ஜே.பிரோஸ்கான் கவிதைகள்தூதன்

********

 

நீ சொற்களைச் சேமி,

நீ மிகவும் அதனை விரும்பினால்.

ஆதி இசையையும் சேகரித்துவை.

 

மதுவின் வாசனையையும்

மாதுவின் வாசனையையும் சேமி,

நிச்சயமாக இரண்டும் ஒன்றல்ல.

 

உன் முன்னோர் காலத்து

நம்பிக்கை வழிபாட்டைச் சேகரி,

தப்பில்லை.

 

இப்போது நீ பயணிக்கலாம்

சூஃபிசத் தெருவில்,

ரூமியின் சொற்களை விடுவித்து,

உமர் கய்யாமின் வரிகளில் திளை.

நான் சொல்லிட மாட்டேன்

இவ்விரண்டும் வேறு..வேறு!

 

விடுவி..

சொற்களும் இசையும்

மதுவும் மாதுவின் வாசனையும்,

தீர்ந்தாகட்டும்.

 

கொஞ்சம் நகர்ந்து பார்

நீ ரசிப்பதும் ருசிப்பதும் ஒன்றல்ல.

வியப்பு வேணாம்,

நான் ஒரு வாசகன் மட்டுமே.

 ஒப்புவித்தல்

*************

மறு உலகை நோக்கி

உனைத் திருப்பிக்கொள்

வாழ்வின் மேன்மை,

பணம்,பதவி, பட்டங்களுக்கெல்லாம்

புறமுதுகை காட்டிச் செல்.

உன் பாதையில் தனித்திரு

புறச் சிரிப்பை ஏந்தி வருபவர்களை விட்டு விலகு

எல்லாவற்றையும் கடந்து,

பிடித்த ஒன்றின்முன் ஒப்புவித்துக்கொள்

உனக்கான இடத்தை.

யாராவது இடை நிறுத்தி

எது உன் பாதையென்று கேட்டுவிட்டால்,

இப்படியெல்லாம்தான்

நான் சொல்லி வைப்பேன்.வணங்குவதற்காகவேயின்றி..

******************************

வணங்குவதற்காகவே நீ

உருவாக்கப்பட்டுள்ளாய்

உனக்கான இருப்பிடம் காத்திருக்கிறது.

பெரும் ஆசைகளை சுமந்திருக்கும் நீ

சுயம்,பொதுமையில்

எப்படி நீ திருப்திப்பட்டுவிடப் போகிறாய்.

சதா பாவத்துடன்

றெக்கை விரித்து திரிந்தால்

உருவாக்கியவனைக் கண்டுகொள்வதெப்படி.?நிலைபேறு சொல்

***********************

மனதில் எஞ்சியிருக்கும்

கடைசி சொல்லுக்கு

நீளமான மகிழ்ச்சி ஏதும்

இருக்குமா.

 

இருக்கும்.

 

அந்த புத்தகத்தில் வசிக்கும் கரையான்கள்

அதனுள் நிறைந்திருக்கும்

சொற்களை

தின்று வயிறு வளர்த்ததென்று

சொல்லி வைப்போம்.

 

அதன் ஜீரணக் கழிவை

இப்போது காற்று வான்பரப்பில்

பறக்க விட்டிருக்கிறது

மலக்குடல் வழியாக.

 

இப்போது

ஈக்களின் போர்கள் நடந்தாகுது,

பூமியில்.

 

டொப்றுக் எலிகளின் தந்திரத்தை

வென்றது ஈக்களென,

நான் கவிதையை முடிப்பதற்கு முன்,

போதையில் திளைத்திருக்கும் நீங்கள்

அந்த மதுக் குவளையிலிருந்து

வெளியேறுங்கள்.

..

ஜே.பிரோஸ்கான்