நூல்: இது எங்கள் வகுப்பறை
ஆசிரியர்: சசிகலா உதயகுமார்
விலை: ₹180.00
வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ரன் – பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 44 2433 2924
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
இது எங்கள் வகுப்பறை (Ithu Engal Vagupparai) – நூல் அறிமுகம்
இந்தியாவின் எதிர்காலம் வகுப்பறைகளில் தீர்மானிக்கப்படுகிறது.இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள் போன்ற வரிகள் குழந்தைகளின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது அப்படிப்பட்ட குழந்தைகள் அதிக நேரம் இருக்கும் வகுப்பறைகள் அவர்கள் விரும்பும் குழந்தைகள் மைய வகுப்பறையாக இருக்கவேண்டும் என்பதை செயல்படுத்த ஆசிரியர் சசிகலா உதயகுமார் மேற்கொள்ளும் உழைப்பே இந்த நூல்.
கற்றல் என்பது திணிப்பதல்ல… மலர்வது. என்பதை ஓர் ஆசிரியர் உணரும் இடம்தான் குழந்தை மையக் கல்வியின் ஆதார சுருதியாகும்” என்று குறிப்பிடும் நூலாசிரியை தனது வகுப்பறை சார்ந்த செயல்பாடுகளை நேர்மையுடன் பதிவு செய்துள்ளார்.
உலகலாவிய அளவில் கல்வியில் மிகவும் முக்கியமான புத்தகங்கள் பகல் கனவும், டோட்டோசான்- ஜன்னலில் ஒரு சிறுமியும். இந்த இரண்டிலும் வரும் ஆசிரியர்களான முறையே லக்ஷ்மிராமும், கோபயாட்சியும் குழந்தைகளின் மனங்கவர்ந்த ஆசிரியர்கள்.
“இது எங்கள் வகுப்பறை (Ithu Engal Vagupparai)” புத்தகத்தைப் படித்துவிட்டு சிறிது யோசித்தால் ஆசிரியை வே.சசிகலா உதயகுமாரும் மாணவர்கள் மனம் விரும்பும் ஆசிரியராக உள்ளார் என்பதில் ஐயமில்லை.
அன்றாட வகுப்பறைச் சம்பவங்களின் தொகுப்பாக இந்நூல் இருக்கிறது இந்த 183 பக்கங்களைப் படிக்க படிக்க ஒரே வியப்பு.
“உண்ணும் உணவு, உடுத்தும் உடை, ஏன்… வைத்திருக்கும் அலைபேசி என அனைத்திலும் புதிது புதிதான வடிவங்களிலும் வண்ணங்களிலும் சுவைகளிலும் எதிர்பார்க்கும் நாம்… கற்பித்தலில் மட்டும் ஒரே மாதிரி என்று கேள்விகள் கேட்டு சுய பரிசோதனை செய்து புதிய முறையை வடிவமைக்கிறார்.
“வகுப்பறையின் சூழலை மாற்றி வடிவமைத்து அதற்கேற்ப மாணவர்களின் மனநிலையைத் தயார் செய்து சிறுசிறு விளையாட்டுகள், எளிமையான பயிற்சிகள் மூலம் ஆரம்பித்து ஒரு முழு அட்டவணையைத் தயார் செய்து கொஞ்சம் கொஞ்சமாக புதிய சூழலை உருவாக்கியுள்ளார்.
மாணவர் மைய வகுப்பறைச் செயல்பாடுக ளை உருவாக்கி கற்பிக்கிறார்.
குழந்தைகளை மையமாக வைத்து விளையாட்டு, கதை, செயல்முறைப் பயிற்சி, பாடல், நடனம் என பல பரிணாமங்களில் கற்பித்தல் தொடர்கிறது.
வீட்டுப்பாடம் என்பதை எளிதாக கதை சொல்லல் நிகழ்வாகவும், ஐந்திணைகள் அழகிய ஓவியமாகவும் உருப்பெறுவதாகவும் விடுகதை மூலமும், கதை கட்டுதல் மூலம் கற்பது என்பது எளிதாகவும் மகிழ்ச்சியாகவும் மாறுகிறார்.
மாணவர் வாசிப்பதில் செய்யும் தவறுகளை சரிசெய்ய “நா” நெகிழ் பயிற்சி தருகிறார். மேலும் விளையாட்டை விரும்பும் மாணவர்களுக்காக வகுப்பறையையே விளையாட்டு மைதானமாக மாற்றுகிறார்.
செயல்பாடுகள் மூலம் விளையாட்டாய் verb சொல்லிக் கொடுக்கிறார்.
சொல்மாலை கட்டுதல் என்னும் செயல்பாட்டின் மூலம் மாணவர்களின் சொல்திறன் வளர்க்கப்படுகிறது.
கற்றலின் விளைவு – சமூகத்திலும் வாழ்க்கையிலும் பிரதிபலித்தலே ஆகும் என்பதை நினைவு கூறும் ஆசிரியை, கதை, விளையாட்டு, ஆடல், பாடல், எனச் செயல்பாடுகள் சென்று கொண்டிருந்தாலும் அவற்றின் வழி கற்றல் நிகழ்ந்து கொண்டிருப்பது மனதிற்கு திருப்தியானதாகவே இருந்தது என்கிறார்.
பள்ளியில் நடத்தப்படும் கதைத்திருவிழா, முட்டை ஓட்டைக் கொண்டு உருவாக்கப்படும் கோமாளி, விளையாட்டுகளை அறிதல், பல் லாங்குழி பெயர்க்காரணம் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செயல்பாடு என விதவிதமான செயல்பாட்டின் மூலம் மற்ற பள்ளி மாணவ, மாணவிகளையும் தம் பள்ளி நோக்கி திருப்புவதில் வெற்றியடைந்துள்ளார்.
வாசிப்பை மாணவர்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் எனவும், புத்தகம் வாசிக்கும் ஆர்வத்தை மாணவர்களிடம் உருவாக்கினால் மட்டுமே சரளமான வாசிப்பும், பிழையின்றி எழுதுதலும் சாத்தியம் என்பதை உணர்ந்து வகுப்பறை நூலகத்தை உடைந்த பெஞ்ச் பலகைகளைக் கொண்டு அமைத்து செயல்படுத்தி வெற்றி பெறுகிறார்.
செயல்பாடுகள் மூலம் குழந்தை மைய வகுப்பறையை வெற்றிகரமாக அமைத்து கற்பித்தல் பணியினை மகிழ்வோடு செய்யும் ஆசிரியை சசிகலா அவர்களின் அனுபவப் பகிர்வே இந்நூல்.
சொல் மட்டுமே இல்லாமல் செயல்பாடுகளுடன் இது எங்கள் வகுப்பறையை (Ithu Engal Vagupparai) மாணவர்கள் விரும்பும் வகுப்பறையாக மாற்றிய ஆசிரியர் சசிகலா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
இந்த நூல் ஆசிரியர்கள் கண்டீப்பாக படிக்க வேண்டிய நூல்.
நூல் அறிமுகம் எழுதியவர்:
வ.பெரியசாமி
‘புத்தக ஆர்வலன்’ தன்னம்பிக்கை பேச்சாளர் மற்றும் போட்டித் தேர்வு பயிற்சியாளர்
பட்டதாரி ஆசிரியர் கணிதம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
சங்ககிரி
நினைத்த நூல்கள்… நினைத்த நேரத்தில் thamizhbooks.com இணையதளம்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.