“வெறும் கார்ப்பரேட் பிராண்டிங் உத்திகளையும், சினிமா மற்றும் பாரம்பரியப் பிம்பங்களையும் தாண்டி, தமிழக அரசியல் சக்திகள் எப்போது மக்களின் உண்மையான எதார்த்தங்களுக்காகத் துணிச்சலுடன் பேசுகிறார்களோ, அப்போதே அந்த மௌனம் கலைந்து உண்மை வெல்லும்.”
—-
சமகால அரசியல் சூழலில், அதிகாரம் என்பது வெறும் நிர்வாக அமைப்பாக இல்லாமல் தகவல் மற்றும் காட்சித் தளங்களை கட்டுப்படுத்தும் ஒரு அமைப்பாக மாறியுள்ளது. இன்று அரசியல் நிகழ்வுகள் நேரடி அனுபவமாக அல்லாது, ஊடகங்களால் வடிவமைக்கப்பட்ட பிரதிநிதி வடிவங்களிலேயே மக்கள் முன் வருகின்றன. இதன் விளைவாக, ‘உண்மை’ என்பது நிகழ்வின் எதார்த்த அடிப்படையில் அல்லாமல் அதன் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையிலேயே புரிந்து கொள்ளப்படுகிறது. இத்தகையதொரு காட்சி ஊடக அரசியலின் போலித்தனத்தை தத்துவார்த்த ரீதியாகவும், ஆவணப் பூர்வமாகவும் காட்டுகிறது எழுத்தாளர் ஜா. மாதவராஜ் அவர்களின் ‘பொய் மனிதனின் கதை’ நூல்.
என்னைப்போன்ற பல வாசகர்களுக்குப் பிடித்தமான, சமகால இந்திய இளைஞர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை அசுர வேகத்தில் கொண்டு சேர்த்த முதன்மையான எழுத்தாளரான சேத்தன் பகத்தின் அனைத்து நூல்களையும் வாசித்தவள் என்ற முறையில், இந்நூலில் அவரைப் பற்றிய பதிவுகள் எனக்குள் கூடுதல் ஈர்ப்பை ஏற்படுத்தின. நமக்குப் பிடித்த சேத்தன் பகத் என்பவரைக் கொண்டு நூல் துவங்கி இருக்கிறது என்ற தாளாத ஆர்வத்தோடுதான் இந்தப் பக்கங்களை நான் முழுமையாகப் படிக்க ஆரம்பித்தேன்.
ஆசிரியர் மாதவராஜ் இந்நூலின் தொடக்கப் புள்ளியாக வைப்பது, நரேந்திர மோடி என்ற தனிமனிதரைச் சுற்றி ஊடகங்கள் கட்டமைத்த அந்த பிரம்மாண்டமான ‘வளர்ச்சி நாயகன்’ பிம்பத்தைத்தான். 2014 பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, ABP செய்தி நிறுவனத்தில் பிரபல ஆங்கில நாவலாசிரியர் சேத்தன் பகத் தொகுத்து வழங்கிய ‘7 RCR’ (Race Course Road – இந்தியப் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தைக் குறிக்கும் பெயர்) என்ற அரசியல் ஆவணத் தொடர் (Politics-based documentary reality series) இதற்கு மிக முக்கியக் கருவியாகப் பயன்படுத்தப்பட்டது.
ஆனால், இதில் ஒளிந்துள்ள ஆகச்சிறந்த முரண் நகையை ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார். 2014-ல் மோடியின் பிம்பத்தை ஊதிப் பெருக்கியவர்களில் ஒருவரான அதே சேத்தன் பகத், பின்னாளில் கோவிட் பெருந்தொற்றின் போது, 2021-ல் என்.டி.டிவி (NDTV) விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய போது, “மோடியின் பிம்பத்திற்கு இப்போது ஆக்ஸிஜன் நெருக்கடி வந்திருக்கிறது” என்று கூறினார். இந்த அத்தியாயத்தின் இறுதியில் ஆசிரியர் மாதவராஜ் அவர்கள் மிக ஆழமான ஒரு முரண் நகையோடு அந்தப் பகுதியை முடிக்கிறார்.
அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களது சித்தாந்தங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க பெரும் செல்வாக்குமிக்க எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் தங்கள் பக்கம் ஈர்த்துப் பயன்படுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டை இந்திய அரசியலில் தவிர்க்கவே முடியாது. பேரறிஞர் அண்ணா காலம் தொட்டு நிலவிய அரசியல்-கலைத் தொடர்பு என்பது முற்றிலும் கொள்கை சார்ந்த, சித்தாந்த கலைப் பிணைப்பாக (Ideological Bonding) இருந்தது. நவீன டிஜிட்டல் அரசியல் காலத்தில், அது கார்ப்பரேட் மூளைகளால் வடிவமைக்கப்படும் வெறும் வணிக ‘பிராண்டிங்’ (Commercial Branding) அரசியலாக மாறியிருக்கிறது.
காலமாற்றத்தில் வடிவம் மாறியிருக்கிறதே தவிர, அதிகார வர்க்கம் தங்களின் பிம்பத் தேவைக்காகப் படைப்பாளிகளையும் அவர்களின் செல்வாக்கையும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் அந்த அடிப்படை உத்தி மட்டும் மாறவே இல்லை.
நூலில் அடுத்தடுத்து விவரிக்கப்படும் “மோடிபாய் பி.ஏ., எம்.ஏ.” என்ற மர்மங்கள் நிறைந்த கடந்த காலம், கைவிடப்பட்ட யசோதாபென்னும் ‘சுயமரியாதை’யின் வீழ்ச்சியும், குஜராத் கலவரமும், அத்வானி என்ற பழைய மனிதரின் நிலையும், கார்ப்பரேட்டுகளின் தங்க விளக்கு மற்றும் டிஜிட்டல் சந்தை மோடியைப் பற்றிய தகவல்களையும் படிக்கும் பொழுது, கூடவே நமக்குத் தோன்றுவது நம் தமிழ்நாட்டின் அரசியல் நிலைமைதான்.
சாமானிய மக்களின் எதார்த்த நிலையிலிருந்து பார்க்கும் போது, அனைத்து அரசியல்வாதிகளின் பின்பக்கத்திலும் இப்படி ஒரு மர்மங்களும் கடந்த கால இருண்ட பக்கங்களும் இருக்கவே செய்கின்றன. அந்த வகையில், தனிப்பட்ட முறையில் ஒரு குறிப்பிட்ட தலைவரை மட்டுமே இலக்காகக் கொண்டு விவாதிக்க வேண்டிய அவசியமில்லை என்ற ஒரு மாற்றுப் பார்வையும் எழுகிறது. ‘தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் எத்தனை பேர் உண்மையாகப் படித்திருக்கிறார்கள்?’ என்ற கேள்வியும், அவர்களின் கல்விச் சான்றிதழ்களுக்குப் பின்னால் இருக்கும் மர்மங்களும் கூட இதே பின்னணியில் நமக்குள் தோன்றி மறைகிறது.
கார்ப்பரேட் விளம்பர உத்திகள், சாமானிய மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்பி, போலிப் பிம்பங்களுக்குள் சமூகத்தைச் சுருக்கிவிடுகின்றன. இதே போன்ற ‘பிராண்டிங்’ அரசியல் நம் தமிழ்நாட்டிலும் மிகத் தீவிரமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை நாம் மறுக்க முடியாது. ரஷ்யக் கவிஞர் எவ்ஜெனி யெவ்துஷென்கோவின் புகழ்பெற்ற வரிகளோடுதான் இந்த நூல் முழுமை பெறுகிறது… ‘When truth is replaced by silence, the silence is a lie.’ – Yevgeny Yevtushchenko
இந்த வரிகள், டெல்லித் தலைவர்களுக்கு மட்டுமல்ல, இன்று தமிழ்நாட்டில் அன்றைய, இன்றைய பிரம்மாண்ட பிம்பங்களோடு களம் காணும் அரசியல் கட்சிகளுக்கும், எரியும் மக்கள் பிரச்சினைகளில் ஆரம்பத்தில் மௌனம் காக்கும் சமகாலத் தமிழகத் தலைவர்களுக்கும் மிகச் சரியாகப் பொருந்தும். வெறும் கார்ப்பரேட் பிராண்டிங் உத்திகளையும், சினிமா மற்றும் பாரம்பரியப் பிம்பங்களையும் தாண்டி, தமிழக அரசியல் சக்திகள் எப்போது மக்களின் உண்மையான எதார்த்தங்களுக்காகத் துணிச்சலுடன் பேசுகிறார்களோ, அப்போதே அந்த மௌனம் கலைந்து உண்மை வெல்லும்.
சுருக்கமாகச் சொன்னால், தோழர் மாதவராஜ் அவர்களின் ‘பொய் மனிதனின் கதை’ என்பது வெறும் ஒரு தனிநபர் மீதான அரசியல் விமர்சனப் பிரதியல்ல. மாறாக, அது கார்ப்பரேட் விளம்பர உத்திகளாலும், டிஜிட்டல் ஊடகங்களாலும் கட்டமைக்கப்படும் போலிப் பிம்பங்களின் பின்னே ஒளிந்திருக்கும் ஆபத்துகளைச் சாமானிய மக்களுக்குப் புரிய வைக்கும் ஒரு விழிப்புணர்வு நூல்.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | பொய் மனிதனின் கதை |
| ஆசிரியர்: | ஜா.மாதவராஜ் |
| வெளியீடு: | |
| விலை: | 50% சலுகை விலையில் ₹62.00 மட்டுமே |
| அறிமுகம் எழுதியவர்: | ✍🏻 வினிதா மோகன் |
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

