இயல்பால் அறிவோம் – நூல் அறிமுகம்
நூலின் தகவல்கள் :
நூல்: இயல்பால் அறிவோம்
ஆசிரியர்: சி. முத்துகந்தன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
முதல் பதிப்பு: 2021 டிசம்பர்
விலை : ரூ.130
முனைவர் சி. முத்துகந்தன் அவர்களின் பத்து ஆண்டுகால ஆசிரிய வாழ்க்கையின் அனுபவங்கள் கோவிட் பெருந்தொற்று – பொதுமுடக்க காலத்தில் நூல் வடிவம் பெற்றுள்ளது. படைப்பு, விமர்சனம், இவ்விரண்டிற்கும் அடிப்படையான வாசிப்பு இவற்றைப் பற்றிய நூல் இயல்பால் அறிவோம்.
இம்மூன்றும் நம் வாழ்விலிருந்து பெறப்படுவதாகையால் இந்நூல் வாழ்க்கையைப் பற்றியதாகவும் உள்ளது. இவற்றுள் வாசிப்பு என்பது பற்றிய ஆசிரியரின் புரிதல் சுவாரசியமானது. பேச்சு / உரை கேட்டல், ஓவியம் / சிற்பம் ரசித்தல், திரைப்படம் பார்த்தல், கள அனுபவம் யாவும் வாசிப்பு தான் எனக் குறிப்பிடுகிறார்.
பொதுவாக, ஏற்கனவே வாசிப்புப் பழக்கம் உள்ளவரின் வழியாகவே நாம் அனைவரும் கலை இலக்கிய வாசிப்பிற்குள் நுழைகிறோம். அவர்களிடமிருந்து பெறும் படைப்புகளை நாம் எப்படி வாசிக்கிறோம் என்பது முக்கியமானது. ஏனெனில், அவர்களிடமிருந்து நாம் படைப்பை மட்டும் பெறுவதில்லை; அதைப் பற்றிய அவர்களது அபிப்பிராயத்தையும் சேர்த்தே பெறுகிறோம். அவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு படைப்பை அணுக வேண்டும். ஒருவருக்கு மிகவும் பிடித்த படைப்பு நமக்குப் பிடிக்காமல் போகலாம்; புரியாமல் கூடப் போகலாம்.
அதற்காக வருத்தப்படத் தேவையில்லை. தொடர்ந்து வாசித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது மட்டுமே முக்கியமானது என்பதை இந்நூல் வலியுறுத்துகிறது. மிகச் சிறந்த புத்தகம், அனைவரும் கட்டாயம் படித்திருக்க வேண்டிய புத்தகம் என்றெல்லாம் சொல்லப்படும் படைப்புகள் நமக்குப் பிடிபடாமல் போகலாம். எனினும் அதுபற்றிக் குறைபட்டுக் கொள்ளத் தேவையில்லை.
ஆசிரியர் முத்துகந்தன் எழுதுதல் மீது நமக்குள்ள பிரமிப்பை உடைத்து, நெருக்கமானதாகக் காட்டுகிறார். அதே நேரத்தில், ஒரு படைப்பை உருவாக்கத் தேவையான உழைப்பு பற்றியும் தெளிவுபடுத்துகிறார்.
எப்படி வேண்டுமானாலும் நம்மால் பேசவும் எழுதவும் முடியும். அதாவது நம்முடைய நடத்தைக்கு எவ்விதத் தொடர்பும் இல்லாதபடி நம்மால் பேசவும் எழுதவும் முடியும். ஆனால் அது தேவையா? என வினவுகிறார். கலை இலக்கிய ஆக்கம் என்பது நமது சொந்த வாழ்க்கை அனுபவங்களைப் பற்றியதாக அவற்றை விமர்சனம் செய்வதாக அமைவதே சிறப்பு; அதுவே நேர்மை எனக் குறிப்பிடுகிறார். கலை இலக்கியம் என்பது என்ன? எதற்காக அவை படைக்கப்படவும் வாசிக்கப்படவும் வேண்டும்? என்பதிலிருந்து யோசித்துப் பார்க்கும்போது ஆசிரியர் கூற்றில் உள்ள நியாயத்தைப் புரிந்துகொள்ள முடியும்.
“படைப்பாளர் என்னதான் பூசிமொழுகி அழகுபடுத்திச் சொன்னாலும் அவரது எழுத்து பொய்யுரைக்குமானால் அது எளிதில் காட்டிக் கொடுத்துவிடும். சொல்லப்போனால், படைப்பு ஒருபோதும் பொய்யுரைக்காது” என்கிறார். எவ்வளவு உண்மையான வரிகள்! வாசகர்கள் ஏமாளிகள் அல்லர் என்பதைத் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறார்.
இலக்கியம் படித்தல், பேச்சு / உரை கேட்டல், ஓவியம் – சிற்பம் ரசித்தல், திரைப்படம் பார்த்தல் என யாவற்றையும் வாசிப்பு என்ற சொல்லால் குறிப்பதைப் போலவே, இலக்கிய ஆக்கத்தை மட்டுமல்லாது ஆய்வு எழுத்துகளையும் படைப்பு என்றே குறிப்பிடுகிறார். விஞ்ஞானப்பூர்வமான ஆய்வை மேற்கொள்வதற்குப் படைப்புமனம் (creativity mind) தேவைப்படுவதைக் கவனப்படுத்துகிறார். ஆசிரியர் யாவற்றையும் உள்ளடக்கிய தன்மையோடு (inclusiveness) அணுகுவதாலேயே இந்நூல் கவிதை, கதை, விமர்சனம், ஆய்வு என அனைத்தும் நிறைந்ததாக அமைந்துள்ளது.
இவர் தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களை ஆழ்ந்து கவனித்துள்ளார். குறிப்பாக, குழந்தைகளையும் முதியவர்களையும் பார்க்கும்போது மிகுந்த உற்சாகம் அடைகிறார். அதனால் தான், “எப்போதும் மிகச்சிறிய குழந்தை வயதுடையவரும் வயதில் மூப்படைந்தவருமே அன்பில் பலமுள்ளவர்களாக இருக்கிறார்கள்” என்ற உயிர்ப்புமிக்க வரிகளை அவரால் எழுத முடிந்தது.
நாம் அனைவரும் குழந்தை மனத்துடன் இருக்க வேண்டும் என்பதை நூல் முழுக்க வலியுறுத்தியுள்ளார். குழந்தைமனம் என்பது என்ன?
“குஞ்சுகள் பொறித்த தாய்க் கோழியின் அருகே தத்தித் தத்தி நடந்து வந்தது குழந்தை. ஒரு கோழிக்குஞ்சியின் ஒரு இறக்கையை இறுகப்பிடித்து ஒற்றை இறகால் துடிக்க வைத்தது அந்தக் குழந்தை. நாய்க்குட்டியின் வாலைப் பிடித்து இழுத்தவாறே பாலூட்டும் தாய்நாயின் கழுத்தை இறுக்கித் தள்ளியது குழந்தை. காளை மாட்டின் மூக்கில் விரலைவிட்டு அப்படியே மூக்கனாங்கயிற்றால் கீழே இழுத்துத் தள்ளி, கொம்பைப் பற்றியது குழந்தை.
பனம்பழங்கள் பழுத்து நிறைந்திருக்கும் பனைமரத்தின் கீழே, அரை மணி நேரமாகச் சுற்றிச் சுற்றி அசைந்தாடியது குழந்தை. தூதுவளையின் தளிரைக் கிள்ளி, தம் மடியில் போட்டுக் கொண்டது அந்தக் குழந்தை. தாவரமும் பறவைகளும் விலங்குகளும் குழந்தையைக் குழந்தையாகத் தான் பார்க்கின்றன. ஆனால் குழந்தை எப்போது அதன் தன்மையிலிருந்து மாறி, சிறுவரைக் கடந்து அடுத்த நிலைக்கு மாறுகிறதோ அப்பொழுதே கோழி குத்தும். நாய் கடிக்கும். மாடு முட்டும்.
மரத்தின் கிளை உச்சந்தலையில் விழும். செடியின் இலை தானாய் அரிக்கும். நமக்கு குழந்தை மனது இருந்து என்ன பயன். உடல் பெருத்து வளர்ந்து விட்டதால் அடிக்கடி உடல் சொல்வதையே மனம் கேட்கிறது…… உண்மையில் குழந்தைமனம் என்பது பாசாங்கில்லாத இச்சையில்லாத தூய அன்புதானே” இந்நூல் வழியாக நாம் பெற வேண்டிய முக்கியமான உண்மை இது.
இந்த உலகத்திலிருந்து நாம் எதையும் எடுத்துச் செல்லப் போவதில்லை; நினைத்தாலும் முடியாது. ஆனால் கண்டிப்பாக எதையாவது விட்டுச்சென்றே ஆக வேண்டும். இது பற்றிய பிரச்சனையை ஆசிரியர், “நம்முடைய சமூகத்திற்கு நாம் எவ்வளவு பங்கைக் கொடுத்துவிட்டுப் போகப்போகிறோம்?” என்ற கேள்வியின் மூலம் கிளப்புகிறார். இந்தக் கேள்விக்கான நியாயமான பதிலை (மழுப்பலான காரணங்களை அல்ல) நமக்கு நாமே சொல்லிக்கொள்ள வேண்டிய கட்டாயம் அனைவருக்கும் உள்ளது.
கலை இலக்கியப் படைப்பை எவ்வித முன்முடிபோடும் அணுகக் கூடாது. அவற்றின் உண்மையான தன்மையிலிருந்து / இயல்பிலிருந்தே அவற்றைப் பற்றிய நம் கருத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இதுவே இயல்பால் அறிதல். எந்த ஒன்றிற்கும் அதன் அடையாளத்தைத் தேடும்போது நம்மால் அதைப் புரிந்து கொள்ள முடிவதில்லை. மாறாக அதைத் தூர விலக்கி வைக்க மட்டுமே முடிகிறது. மேலும், ஒன்றிற்கு அடையாளத்தைச் சூட்டும்போது நாம் நமக்குத்தான் அடையாளத்தைப் பூசிக் கொள்கிறோம். அதனாலேயே நம்மை நேர்மையானவராகவும், நடுநிலையானவராகவும் காட்டிக்கொள்ள சில குட்டிக் கரணங்களை அடிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இலக்கியப் படைப்புகளுக்கு மட்டுமல்லாது நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களை அணுகுவதற்கும் மேற்கண்டவை பொருந்தும்.
இலக்கியப் படைப்பை / ஆய்வை எழுத முற்படும்போது எழுத நினைக்கும் விஷயங்களை / சிக்கல்களைப் பற்றித் தெரிந்து கொள்ள மெனக்கெட வேண்டும். ஆனால், எழுதத் தொடங்கும் போது ‘அவரைப் போல எழுத வேண்டும்’, ‘இந்த இந்த வார்த்தைகள் இருக்க வேண்டும்’, என்பன போன்ற எண்ணங்களைத் தூர வைத்துவிட்டு நம்முடைய மொழியில் எழுதிப் பார்க்க வேண்டும். “நல்ல படைப்பு என்றால் அதில் இவை எல்லாம் இருக்க வேண்டும்”, “இந்த மாதிரி எழுதுவதுதான் நல்ல எழுத்து” என்பன போன்ற அங்கீகார வார்த்தைகளைப் புறந்தள்ள வேண்டும். விமர்சனங்களைப் பொருட்படுத்துவது வேறு; அங்கீகாரத்திற்கு ஏங்குவது வேறு என்ற தெளிவு நமக்கு வேண்டும். தேவையான வார்த்தைகளை மட்டும் கொண்டு, இயன்றவரை முழுமையாக இருப்பதற்கான முனைப்புடன் இருந்தாலே போதும். அது நல்ல படைப்பாக இருக்கும் என்ற புரிதலை இந்த நூல் நமக்கு வழங்குகிறது.
மேலும், இந்த பிரச்சனைகளைப் பற்றி எல்லாம் எழுதுவதன் மூலம் நாம் கவனம் பெறலாம் என்பது போன்ற எண்ணங்களோடு எழுத முற்படக் கூடாது. நம்மைத் தொந்தரவு செய்யக்கூடிய – நம்மைத் தூங்கவிடாமல் செய்கின்ற பிரச்சனைகளையே எழுத வேண்டும். எவை நம்மைத் தொந்தரவு செய்கின்றன? எவற்றை நாம் சாதாரணமாகக் கடந்து செல்கிறோம்? என்பதை நிதானமாக யோசித்துப் பார்க்கும்போது நாம் நம்மை அறிவோம்.
ஒரு புத்தகத்தின் அமைப்பு பற்றி – அதன் ஒழுங்கு பற்றி நமக்கு ஒருவித வரையறை உண்டு. நம்முடைய வாசிப்புப் பழக்கத்திலிருந்து அதை நாம் உருவாக்கிக் கொண்டுள்ளோம். அவற்றையும் சற்றுத் தள்ளி வைத்துவிட்டே இந்த நூலை நாம் வாசிக்க வேண்டும். ஏனெனில், இந்த நூலில் உள்ள ஒரு பத்திக்கும் அடுத்த பத்திக்குமான தொடர்பை நம்மால் உடனடியாகப் புரிந்துகொள்ள முடிவதில்லை. ஆனால் தொடர்ந்து, நிதானமாக வாசிக்கும் போது நூலின் நேர்த்தியைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதுமட்டுமின்றி, வாசகர்களின் எண்ணவோட்டத்திற்கு முழுமையாக இடமளிக்கும் எழுத்து இது என்பதையும் உணர முடிகிறது. இந்நூலுக்கு முகவுரை வழங்கிய டேவிட் பிரபாகர் “பழகாத தடத்தில் பயணிக்கும் எழுத்து” என இந்நூலைக் குறிப்பிடுவது பொருத்தமானதே.
நாம் தேவையில்லாமல் சுமந்து கொண்டிருக்கும் நம்முடைய அகந்தையையும் தாழ்வு மனப்பான்மையையும் விட்டொழிப்பதற்கான வழியை இந்த நூலில் காண முடியும். இத்தகைய அற்புதமான படைப்பை வாசிக்க நண்பர்களை அழைக்கிறேன். பாரத்தை இறக்கி வைக்க யாருக்குத் தான் பிடிக்காது?
-ச.ந. விக்னேஷ், ஈரோடு.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

