வாழ்வதற்காக கற்பித்தல் பணியைச் செய்து வருகின்ற நான், எப்போதும் ஆசிரியராக இருக்கவே விரும்புகிறேன். என் தந்தைவழிப் பாட்டியும் (ஆயி) ஆசிரியராக இருந்தவர்தான். தன்னையே என்னிடம் பார்ப்பதாக அவர் அடிக்கடி கூறுவார். என்னுடைய உறவுக்காரக் குழந்தைகள் உருவாக்கிய அமளிகளுக்கு மத்தியில், ஒரு குழந்தையாக எனக்கு கூடுதல் இனிப்புகள் (ஒருவகையில் அது பாட்டியால் கிடைத்ததே தவிர, நான் அடைந்த வெற்றியால் அல்ல) கிடைத்தன என்பதைத் தவிர, அவர் சொன்னதற்கான உண்மையான பொருள் என்ன என்பதை நான் அப்போது முழுமையாக உணர்ந்திருக்கவில்லை. பாட்டிக்குப் பிறகு, அட்டியும் (தந்தைவழி அத்தை). என்னுடைய அம்மாவும் ஆசிரியர்களாக இருந்தனர். ஆயி விவரித்த கதைகள் எனக்கு நன்றாக நினைவிலிருக்கின்றன. அவருடனும், அவருடைய கதாபாத்திரங்களுடனும் வார்த்தைகள் மற்றும் அனுபவங்களுடனான பயணத்தில் செல்வதற்கு நான் தயாராகும் போது, என்னுடைய கண்கள் பளபளக்கும். எனக்கு ஒரே நேரத்தில் பாபாசாகேப் அம்பேத்கர், டாக்டர் ராஜ்குமார் ஆகியோரை என்னுடைய பாட்டி கற்றுக் கொடுத்தார்.

இன்று ஆசிரியராக நான் ஒரு வகுப்பில் நுழைகையில், அதைத்தான் – கதைகளால் என் கண்கள் பளபளத்ததை, கதைகளைப் பகிர்ந்து கொள்ளும் போது கண்கள் பளபளக்கத் தொடங்குவதைத்தான் – நான் எதிர்பார்க்கிறேன். அது பெரும்பாலான நாட்களில் எனக்கு கிடைத்து விடும். ஆனாலும் மழலையர் பள்ளிக் குழந்தைகளைப் போல சில நேரங்களில் என்னுடைய மாணவர்களை நான் நடத்த வேண்டியிருக்கிறது. பெரும்பாலான நேரங்களில், கிண்டலான கருத்தைச் சொல்லி நிலைமையைச் சரிசெய்து கொள்கிறேன். அதற்காக உடனே வருந்தவும் செய்கிறேன். கதைகள் கேட்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலை இருக்கும் வரை அது குறித்த கவலை தேவைப்படப் போவதில்லை.

C:\Users\Chandraguru\Pictures\Dalit Teacher\Dalit Teacher.jpg

ஒவ்வொரு முறையும் அம்பேத்கரின் சாதியை அழித்தல், டு சரஸ்வதியின் பச்சிசு,  மகாதேவாவின் அமசா ஆகிய நூல்களை எடுக்கும் போதும் நான் முடங்கிப் போயிருக்கிறேன். அந்த நூல்களை வகுப்பிற்கு எடுத்துச் செல்லும்போது, நிலையான மனநிலையில் இருக்கிறேன் என்பதை நான் முன்னரே திட்டமிட்டு உறுதி செய்து கொள்கிறேன். ஏன்? ஏனென்றால், அம்பேத்கரைப் பற்றி நான் கோபத்துடன் பிதற்றும் போது அல்லது அஞ்சினம்மா குறித்து கண்ணீருடன் அழும்போது என்னுடைய கண்களில் பளபளப்பு காணாமல் போய் விட்டால் என்ன செய்வதென்று எனக்குத் தெரிவதில்லை. அவ்வாறான உணர்வின்மை மீது எவ்வாறு நடந்துகொள்வது என்பது எனக்குத் தெரியாததால் எனக்குள் அச்சம் எழுகிறது. தொலைவிலே இருக்கின்ற அந்த உணர்வின்மையை எளிதில் அடையாளம் காண முடிகிற வகையில், என்னுடைய இருபத்தைந்து ஆண்டு கால தலித் வாழ்க்கை எனது உணர்வுகளைக் கூர்மைப்படுத்தியிருக்கிறது என்றாலும், அதைத் தவிர்த்து விட்டு அப்படியே வெளியேறி விடுவதா அல்லது அடுத்த முறை சிறப்பாகச் செயல்படுவார்கள் என்ற நம்பிக்கையுடன், அமைதியாக அதை ஏற்றுக் கொள்வதா? நான் அதை எவ்வாறு எதிர்கொள்வது?

இவ்வாறு பொறுமை இழந்தது குறித்து நான் வெறுப்படைகிறேன். நான் பாதிக்கப்படக்கூடிய சூழல்களில் என்னுடைய கிண்டலான பேச்சுக்களே முன்னணியில் நிற்கின்றன. ‘பிராமணர்களுக்கு எதிராக எந்தவொரு காரணமும் இல்லாமல் ஒருசார்புடன் அம்பேத்கர் இருந்தார். அவர் ஆங்கிலேயரை ஆதரித்தார்!’. இதற்கு நான் கோபப்பட்டு விடக் கூடாது. ‘என்னால் உங்களுடைய கருத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது என்றாலும், உங்களால் அதைச் சொல்வதற்கான காரணங்களை உண்மையில் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒருசார்பு கொண்டிருப்பது மனித இயல்புக்கு மிகவும் பொதுவானது. ஆனால் காரணங்கள் எதுவுமில்லாத அவ்வாறான ஒருசார்புத் தன்மை தீங்கையே விளைவிக்கும். உங்களைக் கொல்ல முயற்சிக்கும் எதையாவது எதிர்த்து நீங்கள் போராடுவதற்கான பொருள், உங்களை எது கொல்கிறதோ அதற்கு எதிராக ஒருசார்புடையவராக நீங்கள் இருக்கிறீர்கள் என்பதல்ல. அது உயிர்வாழ்வது குறித்தது. ஆம், ஒருசார்புடையவராக நீங்கள் இருக்க வேண்டுமென்றால், அநீதிக்கு எதிரான ஒருசார்புடையவராகவே நீங்கள் இருக்க வேண்டும்’. என் கண்கள் சிமிட்டுகின்றன. இயல்பான சிமிட்டலை விட நீண்ட நேரம் நான் கண்களைச் சிமிட்டிக் கொள்கிறேன். சமாளிக்கும் வகையிலேயே அனைத்தும் இருக்கின்றன. நான் நன்றாக இருக்கிறேன். இது செய்து முடிக்கக் கூடியதாகவே இருந்தது. அவர்கள் வேண்டுமென்றே உங்களிடம் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை.

ஒருமுறை மாணவர் ஒருவர் ‘மேடம், இங்கே சாதி அமைப்பு இல்லை. கீழ்சாதியைச் சேர்ந்த நண்பர்கள் எனக்கு இருக்கின்றனர். ஆனாலும் அவர்கள் தங்களுடைய சாதி அல்லது அனுபவங்களைப் பற்றி ஒருபோதும் என்னிடம் எதுவும் பேசியதேயில்லை’ என்றார். நான் சிரித்துக் கொண்டே அவரிடம் ‘சாதி குறித்து நீங்கள் அவர்களுடன் எதுவும் பேசியிருக்கிறீர்களா?’ என்று கேட்டேன். ‘அப்படி எப்படி என்னால் கேட்க முடியும்? ஒருவேளை நான் அவ்வாறு செய்தால், அவர்களுடைய சாதியை ஏதோவொரு உள்நோக்கத்துடன் அறிந்து கொள்ள நான் முயற்சித்ததற்காக, நீங்கள் என்னை சாதியவாதி என்று கூறுவீர்கள்!’ என்றார். முகத்தில் எவ்வித உணர்ச்சிகளையும் காட்டிக் கொள்ளாமல், நான் எனக்குள்ளே சிரித்துக் கொண்டேன். ‘இதில் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. சாதியைப் பற்றி நீங்கள் அவர்களுடன் ஒருபோதும் பேசவில்லை என்றால், உங்களுடன் தங்கள் அனுபவங்களை அவர்கள் பகிர்ந்து கொள்வார்கள் என்று எவ்வாறு நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? இரண்டாவதாக, உங்களிடம் அவர்கள் சொல்லாவிட்டால், நீங்கள் அவர்களுடைய சாதியை எவ்வாறு அறிந்து கொள்வீர்கள்?’ என்று கேட்டேன்.

மிகவும் நன்றாகப் பேசக் கூடிய அந்த மாணவர் தன்னுடைய இருக்கையில் நெளிந்தார். ‘எனவே நீங்கள் சாதியவாதியா என்பது உங்களுக்குத் தெரியாது. உங்களுடைய நோக்கம் இங்கே ஒரு பொருட்டே அல்ல. நீங்கள் ஒரு சாதியவாதியாகவே எப்போதும் முத்திரை குத்தப்படுவீர்கள்’.  புரிந்து கொள்ள வேண்டியதை என்னுடைய மவுனத்தின் மூலம் மட்டுமே அவர் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் அமைதியாக இருந்தேன். என்னுடைய அமைதியால் தூண்டப்பட்ட அவர் ‘ஒருவேளை நீங்கள் சாதியவாதியாக இருக்கலாம். அதனால்தான் சாதியை அடிப்படையாகக் கொண்டு பாகுபாடு எதையும் காட்டிக் கொள்ளாத இந்த வகுப்பிற்குள் சாதியைப் பற்றிப் பேசுகிறீர்கள். தலித்துகளை தங்களுக்காகப் பேசுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கும் நீங்களே தலித்துகளுக்காகப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்’ என்று தொடர்ந்தார். ரத்த அழுத்தத்தின் அளவு மிக வேகமாக அதிகரித்தது. ‘நான் தலித் இல்லை என்று நீங்கள் எப்படி உறுதியாக நம்புகிறீர்கள்?’ என்று நான் கேட்டேன். ‘நான் தலித் இல்லை என்று நீங்கள் எப்படி உறுதியாக நம்புகிறீர்கள்?’ என்று அவர் என்னிடம் திருப்பிக் கேட்டார். வார்த்தைகள் தடுமாறியதால், எதிர்பார்த்ததை விட அந்தக் குரல் அதிக சத்தத்துடன் இருந்தது. ‘எனக்கு அது நிச்சயமாகத் தெரியும். நீங்கள் தெரிந்து கொள்ள வேணும் என்று விரும்பினால், வகுப்பிற்கு வெளியே வந்து என்னைச் சந்தியுங்கள். காயமடைந்திருக்கும் உங்கள் தன்முனைப்புடன் மோதி இந்த வகுப்பைத் தொந்தரவு செய்ய நான் விரும்பவில்லை’ என்றேன். ஒருபோதும் அவர் வகுப்பிற்கு வெளியில் என்னை வந்து சந்தித்ததில்லை. ஒருபோதும் அவரிடம், அது எனக்கு எப்படித் தெரியும் என்பதை என்னால் சொல்லவே முடியவில்லை. அவர் நன்றாகப் பேசக் கூடியவர். புத்திசாலி, தன்னைக் குறித்து பெருமையும், நம்பிக்கையும் கொண்டிருப்பவர், சக மாணவர்களால் மதிக்கப்படுபவர். தன்னுடைய உயர்வு மனப்பான்மைக்குத் தலைவணங்கிடாத இளம் பெண் ஆசிரியர்களை அவர் மிரட்ட முயற்சித்திருப்பதும் எனக்கு நன்றாகவே தெரியும். பலவிதமான வடிவங்களில், அளவில் தலித்துகள் இருக்கிறார்கள். எங்களைத் தொடர்ந்து  அவமானப்படுத்துகின்றவர்களிடம்  இருக்கின்ற இந்தக் குணங்கள் ஒவ்வொன்றையும் நோக்கியே நாங்கள் செயல்பட்டு வருகிறோம். பெரும்பாலான உயர்சாதி (சவர்ணா) மக்களிடம் (தங்களுடைய மரபணுக்களிலேயே அறிவு இருப்பதால், அறிவுப்பூர்வமாக தாங்களே உயர்ந்தவர்கள் என்று உங்களிடம் சொல்பவர்கள், அந்த பொருத்தமற்ற தகவலை நிரூபிப்பதற்காக தவறான புள்ளிவிவரங்களை உங்களுக்குக் கொடுக்கின்ற பெரும்பாலும் பிராமணர்கள்) இருப்பதைப் போல, அது எங்களுக்கு அவ்வளவு எளிதில் வருவதில்லை. பாலியல்ரீதியாக பெண்களை இழிவுபடுத்துவது, தன்னை மேம்படுத்திக் காட்டிக் கொள்கின்ற செயலாகவே அந்த மாணவரைப் பொறுத்தவரை இருக்கிறது.

C:\Users\Chandraguru\Pictures\Dalit Teacher\divyashree.jpg

பொறுமையை இழந்தது குறித்து நான் மனக்கலக்கம் அடைந்தேன். அந்த வகுப்பில் என்னுடைய சாதி வெளிப்பட்டு விட்டது குறித்து சற்றே நான் அச்சமடைந்தேன். தாங்கள் பேசுவது என்னைப் புண்படுத்தக்கூடும் என்று கருதுகின்ற மாணவர்கள், இனிமேல் சாதி குறித்து என்னுடன் பேச மாட்டார்கள் என்றே நான் உறுதியாக நம்பினேன். ஒரு முட்டாள் என்னைவிடத் தன்னை உய்ர்வாகக் காட்டிக் கொண்டது குறித்து, நான் தலையில் அடித்துக் கொண்டேன். ஆனாலும் சாதி அதைத்தான் செய்கிறது. என்னுடைய உணர்ச்சிகள் ஆத்திரமாக வெளிப்பட்டிருந்தன. நான் நம்பமுடியாத அளவிற்கு இரக்கமும், அதே நேரத்தில் பிடிவாதமான ஆணவமும் கொண்டவள். என்னுடைய அந்தக் குணம் மிகவும் வேடிக்கையாக இருப்பதாக என்னுடைய நண்பர் ஒருவர் என்னிடம் சொல்லியிருக்கிறார். ‘திவ்யா, இவ்வளவு கனிவாக இருக்கும் நீங்கள் அதற்கான பாராடுதல்களைப் பெற்றுக் கொண்டதே இல்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. அதை மறந்து விட்டு, நீங்கள் எப்போதும் போல உங்கள் கிண்டலைத் தொடருங்கள். ‘நான் உன்னை நேசிக்கிறேன்’ என்ற சொற்களை நீங்கள் எப்போதும் என்னிடம் சொன்னதே இல்லை. ஆனாலும் உங்கள் அன்பை நான் எப்போதும் உணர்ந்திருக்கிறேன்’ என்று அவர் கூறினார். அவர் சொன்னதைப் புரிந்துகொள்வதற்கு எனக்கு சிறிது நேரம் ஆனது. ‘நான் உன்னை நேசிக்கிறேன்’ என்று நான் அவருக்கு அனுப்பி வைத்திருந்த அனைத்து செய்திகளையும், அவர் பார்த்த உடனேயே நீக்கி விட்டது எனக்கு நினைவிலிருக்கிறது. அது வேடிக்கைக்காகச் செய்தது என்றாலும், நான் ஏன் அதைச் செய்தேன்? எது குறித்து நான் அச்சப்படுகிறேன்? நீண்ட நேரமாக நான் யோசித்துப் பார்த்தேன். நேசிக்கப்படுவது குறித்தே நான் அச்சமடைந்திருப்பதாக உணர்ந்தேன். என்னுடைய குடும்பம் என்னை நேசிப்பதே எனக்குப் போதுமானது என்று நினைப்பதால், மற்றவர்களை நான் தள்ளி வைத்திருப்பதை உணர்ந்தேன். என்னை (குடும்பத்தினர்) நேசிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றால், அதன் பிறகு என்னை யாரும் ஏன் நேசிக்க வேண்டும் என்று பார்க்காததாலேயே, நேசிக்கப்படுவது குறித்து இன்று நான் மிகவும் அச்சப்படுகிறேன் என்றே நான் கருதுகிறேன். யாராவது என்னை ‘நேசிக்க வேண்டியதில்லை’ என்றால், அவர்கள் நிச்சயமாக என்னை நேசிக்க மாட்டார்கள். என் உணர்ச்சிகளை அப்படியே வெளியிட்டால், அவை அப்படியே எனக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு, வெளியேற முடியாத வகையில் இருட்டு அறைக்குள் நான் தள்ளப்படுவேன் என்பதை எப்போதாவது ஒரு முறை, ஒரு முட்டாள் எனக்கு நினைவூட்டி விடுவது உண்டு. அந்த இருட்டு அறைக்குள்ளிருந்து  வெளியே வரும்போது, திடீர் ஒளியால் கண்கள் கூசும். அதற்குப் பிறகு ஒரு சூப்பர் ஸ்டாராகவே உங்களால் மாற முடியும் என்றாலும், அந்த இருட்டறைக்குள் இருந்த பயம் ஒருபோதும் உங்களை விட்டு விலகிடாது. அந்த இருட்டறைகளில் வசிப்பதன் மூலமோ அல்லது அங்கே வசித்த தங்களுடைய மூதாதையர்களை நினைவில் கொண்டிருப்பதன் மூலமோ இதுபோன்ற அச்சத்தை தலித்துகள் சுமந்து கொண்டே இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில், நம் முன்னோர்களின் அனுபவங்கள் நம்முடையவையாகி விடும். அவர் தலித் அல்ல என்று அதனாலேயே எனக்குத் தெரிய வந்தது. என் மனம் புண்பட்டது. ஆமாம். ஆனால் அது நான் தலித் என்பதால் அல்ல. தன்னை ஒரு தலித் என்று அவர் அழைத்துக் கொள்ள முடியும் என்று – அது என்னை ஒரு கணம் ஏமாற்றுவதற்காகக் கூட இருக்கலாம், அல்லது உயர்சாதியினர் மட்டுமே பெற்றிருக்கின்ற அந்த தந்திரமான பேச்சாகக்கூட இருக்கலாம் –  நினைத்ததாலேயே, தன்னை தலித் என்று அவர் சொல்லிக் கொண்டதாலேயே என்னுடைய மனம் புண்பட்டது.

மனிதாபிமானமற்ற தன்மை இயல்பாக்கப்பட்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில், அம்பேத்கர் மிகவும் அடிப்படையான விஷயங்களுக்காக எவ்வாறு போராடினார் என்பது குறித்து வகுப்பறையில் எவ்வாறு என்னால் கற்பிக்க முடியும்? குளிப்பதன் மூலம் சாதிக்கான தொழிலைக் கழுவிக் கொள்ள முடியாது என்றால், அஞ்சினம்மாவால் சாப்பிட முடியாது என்பதை நான் அவர்களுக்கு எப்படிச் சொல்வது? இதைப் பற்றி விவாதிக்கும்போது, ​​நான் எதிர்பார்த்திருந்த அந்த பளபளப்பை அவர்களுடைய கண்களில் எவ்வாறு நான் காண்பது? அவர்களிடம் நேரடியாகப் பேச முடிவு செய்தேன். அம்பேத்கர் என்னுடைய ஹீரோ என்றும், மாணவர்கள் ‘சாதி சலிப்பை ஏற்படுத்துகிறது’ என்று சொன்னால் என் மனம் புண்படும் என்றும் இன்று நான் வகுப்பில் சொல்லப் போகிறேன். அம்பேத்கரை அவமானப்படுத்துபவர்களைப் பொறுத்துக்கொள்ள மாட்டேன் என்றும், ஆனால்  அவருடைய சிந்தனைகளைக் கேள்விக்குள்ளாக்குவதை எதிர்கொள்வதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்றும் அவர்களிடம் கூறப் போகிறேன். அவர்களிடம் ‘நான் இதை விரும்புகிறேன். என் கண்களிலிருந்து அதை நீங்கள் பார்க்க விரும்புகிறேன்’ என்று சொல்வேன். தலித் என்று அவர்கள் என்னை யூகிக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். அதனால் கவலைப்படப் போவதில்லை என்று நினைத்துக் கொள்ளுமாறு என்னை நானே கட்டாயப்படுத்திக் கொள்கிறேன். சில நேரங்களில், தலித்துகளைப் பற்றி பேசும்போது ‘அவர்கள்’ என்பதற்குப் ​பதிலாக தற்செயலாக ‘நாங்கள்’ என்று வார்த்தை மாறாட்டம் நேர்ந்து விடுகிறது. சிலர் அதைப் பிடித்துக் கொள்கிறார்கள். வீண்பேச்சுகளுக்கு ஏங்குகின்ற அவர்களின் கண்களில் ஒரு பளபளப்பு தோன்றுகிறது. சரியாகத்தான் கேட்டோமா என்று அவர்கள் குழப்பமடைவதைப் பார்த்து, நான் அசட்டையாக நகர்கிறேன். நான் போற்றி வருகின்ற தலித் பெண் பேராசிரியர் ஒருவரிடம், உங்களைத் தொந்தரவு செய்வதற்காகவே உங்களுடைய சாதியைப் பற்றிக் கேட்டு மாணவர்கள் எரிச்சலூட்டும் போது, நீங்கள் என்ன செய்வீர்கள் என்று கேட்டேன். அனைவரையும் மயக்குகின்ற கோகு சியாமளாவின் வழிமுறையை தான்  கடைப்பிடிப்பதாக அவர் என்னிடம் கூறினார். நான் அவ்வாறு செய்த போது என்னைச் சுற்றியிருந்த எவரேனும் மெய்மறந்து போயிருந்தார்களா என்பது பற்றி எனக்குத் தெரியாது, ஆனாலும் எதையும் சொல்லாமல் உறுதியாக இருப்பதைவிட, அனைத்தையும் பேசக் கூடிய என்னுடைய திறனைக் கண்டு நான் நிச்சயமாக வியப்படைந்தேன்.

C:\Users\Chandraguru\Pictures\Dalit Teacher\Dalit month.jpg

சமீபத்தில், நான் ஒரு மாணவருடன் உரையாடினேன். என்னுடைய வலைப்பூவைப் படிப்பதன் மூலம் அவளுடைய வகுப்புத் தோழர்கள் நான் தலித் என்பதைக் கண்டுபிடித்ததாக அவர் என்னிடம் கூறினார். அதை எவ்வாறு சமாளிப்பது என்ற குழப்பத்தில் இருந்தேன். விரைவிலேயே அதை எல்லாம் மறந்து போன நான் என்னுடைய இரண்டாவது வலைப்பூவை வெளியிட்டேன். அதைப் படித்த அவள் மிகவும் தயக்கத்துடன் என்னிடம், ‘மேடம், ஒருவேளை நான் சொல்வதை நீங்கள் விரும்பவில்லை என்றாலும்கூட, உங்களுடைய தலித் அனுபவங்களைப் பற்றி வகுப்பிலே பேச வேண்டும். உயர்சாதி மாணவர்கள் பலருக்கு அது புரியவில்லை. ஆனாலும் மக்களால் வரவேற்கப்படுவதாகவும், அவர்களை ஏற்றுக் கொள்ள வைக்கின்ற வலிமையையும் உங்களுடைய எழுத்து கொண்டுள்ளது. அது நிச்சயம் அவர்களுக்கு உதவும். அதைப் பற்றி சற்று சிந்தித்துப் பாருங்கள்’ என்றாள். தலித் வரலாற்று மாத நிகழ்விற்காக, தலித் எழுத்தாளர்கள் தங்களுடைய கதைகளைப் பகிர்ந்து கொள்ளும்படி இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்கிரீன் ஷாட்டை எடுத்து மற்றொரு மாணவர் எனக்கு அனுப்பியிருந்தார். அதிலிருந்த குறிப்பை நான் புரிந்து கொண்டேன். இனிமேல் வகுப்பில் என்னுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்வது எனக்குத் தேவைப்படப் போவதில்லை. அது உயர்சாதியினர் கொண்டுள்ள பணி நெறிமுறையாகவே இருக்கும்.  அது என்னுடையதாக இருக்க வேண்டியதன் அவசியம் என்ன? நான் சிடுசிடுப்பானவள், எரிச்சலுடன் இருப்பவள் என்று என்னுடைய மாணவர்கள் நினைத்தாலும் பரவாயில்லை. என்னுடைய வகுப்பில் பாதிக்கப்படுபவளாக நான் இருந்தாலும் பரவாயில்லை. தலித் இரும்புப் பெண்மணி என்ற முத்திரையை சில கழுகுக்கண்கள் என் மீது குத்த முயன்றாலும் பரவாயில்லை. வாழ்வதற்கான என்னுடைய போராட்டத்தை சில தலித் மாணவர்களாவது நிச்சயம் காண்பார்கள். உணர்ச்சிவசப்பட்ட இந்த தலித் ஆசிரியரை, நன்றாகப் பேசக்கூடிய அந்த உயர்சாதி மாணவருக்கு மேலாக அவர் காண்பார்கள். என்னுடைய பாதிப்பு அவர்களுக்குத் தெரியட்டும். அது பரவாயில்லை. இது ஒரு பயணம். பச்சாதாபம் எங்களுடைய சாதியிலேயே தோன்றுவதை அவர்கள் நிசயம் காண்பார்கள்.

C:\Users\Chandraguru\Pictures\Dalit Teacher\thequint_.jpg

அந்த பளபளக்கும் கண்கள்தான் உண்மையில் தேவைப்படுகின்றன. வேறு யாராலும் செய்ய முடியாததை தலித் ஆசிரியர்கள்தான் செய்கிறார்கள். தன்னைப் போலவே நான் இருக்கிறேன் என்று என் ஆயி சொன்னதற்கான பொருள் இதுவாகவே இருக்கலாம்.

https://www.outlookindia.com/website/story/opinion-the-dalit-teacher/361829

திவ்யா மல்ஹாரி, தலித் எழுத்தாளர் மற்றும் உதவிப் பேராசிரியர், செயின்ட் ஜோசப் வணிகவியல் கல்லூரி, பெங்களூர்

நன்றி: அவுட்லுக் இதழ், 2020 அக்டோபர்  09

தமிழில்: தா.சந்திரகுரு



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *