தூரத்தில் வெடிக்கும்
குண்டுகளின் சத்தம்
மரண பயத்தை
கண்ணெதிரே காட்ட
நாவுகள் வறண்டு
பேசிட எதுவுமின்றி
உயிர் தப்பிக்க
வழிதேடும் ஈர விழிகளோடு
நீல வானமும்
கரும் புகையில் உருமாறி
கார் மேகமென அழுகிறது
வடக்கையும் தெற்கையும்
ஆக்ரமிப்பதிலும் தக்க வைப்பதிலும்
குறியாயிருக்கும்
அணிகள் எதுவும்
அகதிகளாய் மாறும்
உயிர்களின் மேலொரு
ஈவிரக்கமின்றிப் போர் தொடுக்க…..
உலரும் நாவுகளும்
உலகெங்கும்
தேடி அலைகின்றன
இரசாயன குப்பிகள் விளையாத
சமாதான மண்ணை….
திரும்பிய இடமெல்லாம்
பரவும் கரும் புகையால் இருண்டு கிடக்கும் இஸ்ரேலில்
அடிக்கடி வெடித்துச் சிதறும் குண்டுகளின் வெளிச்சத்தில்
மனித சடலங்கள் மிதக்கும் இரத்த ஆறுகளின் சத்தங்களுக்கிடையே
பெற்றோரை பறிகொடுத்த மழலையின் அழுகுரல் மட்டும்
தொலைக்காட்சித் திரைகளில் திரும்பத் திரும்ப ஒளிபரப்பாக
கொடூர நிகழ்வைக் காணும் விழிகளில் கசியும் ஈரம் உலராமல்
தூர தேசத்தின் விழிகளில் வடிகிறது.


