சர்வதேச புத்தகக் கண்காட்சி ஜனவரி மாதம் முதல் முறையாக சென்னையில் நடைபெறவுள்ளது.

தமிழக அரசின் பொது நூலக இயக்கக இயக்குநர் கே.இளம்பகவத், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக இணை இயக்குநர் சங்கர சரவணன், எழுத்தாளர் ஆழி செந்தில்நாதன் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு ஜெர்மனிக்குச் சென்று அங்கு நடைபெற்ற ‘பிராங்ஃபர்ட்’ புத்தகக் கண்காட்சியை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.

இதையடுத்து அடுத்த ஆண்டு ஜனவரியில் சர்வதேச புத்தகக் கண்காட்சியை சென்னையில் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மூன்று நாள் நடைபெறவுள்ள இந்த கண்காட்சியில் புத்தக ஆசிரியர்களுடன் சந்திப்பு, உரையாடல் உள்பட பல நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இந்தக் கண்காட்சியில் 30 முதல் 40 நாடுகள் பங்கேற்கவுள்ளன.

இது குறித்து இணை இயக்குநர் சங்கர சரவணன் கூறியது: சர்வதேச அரங்கில் வெளிநாட்டு எழுத்தாளர்கள், முன்னணி தமிழ் பதிப்பாளர்களைச் சந்திக்கவும், விளம்பரப்படுத்தவும் ஒரு சிறந்த பகுதியாக இந்த சர்வதேச புத்தகக் கண்காட்சி அமைய உள்ளது. சர்வதேச எழுத்தாளர்கள், நோபல் பரிசு பெற்றவர்களை சிறப்பு விருந்தினர்களாக வரவழைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வெளியீட்டாளர்கள், இலக்கிய ஆசிரியர்கள் உள்பட பங்கேற்பாளர்கள் தங்களின் புத்தகங்களின் உரிமைகளை விற்க அல்லது வாங்கக்கூடிய வகையில் ‘உரிமைகள் மையம்’ என்ற நிகழ்வும் இதில் இடம்பெறும்.

கனடா, ஃபின்லாந்து போன்ற அயல்நாட்டு மாணவர்களை ஈர்க்கவும், உயர்கல்வி உதவித்தொகை அறிமுகப்படுத்தப்படும். எனவே பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களும் கண்காட்சியில் பங்கேற்கும். இந்த நிகழ்ச்சியின் போது உலகளாவிய மொழிபெயர்ப்பு மானியத் திட்டத்தை வெளியிட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

கண்காட்சியின் ஒரு பகுதியாக ‘தமிழ் மற்றும் உலகளாவிய புத்தகம் வெளியீடு’ என்ற தலைப்பில் ஒரு நாள் சர்வதேச மாநாடு நடைபெற உள்ளது. வரும் ஆண்டுகளில் புகழ்பெற்ற தேசிய மற்றும் சர்வதேச வெளியீட்டாளர்களுடன் இணைந்து புத்தகங்களை விற்பனை செய்வதற்கு 200-க்கும் மேற்பட்ட தலைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. மேலும் இது சர்வதேச புத்தகக் கண்காட்சித் திட்டத்துக்கான தொடக்கமாக இருக்கும் என்றார் அவர்.

நன்றி: தினமணி

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *