பள்ளி இடை நின்றவர் அவர். வயது பதிமூன்று இருக்கலாம். பெயர் விஜயா. நாள்தோறும் பழைய பேப்பர் பொறுக்கி குடும்பத்தை காக்க வேண்டியது அவர் பொறுப்பு. அப்பா மாரடைப்பால் மரணம். அம்மா இருதய நோயாளி. படுத்த படுக்கை. மருந்து வாங்க, குடும்பச் செலவுக்கு என எல்லாம் விஜயாவின் உழைப்பு மட்டுமே. இத்தோடு 30 ஆயிரம் கந்துக் கடனுக்கான வட்டியும் கட்ட வேண்டும்.அறுபது வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர்.சாலையில் செல்லும் எருமை மாடுகளின் சாணத்தைப் பொறுக்கி குப்பை ஆக்கி, அந்த சிறு வருமானத்தைக் கொண்டு வாழ்க்கை வண்டி ஓடுகிறது அவருக்கு. அவரை ஒத்த வயதுடைய மற்றும் சிலர் ஒவ்வொரு பருவ காலத்திலும் கிடைக்கும் வேப்பங்காய் பொறுக்கி விற்றல் ஏதேனும் சில பொருட்களை சேகரித்து விற்று வயிறு பிழைத்து வருகிறார்கள். பழனிக்கு பாதயாத்திரை செல்வோரிடம் பிச்சை எடுப்பது கூட ஒரு பருவகால தொழிலாக இருக்கிறது. திருப்பூர் சுற்று வட்டாரங்களில் பனியன் துணிகளின் கழிவுகளில் இருந்து நூலைப் பிரித்து பிழைப்பு நடத்தும் பலர் உள்ளனர். இதோ, எங்கள் வீட்டருகே குடியிருக்கும் நடுத்தர வர்க்க குடியிருப்புகளில் கூட துண்டுகளில் நூலை முடிந்து வருவாய் ஈட்டுகின்றனர்.
இப்படி, எத்தனை விதமான தொழில்கள் இருக்கிறது? ஒவ்வொன்றும் சுயதொழில் தான். கொஞ்சம் கண்ணை மூடி யோசனை செய்து பாருங்கள். நீங்கள் கிராமமோ நகரமோ, எந்தப் பகுதியில் இருந்தாலும் உங்களைச் சுற்றியே குறைந்தபட்சம் ஒரு முப்பது வகையான தொழில் பிரிவினரை தொழிலாளிகளை நினைவுபடுத்தி பார்த்துவிட முடியும். இவர்கள் அனைவரும் முறைசாரா தொழிலாளர்கள் தான். இவர்கள் மட்டுமா, சிறு விவசாயிகள் குறு விவசாயிகள், நிலம் இல்லாத விவசாய தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள், செங்கல் சூளை தொழிலாளர்கள், கல் உடைப்போர், மூட்டை தூக்குவோர், ஆடு மாடு கோழி வளர்ப்போர், மீன் பிடிப்போர், சலவைத் தொழிலாளர்கள், சவர தொழிலாளர்கள், மர வேலை செய்வோர், எலக்ட்ரீசியன்கள், விளம்பரங்கள், அழகு நிலைய பணியாளர்கள், வீட்டுவேலை செய்பவர்கள், வீட்டிலிருந்தபடியே பீஸ் ரேட்டுக்கு வேலை செய்பவர்கள், சின்ன சின்ன பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருபவர்கள், கைவினைஞர்கள், துப்புரவு தொழிலாளர்கள், காய்கறிகள் பழங்கள் பூக்கள் உள்ளிட்டவற்றை விற்கும் கால்நடை, தள்ளுவண்டி வியாபாரிகள்…
நகர்ப்புற பெட்டி கடை முதல் பெரிய மளிகை கடைகள் ஷாப்பிங் மால்கள் வரை எல்லாம் சில்லரை வர்த்தகம் தான். பிச்சை எடுப்பது கூட ஒருவகையான சுயவேலைவாய்ப்பு தான். இந்த வேலைதான் என்று இல்லாமல் என்ன வேலை கிடைத்தாலும் உள்ளூரில் செய்வது. அதில் கிடைக்கும் வருமானத்தை நம்பி வாழ்கையை நடத்துவது இது வகை முறைசாரா தொழில். விழுந்து விடக்கூடாது எப்படியாவது வாழ்ந்துவிட வேண்டும் என்று வைராக்கியத்தோடு நூற்றுக்கணக்கான மைல்களை கடந்து, அற்பக் கூலிக்கு அவமானங்களை தாண்டி வாழ்ந்துவரும் இலட்சக்கணக்கான புலம்பெயர்ந்த முறைசாரா தொழிலாளர்கள் மறுபுறம். இந்த சில்லரை வர்த்தகத்தில் மட்டுமே 700 மில்லியன் டாலர்கள் புழங்குகிறது என்கிறார்கள்.
முறைசாரா தொழிலாளர்களின் பொதுவான இயல்புகள்
இந்த அத்தனை வகை தொழில்களுக்கும் தொழிலாளர்களுக்கும் சில பொதுவான பண்புக்கூறுகள் இருக்கிறது. இவர்கள் இந்திய நாட்டில் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்து இருப்பவர்கள். இவர்களது வேலை நிலையானது இல்லை. ஒரே வகையான வேலை இல்லை. துண்டு துண்டாக வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வடிவங்களில் வேலை செய்து வருபவர்கள். எந்தவிதமான விடுமுறையும் இல்லை. சமூக பாதுகாப்பு இல்லை. மருத்துவ வசதி இல்லை. பணியிடத்தில் எந்தவிதப் பாதுகாப்பும். இல்லை நிச்சயக்கப்பட்ட கூலி இல்லை . நிச்சயமான வேலை நேரம் இல்லை. திடீரென்று இறந்துவிட்டால் எந்தவித குடும்ப பாதுகாப்பும் இல்லை. முறைசாரா தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்துள்ள நலன்களைக் கூட தகுதியானவர்கள் 5 முதல் 6% பேர் மட்டுமே அனுபவிக்க முடிகிறது. இதுவே முறைசாரா தொழிலாளர்களின் பொதுவான நிலையாக இருக்கிறது.
முறைசாரா தொழிலாளர்கள் எண்ணிக்கை
இவர்கள், இந்தியா முழுவதும் எவ்வளவு பேர் இருப்பார்கள்? 2018 -19 ஆம் ஆண்டு இந்திய பொருளாதார ஆய்வறிக்கை 93 விழுக்காடு என்கிறது. நிதி ஆயோக் அமைப்பு 80 விழுக்காடு என்கிறது. தேசிய புள்ளிவிவர ஆணையம் 90 விழுக்காடு என்று வரையறை செய்கிறது. இதில், நிதி அயோக் உட்பட பல நிறுவனங்கள் தாங்கள் வெளியிடும் புள்ளிவிவரங்களுக்கு சான்றாதாரங்களை கூறவில்லை. தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு நிறுவனத்தின் புள்ளி விவரங்கள் கூட ,சில மாதிரிகளை கொண்டு சேகரிக்கப்படும் புள்ளிவிவரங்கள். அவையும் முழுமையாக நம்பத்தகுந்த புள்ளி விவரங்கள் அல்ல. இவர்களைப் பற்றிய முழுமையான மதிப்பீடு யாரிடமும் இல்லை. இந்திய அரசுக்கும் தெரியாது.
உண்மையில் எத்தனை கோடி தொழிலாளர்கள் இந்தத் துறையில் உள்ளனர்? சுய வேலை வாய்ப்பு எத்தனை பேர்? சிறு குறு பதிவு செய்யப்படாத தொழில்கள் எத்தனை? தொழிலாளர்கள் எத்தனை? விவசாயிகள் விவசாய தொழிலாளர்கள் எத்தனை? என்று அரசிடமும் அறுதியிட்ட புள்ளிவிவரங்கள் இல்லை. அவர்கள் வேலையின் தன்மை,பிழைப்பு நடத்தும் விதம், அவர்களது வாழிடம், அங்கு உள்ள வசதிகள், என எதுவும் முழுமையாக தெரியாது. அவரவர் அவரவர் வழியில் அவரவர் வசதிக்கேற்ப வடிவமைத்துக் கொண்ட தொழில், வருமானம். இதில் சட்டத்திற்குப் புறம்பான தொழில்கள் கூட முறைசாரா தொழிலாளர்களில் தான் அடங்கும்.
இந்தியப் பொருளாதாரத்தின் யதார்த்தம்
130 கோடி மக்கள் வாழும் நம் நாட்டில், சந்தைப் பொருளாதார முறைமையை யாரும் முழுமையாக அறிந்த கொண்டவர் இல்லை. எந்த சந்தை பொருளாதார வல்லுனரும் புரிந்துகொள்ள முடியாத வடிவம். இதற்கு மிகச் உதாரணம், விலைவாசி ஏறும் போது அதனைக் கட்டுப்படுத்த, பல நேரங்களில், பணம் மற்றும் நிதி சார்ந்த சந்தைப் பொருளாதாரக் கோட்பாடுகளை பயன்படுத்தி நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. ஆனால் விலைவாசியோ எதற்கும் கட்டுப்படாமல் உயர்ந்துகொண்டே சென்றதை குறிப்பிடலாம்.
முறைசாரா தொழிலாளர்களின் இன்றைய நிலை
ஒரு நாள் வேலை இல்லை என்றால் அன்று இரவு முதலே சோறு இல்லை என்று திண்டாடும் குடும்பங்கள் பல கோடி இருக்கிறது. ஆனால் உழைத்து கொண்டு இருக்கும் மனதார விருந்தினரை வரவேற்று உபசரித்து மகிழ்ந்தனர். பொருளாதார சக்கரத்தை தீடீரென நிறுத்தலாமா இப்படிப்பட்ட பொருளாதார கட்டமைப்பு கொண்ட இந்த நாட்டின் பொருளாதார சக்கரத்தை கொரானாவைக் காட்டி திடீரென்று மூன்றரை மணி நேரத்தில் முடக்கி விட்டால் எப்படி? இருக்கும் அதன் விளைவுகளைத் தான் நாள்தோறும் நாம் கண்டு அதிர்ச்சி அடைந்து வருகிறோம். மிகக்கடுமையான வேலைகள், மிக ஆபத்தான வேலைகள், உடல் நலிவுற்ற நிலையிலும் வேலை… போதுமான உணவு இன்றியும் வேலை. ஊட்டச்சத்து இன்றியும் வேலை என உழைத்து கண்ணியமாக பிழைத்து வந்த மக்கள் நம் மக்கள். இன்று அகதிகள் போன்று முகாம்களில் தங்கியிருக்கும் அவலம். இந்த வேளை சோற்றை யார் போடுவார்கள் ? என்று கையேந்தி நிற்க வேண்டிய காட்சிகள் ஊர் தோறும். பட்டினிச்சாவுகள் உரிய கவனம் பெறுகிறதா என்று அச்சம் எழுகிறது.
திடீரென்று அரசாங்கம் உத்தரவிட்ட மறு நிமிடமே அனைவரும் வீட்டுக்குள் ஓடிச் சென்று ஒளிந்து கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் வீட்டை வெளியே வரவே கூடாது. ஏப்ரல் 14ஆம் தேதி வரை வீட்டை விட்டே வெளியே வரத் தேவையில்லை. எந்தவித அத்தியாவசிய பொருட்களும் வாங்கத் தேவையில்லை. மருந்துகள் தேவையில்லை. மருத்துவமனைக்கு செல்ல தேவையில்லை. மரணங்களை நிகழாது என்று இருந்தால் நல்லதுதான். நிச்சயம் கொரானா இந்த 21 நாட்களில் இருந்த இடம் தெரியாமல் செத்து ஒழிந்து விடும்.
அண்ட இடம் இன்றி அவதிப்பட்டு செத்துவிடும். இது நூறு விழுக்காடு உண்மை தான். ஆனால், உண்மையில் இது நடைபெற சாத்தியம் இல்லையே. அப்படியானால், கதவடைப்பு செய்யும் போது, பிச்சைக்காரர்கள் உட்பட அனைவரின் வாழ்வுக்கும் வழி என்ன என்று ஒரேயொரு கணம் யோசிக்க வேண்டுமா? அதுதானே நீதி. நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் கொரானா இருக்கிறது. ஆனால், எந்த நாட்டிலும் இப்படி முன் ஏற்பாடு இல்லாமல் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு வரவில்லையே. பட்டினி சாவுகள் இல்லையே! புலம்பெயரும் துயரங்கள் இல்லையே! பறிபோன வேலைகள் திரும்ப கிடைக்குமா என்ற அச்சத்திலும் பீதியிலும் மக்கள் வாழ வில்லையே! அடைக்கப்பட்ட சிறு குறு தொழில்களின் கதவுகள் திறக்கப்படுமா என்ற அச்சத்தால் பயந்து நடுங்க வில்லையே! 21 பிழைப்புக்காக கந்து வட்டிக்கு வாங்கி, வட்டிக்கு பயந்து வாழ வேண்டிய துயர நிலை வரவில்லையே..
சுமார் தொண்ணூறு விழுக்காடு மக்கள் வாழ்க்கையை கண நேரத்தில் பணயம் வைத்து, கதவடைப்பு செய்ய என்ன காரணம்? ஒன்று, இந்திய பொருளாதாரக் கட்டமைப்பு, அதனை நம்பி வாழும் மக்கள் பற்றிய துளியும் புரிதல் இன்றி இருக்க வேண்டும். அல்லது, 90 விழுக்காடு மக்களின் வாழ்க்கையை சிதைத்து நடுத்தர, உயர் நடுத்தர, மற்றும் பணக்கார வர்க்கத்தை காப்பாற்றினால் போதும் என்ற மன நிலை இருக்க வேண்டும். அவர்கள் மட்டுமே மக்கள் என்ற சிந்தனை மேலோங்கி இருக்க வேண்டும்.
ஒருவேளை நமது புரிதல் தவறு என்றால், பிரதமர் குறிப்பிட்டதுபோல் துயரங்களுக்கு மன்னிப்பு கோரினால் உடனடியாக செய்யவேண்டியது இதுதான். உண்மையான அக்கறையின் உடனடிக் கடமைகள் முறைசாரா தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும் மாதம் 7000 ரூபாய் வீதம் குறைந்தபட்சம் இரண்டு மாதங்களுக்கு வழங்க வேண்டும். நூறு நாள் வேலை திட்டம் ஜன்தன் யோஜனா கணக்குகள் இதற்கு பயன்படும். இந்திய உணவு கழகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் 58 மில்லியன் டன் தானியங்களிலிருந்து 37 மில்லியன் டன் தானியங்களை பொதுமக்களுக்கு பிரித்துக் கொடுக்க வேண்டும். 21 மில்லியன் டன்களை முடைக்கால கையிருப்பாக அரசு வைத்துக் கொள்ளலாம். இத்துடன், அரிசி கோதுமை பருப்பு உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பண்டங்களையும் சேர்த்து வழங்க வேண்டும்.
தற்போது அறுவடைக்கு காத்திருக்கும் ராபி பயிர்கள் நல்ல விளைச்சலைத் தரும் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். அந்த விளைச்சல் விரைந்து நல்ல முறையாக வீடு வந்து சேர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அந்த பயிர்களுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும். விவசாயிகளுக்கு வேண்டும் விளைச்சல் அறுவடை செய்ய அதிகபட்சம் பதினைந்து நாள்தான் காலம் இருக்க முடியும். அந்த 15 நாட்களுக்குள் விளைச்சல் வீடு வந்து சேர வேண்டும். இதற்கு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வேளாண்மை துறையில் குறுகிய கால விளைவுகள் நீண்ட கால பாதிப்புகளை உருவாக்கும்.
இதை உணர்ந்தால் அரசு தக்க நடவடிக்கைகளை எடுக்க முடியும். பணப்பயிர்கள், தோட்டப் பயிர்கள் முற்றிலும் சந்தையை இழந்து விட்டது. இதனை விளைவித்த விவசாயிகள் விளிம்பில் நிற்கிறார்கள். அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். எவ்வளவோ சமூக பாதுகாப்பு வசதிகள் இருந்தும் கொரானா பாதிப்பு என்று வந்ததும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் தனது ஜிடிபி மதிப்பிலிருந்து வெகுவாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் ,இந்திய அரசின் நிதி ஒதுக்கீடு என்பது இதுவரை ஜிடிபியில் ஒரு விழுக்காட்டை கூட எட்டவில்லை. துயர் துடைப்பதற்கு எந்தவிதமான கணக்கையும் பார்க்கத் தேவையில்லை. அப்போதுதான் சுகாதாரத்தையும் பொருளாதாரத்தையும் மீண்ட்டெடுக்க முடியும்.
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
~~~~~~~~~~
பேரா.நா.மணி, மேனாள் மாநிலத் தலைவர், தமிழ் நாடு அறிவியல் இயக்கம்
~~~~~~~~~~
மிகவும் ஆழமான இன்றைய அவசியமான சிந்தனை. அரசு இவற்றை உணர்ந்து செயல்பட வேண்டிய கட்டாயம் இன்று. மருத்துவ துறை மட்டுமல்லாது பிற துறைகளும் (வேளாண்மை, தொழில் துறை) களத்தில் உடனடியாக இறங்கி செயல்பட வேண்டியது அவசியம். நல்ல கட்டுரை, நன்றி மணி சார்.