நக்கீரன் (Nakeeran) எழுதிய இயற்கை 24/7 (Iyarkai 24 x 7) - நூல் அறிமுகம் - காடோடி பதிப்பகம் (Kadodi Publication) - கடல் - https://bookday.in/

இயற்கை 24/7 – நூல் அறிமுகம்

இயற்கை 24/7 – நூல் அறிமுகம்

“சேவ் நேச்சர்” என்ற வாசகத்தை சட்டையில் அணிந்தவாறு ஒரு குழு கோஷமிட்டுக் கொண்டிருக்கிறது.

அதனைப் பார்த்த ஒரு சிறுமி , அதற்கு என்ன அர்த்தம் என்று கேட்க.. “இயற்கையைக் காப்பாற்றுவோம்” என்கிறார் அருகில் நின்றவர்.

“இயற்கை தானே நம்மைக் காப்பாத்துது. இவங்க எப்படி இயற்கையைக் காப்பாத்துவாங்க” என்று அந்த குழந்தை சொல்ல, பதில் சொன்னவரின் மனம் எப்படி இருந்திருக்கும் என்பதை..
இந்த வரிகளை வாசிக்கும் போது நம் மனம் நமக்கு உணர்த்தி இருக்கும்.

தென் அமெரிக்காவின் ஏண்டிஸ் மலை தொடரில் வசிக்கும் ‘சாமன்’ என்கிற ஒரு தொல்குடி மூதாட்டியை சிலர் தேடிச் சென்றனர். எதற்காக என்றால் அவரிடம் ஒரு கேள்வியைக் கேட்பதற்காக. அந்த கேள்வி ‘உலகம் அழியப் போகிறதா தாயே’ என்பதுதான் . அதற்கு அந்த மூதாட்டி சிரிக்கிறார்.

“உலகம் எப்படி அழியும் . அதற்கு ஒரு ஆபத்தும் இல்லை. மனிதர்களாகிய நாம் தான் ஆபத்தில் இருக்கிறோம் . நம் வாழ்க்கை முறையை நாம் மாற்றிக் கொள்ளாவிட்டால் ‘பச்ச மாமா’ அதாவது புவி அன்னை நம்மை ஒட்டுண்ணிகளை உதிர்த்து விடுவது போல உதறிவிட்டு போய்விடுவார்” என்கிறார்.

இதைத்தான் பிரபஞ்சத்தையே சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி கணக்கிட்ட ஸ்டீபன் ஹாக்கிங் எனும் மாமேதையும் கூறுகிறார். ஒரு தொல்குடியின் குரலும் ஒரு அறிவியலாளரின் குரலும் இப்படி ஒத்திசைந்து ஒலிக்கிறது.

ஓர் உயிரினம் தொடர்ந்து பயனற்ற செயலில் ஈடுபட்டால் இயற்கைத் தேர்வு அதை ஒதுக்கிவிடும் . உதாரணம் டைனோசரஸ்.

வளிமண்டலத்தில் உயிர்வளியின் அளவு 20.95% ஆகும். இதுதான் நாம் உயிர் வாழ மிகவும் பாதுகாப்பான அளவு. ஒரு வேலை சற்றுத் தாராளமாக உயிரினங்கள் மூச்சு விட்டு கொள்ளட்டுமே என்ற இயற்கை நான்கு சதவீதம் உயர்த்தினால் என்னவாகும் என்று ஆண்ட்ரூ வாட்சன் என்பவர் கூறுகிறார் . சுருக்கமாக சொல்லப்போனால் அந்நிலை இருப்பின் ஈரமான காய்கறிகளும் கூட தீப்பற்றி எரிந்து விடுமாம் . ஆனால் இயற்கை அந்த அளவுக்கு தன் கணக்கைத் துல்லியமாக வைத்திருக்கிறது. இயற்கை “டெலிட்” பொத்தானை தற்போது இயக்காமல் இருக்கிறது என்பது தான் உண்மை.

இந்த வார ஞாயிறு “ இப்படியே தனியாக இருப்பது சலிப்பாக இருக்கிறது என்று கூறிவிட்டு , அருகில் உள்ள மற்றொரு விண்மீனான பிராக்ஸிமா சென்டாரியை ஒரு எட்டு பார்த்து விட்டு வருகிறேன் என்று புறப்பட்டுச் சென்றால் நிலைமை என்னவாகும்? எட்டு கோள்களும் பிரித்துக்கொண்டு போய்விடும் அல்லவா . ஆனால் ஞாயிறு அப்படி செய்வதில்லை.

இயற்கை 24X7 (Iyarkai 24 X7) - Crow nest - Tamil Environment Books, Bird  Books in Tamil, Animal Books, Children books in Tamil

கடல்:

கடல் அலைகளின் இயக்கம் இயற்பியல். அதில் உள்ள உப்பு வேதியியல். கடல் நீரில் வாழும் பாசிகள் உயிரியல்.‌ கடல் என்பது புவியின் கருப்பை . உயிர் தோன்றிய இடம்.

ஒருபுறம் பாசியாக, செடியாக , கொடியாக, மரமாக மாறின. மறுபுறம் நாம் நீந்துவனவாக, நீர் நில வாழ்வியாக, ஊர்வனவாக , பறப்பனவாக மாறி இறுதியாக பாலூட்டிக் கொண்டிருக்கின்றோம் . ஆனால் பிறந்த வீட்டை மறந்து விட்டோம். தற்போது “கடல்” என்றால் நாம் நினைவுக்கு வருவது “பீச்” என்ற பதில் மட்டுமே.

உயிர்கள் கடலில் இருந்து தான் தோன்றியது என்பதை நாம் உணரும் வண்ணம் , நாம் உப்பை வியர்வையாக வியர்க்கிறோம் . நாம் மனிதர்கள் உப்பின் துளிகள். நாம் உப்பிட்ட கடலை மறந்த துரோகிகள். கடலை வேடிக்கை பார்க்க நாம் பீச்சுக்கு போவது போல, நம்மை வேடிக்கை பார்க்க கடல் பீச்சிலிருந்து கரையேறி உலகின் பல நகரங்களுக்குள் நுழையும் , நுழைந்து கொண்டே இருக்கிறது…

மொத்த வாழ்நாளில் மனித உடலுக்கு தேவையான அயோடின் அளவு என்னவோ ஒரு தேக்கரண்டி அளவு தானாம். ஆனால் ஒட்டுமொத்த மக்களில் 13% அயோடின் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர் . என்ன ஒரு முரண் பார்த்தீர்களா ?

இந்த உலகம் யாருக்கு சொந்தம் என்று நாம் எண்ணி வியந்து கொண்டிருக்கின்றோமோ, அது உண்மை அல்ல . உண்மையில் இந்த உலகம் மீன்களுக்கே சொந்தம். 10 சதவீத நிலப்பகுதியில் வாழக்கூடிய மனிதனுக்கு சொந்தமா ? . 90 சதவீதம் நீரால் சூழப்பட்டுள்ள கடலில் வாழ்கின்ற மீன்களுக்கு இந்த உலகம் சொந்தமா ?

வீடு கட்டும் போது மறவாது செப்டிக் டேங்க் சேர்த்து கட்டுகிற நாம், உலகின் கழிவுகளை கொட்ட , எந்த ஒரு செப்டிக் டேங்க்கும் இதுவரை கட்டவில்லை. அதுதான் இருக்கிறதே ! உலகின் மாபெரும் கழிவுத்தொட்டி “கடல்”

மொத்தத்தில் காடுகள் உலகின் “நுரையீரல்கள்” . ஆனால் நாம் அமேசான் அல்லது மழைக்காடுகள் என்கின்றோம். இந்த நீலம் இல்லையேல் பச்சை எனும் காடுகள் இல்லை . இந்த புரிதல் எப்போது நமக்குள் வரப் போகிறது.

கடற்கரை:

மீன் என்பது ஏழைகளின் புரதம் . நம் கடலும் கழிமுகம் ,காயல் , பவளப்பகுதி , அலையாத்தி காடு போன்ற இயற்கை அமைப்புகளை கொண்டுள்ளன. இவற்றை “மீன்களின் தொட்டில்கள்” என்கிறோம் . ஆறுகள் கொண்டு வரும் நன்னீரில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கும் . அவை மீன்களின் வளர்ச்சிக்கு உதவும்.

ஆஸ்திரேலியா மற்ற நாடுகளை விட அதிக கடற்கரையை கொண்டாலும் அங்கு மீன்பிடி தொழில் இல்லை. கிரேட் பாரியர் ரீஃப் போன்ற உலகின் மிகப்பெரிய பவளப்பகுதி இருந்தும் அங்கும் மீன்கள் வாழ்வதில்லை.

கடலுக்கு அருகில் கொஞ்சம் கூட உப்பு கரிக்காத நன்னீர் கிடைக்கிறது என்றால் , அதற்கு காரணம் அங்கே இருக்கக்கூடிய “எக்கர்” எனும் மணல் திட்டுகள் , மணல்மேடுகள் , மணல் குன்றுகள் தான்.

கடற்கரை என்பது மாபெரும் நன்னீர்த் தொட்டி என்கிற உண்மையைத் தொழில் துறை நன்கறியும் . அதனால்தான் அங்கே மிகப் பெரிய தொழில் நிறுவனங்கள் நிறுவப்படுகின்றன.

“ஆற்று நீர் கடலில் வீணாக கலக்கிறது”, என்பது எத்தனை தவறான கூற்று என்பது இந்த புத்தகத்தை படித்த பின்பு உங்களுக்குப் புரிதலை ஏற்படுத்தும்.
ஆற்று மணல் ஒரு இயற்கை மருத்துவர். 37 வகையான உயிர்கொல்லி நோய்களுள் 21 நோய்கள் நீருடன் தொடர்புடையவை. இந்த மணல் ஒரு வடிகட்டியாக செயல்பட்டு நீரை தூய்மையாக வைத்திருக்கிறது. ஆனால் மணல் தான் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை.

ஆற்றங்கரையில் மணல் எடுக்க சில விதிகள் இருந்தாலும் , அவையெல்லாம் மீறப்பட்டு மணல் கொள்ளைத் தொடர் நடவடிக்கையாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இப்படி எல்லாம் இயற்கையை நாம் சீரழித்து விட்டு, மனித இனம் மட்டும் இந்த உலகில் நிலைத்து நிற்க வேண்டும் என்று பல அறிவியல் கண்டுபிடிப்புகளில் மூழ்கி இருக்கிறோம். புவியியல் வரலாற்றை உற்று கவனித்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகையில் சிற்றுயிர்கள் தம்மை தகவமைத்து தப்பித்திருப்பதை காண முடியும் . பேருயிர்கள் அவ்வாறு தாக்குப் பிடிப்பதில்லை . ஊர் புறத்தில் ஒரு சொலவடை உண்டு . “ பெரும் புயலில் ஆலமரங்களே சாயும், நாணல்கள் சாயாது”. இங்கு ஆலமரங்கள் யார் என்பதை நீங்களே கணித்து விடுங்கள்..

மின்சாரம்:

மின்சாரம் இல்லாமல் வாழ்வை நினைத்துப் பார்க்க முடியாது . வேண்டுமானால் சூழல் கேடற்ற உற்பத்தி முறை, மிகை மின் பயன்பாட்டை குறைத்தல் , விநியோகித்தலில் ஏற்படும் மின் இழப்பை ஈடு செய்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தலாம்.

இந்த மின்சாரத்தால் மனித குலம் நன்மை அடைந்தாலும் , இரவானது ஒளி வெள்ளத்தில் மூழ்கியதால் பறவைகளின் வாழ்வியல் பாதிக்கப்பட்டது உண்மை . மேற்கு நாடுகளில் பறவைகளின் வலசை காலத்தின் இரவு நேரங்களில் கட்டிடங்களின் விளக்குகளை அணைக்க வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.

மனித இனத்தை “ஹோமோ சேப்பியன்ஸ்” என்பர். ஆனால் இன்று “ஹோமோ கன்ஸ்யூமர்” ஆகிவிட்டோம். வேட்டைச் சமூகம் , வேளாண் சமூகமாகி இன்று கன்ஸ்யூமர் சமூகம் ஆகிவிட்டது.

உண்மையில் சொல்லப்போனால் , “உலகில் ஒரே ஒரு மாசுபாடு தான் உள்ளது. அது மக்கள் தான்” , என்கிறார் மதிப்பிற்குரிய ஜேம்ஸ் லவ்லாக் என்பவர்.
சுற்றுச்சூழல் சீரழிவு ஒன்றும் மனித குலத்திற்குப் புதிதன்று . மெசபடோமியா, மயன் நாகரீகம், ஏன் சிந்து சமவெளி நாகரிகத்தின் அழிவுக்கும் கூட சுற்றுச்சூழல் சீரழிவே காரணம் என்று நம்பப்படுகிறது. அன்று பேரரசுகள் என்றால் , இன்று கார்ப்பரேட் நிறுவனங்கள். ஆகையால் பொருளாதார வல்லுனர்களுக்கு சுற்றுச்சூழலைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று சூமேசரா சொல்கிறார் . இப்படி செய்தால் தான் சிறுதளவாவது இயற்கையின் சமநிலை காப்பாற்றப்படும் என்கிறார்.

எல்லாவற்றுக்கும் பசுமை லேபிள் ஒட்டும் இவ்வுலகம் , பொருளாதாரத்துக்கு மட்டும் ஒட்ட கடினமாக நினைப்பது ஏன்..??

எரிவதை அணைத்தால் கொதிப்பது நிற்கும் . உற்பத்தியாளரை விட்டுவிட்டு மக்களையும் மனிதர்களையும் மட்டுமே தொந்தரவு செய்து கொண்டிருப்பது ஏன் ?. எரிவதை அணைக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு தானே..? என ஆசிரியர் நக்கீரன் அவர்கள் பல கேள்விகளை நம்முள் எழுப்புகிறார். அறிவியல் ,அரசியல் , அறவியல் அடிப்படையிலும் சுற்றுச்சூழலை எளிமையான முறையில் சொல்லித் தருகிறது இந்நூல்.

வரிக்கு வரி படிக்க படிக்க பிரம்மிப்பும் குற்ற உணர்வு கூடிக்கொண்டே தான் வந்தது. நான் ஒரு ஃபேஷன் (Fashion) சூழலியலாளராக இருப்பதை நினைத்து வருந்தி, ஃபேஷன் (passion) சூழலியலாளராக மாற விழைகிறேன். மாற்றுவித்தது இப்புத்தகம்.

ஆசிரியர் பற்றி :

எழுத்தாளர் நக்கீரன் கவிஞர் , சூழலியாளர் , குழந்தை இலக்கியவாதி , மொழிபெயர்ப்பாளர் , பேச்சாளர் , செயல்பாட்டாளர். பசுமை இலக்கியத்தில் இவரது எழுத்துக்கள் தனித்தன்மையுடையவை.

24/7 நமக்காக சேவைகள் செய்து கொண்டிருக்கும் இயற்கையைப் பற்றிய ஒரு சுற்றுச்சூழல் வழிகாட்டி நூலான இப்புத்தகத்தை நீங்களும் வாசிக்க வேண்டும்.

நூலின் தகவல்கள் : 

புத்தகத்தின் பெயர் : இயற்கை 24/7
ஆசிரியர் : நக்கீரன்
தலைப்பு : சூழலியல்
பதிப்பகம் : காடோடி
பக்கங்கள் : 140
விலை: 170

நூல் அறிமுகம் எழுதியவர் : 

பா விமலா தேவி

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *