Italian Telephone Stories (Kaithadi race) Webseries 4 Written Gianni Rodari in tamil Translated by Ayesha Natarasan தொடர் 4: ஜானி ரொடாரியின் இத்தாலிய தொலைப்பேசிக் கதைகள் கைத்தடி ரேஸ் - தமிழில்: ஆயிஷா. இரா. நடராசன்கைத்தடி ரேஸ்

அந்த சிறுவனின் பெயர் கிளாடியோ. அவனுக்கு உங்கள் வயதே இருக்கும். ஆனால் பெரும்பாலும் தனியாகத்தான் விளையாடுவான். கையில் கிடைக்கும் எல்லா பொருட்களும் அவனது நண்பர்கள் ஆகிவிடும். சில சமயம் வெறும் கைகளே அவனோடு விளையாடும்.

கொஞ்சம் சூரியஒளி…. அப்புறம் அவனது கை. அதுவே மான், நாய், பருந்து, வாத்து என நிழல் விளையாட்டு மிக அற்புதமாக இருக்கும்.

ஆனால் இப்போது அவனிடம் ஒரு விளையாட்டு பொருள் உண்டு. கைத்தடி அது மேலே வளைந்து கொக்கி வடிவில் இருந்த மூங்கில் தடி. அதை அவனும் ஆரம்பத்தில் சாதாரணமாகத்தான் நினைத்தான்.

இன்று காலையில்தான் அது அவன் கைக்குக் கிடைத்தது. எப்படி தெரியுமா.

அவன் வீட்டு வாசலில் ஒரு புன்னை மரம் உண்டு அதனடியில் நிழலாக இருக்கும் அங்கே அணில்கள் உண்டு. அவன் அவற்றின் ஓட்டங்களை கண்டு அவற்றை விரட்டி விளையாடினான்.

அப்போது வீதிவழியே ஒரு தாத்தா நடந்து போனார். கிளாடியோ அவரைப் பார்த்ததே கிடையாது. அவர் உயரமாக இருந்தார். பனித்தொப்பி அணிந்து இருந்தார். தோல் ஷீ அணிந்திருந்தார். அவர் கையில் தான் அந்த கைத்தடி இருந்தது. சிவப்புநிற கைத்தடி.

அவரை பார்த்து அவன் வணக்கம் என்றான். அவனிடம் அந்த நல்லப் பழக்கம் இருந்தது. வயதானவர்களைப் பார்த்தால் வணக்கம் தெரிவிப்பது.

தாத்தா பதிலுக்கு ‘வணக்கம்… தம்பி இன்றையநாள் உனக்கு சிறப்பாக அமையட்டும்’  என்று கூறி அந்த கைத்தடியை அவனிடம் கொடுத்தார். 

‘இந்தா… விளையாடிக் கொண்டிரு… நான் திரும்பி வரும் வரை விளையாடு’ என்று கூறினார்.

பிறகு அவர் நடந்து சென்றுவிட்டார்.

கிளாடியோ தன் கையில் இருந்த கைத்தடியை நம்பமுடியாமல் பார்த்துக்கொண்டிருந்தான். 

முதலில் இப்படியும் அப்படியும் சுழற்றினான். வளைந்த மேல் முனையை கையில் பிடித்து அதை முழுவட்டமாக காற்றில் சுழல வைத்தபோது… பறக்கும் உணர்வு ஏற்பட்டது.. அந்தக் கைத்தடி ஒரு மாயக் கைத்தடியாக கிளாடியோவின் விளையாட்டு உலகில் மாற்றம் அடைந்தது இப்படித்தான்.

கைத்தடியை வளைந்த முனை முன்னே இருப்பது போல் பிடித்து அதன்மேல் உட்காருவது போல இருகால்களுக்கு நடுவே விட்டான்…என்ன அதிசயம் அது குதிரையாக மாறியது.

அவனை சுமந்து அது அந்தக்குதிரை கடக் கடக்…. கடக் கடக் என்று வட்டப்பாதையில் ஆரம்பத்தில் மித வேகத்திலும் பிறகு… அதிவேக குதிரையாகி மின்னல் வேகத்தையும் எட்டியது.. எத்தனையோ தொலைவு அவன் வந்துவிட்டிருந்தான்.

அவனது கால்கள் தரையை உணர்ந்தபோது ரொம்ப சாதுவாக பழையபடி கைத்தடியாகி இருந்தது.

இருமுறை காற்றில் முன்புபோல சுழற்றினான். பிறகு அதேபோல கால்களுக்கு நடுவே வைத்து பிடித்தான். என்ன அதிசயம். அது அவனது சைக்கிளாகி இருந்தது. கிளிங்… கிளிங்… அவன் மணி ஒலித்தபடியே அந்த சிவப்புநிற அழகு சைக்கிளில்  ஒய்யாரமாக வலம் வந்தான் கடைவீதி வரை சென்றான். பிறகு பள்ளிகேட் வரை போனான். அப்புறம் ஊரின் எல்லைவரை சென்று தொட்டுத்திரும்பினான். கிளி…. கிளிங்.. கிளி..கிளிங் சத்தம் அடுத்த பலமணிநேரங்கள் ஒலித்துக்கொண்டே இருந்தது.

கால்கள் தரையை உணர்ந்தபோது அது பழையபடி கைத்தடியாக மாறியது. இப்போது மூன்று முறை அதை காற்றில் வட்டமிட சுழற்றினான்.

இந்தமுறை அவனது கால்களுக்கு நடுவே அவன்பிடித்து அமர்ந்தபோது அவனுக்கு ஒரு ரேஸ்கார் கிடைத்தது. நீள்வட்டப்பாதையில் மற்ற ரேஸ்கார்களை முந்தியபடியே விர்… ரூம்… என்று கிளாடியோவின் சிவப்புநிற ரேஸ்கார் சென்றது.

விர்…. ரூம்…. விர் ரூம்… அவ்வளவுதான் அது முடிவுக்கோட்டை தொட்டு முதலிடம் பிடித்தது….. அரங்கமே  எழுந்து நின்று பலத்த கரவொலி மூலம்  ஆரவாரமிட்டு வாழ்த்தியது…. கிளாடியோ முகம் சிவக்க தலைதாழ்த்தி கோப்பையை ஏற்றான்.

அடுத்தமுறை அதே கைத்தடி என்னவாக மாறியது தெரியுமா… விண்வெளி ராக்கெட்டாக மாறியது. விர் ரூட்…. அவன் நொடியில் விண்வெளியில் இருந்தான். சூரியக் குடும்பத்தின் எல்லா கோள்களின் வழியாகவும் அவனது விண்வெளி ஊர்தி பயணித்தது.

சிவப்புக்கோளான செவ்வாய் கிரஹம். பிரமாண்ட கோளான வியாழன் கிரஹம், பளபளத்து மின்னும் வெள்ளி கிரஹம் பிறகு அந்த விண்வெளி ஊர்தி சனிக்கோளின் வளையம் வழியே வழுக்கியபடி ஓடியது.

கிளாடியோ வகுப்பில் கற்றதை எல்லாம் நேரில் அனுபவித்துக் களித்தான்.

கால் தரையை உணர்ந்த போது. அவன் எதிரே அந்த தாத்தா நின்று கொண்டிருந்தார்.

கைத்தடியை திரும்பப் பெற்றுக் கொள்ள வந்து விட்டார் என்று நினைத்தான் கிளாடியோ.

அவனுக்கு எரிச்சலும் ஏமாற்றமும் ஏற்பட்டது.

கைத்தடியை இறுகப் பற்றிக்கொண்டான்.

‘தரமுடியாது…’  என்பதுபோல அதை மார்போடு அணைத்தான்.

‘உனக்கு அதை பிடித்திருக்கிறதா’ அவர் கேட்டார்.

‘ரொம்ப… பிடித்திருக்கிறது’ பதட்டத்தோடு சொன்னான் கிளாடியோ.

‘நீயே … அதை வைத்துக்கொள்ளலாம்… எனக்கு அது இனிதேவை இல்லை’ என்றார் அந்த பனித்தொப்பி தாத்தா..

அவன் ஆச்சரியத்தோடு பார்த்து நிற்க அவர் நடந்து போய்விட்டார். தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக அவன் உணர்ந்தான்.

ஆனால் எவர் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தார் என்பதை அவன் உணரவில்லை.

உலகிலேயே சந்தோஷமான முதியவர்கள் யார் தெரியுமா.. குழந்தைகளுக்கு ஏதாவது ஒன்றை பரிசாக அளித்து அவர்களின் முக மலர்ச்சியை கண்டு ரசிப்பவர்கள்தான்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *