Italian Telephone Stories Written Gianni Rodari in tamil Translated by Ayesha Natarasan Webseries அறிமுகத் தொடர்: ஜானி ரொடாரியின் இத்தாலிய தொலைப்பேசிக் கதைகள் - தமிழில்: ஆயிஷா. இரா. நடராசன்

அறிமுகத் தொடர்: ஜானி ரொடாரியின் இத்தாலிய தொலைப்பேசிக் கதைகள் – தமிழில்: ஆயிஷா. இரா. நடராசன்



இத்தாலிய தொலைப்பேசிக் கதைகள்

ஒவ்வொரு இரவும் சரியாக ஒன்பது மணிக்கு தான்யா எனும் அச்சிறுமியின் வீட்டு தொலைபேசி அழைக்கும். ஒரு நாள் கூட தவறியது இல்லை. அவளது அப்பாதான் அழைப்பது ‘சொல்லுங்க அப்பா…. என்பாள் ரிசீவரை எடுத்து காதில் வைத்தபடி…

‘தான்யா…. என் செல்லமே…. இன்றைக்கு அப்பா மிக அழகான ஒரு கதையை சொல்லபோகிறேன்’ என்று தொடங்குவார்.

தான்யாவின் அப்பா பெயர் திரு. பியான்ச்சி. அவர் ஒரு விற்பனை மற்றும் கணக்காய வேலையில் இருந்தார். உலகம் முழுக்க பயணிக்கவேண்டும். மகள் தான்யாவோடு வீட்டில் இருக்க முடியாததால் மிகவும் வருந்தினார். ஆனால் நீங்கள் கதை சொல்லாமல் நான் – தூங்கமாட்டேன் என்று மகள் பிடிவாதமாக சொல்லிவிடடாள். அம்மா ஒரு ஆசிரியை ஆனாலும் தான்யா அப்பா செல்லம்.

அதற்காக அவர் எந்த ஊரில் இருந்தாலும் இரவு சரியாக ஒன்பது மணிக்கு தான்யா வீட்டு தொலைபேசி அழைக்கும். அப்பாவின் அழகான கதை தொடங்கும் அதை கேட்ட பிறகு தான்யா உறங்க செல்வாள்….. அந்த காலத்தில் கைப்பேசிகள் கிடையாது. எனவே திரு. பியான்ச்சி வீதிகளில் பெரிய கடைகளில் இருந்த காசுபோடும் தொலைபேசியில் இருந்துதான் பேசுவார். எனவே ஒரு காயின் போட்டுபேசும் அளவிற்கே கதைகள் இருந்தன. அவரிடம் நிறைய காசு கிடையாது. ஆனால் நிறைய கதைகள் இருந்தன.

‘தொலைபேசிக் கதைகள்‘ என்று அவை வரிசையாக எழுதப்பட்டன. எழுதியவர் இத்தாலி மொழி சிறார்கதை வித்தகர் ஜானி ரொடாரி (Giani Roadari) 1962 ல் அது ஒரு நூலாக வெளிவந்தது. 1970ல் கிரிஸ்டியன் ஆண்டர்சன் விருது அறிவிக்கப்பட்டபோது ’தொலைபேசிக் கதைகள்’ நூலுக்கு அது வழங்கப்படடது. ஜானி ரொடாரி ஆரம்பத்தில் ஒரு பள்ளி ஆசிரியராக இருந்தார். முசொலினி எனும் சர்வாதிகாரிக்கு எதிராக இத்தாலிய கம்யூனிஸ்ட்  கட்சியில் அவர் இணைந்தார்.

ஜானி ரொடாரி – சிறுவயதில் இருந்தே தனிக் குழந்தையாக தனக்கு தானே விளையாடுவார். தன் மாமா வீட்டில் வளர்க்கப்பட்டார். அங்கே மாடிப்படி ஓரம் ஒர சுவர் இருந்தது. கரிக்கட்டையை பயன்படுத்தி அதில் விதவிதமாக வரைவார். யானை எலி பறவைகள் பூனை என்று வரைபடங்களோடு விளையாடுவார். இட்டுக் கட்டி கதைகள் பல சொல்வார். அவர் பிறந்து 1920 ஆம் ஆண்டு ஒமெக்னா. அதுதான் அவர் பிறந்த ஊர். அப்பா ரொட்டித் துண்டு தயாரிக்கும் பேக்கரியில் வேலை பார்த்தார்.

விரைவில் பீஸி ஸெரா (Paese Sera) எனும் தினசரியில் அவருக்கு வித்தியாசமான வேலை கிடைத்தது. அதாவது அந்த தினசரி பத்திரிக்கையின் சிறார் பக்கங்களை ஒழுங்குபடுத்தி நடத்துதல். அதில்தான் ஜானி ரொடாரியின் சிறார் கதைகள் அறிமுகம் ஆகத்தொடங்கின. இந்தக் கதைகள் பெரும்பாலானவை சிறுவயதில் வீட்டுவேலைகள் செய்து படிக்கவைத்த அவரது தாய் சொன்ன கதைகளின் தொடர்ச்சியாக இருந்தன. முசோலினியின் பாசிச அரசால் எத்தனையோ கொடுமைகளை அனுபவித்த  இத்தாலிய குழந்தைகளுக்கு ஜானி ரொடாரியின் கதைகள் மனித நேயத்தை அன்பை ஆதரவை உழைக்கும் மக்களின் நேசத்தை அள்ளிப் பருக வைத்த  அமுத சுரபியாக விளங்கின. பல ஊர்களில் ரகசிய வாசிப்பு முகாம்களை ஏற்படுத்தி சிறார் உலகின் நம்பிக்கை நட்சத்திரமானார் ஜானி ரொடாரி. சின்ன வெங்காயம், பளிங்கினால் ஆன சிறுவன் போன்ற கதைகள் உலகப்பிரசித்தி பெற்றவை.

தி கிராமர் ஆஃப் ஃபேன்டசி (கற்பனை உலகின் இலக்கணம்) புக் ஆஃப் எரர் (தவறுகளால் ஆன புத்தகம்) ஆகியவை சிறார் உலகை ஆசிரியர்களான நமக்கு அறிமுகம் செய்யும் அற்புத முயற்சிகள். வீட்டிலேயே ஒரு. புத்தக- அறையை எப்படி ஏற்படுத்தலாம் என்று, உலகில் தான் எங்கு சென்றாலும் அவர் குழந்தைகளோடு உரையாடி ஆர்வத்தை தூண்டுபவராக இருந்தார்.

ஜானி ரொடாரியின் கதைகள் இன்றைய நம் புதிய சிறார் எழுத்தாளர்களுக்கும் வழிகாட்டும்  பல்வேறு அம்சங்களால் நிறைந்தவை. 1980ல் அவர் இறந்துபோவதற்கு முன் ரொடாரிகதைகள் பதினேழு நாடுகளின் சிறார்களால் விரும்பி வாசிக்கப்பட்டிருந்தன. நம் தமிழ் சிறார்களுக்காக  அவை முதன்முதலில் தற்போதுதான் மொழிபெயர்ப்பாகின்றன. 

தொலைபேசிக் கதைகள் இத்தாலிய மொழியில்
ஜானி ரொடாரி
தமிழில் : ஆயிஷா. இரா. நடராசன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *