கீதா சுந்தர் எழுதிய இளந்தளிர் சிறுகதை (Izhanthalir Tamil Short Story About Sex Education Written By Geetha Sundar) - பாலியல் கல்வி

சிறுகதை: இளந்தளிர் – கீதா சுந்தர்

கீதா சுந்தரின் “இளந்தளிர்” சிறுகதை

” டேய் ஜிதின்‌ என்னடா பண்ற… ”

” ஃபோன்ல பாடம் அனுப்பி இருங்காங்கம்மா .. பாத்து எழுதிகிட்டு இருக்கேன்…”

” சரி… சரி.. எழுது… ”

அவன் தொண்டையில் எச்சை கூட்டி விழுங்கினான். ஃபோன் பிடித்து இருந்த கைகள் தளர்ந்தது. ‘ இப்படி அம்மாவை ஏமாத்தறது எவ்வளவு பெரிய தப்பு.. ச்சே இனிமே இப்டி பண்ணக் கூடாது.. ‘ என்று தனக்குள்ளே எண்ணிக் கொண்டான். எத்தனை முறை இப்படி ஒரு உறுதி மொழி எடுத்து இருப்பான் என்று அவனுக்கு தான் தெரியும்.

அவனுக்கு தனிமை பிடித்தது. யாரிடமும் அதிகம் பேசுவதை அவன் விரும்பவில்லை.. ஆனால் தனிமை வாய்ப்புகள் கிடைக்கும் போது கூடவே ஒரு படபடப்பும் பயமும் குற்ற உணர்ச்சியும் வருகிறது.. அதை தாண்டி அவனால் வர முடியவில்லை. அது அவனுக்கு பிடித்தது.

‘ எனக்கு என்ன ஆச்சு, ஏன் எல்லாரும் என்னை ஒரு மாதிரி பாக்கறதா தோனுது.. நான் எவ்வளவு சந்தோஷமா இருந்தேன், இப்பல்லாம் எனக்கு யார் கூடவும் பேச முடியல.. யாரையும் பாக்கவும் பிடிக்கல… நான் எந்த தப்பும் பண்ணல, ஆனா தப்பு பண்றேங்கற உணர்வு எனக்கு ஏன் வருது…‌ ஒரு வேளை அந்த விஷயம் தப்பு தான் போல.. ‘

‘ என்னால படிக்க முடியல.. நண்பர்களோட சகஜமா பேச முடியல…‌தங்கச்சி முகத்தை கூட நேருக்கு நேரா பாக்க முடியல… கடவுளே…‌’ என்று தனக்கு தானே எண்ணிக் கொண்டு அறையில் தனியே உட்கார்ந்து இருந்தான் ஜிதின்.

” ஏய்…‌எங்கடி அவன்.. ”

” உள்ள ரூம்ல படிச்சிட்டு இருக்காங்க.

” ஏன் தொரைக்கி ஹால்ல உக்காந்து படிக்க முடியாதாமா.. ‘

“டேய்… வெளிய வாடா.. ” அப்பா சத்தமாக கத்த, திணறியடித்து ஓடி வந்ததில் சோபாவில் இடித்து  கால் இடறி கீழே விழுந்தான்.

” ஜித்து, என்னப்பா ஆச்சி.. எழுந்துரு.. ” அம்மா ஓடி வந்து தூக்கி விட்டாள்.

” ஏன்டா, உனக்கு  கண்ணு இன்னா
பொடறிலையா இருக்கு… பாத்து வர  மாட்ட.. கவனம் எங்கேயாவது மேயறது… ” அப்பாவின் கடும் சொல் அவனுக்கு வலித்தது.

” ஏங்க இப்டி எந்நேரமும் அவனை கரிச்சி கொட்டறீங்க .. ”

” இப்ப இன்னாடி சொல்லிட்டேன்… ரொம்ப ஓவரா பண்ற… அப்புறம் அவஸ்தை பட போற பாரு … ” என்று கூறி விட்டு,

” தங்கம், இன்னாடா பண்ற…? “  என்று டிவி பார்த்து கொண்டு இருந்த மகள் சௌமியாவிடம் போய் பக்கத்தில் அமர்ந்து கொண்டார் சண்முகம்.

” அப்பா கொஞ்ச நாளா தான் இப்டி இருக்காரு மா.. ஏம்மா… நான் என்னம்மா தப்பு பண்ணேன்.. ” என்று ஜிதின் அம்மாவை இடுப்பில் கட்டி கொண்டு அழுதான்.

ஜிதினும் சௌமியாவும் ஒரு வயது வித்தியாசம் கொண்டவர்கள். ஜிதின் பத்தாம் வகுப்பு, சௌமியா ஒன்பதாம் வகுப்பு.

அப்பாவுக்கு ஜித்தினை மிகவும் பிடிக்கும்.. அந்த ஒரு சம்பவத்தை அம்மா அவரிடம் சொல்லும் வரை.

ஒரு நாள் இரவு,

” என்னடி பிள்ளைங்க சாப்டாங்களா..?  என்ன இன்னக்கி சீக்கிரமே படுத்துட்டாங்க…? ”

” தூக்கம் வந்துச்சி படுத்துட்டாங்க, இப்ப அதுக்கு என்ன..? ”

” அடியேய்… இப்ப என்ன கேட்டேன் இவ்வளவு கடுப்பா பேசற நீ… ஏதாவது பிரச்சனையா… ”

அவள் சொல்ல தயங்கினாள். ஆனால் சொல்லாமலும் இருக்க முடியாது.

” இது பிரச்சனையான்னு எனக்கு தெரியல.. ”

‘ எது? ”

” நான் பார்த்த விஷயத்தை எப்டிங்க சொல்றது.. எனக்கு சொல்ல ஒரு மாதிரி இருக்கு.. ”

” அடி கெரகம் புடிச்சவளே.. என்ன தான் சொல்ல வர சொல்லி தொலையேண்டி..”

காதருகில் சென்று, அவள் கூறியதை கேட்டதும் கோவம் உச்சிக்கு ஏறியது…வேகமாக எழ முயன்றவனை அவள் தடுத்து நிறுத்தினாள்.

கீதா சுந்தர் எழுதிய இளந்தளிர் சிறுகதை (Izhanthalir Tamil Short Story About Sex Education Written By Geetha Sundar) - பாலியல் கல்வி

” ஏங்க… எதுக்கு இப்டி அவசரப்படறீங்க… கொஞ்சம் பொறுமையா இருங்க… பாவம் அவனுக்கு என்னன்னு புரியாது இல்லை.. ”

” என்னடி.. என்னன்னு‌ புரியாது..? இவனுங்களுக்கு எல்லா எழவும் புரியும்… எந்நேரமும் போனு… டிவி.. அவனுங்க  காட்றத தான் இவனுங்க பாக்காமலா இருக்காங்க… வீட்ல பொம்பள புள்ள இருக்கு… இவன் நடு வீட்ல இப்டி பண்ணுவானா… அடி‌செருப்பால…. ”

” இதுக்கு தான் உங்க கிட்ட சொல்ல வேணான்னு இருந்தேன்.. ”

” ஆமாண்டி சொல்லாம விட்டு அவனை மடியில வச்சி தாலாட்டு.. ”

அன்றிலிருந்து அப்பா அவனிடம் பழகும் விதமே மாறி விட்டது.. எப்போதும் கோபம், கத்தல், அதட்டல்… ஜித்தினுக்கு வாழ்க்கையின் ஒவ்வொரு‌ நாளும் நரகமானது.

முகம் முழுதும் பருக்கள், பூனை மீசை சதை பிடிப்பு குறைந்து இருகி போன கன்னம், உடல்  காற்றில் மிதப்பது போல இருந்தது ஜித்தினுக்கு…

ஒரு நாள், பள்ளியில் பெற்றோரை அழைத்து வர சொல்லி இருந்தார்கள்..

” அம்மா… ஸ்கூல்ல பேரண்ட்ஸ கூட்டிட்டு வர சொன்னாங்க மா… ”

” ஏன்டா… நீ எதாவது தப்பு பண்ணிட்டியா…? ”

” நான் எதுவும் பண்ணலம்மா… நீ வேணா வந்து கேட்டு பாரு.. ”

மாலை நேரம் வேலை முடிந்து வந்த சண்முகம் நேராக தன் மகளிடம் சென்று ..

” என்னாடா தங்கம் படிக்கிறீயா… இந்தா அப்பா உனக்கு பப்ஸ் வாங்கிட்டு வந்து இருக்கேன் பாரு… அடியே தட்டு கொண்டு வந்து பிள்ளைக்கி வச்சி குடு… ”

சோபாவில் ஓரமாக ஒடுக்கிக் கொண்டு பயந்தபடி உட்கார்ந்து இருந்த ஜித்தினிடம் ஒரு தட்டில் பப்ஸ்

வைத்துக் கொடுத்தாள் அம்மா.

” ஏங்க நாளைக்கி ஜித்தின் ஸ்கூல்ல  பேரண்ட்ஸ  வர சொன்னாங்களாம்.. நீங்க போக முடியுமா… இல்ல நான் போவட்டுமா..? ”

” ஏன்… இன்னா பண்ணானாம்… டேய், இன்னாடா..‌எதுக்கு வர சொல்றாங்க..”

” தெரியல பா… ”

” நீயே போடி… நாளைக்கு எனக்கு வேளை இருக்கு… ”

ஜிதின் ஸ்கூல்..பிரிஸ்பல் அறை.

“  மேம் .. நான் ஜிதின் அம்மா… வர சொன்னதா சொன்னாங்க.. ”

” உக்காருங்கம்மா… என்ன ஆச்சு ஜித்தின்க்கு, நல்ல பையன் நல்லா படிக்க கூடயவன் விளையாட்டு  ஆட்டம் பாட்டம்னு  நல்லா தானே இருந்தான்.. இப்ப அவனுக்கு என்ன பிரச்சினை… வகுப்புல யார் கூடவும் பேசறது இல்ல.. கேக்கற கேள்விக்கு பதில் சொல்றது இல்ல… யாரையும் பாத்து பேசாம குனிஞ்சிகிட்டே இருக்கான்… வீட்ல எதாவது பிரச்சினையா… மேடம் ..?  வீட்ல எப்டி இருக்கான்..‌நீங்க எதுவும் கவனிக்கறது இல்லையா..? ”

” இல்ல மேடம் பிரச்சினை எதுவும் இல்ல…‌நான் பேசறேன் மேடம் அவங்ககிட்ட.. ”

” சரி, பாத்துக்கோங்க.. இன்னைக்கு நீங்க அவனை‌ வீட்டுக்கு கூட்டிட்டு போங்க…‌அவங்கிட்ட பேசுங்க… ”

” சரிங்க மேடம்… ”

ஜித்தினை அழைத்து வர‌ அவன் வகுப்பறை சென்ற போது, அவன் டெஸ்க் மீது தலை வைத்து படுத்தபடி எங்கேயோ பார்த்துக் கொண்டு இருந்தான்.

ஆட்டோவில் அம்மா பக்கத்தில் உட்கார்ந்து இருந்த ஜித்துவின் கையை பிடித்தாள் அம்மா.. கையை வெடுக்கென்று பிடிங்கி கொண்டான்..

” வேணாம்மா.. என்னை தொடாத..‌நான் சரி இல்ல.. நான் தப்பு ம்மா..”

” டேய், அம்மாகிட்ட ஏன்டா‌ இப்டி பேசற.. இன்னா ப்பா ஆச்சு உனக்கு.. வா அம்மாகிட்ட வா…  எந்த பிரச்சனையா இருந்தாலும் அம்மாகிட்ட சொல்லுப்பா ” என்று அவனை தோளோடு அணைத்துக் கொண்டாள் அம்மா.

” ம்மா… நான் உங்களுக்கு தெரியாம நிறைய தப்பு பண்ணிட்டேன் மா… ”

” என்ன பண்ண.. ? ”

“  ம்… அது ஒன்னும் இல்ல… ஒரு‌ மாதிரி‌ இருக்கு..‌ அவ்ளோ தான் “  கூறி விட்டு மடியில் படுத்துக் கொண்டேன்.

வீட்டுக்கு போனதும்,

” சாப்டறீயா பா… ”

” வேணாம்மா… பசிக்கல.. ”

” நீயாடா பகிக்கலன்னு சொல்ற… எப்ப பாரு பசிக்குதுன்னு சொல்லுவ.. எதாவது சாப்பிட கேட்டுட்டே இருப்பியே… உடம்புக்கு எதாவது சரி இல்லையா ஜித்து… ? ”

” இல்ல இல்ல ..என்‌ உடம்புக்கு ஒன்னும்‌ இல்ல , எனக்கு பசிக்குது..‌பசிக்குது ..” என்றான் படபடப்பாக.

‘ அவன் நடவடிக்கைகள் மிக வித்தியாசமாக இருந்தது அம்மாவுக்கு. அவன் கைகளை எடுத்து தன் கையில் வைத்துக் கொண்டாள்.‌ அதில் எந்த உணர்வும் இல்லை… ‘ வல வல’ வென இருந்தது… எவ்வளவு சுறுசுறுப்பாக ஒரு‌ இடத்தில் நிற்காமல் இருப்பான்… இப்ப என்ன ஆச்சின்னு தெரியலையே…‌’

பள்ளியில் இருந்து வந்த செளமியா அம்மாவை அழைத்துச் சென்று தன்‌ பாவாடையைக் காட்டினாள்.  அம்மாவின் முகத்தில் பூரிப்பு தாங்கவில்லை.  அவள் பெரியவள்  ஆகி விட்டதற்கான அறிகுறி  இருந்தது… அவளை தனியாக ஒரு‌ அறையில் அமர வைத்தாள்.

அலுவலகத்தில் இருந்து வந்த சண்முகத்திற்கு விவரம் சொன்னாள். அப்பாவுக்கு கை கால் ஓடவில்லை.. ‘ தங்கம்‌ பெரியவளாயிட்டா… ஊர கூட்டி விழா பண்ணனும்டி ‘ என்று கூறிக் கொண்டே சந்தோஷத்தில் மிதக்க.. ஜித்தினுக்கு பள்ளி விவகாரம் அப்பா  மறந்து விட்டது சற்று‌ நிம்மதியாக இருந்தது…

” மொதல்ல ஊர்ல இருந்து அம்மாவை வர சொல்லனும்,  அவங்களுக்கு தான் எல்லாம் சரியா சொல்ல தெரியும்….அடியே.. புள்ளைய அது வரைக்கும் கவனமா  பாத்துக்கோடி.. செளமியா அப்பாவை இயல்பாக தான் பார்த்தாள்.. ஆனால் அப்பாவின் நடவடிக்கைகள் தான் அவளுக்கு வித்தியாசமாக இருந்தது.

ஊரிலிருந்து பாட்டி வந்து விட்டடார். மறு நாள் தண்ணீர்  ஊற்ற அத்தையும் வந்து விட்டார். வீடே ஆனந்த  கோலம் பூண்டது.. செளமியாவுக்கு சாப்பிட பல வகை உணவுகள் வழங்கப்பட்டது.. காய்கறிகள் பழங்கள் இனிப்புகள் பலகாரங்கள் என்று  எந்நேரமும் விருந்து வீடு போல இருந்தது… போனில் பேசிக் கொண்டு இருந்த அப்பா முகத்தில் எந்நேரமும் சிரிப்பு தான். இந்த சமயத்தில் ஜித்தினை யாருமே கண்டு கொள்ளவில்லை.. பாட்டி மட்டும் ஜித்தினை தேடி போனார்.

” என்னப்பா உடம்பு சரியில்லையா..‌எதுக்கு ரூம்லயே உக்காந்துகிட்டு இருக்க.. ” என்று பாட்டி கேட்க, பின்னாடியே வந்த அத்தை,

” என்னடா நீயும் வயசுக்கு வந்துட்டியா என்று கிண்டல் அடிக்க… ”

” சீ வாயை மூடுடி…அத்தைகாரி மாதிரி பேசு… ”

” ஆமா…‌அப்டி தான் பேசறேன்… ” என்று சிரித்தாள் அத்தை.

எப்போதும் அனைவரும் செளமியாவிடமே இருந்தார்கள், உணவுகள், சடங்குகள் என்று எப்போதும் ஆலோசனை நடந்துக் கொண்டே இருந்தது.‌  ஜிதின் அம்மாவிடம் சென்று,

” ம்மா…‌நம்ம வீட்ல என்னம்மா விசேஷம், ஏம்மா செளமியாவை பாக்கவே முடியல, நான் வந்து அவளை பாக்கட்டுமா ம்மா… ”

” டேய்.. இது என்னடா கேள்வி, வாடா..” என்று அழைத்துச் சென்றார் அம்மா.

‘ செமியாவா இது…‌’ ஆச்சரியமாக பார்த்தான். தாவனி அணிந்து இருந்தாள், தலையில் கலர்‌ கலர் பூ நிறைய வைத்து இருந்தாள், கை நிறைய வளையல்,  நகை,  முகத்தில்  அழகிய புன்னகை என்று பார்க்கவே மிகவும் சந்தோஷமாக இருந்தது.‌

அத்தையை தேடி போனான் ஜிதின்.

” அத்தை, எனக்கு ஒரு கேள்வி இருக்கு கேக்கட்டுமா? ”

” கேளுடா… ”

” பெரியவ ஆவறுதுன்னா என்னத்த .. பொண்ணுங்க மட்டும் தான் பெரியவ ஆவாங்களா? பையனுங்க ஆக மாட்டாங்களா? பொண்ணுங்களுக்கு விசேஷமா கொண்டாடற அளவுக்கு அது என்னத்த அவ்வளவு பெரிய விஷயமா.. அதுக்கு செளமியா என்ன பண்ணா.. எல்லாரும் ஏன் அவகிட்ட மேலும் பாசமா இருக்கீங்க… ”

” அடேய்… மருமவனே.. இன்னாடா இவ்ளோ கேள்வி கேக்கற… எனக்கு கூச்சமா இருக்கு போடா… ” என்று அத்தை ஓடி விட்டாள்.

விசேஷம் முடிந்தது..‌மஞ்சள் நீராட்டு விழா சிறப்பாக நடைப்பெற்றது.. அனைவரும் கிளம்பி விட்டார்கள். பாட்டி மற்றும் அத்தை மட்டும்  இருந்தார்கள்.

” டேய்… ஜிதின் இங்கே வா…‌எதுக்குடா அன்னைக்கு ஸ்கூலுக்கு வரச் சொன்னாங்க.. இந்த விசேஷ வேலையில மறந்தே போச்சு… ”

” அது ஒன்னும் இல்லப்பா… சும்மாதான் ..சும்மாதான்… ”
என்றவன் சில நிமிடங்களில் பேச்சு மூச்சற்று கீழே விழுந்தான்.

ஹாஸ்பிடலில் ஜிதின்க்கு ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டு இருந்தது.. எவ்வளவு தூக்க மருந்துக் கொடுத்தும் அவன் தூங்கவில்லை.. தூங்க முடியவில்லை..கண்கள் எப்போதும் எங்கேயோ பார்த்தபடி அலைந்துக் கொண்டு இருந்தது.

” டாக்டர் என்னங்க ஆச்சி என் பையனுக்கு … அவன் ஏன்‌ தூங்கவே மாட்றான்.. ” என்றார் அப்பா..

” பதட்டப்படாதீங்க.. ஸ்கேன் எடுத்து இருக்கோம் டெஸ்ட் ரிசல்ட் எல்லாம்  வரட்டும் பாக்கலாம்.. நீங்க அவனை இன்னைக்கி வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம் ” என்றார்.

வீட்டில் கட்டிலில்  விழித்துக் கொண்டு  இருக்கும் போதே ஜித்தின்  சிறுநீர் கழித்து விட்டான்.

‘ அய்யோ, எம்புள்ளைக்கி என்னாச்சின்னே தெரியலையே முழிச்சிட்டு இருக்கும்போதே  ஒன்னுக்கு போறானே… ‘ என்று அழுதபடியே அவன் ஆடையை விளக்கினாள். விளக்கியவள் அதிர்ந்து போனாள், அவன் உயிர் உறுப்பில் சிவப்பு சிவப்பாக திட்டு திட்டாக படர்ந்து இருந்தது… தோல்கள் மெல்லியதாக இருந்தது…

‘ அய்யோ.. அய்யோ… எப்புள்ளக்கி என்ன நடக்குதுன்னே தெரியலையே.. ஏங்க, ஏங்க இங்க வாங்க, வந்து பாருங்க… ” என்று‌ கத்தினாள். பாட்டி அத்தை அப்பா அனைவரும் வந்து விட்டார்கள். செளமியாவை மட்டும் உள்ளே வராமல் தடுத்து விட்டார்கள்.

” என்னடி இது,  இப்டி புண்ணா இருக்கு,  த்தா.. எந்நேரமும் அதுலயே கைய  வச்சி நோண்டிகிட்டு இருத்து இருப்பான்… அதான் இப்டி ஆகி இருக்கு … ”

” யோவ்… வாய மூடுயா .. சீ .. நீ எல்லாம் ஒரு அப்பன்.. இன்னைக்கு இவன் இந்த நெலயில இருக்க காரணமே நீதான்யா…‌”

” ஏய்… இன்னாடி, ஓவரா கத்தற, மரியாதையா பேசு… ”

” உனக்கு இன்னாய்யா மரியாதை… புள்ள உன்ன கண்டு பயந்து பயந்து தான் இப்டி ஆயிட்டான்..‌அத்தை அவரை ஒழுங்கா வெளிய போக சொல்லுங்க… ” என்று கத்தினார் ஜிதின் அம்மா.

” போப்பா… போ… ஒன்னும் இல்ல, அதான் நாங்க கூட இருக்கோம் இல்ல.. நீ போ… ” என்று ஜிதின் அப்பாவை வெளியே அனுப்பி வைத்தார் பாட்டி.

இது எதுவுமே தெரியாமல் ஜிதின் எங்கேயோ பார்த்துக் கொண்டு இருந்தான்..

” ஏம்மா .. இன்னா நடந்துச்சு எதுக்கு இப்டி கோவப்படற… ” என்றார் பாட்டி

” அத்த.. ஒரு நாள் ஜிதின் சோபாவுல படுத்துக்கிட்டு அவன் அதை கையில பிடிச்சி கிட்டு என்னமோ பண்ணிகிட்டு இருந்தான். அந்த பக்கமா வந்த நான் அத பாத்துட்டு‌ ஒரு‌ மாதிரி ஆயிட்டேன்… அவங்கிட்ட எதுவும் கேக்கல…. அவர்கிட்ட தான் இந்த விஷயத்தை  சொன்னேன்,  அன்னையில இருந்து அவன ஒரு கிரிமினல்  மாதிரி நடத்தறாரு… அவங்கிட்ட சரியா முகம் கொடுத்து பேசறது இல்ல, எப்ப பாரு திட்டிக்கிட்டே இருக்காரு… ”

“  செளமியாகிட்ட கூட அவன சரியா பேச விடறது இல்ல.. டிவி யில எதாவது பாட்டுல முத்தம் தர‌ மாதிரி வந்துட்டா இதுக்கு தான் பெரிய டிவி வேணும்னு கேட்டியான்னு அவன கேக்கறாரு…‌அய்யையோ,  மொத்தத்துல அவன ரொம்ப கேவலமா பாக்கறாருத்த…  அவரை பாத்தாலே பயப்படறான் … எப்டி ஓடி‌ ஆடிட்டு இருந்த புள்ளை  இப்டி பித்து புடிச்ச மாதிரி ஆயிட்டானே… ” என்று‌‌ அம்மா அழுதாள்.

” ம்மா.. பசிக்குது .. ” என்றான் ஜிதின்.

” என்னப்பா  வேணும்..‌தோசை சுட்டு எடுத்துட்டு  வரட்டுமா.. ” அம்மா சந்தோஷத்தில் பரபரப்பானாள்.

” இல்லம்மா… இட்லி,  இல்ல இல்ல இட்லி வேணாம் பிரியாணி… ம்ஹீம் அதுவும் வேணாம் சப்பாத்தி சண்ணா மசாலா… ”

” தம்பி.. ஏம்பா மாத்தி மாத்தி சொல்ற.. ”
அவனை விசித்திரமாக பார்த்தாள் அம்மா.

” ம்…‌எதுவும் வேணாம்மா, பசிக்கல..‌”
என்றான்.

தன் குழுந்தை தன் கண்ணெதிரில் குழுப்பமாகவும், தூங்காமலும், சாப்பிடாமலும் இருப்பதை பார்க்க பெற்றவளின் அடி வயிறு வலித்தது.‌ கண்களில் கண்ணீர் கொட்டியது.

” புவனா… எதுவும் இல்லம்மா, நீ ஒன்னும் பயப்படாத…‌இதெல்லாம் இந்த வயசுல வரும் தாம்மா… கொழந்த சரியாயிடுவான்…‌நீ போய் அவனுக்கு குடிக்க எதாச்சும் எடுத்துன்னு வா… ” என்றார் பாட்டி. குடிக்க ஜூஸ் கொண்டு வந்தாலும் ஜிதின் குடிக்கவில்லை. அம்மா அவன் அருகில் அமர்ந்து தலை கோதி விட்டாள்.

” ம்மா… நான் உனக்கு தெரியாம தப்பு பண்ணிட்டேன் மா… நீ என் மேல கோவமா இருக்கியாம்மா… ” என்றான் ஜிதின்.

” அதெல்லாம் ஒன்னும்  இல்வப்பா… நீ எந்த தப்பும் பண்ணலப்பா.. ஆமா நீ ஏன் அப்டி நெனைக்கிற…‌அம்மாகிட்ட எதாச்சும் சொல்லனுமா பா… ”

” ஆமாம்மா… நான் போன்ல தப்பு தப்பான வீடியோ எல்லாம் சர்ச் பண்ணி பாத்தேன் மா… மொட்டை மாடியில தண்ணி டேங்க் கீழே போய் உக்காந்துட்டு பாத்தேன் மா… தினமும் பாத்துட்டு வரும்போதெல்லாம் பயமா‌ தான் இருக்கும். ஆனால் மறுபடியும் அதை தான் பாக்கனும்னு தோணும்மா…‌”

அய்யோ இதுக்கு நான் என்ன பண்ணனும் இப்போ கண்டிக்கனுமா… திட்டனுமா வேணாமா… என்று‌ அம்மா யோசித்துபடி இருக்க..

” ம்மா… யூரின் போற எடத்துல எப்பவும் ஏதோ ஈரமா இருக்க மாதிரி இருக்கு மா.. எனக்கு யார்கிட்டயாச்சும் இதெல்லாம் சொல்லனும்னு தோணும்.. ஆனா பயமா இருக்கும் மா… என் ஃ பிரண்டு கிட்ட‌ ஸ்கூல்ல இத பத்தி பேசினேன்… அவனுக்கும் அப்டி தான் இருக்குன்னு சொன்னான்.. அவங்க அப்பா அவனுக்கு இதை பத்தி பேசி இருக்காராம்… நம்ம அப்பாகிட்ட பேசினா‌ அப்பா என்னை கொண்ணுடுவாரு இல்லம்மா…‌”

அம்மாவுக்கும் இதை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை.. எந்த பதிலும் சொல்லாமல் சங்கடத்தில் அமைதியாக இருந்தாள். அப்போது அவள் தோழி ஜீனத் வந்து இருப்பதாக பாட்டி சொன்னார்.

பாட்டியை துணைக்கு இருக்க சொல்லி விட்டு ஜீனத்தை வரவேற்றாள்.

” சாரி புவனா, உன் பொண்ணு விசேஷத்துக்கு வர முடியல, எல்லாம் நல்லபடியா நடந்துச்சி இல்ல.. ”

” ஹாங்.. நல்லா நடந்துச்சி.. ”

” என்ன புவனா, குரல் ஒரு மாதிரி இருக்கு.. ”

” ஜிதினுக்கு உடம்பு சரியில்லை.. சரியா சாப்பிட மாட்றான்.. சுத்தமா தூங்கல..‌ அப்புறம்.. ” என்று சொல்ல தயங்கி நிறுத்தினாள். பிறகு அவளை வேறு ஒரு அறைக்கு அழைத்துச் சென்று பேசினாள்.

கீதா சுந்தர் எழுதிய இளந்தளிர் சிறுகதை (Izhanthalir Tamil Short Story About Sex Education Written By Geetha Sundar) - பாலியல் கல்வி

” ஜிதினுக்கு உடம்பு சரியில்லை.. அதோட அவனுக்கு ஒன்னுக்கு போற இடமெல்லாம் பிங்க் கலர்ல திட்டு திட்டா வந்து இருக்கு… அந்த எழவெடுத்த ஃ போன்ல கண்ட கண்ட வீடியோ எல்லாம் பாத்து இருக்கான்.. புள்ளைங்க படிக்கிதுன்னு நம்ம நெனைச்சிகிட்டு இருந்தா இதுங்க இந்த மாதிரி திருட்டு வேலை பண்ணி வச்சி இருக்குங்க… இன்னும் அவன் அப்பாகிட்ட இதெல்லாம் சொல்லல.. அவ்ளோ தான்‌ வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பாரு.. அதெல்லாம் தெரியாம பாத்ததால அவனுக்கு பயத்துல ஒரு மாதிரி ஆமிட்டடான்…‌ எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல ஜீனத்து… ”

“இது எல்லா வயசு பசங்களுக்கும் இருக்குறது தான… உம்பொண்ணு பெரிய ஆயிட்டா அதை விசேஷமா கொண்டாடறீங்க.. ஆனா அதே வயசுல இருக்கற பையனுக்கு உடம்புல மனசுல  மாற்றம் வரும்போது தப்பா பாக்கறீங்க.. இது இன்னாடி நியாயம்..

என் தங்கச்சி பையன் ஆறு வயது தான் ஆவுது…‌ அது எம்மடியில படுத்துகிட்டு இன்னா சேட்டை பண்ணுச்சி.. இதனால அந்த குழந்தை கெட்டவனா.. ? ”

” இது எனக்கும் புதுசு தான ஜீனத்து.. எப்டி அனுகறதுன்னு தெரியல…‌ இப்ப அவங்ககிட்ட எப்டி பேசறது.. இன்னா பேசறது… இது சரின்னு சொல்றதா..தப்புன்னு சொல்றதான்னு ஒரே மண்ட கொடைச்சலா இருக்கு..”

” இது உனக்கு தான்டி புதுசு.. ஆனா உன் வீட்டுக்காருக்கு  பழசு தான்.. அவங்க இதை தாண்டி தான் வந்து இருப்பாங்க.. ஆனா அவங்க புள்ளைங்கன்னு வரும் போது.. அப்டியே மகாத்மா மாதிரி பேசுவாங்க.. ”

” இன்னாம்மா.. என் பேச்சு அடிபடுது… ” என்றபடி உள்ளே வந்தார் ஜிதின் அப்பா.

” அண்ணே… சும்மா தான் பேசிக்கிட்டு இருக்கோம்… சரி… நான் கிளம்பறேன்.. புள்ளைய பாத்துக்கோ.. ஒன்னும் கவலைப்படாத.. எல்லாம் சரியாயிடும்… ” என்று கூறி விட்டு ஜீனத் கிளம்பி விட்டாள்.

” ஏண்டி.. இன்னா எல்லாத்த பத்தியும் எல்லார்கிட்டயும் பேசுவியா.. நீ”

” வேற இன்னா பண்றது… உங்ககிட்ட பேசனா பெரிய பிரச்சினையா ஆக்கறீங்க… ஏங்க, இது வயசு பிரச்சினைதாங்க… நம்ம செளமியாவுக்கும் அது போல தோணும்.. ஆனா நாம அவள ஒரு மாதிரி, ஜிதினை ஒரு மாதிரி பாக்கறோம்… அவன் உங்க புள்ள தான.. நான் பேச முடியாத விஷயம் கூட நீங்க தான அவங்கிட்ட பேச முடியும்… வாங்க அவங்ககிட்ட நல்ல விதமா பேசுங்க… அய்யோ எனக்கு என் புள்ள வேணுங்க.. ” என்று கூறி புவனா அழுவதை பார்த்து சண்முகத்துக்கு ஒரு மாதிரி மனது பிசைந்தது..

” ஜிதின் இப்டி இருக்கறதுக்கு நான் தான் காரணம்னு சொல்றீயா..”

” நான் அப்டி சொல்லலங்க…‌அவன் ஏற்கனவே ஏதோ பிரச்சினையில தான் இருக்கான்… இதுல நீங்க வேற அவங்ககிட்ட நடந்துக்குற விதம் ரொம்ப கஷ்டமா இருக்குங்க… ”

” சரி.. வா .. நான் அவங்கிட்ட பேசறேன்..” என்று கூறவும் இருவரும் ஜிதின் அறைக்கு சென்றனர்.

அப்பாவை பார்த்ததும் ஜிதினுக்கு பயத்தில் கை கால் நடுங்கியது.  ஆனால் கண்கள் மட்டும் எங்கேயோ எதையோ தேடி அலைந்தது.

” தம்பி… என்னப்பா பண்ணுது உடம்புக்கு…‌எதாவது சாப்பிடறியா… ? அம்மாவ ஜூஸ் கொண்டு வர சொல்லட்டுமா.. இல்ல அப்பா கூட கடைக்கி வறியா… ஐஸ் கிரீம் சாப்பிடலாமா… ? ” என்று அப்பா மிகவும் கரிசனமாக பேசுவது எதுவும் அவனுக்கு ஏறவில்லை.. அப்படியே வெறித்து பார்த்துக் கொண்டே இருந்தான்.

” அம்மா… பால் குடிக்கனும் போல இருக்கும்மா… ” என்றான்

” தோ… கொண்டு வரேன்ப்பா..‌” என்றாள் அம்மா.

” இல்லம்மா … அந்த பால் இல்ல.. உங்கிட்ட பால் குடிக்கனும் போல இருக்கும்மா… நீ என்னை தப்பா நெனைப்பியாம்மா.. ” என்றான்..

அனைவரின் கண்களும் கலங்கியது.

” டேய்… நான் ஏண்டா தப்பா நெனைக்க போறேன்.. நீ என் கொழந்தை டா… எங்கிட்ட தான்டா பால் குடிச்சி வளர்ந்த… நீ எதை எதையோ நெனைச்சி குழப்பிக்காதப்பா… அம்மா உன்னை தப்பா பாக்க மாட்டேன்… ”

அவன் நடுக்கம் சற்று குறைந்தது… முகமும்  தெளிந்தது..  ஆனாலும் ஏதோ ஒன்றை அவன் கண்கள் தேடியது..

” அம்மா… நான் பொம்பள பொருக்கியா ஆயிடுவனா… என் ஃபிரண்டு மோனி எங்கிட்ட பேச மாட்டாளா… பக்கத்து வீட்டு ஷீலாக்கா எனக்கு முத்தம் தர மாட்டாங்களா…?  ”

சம்மந்தம் இல்லாமல் அவன் பேசிய வார்த்தைகள் பெற்றோர்களுக்கு வலித்தது… என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அமர்ந்து இருக்க… பாட்டிக்கு மட்டும் ஏதோ ஒன்று புரிந்தது.. அறையிலிருந்து வெளியே போய் செளமியாவை அழைத்து வந்தார். கட்டிலில் அவன் அருகில் அமர வைத்தார். செளமியாவுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

” அண்ணனுக்கு ஒடம்பு சரி இல்ல.. இன்னான்னு கேளு பாப்பா.. ” என்றார் பாட்டி.

செளமியா அண்ணனின் கைகளை எடுத்து தன் உள்ளங்கையில் வைத்துக் கொள்ளவும், ஜிதின் கண்கள் வெளிச்சத்தை கண்டது போல பிரகாசமானது… தன் தங்கை, தன்னை தொடுகிறாள்… பேசுகிறாள்.. இத்தனை நாள்  இவள் பேசவில்லை, தொடவில்லை.. அருகில் வரவில்லை.. இன்று அவன் அருகில் தங்கை என்ற பெண்.. அவன் கண நேரத்தில் ஆனந்தமானான்.

அவனும் அவள் கையைப் பற்றிக் கொண்டான்.. அவள் கன்னத்தில் முத்தமிட்டான். அவன் கண் இமைகள் இயல்பாக மூடி திறந்தன. செளமியாவும் அவனுக்கு முத்தம் கொடுத்தாள்… தனக்குள் எல்லாம் சுத்தமானது போல அவன் உணர்ந்தான். பாட்டி சண்முகத்தை பார்க்க.. குற்ற உணர்வில் அவன்‌ கண்கள் தரையை பார்த்தது.

அன்று இரவு ஜிதின் நீண்ட நாட்களுக்கு பிறகு நிம்மதியாக உறங்கினான்.

இளந்தளிர் சிறுகதை எழுதியவர்:

கீதா சுந்தர் 

 

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 4 Comments

4 Comments

  1. விஜயகுமார் த.பெ

    சிறப்பு, சிறுகதையின் வாயிலாக பெரும் சமூக நிலையை எவ்வித ஏற்ற இறக்கமும் இல்லாமல் இயல்பான விதத்தில் உம் எழுத்துக்கள் பிரதிபலிப்பு செய்துள்ளது. வாழ்த்துக்கள்.

    இது போன்ற ஒரு இக்கட்டான நிலை ஏன் ஏற்படுகிறது என்று சற்று சிந்தித்துப் பார்த்தால் நமக்கும் இயற்கைக்குமான இடைவெளி என்பது தெளிவாக புலப்படும்.

    கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து வாழும் பொழுது. அங்கு அங்குள்ள சூழலில் ஆடுகள், மாடுகள் கோழிகள், நாய்கள். பறவைகள், பட்டாம்பூச்சிகள், அட்டைப் பூச்சிகள், பல்லிகள், பாம்புகள் போன்றவற்றில் அதனதன் பருவத்தில் நடக்கும் உருவ வளர்ச்சி, செயல் மாற்றங்கள், புணர்ச்சி, இனப்பெருக்கம் போன்ற விசயங்களை பார்த்துவிட்டு அது குறித்த விசயங்களை கேட்டும் பேசியும் தங்களின் புரிதலை மேம்படுத்த முடிந்து, அது போன்ற தருணங்களில் மனிதர்களுக்கு இது போல என்னென்ன மாற்றங்கள் என்பது குறித்து இயல்பான போக்கில் பெரியவர்களிடம் உரையாட முடியும் அவர்களும் பொறுப்புடன் அதற்கான பதில்களை அவர்களுக்கு வழங்கியுள்ளார்கள்.

    ஆனால் இன்றைய சூழலில் ஒரு குழந்தை முதன் முதலில் இது போன்ற ஏதேனும் ஒரு விசயத்தை பற்றி நம்மிடம் கேட்கும் போது அதற்கு நாம் பொறுப்புடன் பதில் அளிக்க வேண்டும், அவ்வாறு இல்லாமல் அதனை தவிர்த்தோ அல்லது எதிர்த்தோ செயல்பட்டால், அவர்கள் அடுத்தடுத்த சூழ்நிலைகளில் அது குறித்து நம்முடன் பேசாமல் நண்பர்கள் மூலமாகவோ அல்லது இணையத்தின் வாயிலாகவோ பல தவறான தகவல்களையும் அச்சுறுத்தல்களையும், செயல்பாடுகளையும் பெற நேரிடும், அவைகளே இது போன்ற நிலைமை உண்டாக காரணமாக அமைகின்றன.

  2. V Prabanjjaraj

    வாழ்த்துகள் கீதா தோழர் 💐

    ஆண்களே பேசத் தயங்கும் விசயத்தை வெளிப்படையாக, தைரியமாக மற்றும் இயல்பாக உரைத்தமைக்கு எமது பாராட்டுக்கள்.

    எழுத்து நடை இயல்பாக இருந்தது.

  3. S.K. SALIH

    இன்றுதான் இந்தச் சிறுகதையைப் படித்தேன் கீதாக்கா…

    எனக்கு இதுவரை ஆண் குழந்தைகள் இல்லை. ஒருவேளை இருந்தால் எப்படி நடக்க வேண்டும் என்பதையும், நான் வாழும் சமூகத்தில் ஆண் மக்களுக்கு இது போன்ற நிலை வரும் பொழுது எப்படி நடக்க வழி காட்ட வேண்டும் என்றும் அழுத்தமாக உணர்த்திவிட்டது உங்களது இந்தப் படைப்பு.

    தொடர்ந்து இதுபோன்ற சிக்கலான கருவைத் தேர்ந்தெடுத்து எழுதுங்கள்… என்னைப் போல பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்!
    வாழ்த்துகளுடன்,
    எஸ்.கே. சாலிஹ்,
    காயல்பட்டினம்,
    தூத்துக்குடி மாவட்டம்.

  4. செல்வமணி சை

    வணக்கம்.
    தற்காலத்தில் அனைத்து இல்லங்களில் எல்லாம் நடக்கும் இந்த தவற்றை மிக எளிதாக வார்த்தைகளில் வரி வரியாக வரைந்து உள்ளார்கள் என்று சொல்லலாம்.
    தெரிந்த ஒன்று ஆனால் மறந்து போனது அதை சிறுகதை மூலம் கதாசிரியை நமக்கு நினைவுபடுத்துகிறார்.
    சமுதாயத்தில் வளர்இளம் பருவ மாணவர்களுக்கு மிகவும் அத்தியாவசியமான செய்தியை மிக நளினமாக எளிய முறையில் தெளிவு பெற செய்தியை அமைத்த விதம் மிகச் சிறப்பு.
    தங்களுடைய சமுதாயப் பணிக்கு
    கரம் கூப்பி தலை வணங்குகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *