ஜெ. வீரநாதன் ( J. Veeranathan) எழுதிய "நேர மேலாண்மை (Nera Melanmai)" புத்தகம் - நூல் அறிமுகம் | Time Management Oriented Tamil Book Review

ஜெ. வீரநாதன் எழுதிய “நேர மேலாண்மை” – நூல் அறிமுகம்

“நேர மேலாண்மை (Nera Melanmai)” – நூல் அறிமுகம்

“காலம் பொன் போன்றது”
“இழந்தால் மீண்டும் திரும்ப பெற முடியாதது நேரம்” என்பதை நாம் அறிந்திருப்போம். அந்த நேரத்தை பற்றி சிலரோ, எப்படியோ ஓடினால் சரி என்றும், சிலரோ ஏன் இவ்வளவு வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது? இன்னும் செய்ய வேண்டியது எவ்வளவோ உள்ளதே! என்றும் எண்ணுவர். இவையெல்லாம் நேரத்தின் மதிப்பை உணர்ந்தவர்கள், உணராதவர்கள் போன்றவர்களை பொறுத்ததே!

இந்த நூல் “நேரத்தின் மதிப்பை” உணர்ந்துக் கொள்வதற்கு ஒரு “ஆற்றல் ஊக்கியாகவும்” மேலும் உணராதவர்களுக்கு ஒரு அடித்தளமாகவும் அமைந்துள்ளது. மொத்தம் 18 தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளது.

இந்த உலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களுக்கும், மனிதர்களில் ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன் என அனைவருக்கும் பொதுவானது நேரம் தான். அப்படி இருக்கையில் அவற்றை எந்த அளவிற்கு பயனுள்ளதாக மாற்றிக் கொள்கிறோமோ? அதைப் பொருத்து தான் வெற்றியும் அமையும், என்பதற்கு இந்நூல் ஒரு வழிகாட்டி.

நேரம் மேலாண்மை தெரிந்தவர்களே வாழ்வில் வெற்றி பெற முடியும். அப்படி நேரம் மேலாண்மையை நிர்வகிக்க இந்த நூலில் சில சோதனைகள் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கான சோதனை அது. ஒரு நாளில் காலை 5 மணிக்கு எழுந்ததிலிருந்து இரவு 11 மணி வரை நாம் என்ன செய்கிறோம்? நேரத்தை சரியாக பயன்படுத்துகிறோமா? என்பதை குறித்துக்கொள்ள ஒரு அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது. அவை நம்மை நாமே சுயப் பரிசோதனை செய்துக் கொள்ளும்படியாக அமைந்துள்ளது.

நேரத்தை வீணாக்காமல் எப்படியெல்லாம் செலவழிக்கலாம்?

காலையில் அலுவலகத்திற்கு செல்லும் போதும், பிள்ளைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பும்போதும் பல குடும்பங்கள் கந்தல் கோலமாக மாறிவிடும். காரணம்? நேரம் மேலாண்மை இல்லாததால் தான்.

“மறுநாளுக்கு தேவையான அனைத்தையும் முதல் நாள் இரவே முடிவு செய்துவிட்டு, தேவையானவற்றை எடுத்து வைத்து விட்டால் மறுநாள் காலையில் பதற்றத்தை குறைக்க முடியும்”

என்பதை போன்ற பல உதாரணங்கள் இந்நூலில் சொல்லப்பட்டுள்ளது.

நம்முடைய நேரத்தை திருடும் தொலைப்பேசி, சொல்லாமல் கொள்ளாமல் நேரில் வரும் நபர்கள், ஞாயிற்றுக்கிழமைகளை ஆக்கிரமிக்கும் நண்பர்கள், தேவையற்ற தொலைப்பேசி அழைப்புகள், கூட்டங்கள் போன்றவற்றை எப்படி தவிர்க்கலாம்? யார் என்ன நினைத்தாலும் நமக்கு பிடிக்காததை பிடிக்காது என்றும், செய்ய முடியாததை முடியாது என்றும் சொல்லும் துணிவினை வளர்த்துக்கொண்டு, நல்ல குறிக்கோள்களை முதலில் வகுத்துக் கொண்டால் அதை நோக்கி நம்மால் பயணம் செய்ய முடியும் என்பதையும் வலியுறுத்தியுள்ளது.

விலைமதிப்பில்லாத நமது நேரத்தை திருடும் பல காரணங்களை குறிப்பிட்டு, நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு வேலைக்கும் பணி பட்டியலை தயார்படுத்திக் கொண்டால், நேரத்தை சேமிக்கும் வழிகளை அறிய முடியும்.

அதேபோல் யாருக்காக, எதற்காக நம்முடைய பொன்னான நேரத்தை ஒதுக்கலாம் என்பதையும், மேலும் திட்டமிடுதலின் மூலமாக நேரத்தை சேமிக்கும் வழிமுறைகளையும், அந்த திட்டமிடுதலில் உள்ள குறைபாடுகளையும் சொல்லி உறங்கிக் கொண்டிருக்கும் நம் மூளையைச் சற்று தட்டி எழுப்புகிறது இந்த நேரம் மேலாண்மை.

அதற்காக நேரத்தில் குடும்பத்தை சேர்க்காமல் விட்டுவிடக் கூடாது என்றும், சரியான நேரத்தில் வீட்டுக்கு திரும்புகின்ற குடும்பத் தலைவரால், குடும்பம் திறம்பட இயங்கும் என்பதையும், சிறுவயதில் பிள்ளைகளோடு நேரம் செலவிடாத தந்தையோ! தாயோ! வளர்ந்த பிறகு பிள்ளைகளிடம் “நேரம் செலவிடுங்கள்” என்று எதிர்பார்க்கவே கூடாது. ஏனென்றால்,

“குடும்பத்துடன் செலவிடும் நேரமும் எதிர்காலத்தில் நமக்கு உதவப் போகும் ஒருவகை சேமிப்பு.” என்பதை உணர்த்தும் நல்ல புத்தகம் இது.

யாராவது உங்களின் நேரத்தை வீணாக்கினால், அவர்களுக்கு அதனை மறைமுகமாக உணர்த்த இந்த நூலை பரிசாக கொடுக்கலாம்.

நூலின் விவரம்:

நூல் : நேர மேலாண்மை (Nera Melanmai)
ஆசிரியர் : ஜெ. வீரநாதன்
வெளியீடு : எஸென்சியல் பப்ளிகேஷன்ஸ்
பக்கங்கள் : 73
விலை : ரூ.25

நூல் அறிமுகம் எழுதியவர்:

தீபா ராஜ்மோகன்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *