Italian Telephone Stories (Marble Boy) Webseries 7 Written Gianni Rodari in tamil Translated by Ayesha Natarasan தொடர் 7: ஜானி ரொடாரியின் இத்தாலிய தொலைப்பேசிக் கதைகள் (பளிங்கினால் ஆன சிறுவன்) – தமிழில்: ஆயிஷா. இரா. நடராசன்

பளிங்கினால் ஆன சிறுவன்

அது ஒரு விநோதமான நாடு. அதன் தலைநகரம் அதைவிட விநோதமானது. இரண்டுக்குமே பெயர் கிடையாது. பெயரே இல்லாத நாடு. அதற்கு பெயரே இல்லாத ஒரு தலைநகரம்.

சிலர் அதை நாடு என்று வெறுமனே அழைப்பார்கள். சிலர் தலைநகரை நகரம் என்றும் ஊர் என்றும் அழைப்பது உண்டு ஆனால் அவர்கள் மிகக்கொடுமையான வாழ்க்கை வாழ்ந்தார்கள். அங்கே வாழவே வெறுத்தார்கள்.

ஏனெனில் ஒரு கொடூர ராஜா அந்த நாட்டை ஆண்டுவந்தான். மிக மோசமாக அவர்களை அவன் வேலை வாங்கினான். குட்டிக்குழந்தைகள் முதல் மிகமிக வயதான தொண்டுக் கிழவர்கள் வரை எப்போதும் வேலை வேலைதான். கூலி எப்போதாவது ரொம்ப பற்றாமல், தான் நினைத்ததை கொடுப்பான். இந்த வரி அந்த கணக்கு என்று கொடுப்பதையும் பிடுங்கிக் கொள்வான்.

குழந்தைகள் யாருக்கும் கல்வி கற்க அவன் பள்ளிக்கூடம் ஏதும் கட்டவில்லை. அவர்கள் விளையாடுவதற்கு நேரமும் கிடையாது, இடமும் கிடையாது. அவர்களும் அரண்மனையை கழுவி விடுவது முதல் ராஜாவுக்கு கால்பிடித்து விடுவது வரை எல்லா வேலையும் பார்த்தார்கள்.

யாராவது அந்த கொடுமை ராஜாவை எதிர்த்து பேசினாலோ கேள்வி கேட்டாலோ அவ்வளவுதான். அவர்கள் அதன்பிறகு யாருமே பார்த்து கிடையாது. அவர்கள் சிறையில் அடைத்து சித்திரவதை செய்யப்படுவார்கள். சிலர் ஓரிரு நாட்களில்  மூளை – குழம்பி பைத்தியமாகி சுற்றித்திரிவார்கள் இருளில் என்ன நடக்கிறது. சிறையில் என்ன செய்தார்கள் என்பதை யாருமே அறியமுடியாது.

இப்படி அந்த கொடூர ராஜாவை எதிர்த்து மக்களை காப்பாற்ற முயன்ற எத்தனையோ பேர் இறந்ததும் போயிருக்கிறார்கள். ஏழை ஜனங்களை வஞ்சிப்பது எந்த விசாரனையும் இன்றி மரணதண்டனை வழங்குவது அவமானப்படுத்துவது பட்டினியாலேயே கொல்வது என்று தன் கோரதாண்டவத்தை கொடுமை ராஜா நிகழ்த்தி வந்தான்.

அப்போது அந்த ராஜாவுக்கு எதிராக ஒரு சின்னப்பையன் கிளார்ந்து எழுந்தான். முதலில் அப்படி ஒருவன் இருப்பதை யாருமே கவனிக்கவில்லை ஆனால் குழந்தைகளுக்கு அவனை அடையாளம் தெரிந்துவிட்டது. அவனது பெயர் கியாகோமா. அவனை சிறார்கள் யாவரும் பளிங்கு கியாகோமா என்றுதான் அழைத்தார்கள். குழந்தைகள் ரகசியமாக விளையாட அவன் பல உத்திகளை சொல்லிக்கொடுத்தான்.

கியாகோமாவின் முகம் பந்துபோல வட்டமானது. கண்கள் கோலிக்குண்டுகள் போல இருக்கும்.  மூக்கு பரம்பரம் மாதிரி வடிவம் உள்ளது. அவனது உடல் பளிங்கினால் ஆனது. சமையல் கட்டில் வேலை, கட்டிட வேலை, அரண்மனை வேலை எங்கே எந்த வேலையில் இருந்தாலும் குழந்தைகள் விளையாடத் தொடங்கினார்கள். யார் வேலையை முடிப்பது எனும் விளையாட்டு, சொடுக்கு விளையாட்டு, தலையாட்டும் விளையாட்டு இப்படி விதவிதமாய் விளையாட்டு யாராவது சிரிக்கும் சத்தமோ மகிழ்ச்சியாக உரையாடுவதோ, கத்துவதோ உற்சாக கூச்சலிடுவதோ காதில் விழுந்தால் கொடுமை ராஜா கொதித்து விடுவான். அவனால் அதை சகிக்க முடியாது. நின்றால் விளையாட்டு  உட்கார்ந்தால் விளையாட்டு.

அதிலும் குழந்தைகள் விளையாடுகிறார்கள் என்று கேள்விப்பட்டதும் ராஜா கொதித்தான். பளிங்கு சிறுவனை பிடித்துவர ஆட்களை அனுப்பினான். பட்டப்பகல் நேரத்தில் பளிங்கு சிறுவனை அவர்களால் காண முடியவில்லை. பளிங்கு கண்ணாடி மாதிரி அல்லவா இருக்கும். இரவில் வருவோம் என்று சென்றார்கள்.

பகலிலாவது பரவாயில்லை. இரவில் பளிங்கு சிறுவன் இருப்பதை கண்டு பிடிக்கவே முடியவில்லை.

பல குழந்தைகளை பிடித்து ராஜா பல சித்திரவதை செய்தான். எனவே தானாகவே  சென்று பளிங்கு சிறுவன் ராஜாவை சந்தித்தான். கோபத்தில் ராஜாவுக்கு கையும் காலும் ஓடவில்லை. சிறையில் அடைத்தான் சிறை இருட்டாக இருந்தது. ஆனால் அடைக்கப்பட்டது பளிங்க கியாகோமா அல்லவா. சிறையே ஒளிர்ந்தது. அவனை மனவளம் குன்றியவனாகவும் மாற்ற முடியவில்லை. காரணம் அவன் ஒளிவு மறைவே இல்லாத ஒளி ஊடுருவும் உள்ளமும் உடலும் பெற்றிருந்தான்.

விரைவில் சிறைச்சாலை ஒளிர…. அந்த வெளிச்சம் அரண்மனையையும் இரவிலும் பகல்போல ஒளிரச்செய்தது, ஊரே ஒளிரத்தொடங்கியது. ராஜாவால் அவனை மறைத்துவைக்க முடியவில்லை.

ஒரே வெளிச்சமாக இருந்ததால் எவ்வளவு தடினமான திரை சீலைகட்டினாலும்  ராஜாவுக்கு தூக்கமே வரவில்லை. ஒருவர் எத்தனை நாள்தான் தூங்காமல்விருப்பது. ஒருமாதம் இரண்டுமாதம்….. ஏதோதோ செய்தான்…. மருந்து மருந்தாய் குடித்தான்….. ஊஹீம்…. ராஜாவுக்கு அந்த வெளிச்சத்தில் தூக்கமே வரவில்லை. ஒளிர்ந்தது ‘உண்மை’ ஆயிற்றே.

பிறகு ஒருநாள் ராஜாவுக்கு பைத்தியம் பிடித்தது…. சட்டையை கிழித்துக்கொண்டான்.. தலைமுடியை பிய்த்துக்கொண்டான்… கடகடவென்று சிரித்தான்… விட்டதை பார்த்து அழுதான்..

அப்புறம் ஒருநாள் இரவு அரண்மனையை விட்டே அவன் ஓடிப்போய்விட்டான். ஓ.. ஊரே மகிழ்ச்சித் தாண்டவம் ஆடியது. எல்லாரும் அதை மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள். நாடே அதை உற்சாகத்தோடு வரவேற்றது. பெரியவர்கள் ஒன்றுகூடி அடுத்த ராஜாவை ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்க முடிவு செய்தார்கள்.

ஏனெனில் பளிங்கு கியாகோமா மற்ற சிறார்களோடு உலகையே மறந்து ஒய்யாரமாக விளையாடிக் கொண்டிருந்தான்.

முந்தைய தொடரை வாசிக்க:

தொடர் 5: ஜானி ரொடாரியின் இத்தாலிய தொலைப்பேசிக் கதைகள் (டிங் டாங்…. யுத்தம்) – தமிழில்: ஆயிஷா. இரா. நடராசன்

தொடர் 6: ஜானி ரொடாரியின் இத்தாலிய தொலைப்பேசிக் கதைகள் (சின்ன வெங்காயம்) – தமிழில்: ஆயிஷா. இரா. நடராசன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *