1)மருத்துவ படிப்பிலும், மருத்துவ  மேற்படிப்பிலும் , அகில இந்திய ஒதுக்கீடான முறையே 15% மற்றும் 50% இடங்களை மாநிலங்களில் இருந்து பெறும் மத்திய அரசு, அந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கையில் அந்த அந்த மாநிலங்களில் உள்ள பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு அளிக்கப்படும் இட ஒதுக்கீட்டை அளிக்காமல் பிற்படுத்தப்பட்ட பிரிவினரை மத்திய அரசு வஞ்சிக்கிறது.

2) 1986 -இல் இருந்து மருத்துவ கல்வியில் அகில இந்திய ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது.

3) இந்த அகில இந்திய ஒதுக்கீட்டை 1986-இல் அலகாபாத்தில் உள்ள மோதிலால் நேரு மருத்துவக்கல்லூரி வழக்கின் தீர்ப்பில் உச்சநீதிமன்றம் ஏற்படுத்தியது.

4) மருத்துவ கல்வியில் அகில இந்திய அளவில் ஒதுக்கீட்டை ஏற்படுத்திய உச்சநீதிமன்றம், அதில் SC/ST மற்றும் BC பிரிவினருக்கு அந்த அந்த மாநிலங்களில் உள்ள இட ஒதுக்கீடு சட்டப்படி இட ஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும் என்று கூற தவறிவிட்டது.

BJP kills reservation in medical seats : K Veeramani Statement

5) இந்த அகில இந்திய ஒதுக்கீட்டை மருத்துவ கல்வியில் உச்சநீதிமன்றம் ஏற்படுத்துவதற்கு மத்திய அரசு ஆட்சேபனை செய்யவில்லை என , உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறுகிறது.

6) மாநில அரசுகள் ஏற்படுத்திய மருத்துவ கல்லூரிகளில் உள்ள மருத்துவ படிப்பிற்கான இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு கொடுக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற திட்டத்தால் எந்த இழப்பும் இல்லாத மத்திய அரசு , அதை ஏற்காமல் ஆட்சேபனையா செய்யும்.

7) இந்த அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு, SC/ST/BC இட ஒதுக்கீடு பற்றி உச்ச நீதி மன்றம் ஏதும் கூறவில்லை என்பதால், உயர் சாதியினருக்கு நன்மை பயக்கும் விதத்தில் இட ஒதுக்கீடு கொள்கைக்கு ஊறுவிளைவிக்கும் எண்ணத்தில், எந்த ஆட்சேபனையும் இதற்கு மத்திய அரசு தெரிவிக்கவில்லை.

8) அகில இந்திய ஒதுக்கீட்டை ஏற்படுத்துவது சம்மந்தமாக பாதிப்படையும் மாநிலங்களை உச்சநீதிமன்றம் ஏதும் கேட்கவில்லை.

9) 1950-இல் செண்பகம் துரைராசன் வழக்கில் , கல்வியில் இட ஒதுக்கீட்டை 26-1-1950
முதல் அமலுக்கு வந்த அரசமைப்பு சட்டம் வழங்கவில்லை என்று கூறி , அப்போதைய சென்னை மாகாணத்தில் ( தமிழ்நாடு, ஆந்திரா, மற்றும் கேரளா , தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களின் பெரும் பகுதி)  நீதிக்கட்சி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கல்விக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம். அத்தீர்பபை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்.

10)இந்த உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்தும், அரசமைப்பு சட்டத்தில் கல்வியில் இட ஒதுக்கீட்டிற்கான ஏற்பாடு வேண்டியும் பெரிய போராட்டம் தந்தை பெரியார் தலைமையில் நடந்தது . அதன் விளைவாக அரசமைப்பு சட்டத்தில் முதல் திருத்தத்தின் மூலம் பிரிவு 15(4) சேர்கப்பட்டது.

(11) இப்படி போராடி பெற்ற உரிமையில்,  1986-இல் உச்சநீதிமன்றம் மருத்துவ படிப்பில் 15% மற்றும் மருத்துவ மேற்படிப்பில் 25%( பின்னர் இதை உச்சநீதிமன்றம் 50%) இடங்களில் இட ஒதுக்கீட்டை பறித்து தீர்ப்பளித்தபோது  SC/ST/BC பிரிவினர், மற்றும் அவர்களின் அரசியல் கட்சிகள் வெகுண்டெழவில்லை. எனவே  மருத்துவ கல்வியில் இப்பிரிவினருக்கு அநீதி இழைக்கப்பட்டது. இந்த அகில இந்திய ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களில் உயர் சாதியினரே படித்தனர்

(12) 1951-இல் அரசமைப்பு சட்டத்தில் பிரிவு 15(4) சேர்கப்பட்டாலும், அப்பிரிவின் அடிப்படையில் மத்திய அரசின் கல்வி நிலையங்களில் SC/ST/ BC பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளித்து ,மத்திய அரசு சட்டமோ அல்லது அரசாணையோ போடவில்லை.

(13) மத்திய அரசைப்போலவே, வட மாநில அரசுகளும் அந்த அந்த மாநிலங்களில் உள்ள கல்வி நிலையங்களில் SC/ST/BC மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அளித்து அரசமைப்பு சட்டம் பிரிவு 15(4)-இன் கீழ் சட்டமோஅல்லது அரசாணையோ போடவில்லை.

(14)மத்திய அரசின் கல்வி நிலையங்களில் SC/ST/BC மாணவர்களுக்கு  15%/7•5%/27% இட ஒதுக்கீடு வழங்கி , அரசமைப்பு சட்டம் பிரிவு 15(4)-இன் அடிப்படையில் , 2006-ஆம் ஆண்டில்தான் ஒரு சட்டம் போட்டது மத்திய அரசு.

(15) இதை அமல் படுத்துவற்கான உத்தரவை மத்திய அரசின் மனித வளத்துறை , 20-4-2008-இல் சட்டம் இயற்றப்பட்டு இரண்டு ஆண்டுகள் கழித்து அதன் கல்வி நிலையங்களுக்கு அனுப்பியது.

( 16) இதற்கு முன்னரே, 2006-ஆம் ஆண்டில் , SC/ST பிரிவினர் அரசமைப்பு சட்டம் பிரிவு 32-இன் கீழ் ரிட் மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதில் , மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் அவர்களுக்கு இட ஒதுக்கீடு கோரினர்.

Judges outburst unfortunate Former chief justice of India K G ...
நீதிபதி K.G. பாலகிருஷ்ணன்

(17) 31-1-2007 அன்று உச்ச நீதி மன்றம் , மேற்சொன்ன வழக்கில் SC/ST பிரிவு மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இட ஒதுக்கீடு அளிக்க உத்தரவிட்டது. அந்த
தீர்ப்பை வழங்கிய உச்ச நீதி மன்றத்தின் அமர்விற்கு தலமை வகித்தவர் உச்ச நீதி மற்ற தலமை நீதிபதி K.G. பாலகிருஷ்ணன் அவர்கள். அவர் SC வகுப்பை சார்ந்தவர்.

(18) 73 ஆண்டு சுதந்திர இந்தியாவில் , மக்கள் தொகையில் சுமார் 25% உள்ள SC/ST பிரிவினரில்,
இதுவரை மொத்தம் ஐந்து பேரே உச்சநீதிமன்ற நீதிபதிகள். இதே நிலைதான்
BC பிரிவினருக்கும். சமநீதியும், சமூகநீதியும் உண்மையில் மறுக்கப்படுகிறது.

(19) SC/ST பிரிவு மாணவர்களும் 1986 முதல் 2007 வரை, சுமார் 21 ஆண்டுகள் வஞ்சிக்கப்பட்டனர்.

(20) இந்நிலையில், 2015- ஆம் ஆண்டில், அரசமைப்பு சட்டம் பிரிவு 32-இன் கீழ் உச்ச நீதி மன்றத்தில் ரிட் மனு எண் 596/2015 தாக்கல் செய்து, மருத்துவ படிப்பில் BC பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு கோரி வழக்கு தாக்கல் செய்தார் சலோனி குமாரி . அது இன்றளவில் நிலுவையில் உள்ளது.

(21) மேலும், 2018-இல் , அகில பாரதிய பிற்படுத்தப்போர் மகா சங்கத்தினர் , நாக்பூர் உயர் நீதி மன்றத்தில் பொது நல வழக்கு ( ரிட் மனு) எண் 87/2018 தாக்கல் செய்து BC மாணவர்களுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் இட ஒதுக்கீடு கோரினர். BC பிரிவினருக்கு ஆதரவாக 16-7-2018 அன்று மேற்சொன்ன உயர்நீதி மன்றம் உத்தரவளித்தது.

(22) இந்த இடைக்கால உத்தரவை எதிர்த்து , உச்ச நீதி மன்றம் சென்றது மத்திய அரசு; அந்த இடைக்கால உத்தரவிற்கு தடையும் பெற்றது.

(23) 1-8-2018-இல் , மேற்சொன்ன வழக்கில், மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இட ஒதுக்கீடு கோரும் வழக்கை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யக்கூடாது என்றும், உச்சநீதி மன்றத்தில்தான் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது உச்சநீதி மன்றம். SC/ST பிரிவினர் உச்சநீதி மன்றத்தில் அரசமைப்பு சட்டம் பிரிவு 32-இல் தாக்கல் செய்த வழக்கில் 31-1-2007-இல் வழங்கிய தீர்ப்பை உச்சநீதி மன்றம் சுட்டிக்காட்டியது. BC பிரிவினருக்கு இட ஒதுக்கீடு கோரும் ரிட் மனு எண் 596/2015 வழக்கில் இணைந்து கொள்ளுமாறு கூறி, மேற்சொன்ன அகில பாரதிய பிற்படுத்தப்பட்டோர் மகாசங்கத்தினர் வழக்கை முடித்து வைத்தது உச்சநீதி மன்றம்.

(24) 1-8-2018 தேதிய இத்தீர்ப்பை உச்ச நீதி மன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு வழங்கியது. அந்த இரு நீதிபதுகளில் ஒருவர் , நீதிபதி நாகேஷ்வரராவ் அவர்கள் .

(25) தமிழகத்தில் ஆளும் கட்சி, எதிர்கட்சி, திராவிடர் கழகம் , பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என பலரும் உச்ச நீதி மன்றத்தில், அரசமைப்பு
சட்டம் பிரிவு 32-இன் கீழ் ரிட் மனு தாக்கல் செய்து, BC மாணவர்களுக்கு மருத்துவ படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டில் இட ஒதுக்கீடு கோரினர்.

Denial Of Reservation To OBC/SC/ST In UG-PG Medical In All India ...

(26)இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்ற நீதிபதி நாகேஷ்வரராவ் தலமையிலான அமர்வு , இடஒதுக்கீடு அடிப்படை உரிமை இல்லை என்றும், எனவே அரசமைப்பு சட்டம் பிரிவு 32-இன் கீழ் ரிட் மனுவை உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்ய முடியாது என்றும் கூறியது. வழக்கை திரும்ப பெற்று உயர் நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய கூறியது. இதற்கு உடன்படவில்லை என்றால் வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிடவுள்ளதாக கூறியது. இந்நிலையில் வழக்கு வாபஸ் பெறப்பட்டது. இதை பதிவு செய்து உச்ச நீதி மன்றம் அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தது.

(27) உச்ச நீதி மன்றத்தில் வழக்கை தாக்கல் செய்து, மேற்சொன்ன சூழலில் வழக்கை திரும்ப பெற்ற அனைத்து கட்சியினரும், சென்னை உயர்நீதி மன்றத்தில்ரிட் மனுக்கள் தாக்கல் செய்தனர். அதில், மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்காக தமிழ் நாட்டில் அளிக்கப்படும் இடங்களில், BC/MBC மாணவர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள இட ஒதுக்கீட்டு சட்டத்தின் அடிப்படையில் 50% இடங்களை அளிக்க வேண்டும் என கோரினர்.

(28) இதற்கு பதில் மனு தாக்கல் செய்த மத்திய அரசு, அகில பாரதிய பிற்பட்டோர் மகாசங்கம் வழக்கில் அச்சங்கத்தினரை , மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் BC பிரிவினருக்கு இட ஒதுக்கீடு கோரி சலோனி குமாரியால் அரசமைப்பு சட்டம் பிரிவு 32-இன் கீழ் தாக்கல் செய்யப்பட்டு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ள ரிட்மனு எண் 596/2015-இல் இணைந்து கொள்ளுமாறு கூறியுள்ளதையும், அந்த மகாசங்கத்தினர் நாக்பூர் உயர்நீதி மன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்ததை தவறு என்று கூறியதையும் சுட்டிக் காட்டி, சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்குகளை உயர்நீதி மன்றம் விசாரிப்பது மேற்சொன்ன உச்சநீதிமன்ற உத்தரவின்படி தவறு என்றும், தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சியினரும் உச்ச நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ள மேற் சொன்ன ரிட் மனு எண் 596/2015-இல் இணைந்து கொள்ளலாம் என்றும் , கூறியுள்ளது.

(29)அதாவது, தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பில் அகில இந்திய ஓதுக்கீட்டில் BC/MBC பிரிவுனருக்கான இட ஒதுக்கீட்டு பிரச்சனையில் மத்திய அரசும், உச்சநீதி மன்றமும் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுகின்றன.

(30)தமிழ்நாட்டை பொறுத்தவரை அரசமைப்பு சட்டம் பிரவு 15(4)-இன் அடிப்படையில் கல்வியில் இட ஒதுக்கீடு சம்மந்தமான சட்டம் உள்ளது. இச்சட்டம் வழங்கியுள்ள இட ஒதுக்கீடு உரிமையை மத்திய அரசோ, உச்ச நீதி மன்றமோ பறிக்க முடியாது. மருத்துவ படிப்பில் உச்சநீதி மன்றம் வகுத்துள்ள அகில இந்திய ஒதுக்கீடு , தமிழ்நாட்டின் இட ஒதுக்கீடு சட்டத்திற்கு உட்பட்டுதான் இருக்க முடியும். எனவே அகில இந்திய ஒதுக்கீட்டில், BC/MBC பிரிவினருக்கு இட ஒதுக்கீடு சட்டப்படி 50% இட ஒதுக்கீடு வழங்கப்படவேண்டும். ஏற்கெனவே, 1986 முதல் இதுவரை 34 ஆண்டுகள் BC/MBC பிரிவினர் வஞ்சிக்கப்பட்டுள்ளனர்.

(31) உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவின் மூலம், மத்திய அரசு BC/MBC பிரிவினருக்கு விரோதமான அரசு என்பதும், உயர் சாதியின் நலனே அதன் நலன் என்பதும் தெளிவாகிறது.

One thought on “மத்திய அரசு BC/MBC பிரிவினருக்கு விரோதமான அரசு என்பதும், உயர் சாதியின் நலனே அதன் நலன் என்பதும் தெளிவு – நீதியரசர் அரிபரந்தாமன்”
  1. தெளிவான, கூர்மையான கட்டுரை. நீதிபதிகாகுரிய வழியில் பாயின்ட் பாயின்டாக வரிசைப்‌படுத்தி எழுதியிருப்பது புரிதலை எளிதாக்குகிறது ‌‌.

    இதில் அக்கறை உள்ள அனைத்துக் கட்சிகளும் இயக்கங்களும் ஒருபக்கம் சட்டம் போராட்டத்தை நடத்திக்கொண்டே, இன்னொரு பக்கம் சமூகவெளிப் போராட்டமாகத் தெருவுக்குக் கொண்டு வர வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *