நூலின் பெயர்: “இயற்கை 24*7 சுற்றுச்சூழல் வழிகாட்டி நூல்”
ஆசிரியர்: நக்கீரன்
பதிப்பகம் : காடோடி பதிப்பகம் வெளியீடு
பக்கங்கள்: 140 பக்கங்கள்
விலை: ரூ 170/-
கவிஞர், எழுத்தாளர், சூழலியல் செயல்பாட்டாளர், குழந்தை இலக்கியவாதி, மொழிபெயர்ப்பாளர்,பேச்சாளர், பசுமை இலக்கியத்தில் தனித்தன்மை வாய்ந்தவர், இந்த நூலின் ஆசிரியர் நன்னிலம் நக்கீரன் அவர்கள். இந்து தமிழ் திசை பத்திரிகையில் ஓர் ஆண்டு காலம் கட்டுரையாக வந்தவை மேலும் செழுமையாக்கப்பட்டு நூலாக வெளிவந்துள்ளது. இவரது பல நூல்கள் விருதுகளைப் பெற்று விற்பனையில் சாதனை படைத்தவை.
இன்று சூழலியலுக்கு பொதுமேடை நிகழ்வுகளில் தனியே இடம் ஒதுக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் என்ற சொல் அறிமுகமாகி வருகிறது .ஆனால் வளர்ச்சிக்கு எதிரானதாக சூழலியல் முன் வைக்கப்படுகிறது .சூழலியலாளர்கள் மக்களை வனவாசம் போகச் சொல்வது போல சித்தரிக்கப்படுகிறார்கள் .சுற்றுச்சூழல் பாதிப்பு, கால நிலை மாற்றம் ஆகியவை நீண்டகாலத்தில் தான் பாதிக்கும் என்ற புரிதலாலும், கண்ணுக்கு புலப்படாததாலும் மனிதர்கள் இன்சூரன்ஸ் முகவரைக் கண்டது போல சுற்றுச்சூழல்வாதிகளை கண்டு ஓட்டம் எடுக்கிறார்கள் என்கிறார் ஆசிரியர்.
மரக்கன்று நடுதல், விதைப்பந்து வீசுதல் நெகிழி, குப்பைகளை அகற்றுதல், மழை நீர் உயிர்நீர் என்பது, பறவைகளைப் பற்றி பேசுதல், புலியைக் காப்போம், பனிக்கரடியை காப்போம், என்பதெல்லாம் இன்று ஒரு “ஃபேஷன் சுற்றுச்சூழலாக “விளங்குகிறது. இவர்களின் கதாநாயகராக அப்துல் கலாம் அவர்கள் இருக்கிறார். சுற்றுச்சூழல் வாதிகளை பூச்சாண்டியாக…Doomsday Prophet ஆக வில்லனாக சித்தரிக்கும் போக்கு இன்றும் தொடர்கிறது என்று வித்யாசமாய் தொடங்குகிறது
நூல்..
“ஒருங்கிணைந்த மனித சமுதாயம் மேலும் இரு தலைமுறைகளுக்கு மேல் தாக்குப் பிடிக்குமா இல்லையா என்பது தற்போதைய தலைமுறை எடுக்கும் முடிவில்தான் இருக்கிறது.. அந்த முடிவு விரைவில் எடுக்கப்பட வேண்டும்” என்கிறார் அறிஞர் நோம் சோம்ஸ்கி அவர்கள்.
“Save Nature…”.. என்கிறார்கள்.. “இயற்கையை பாதுகாப்போம்” நாமாஇயற்கையைப் பாதுகாக்கிறோம் ..இயற்கைதானே நம்மை பாதுகாக்கிறது.. என்று இந்த நூல் மிகத் தெளிவாக
ஓங்கி நெற்றியில் அடித்து உணர்த்துகிறது !
இயற்கை ஓர் உடல் எனில் நாம் அதன் விரல் நகம். உடலா நகத்தை காப்பாற்றுகிறது? இயற்கை நம்மை வேண்டாம் என நினைத்தால் நகத்தை நறுக்கி எறிந்து விடும்!
உலகம் அழியப் போகிறது என்கிறார்கள்.. அது எப்படி அழியும்? நாம்தான் அழிந்துபோவோம் .நம் வாழ்க்கை முறைகளை மாற்றிக் கொள்ளாமல் இப்படியே தொடர்ந்தால் புவி அன்னை நம்மை ஒட்டுண்ணியை உதறித் தள்ளி விடுவது போல உதவி தள்ளி விடுவாள்!
இப்படி நூல் முழுவதுமே வரிக்கு வரி… வார்த்தைக்கு வார்த்தை… மேற்கோள் காட்டும் அளவுக்கு நாம் இதுவரை சிந்தித்துப் பார்த்திராத திசையில் ஏராளமான கருத்துக்களால் நிரம்பி நம்மை உசுப்பி விடுகிறது இந்த நூல்!
இந்த நூலை ஒவ்வொருவரும் அவரவர் பகுதிகளில் நூற்றுக்கணக்கான வாசகர்களுக்கு கொண்டு சேர்ப்பதுடன் அவர்களை வாசிக்கவும் வைக்க வேண்டும்… என்பதை உடனடி கடமையாக இந்த நூலைப் படித்தவுடன் நமது மனதில் ஆவேசமாக தோன்றுகிறது… அதுதான் இந்தநூலின் முதல் வெற்றி.. இப்படி இலகுவான நடையில்… சாதாரண மனிதனும் சுற்றுச்சூழலை அதன் உண்மையான பொருளில்… மக்கள் அறிவியல் மொழியில் புரிந்து கொள்ள செய்கிறார் சூழல் இயல் செயல்பாட்டாளர்
திரு .நக்கீரன் அவர்கள்!
பிரபஞ்சம், சூரியன், பூமி உயிர்களின் தோற்றம் என்று வாசகனுக்கு அருமையாக பாடம் எடுக்கிறது சுவாரசியமாக நூல். புது புது தமிழ் வார்த்தைகளின் அறிமுகம் கிடைக்கிறது. ஆறாம் அழிவு பூமிக்கு காத்திருக்கிறது என எச்சரிக்கிறார் ஆசிரியர். பொருளாதாரமாஅல்லது சுற்றுச்சூழலா…என்பதை யார் யார் எப்படி நிர்ணயிக்கிறார்கள் என்று போதிக்கிறது நூல். பூமியில் 21 சதம் நிலம் 79 சதம் கடல். இதில் நிலப்பகுதியில் 10%, கடல் பகுதியில் 90% உயிர்கள் வாழ்கின்றன என்ற செய்தி கடலின் மகத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது..அத்துடன் மனிதன் சுவாசிக்கும் ஆக்சிஜனை எழுபது சதவீதம் கடலில் இருந்து தான் கிடைக்கிறது என்பதும் சிந்திக்க வைக்கிறது. மீன் உணவை சாப்பிடுவோர் ஆண்டு முழுதும் 11 ஆயிரம் நெகிழி பொருட்களை உண்கிறார்கள் என்பது எப்படி கடல் மாசுபட்டு இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.. (அப்படித்தான் சைவ உணவிலும்)பூமியில் உள்பகுதியில் 50 ஆயிரம் டிகிரி செல்சியஸும் பூமியின் மேல் தட்டில் 5000 டிகிரி செல்சியஸும் வெப்பம் நிலவும் போது மனித உடல் 98.4 டிகிரி ஃபாரன்ஹுட்டை பராமரிப்பதை சூழலியலின் அடிப்படையில் இந்நூல் உணர்த்துகிறது.
உலக அளவில் சூழலியலில் பிரசித்தி பெற்ற ஏராளமான நூல்களை வாசித்து, மிக முக்கியமான கருத்துக்களை தனது பார்வையில் சிந்தித்து இந்நூலை சிறப்பாக வாசகனுக்கு படைத்திருக்கிறார் ஆசிரியர். கடலோர மணலின் மகத்துவம் அது உப்பு நீரை நிலத்தில் புகாத வண்ணம் தடுக்கும் யுக்தி. கடலில் கலக்கும் நதிகளின்சேவை பூமிக்கு உள்ளும் மேலும் உள்ள எரிமலை- அதனால் எழுந்த மலைகளும் பள்ளத்தாக்குகளும்உயிர்களை எப்படி தோற்றுவித்தன ஒளி- ஒலி மாசு உயிர்களின் கருப்பையாக கடல் மாதா திகழ்வது காடுமலை நதி காற்று ஓசோன் என நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படையான விஷயங்களை சுவைபட வழங்குகிறது இயற்கை என்னும் இந்த நூல். அமில மழை குடிநீர் ஒரு நாள் திடீரென நின்று போதல் குப்பைகள் நுகர்வு கலாச்சாரம் புகைப் பனி மாசு நகரங்கள் உணவு, உடை இருப்பிடத்தோடு மின்சாரமும் அடிப்படைத் தேவையானது காடுகளின் அழிவு மரம் எனும் ஏசி புதிது புதிதாய் தோன்றும் நோய் கிருமிகள் ஹோமோ கன்ஸ்யூமர் “மறைநீர்” அதாவது ஒரு பொருளை உற்பத்தி செய்ய அதில் பயன்படுத்தப்படும் உண்மையான நீரின் அளவு சமூக நீதியாக மாற வேண்டிய சூழல் நீதி அடித்தட்டு மக்களை மனதில் கொண்டு உருவாக்கப்பட வேண்டிய சுற்றுச்சூழல் கொள்கை என்று ஏராளமான விஷயங்களை மிக எதார்த்தமாக ஆசிரியர் இந்நூலில் நம்மோடு உரையாடுகிறார்.
உலக வங்கி சர்வதேச நிதி நிறுவனம் ஆகியவற்றை இயக்கிடும் மேலை நாடுகள் அவற்றின் மூலமாக வளர்ந்து வரும் மற்றும் பின் தங்கிய நாடுகளின் இயற்கை கனிம வளங்களை வளர்ச்சி என்ற பெயரில் சுற்றுச்சூழலை பின்தள்ளி கொள்ளையடிப்பதை மிக நாசுக்காக எடுத்துரைக்கிறார் ஆசிரியர்.
மேம்போக்கான விளம்பர ரீதியான பேஷன் ஷோவாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு சேவை மாறி வருவதை புரிந்து கொண்டு அதில் ஈடுபட்டு தனது சக்தியை விரயமாக்காமல் நேர்மையாக மக்களுக்கு மக்கள் அறிவியலை கொண்டு செலுத்த வேண்டும் என்பதுதான் நூலின் மையக் கருத்தாக நமக்கு உணர்த்துகிறது.
சிறப்பாக…தரமாக…நேர்த்தியாக…
வடிவமைக்கப்பட்டுள்ள…நூல்..வாசகன்
சோர்வின்றி. ஒரே அமர்வில் வாசிக்கும்
வண்ணம் எழுத்தும்…கருத்துக்களும்..
இலகுவாய் அமைந்துள்ளன….ஆனால்
மனதை..?….வாசித்து பாருங்கள்..
இரா. இயேசுதாஸ்
வாசிப்பு இயக்கம், மன்னார்குடி.