Italian Telephone Stories (The path that goes nowhere) Webseries 1 Written Gianni Rodari in tamil Translated by Ayesha Natarasan தொடர் 1: ஜானி ரொடாரியின் இத்தாலிய தொலைப்பேசிக் கதைகள் எங்குமே போகாத பாதை - தமிழில்: ஆயிஷா. இரா. நடராசன்எங்குமே போகாத பாதை

உங்களுக்கு மார்ட்டினோவைத் தெரியுமா. ரொம்பத் துடுக்கான சிறுவன். பல சிறார்கள் நடக்கத் தொடங்கும் வயதுக்கு முன்னதாகவே அவன் நடந்துவிட்டான். பிற குழந்தைகளுக்கு பேச்சு வருவதற்கு முன்பே அவன் பேசிவிட்டான்.

எனவே எல்லாரும் சைக்கிள் ஓட்டுவதற்கு முன்பே அவன் சைக்கிளும் ஓட்ட தொடங்கிவிட்டான்.

ஒருநாள் அவர்களது ஊர் எல்லைவரை அவன் தன் சைக்கிளில் போனான். அந்த எல்லையில் ஒரு விநோதம் இருப்பதை அன்றுதான் அவன் கண்டான். அங்கே சாலை மூன்றாக பிரிந்தது. மூன்று பாதைகள் தென்பட்டன. 

வலதுபுறம் திரும்பிய பாதை ஊருக்குள் திரும்பிச்செல்லும் பாதை. இடது புறம் திரும்பிய பாதை மற்ற ஊர்களுக்கு செல்லும் பாதை.

நடுவே ஒரு பாதை போனது. அதன் முனையில் ‘எங்குமே போகாத பாதை’ என்று ஒரு அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருந்தது.

மார்ட்டினோ தினமும் அந்த பலகை வரை வண்டி ஓட்டி வருவான் . பிறகு திரும்பி வீட்டிற்கே சைக்கிளை திருப்புவான்.

‘இந்த பாதை எங்கே வரை போகும்?’ ஒரு நாள் அவ்வழி வந்த ஒரு முதியவரிடம் அவன் கேட்டான்.

‘இந்தப் பாதை எங்குமே போகாத பாதை… அதன் வழியே போகாதே’ என்றார் அவர். பிறகு ஒருநாள் ஒரு தபால்காரர் அவ்வழி வந்தார். அவரிடம் மார்ட்டினோ அதே கேள்வியைக் கேட்டான். 

‘எனக்குத் தெரியாத பாதையே இந்த ஊரில் கிடையாது’ அவர் பெருமையோடு சொன்னார்.‘ இந்த பாதை எங்குமே போகாத பாதை’ ‘போகாதே… அது எங்கும் செல்லாது வீண்’ என்று யார்யாரோ சொன்னார்கள்.

‘யாருமே இதுவரை அந்த வழியே போனது கிடையாது. எங்குமே போகாத பாதையில் யார்தான் செல்வார்கள்’ என்று ஒரு குதிரை வண்டிக்காரர் சொன்னார். ‘போவதும்.. வீண்’

ஆனால் மார்ட்டினோ ஒரு நாள் தன் சைக்கிளில் அந்த நடுப்பாதையில் சென்றான். எங்குமே செல்லாத  அந்தப் பாதையில் இருபுறமும் புதர்களே இருந்தன. எத்தனை தூரம் வந்தானோ.

ஒரு கட்டத்தில் சைக்கிளில் செல்லாமல் அதை நிறத்திவிட்டு நடந்தும் பயணத்த தொடர்ந்தான். நடந்து போகத்தொடங்கிய கொஞ்சம் தூரத்தில் ஒரு நாய் குரைக்கும் சப்தம் அவனுக்கு கேட்டது.

நாய் இருக்கிறது என்றால் கொஞ்சம் தூரத்தில் ஒரு வீடும் இருக்கிறது.- மனிதர்களும் இருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம். எனவே மார்ட்டினோ அஞ்சவில்லை அங்கே என்ன இருக்கிறது என்று பார்க்கும் ஆவலே அவனுக்கு அதிகரித்தது.

எங்குமே போகாத பாதை உண்மையில் எங்கே போகிறது என்பதை காணவும் அறியவும் அவன் துடித்தான். எனவே அதுவும் அவனை தடுக்கவில்லை.

குரைத்தபடி இருந்த நாய் அவன் கிட்டத்தில் வந்தது… சட்டென வாலை ஆட்டியது. அது அவன் அருகில் வந்து  வந்து ஓட்டமெடுத்தது.

முதலில் மார்ட்டினோவுக்கு எதுவும் புரியவில்லை. அவன் அப்படியே நின்றான். அது அவனை தன்னை பின்தொடரச் செய்கையால் உணர்த்துவதுபோல் அவனுக்கு பட்டது. அதை அவன்பின் தொடர்ந்தான். என்ன ஆச்சரியம் அங்கே சற்று தூரத்தில் பிரமாண்ட அரண்மனை இருந்தது. 

அழகழகாக அலங்கரிக்கப்பட்ட பொன்னிற திரைசீலைகள் அசைந்தாடிய பெரிய கோட்டை வடிவ அரண்மனை அது.

அதன் மாடத்தில் மகாராணி போலவே ஒரு அம்மையார் நின்றிந்தார். அவர் தலையில் அழகாக ஒரு கிரீடம் பளபளத்தது… ஆமாம் மகாராணியேதான்.

‘வாருங்கள் … விருந்தினரே…. வாழ்த்துக்கள்’ என்று மேலிருந்து சத்தமாகக் கூறி கையசைத்தார் மகாராணி.

அரண்மனைக்கு அருகே மார்ட்டினோ சென்றபோது… அரண்மனை வாயிலில் ரம்மியமான இசை அவனை  வரவேற்றது. ’பலப் பல ஆண்டுகளுக்குப் பிறகு… நம் அரண்மனைக்கு ஒரு விருந்தினர் வந்து இருக்கிறார்.’ அந்த மகாராணி சத்தமாக அறிவித்தார்.

‘நல்ல உணவு விருந்து  ஒன்றை தாயார் செய்யுங்கள்’ சற்று நேரத்தில் மார்ட்டினோ அந்த மிகச் சிறப்பான கோட்டையை சுற்றிப் பார்த்தான். பிறகு பசிக்கத் தொடங்கியது.

விதவிதமான இனிப்புகள் வகைவகையான பதார்த்தங்கள்  சுவையான பலவிதப் பழங்கள்  மார்ட்டினோவுக்கு மிகவும் பிடித்த  பால்வண்ண ஐஸ்கிரீம்  தேன்வடியும் தேங்காய் கேக்.

நன்றாக சாப்பிட்டான். அவனோடு மகாராணியும் இன்னும் யார் யாரோவும் இணைந்து அமர்ந்து சாப்பிட்டார்கள். எத்தனை நேரம் கழிந்ததோ. திடீரென்று மார்ட்டினோ பரபரத்தான். அவனுக்கு நேரமாகி விட்டது. வீட்டில் தேடுவார்கள்.

மகாராணி விடை கொடுத்தார். ‘ யாரும் போக தேர்வு செய்யாத பாதையை … தேர்ந்ததெடுத்ததற்கு என் பாராட்டுக்கள்‘ என்றார். ‘ நீ மகா தைரியசாலி’ என்று அறிவித்தார்.

நிறைய பொற்காசுகளும் விதவிதமான பொம்மைகளும்…. பைநிறைய இனிப்புகளும் மார்ட்டினோவுக்கு கிடைத்தன. அவன் கிளம்பினான்

ஊருக்குள் வந்து சேர்ந்ததும் பலரும் அவனது பைகளைக் கண்டு விசாரித்தார்கள். பல நண்பர்களுக்கு பொம்மைகளையும் இனிப்புகளையும் அவன் வழங்கினான் எங்குமே போகாத பாதையில் சென்றதால் தனக்கு ஏற்பட்ட புதுமையான அனுபவத்தை எல்லாருக்கும் சொன்னான் மார்ட்டினோ பொற்காசுகளையும் காட்டினான்.

எல்லாரும் அவனை ஆச்சரியத்தோடு பார்த்தார்கள். அன்றும் மறுநாளும் அதற்கு அடுத்த நாளும் பலரும் சைக்கிளில், குதிரை வண்டியில் என எங்கும் போகாத அந்த பாதையில் விரைந்தார்கள். மார்ட்டினோவைப் போலவே மகாராணியின் அரண்மனைக்கு சென்று பொற்காசு பெற துடித்தார்கள் அவர்கள்.

ஆனால் எல்லோருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. அந்தப்பாதையில் மார்ட்டினோவுக்குப் பிறகு சென்ற யாவருக்கும் பாதை பாதியில் நின்றது. அங்கே வெட்ட வெளி தவிர வேறு எதுவும் இருக்கவில்லை.

உலகில் மாபெரும் ஆச்சரியங்கள் எல்லாம் முதன் முதலில் முயற்சி செய்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்’. என்பதை அவர்களும் புரிந்துகொண்டார்கள்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *