்று கருதப்பட்டிருந்தார்கள், இப்பொழுதுமிருக்கிறார்கள்”, (பக்.25&26)
“மாட்டின் மூத்திரத்தை அருந்துவது மோஷமென்று கருதபட்டிருந்தது”,
“வேதத்தைப் படித்தால் நாக்கு அறுபட்டான்”, (பக்.26) என்று மநு தரம சாத்திரத்தால் இந்தியாவில் ஏற்பட்ட கொடுமைகளைப் பட்டியலிடுகிறார்.
“கிரியாம்சையில் செய்யக்கூடிய காரியம் எது என்பதைத் தெரிந்துகொள்வதற்கும், மனிதனுள் தோன்றும் காரியம், எண்ணம், நம்பிக்கை, கொள்கை உருவாகி புறத்தில் காரியமாகத் தோன்றுகிறது”, (பக்.27) திரு சத்திய நபி உரைக்கும் கொள்கையே நம் ஈ.வெ. ராமசாமி பெரியார் கூறுகிறார், குற்றமென்ன?”, (பக்.27) எனக் கேள்வி எழுப்புகிறார்.
அதனால்தான் 5 விதக் கட்டளைகளை ஏற்படுத்தி தினசரிப் பழக்கத்திற்கு வருமாறான திட்டத்தை (ஈமான் – உறுதி கொள்தல்) நபிகள் அமைத்ததையும், யாவரும் ஒரே உடை தரித்து ஓரிடத்தில் கூடுதல் (ஹஜ்) மனிதன் இயற்கையின் பால் வருவதற்கு வழிகாட்டுவதைச் சொல்கிறார்.
இதைத்தான், “ஈ.வெ.ரா. பெரியார் ஒரே வகுப்பென்று உணர்ச்சி பெற்று சுயமரியதை அடை என்கிறார். தான் மகாத்துமாவென்றோ, 12 மணிக்கு கடவுள் வந்து சொல்கிறார் என்றோ நாயகம் அவர்களும் சொல்லவில்லை. அவரது கொள்கையை ஒட்டிய ஈ.வெ. ராமசாமிப் பெரியாரும் சொல்லவில்லை”, (பக்.32) என்று விளக்குகிறார்.
படிப்பதற்கும் பகுத்தறிவிற்கும் சம்பந்தமில்லை திரு நபி (ஸல்) அவர்களும் பெரியார் அவர்களும் உலகிற்கு உணர்த்தியவர்கள் என்று ஒப்பிடுகிறார்.
சமத்துவம், சகோதரத்துவம், ஜனநாயகம் ஆகியவற்றை இஸ்லாம் பேணுவதை மூவாலூர் இராமாமிர்தம் திறம்பட எடுத்துரைக்கிறார். இத்தகைய எழுத்துகளின் வழி சுயமரியாதை இயக்கத்தையும் அதில் பெண்கள் ஆற்றிய அரும்பணியையும் அதன் வீச்சையும் ஒருங்கே உணர முடிகிறது.
நூல் விவரங்கள்:
இஸ்லாமும் இந்தியர்களின் நிலைமையும்
மூவாலூர் ஆ.இராமாமிர்தம்
பதிப்பாசிரியர்: பா.ஜீவசுந்தரி
முதல் பதிப்பு: பிப்ரவரி 2016
பக்கங்கள்: 40
விலை: ரூ. 30
வெளியீடு: கருப்புப்பிரதிகள்,
பி 55 பப்பு மஸ்தான் தர்கா,
லாயிட்ஸ் சாலை,
சென்னை – 600005.
பேச: 9444272500
மின்னஞ்சல்: [email protected]