அதிசயக் காடுகள் ( Jaadui Jungle (Magical Forest) – இரா.இரமணன்.                தமிழ்நாடு திரைப்பட விழா(TNFF) இந்த ஆண்டு நவம்பர் 7-9  தேதிகளில் திரையிட்ட குறும்படங்களில் ஒன்று ‘அதிசயக் காடுகள்’. 2019 ஆம் ஆண்டு இந்தியிலும் நிமாதி மொழியிலும் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் 34 நிமிடங்கள் ஓடுகிறது. நிமாதி மொழி மத்தியப் பிரதேசத்தின் மேற்கு மத்தியப் பகுதியில் பல மாவட்டங்களில் பேசப்படும் மொழி. இந்தக் குறும்படம் அந்தப் பகுதியின் காடுகளில் எடுக்கப்பட்டது. காடுகளை சுற்றி வாழும் பழங்குடி மக்கள் கிராமத்தின் சிறுவர்களே இதில் நடித்துள்ளார்கள்.

                     ஆடு மேய்க்க காட்டினுள்ளே செல்லும் சிறுவர்கள் மரங்களில் ஏறி தழைகளை ஒடித்துப் போட்டு வீட்டிற்கு திரும்பும்போது தழைகளை கட்டாக கொண்டுவருவதும் விளாம்பழம் போன்ற ஒரு கனியை கல்லால் அடித்து வீழ்த்தி யாருடைய பழம் சுவையாக இருக்கிறது என்று போட்டி போட்டுக் கொண்டு அதனுள்ளிருக்கும் சதைப்பற்றான பகுதியை சுவைத்து சாப்பிடுவதும் படத்தின் தொடக்கமே கலகலப்பாக இருக்கிறது. கொன்றைப் பூவைப் போன்ற மலர்க் கொத்துகளை பறித்து சிறுமிகள் தலையில் வைத்து அழகு பார்க்கிறார்கள். அந்தப் பூக்கள் அவர்கள் வீட்டில் சப்பாத்திக்கு தொடுகறியாகவும் பயன்படுகிறது. சிறிய குன்றிலிருந்து சறுக்கி விளையாடுகிறார்கள். மீனை கையால் பிடிக்கிறார்கள். நண்டின் வயிற்றிலிருக்கும் குஞ்சுகளை ஒருவன் பிரித்துக் காட்டி மீண்டும் ஆற்றில் விடுகிறான். அது முன்போல நீந்திப் போகிறது. அருவியில் குளித்து மகிழ்கிறார்கள். பள்ளிக்கு சீருடையில் செல்கிறார்கள். ஒரு தனியார் பள்ளிப் பேருந்தைக் காட்டுகிறார்கள். இப்படிப்பட்ட இடங்களில் கூட  தனியார் பள்ளிகள் இருக்கிறது போலும். 

                  காட்டில் மழை பெய்கிறது. அருவியும் ஓடையும் சலசலக்கிறது. மேகங்கள் மிதந்து செல்கின்றன. மரங்கள் பச்சைபசேல் என்று காட்சியளிக்கின்றன. திடீரென்று காட்டு தீ பரவுகிறது. மக்கள் தங்கள் கைகளால் தண்ணீரை ஊற்றி அணைக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் முடியவில்லை. காட்டின் ஒரு பகுதி அழிந்துவிடுகிறது. மரங்கள் பட்டுப் போய் நிற்கின்றன. அதில் பறவைகள் சோக கீதம் இசைக்கின்றன. விலங்குகளின் எலும்புக் கூடுகள் கிடக்கின்றன. ‘யார் தீ மூட்டினார்கள்’ என்று கேள்வி கேட்கிறது. ஆனால் பதில் இல்லை. அதே சமயம் அருகிலுள்ள நெடுஞ்சாலையில் கார்களும் மற்ற வாகனங்களும் ஒலி எழுப்பிக் கொண்டு செல்வதைக் காட்டுகிறார். இரண்டிற்கும் ஏதோ தொடர்பு இருக்கிறதா? ‘காட்டிற்குள் செல்பவர்கள் அஞ்சக் கூடாது. வழிகளை தேடக் கூடாது’ என்கிற ஒரு கவிதையுடன் படம் முடிகிறது.

Jaadui Jungle (Magical Forest) | Archana C

                        திரைப்படம் ஒரு காட்சி ஊடகம் என்பதை அருமையாக பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர். ஆனாலும் ஆங்காங்கே வரும் வசனங்களும் சிறப்பாக இருக்கின்றன. சிறுவர்களில் ஒருவன் தான் மரமாக வேண்டும்; எல்லோருக்கும் பழம் கொடுக்க முடியும்’ என்கிறான். இன்னொருவன் ‘ ஆறாக வேண்டும். எல்லோருடைய தாகத்தையும் தீர்க்க முடியும் ‘ என்கிறான். மாணவிகள் வீட்டின் மேற்கூரையில் அமர்ந்து பாடம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.. அப்பொழுது மயில் கூவும் ஓசை கேட்கிறது. ஒருத்தி தான் மயிலாக மாற வேண்டும் என்கிறாள். வீட்டிற்கு திரும்பும்போது தரையில் கிடக்கும் சுள்ளி, கட்டைகளை பொறுக்கி கட்டு கட்டி விறகுக்காக எடுத்து வருகிறார்கள். ‘நாங்கள் கீழே கிடக்கும் கட்டைகளைத்தான் எடுப்போம். ஒருபோது மரங்களை வெட்ட மாட்டோம்’ என்கிறார்கள். ‘காட்டில் நீ எதற்குப் பயப்படுகிறாய்?’ என்று கேட்கும்போது ‘தனியாக இருப்பதற்கு’ என்றும் ‘ காடு எதற்குப் பயப்படுகிறது?’ என்பதற்கு ‘மனிதர்களுக்கு’ என்றும் பதில் சொல்லப்படுகிறது.

                வன இலாக்கா அதிகாரிகளோ, ஒப்பந்ததாரர்களோ, கார்ப்பரேட் நிறுவனங்களோ எந்த இடத்திலும் காட்டப்படவில்லை. இயக்குனரின் நோக்கம் காட்டுத் தீயின் விளைவுகளைப் பற்றி சொல்வது மட்டுமே போலும். இதை இயக்கியுள்ள அர்ச்சனா சந்திரசேகர் தான் ஒரு சுயேச்சையான இயக்குனர் மற்றும் தொகுப்பாளர் என்கிறார். இந்தப் படம் ‘யுனிசெப் இன்னொசென்ட் திரைப்பட விழா 2019’ 16ஆவது ‘ஆசிய மகளிர் இயாவார்ட் திரைப்பட விழா’ மற்றும் இந்தியாவில் பல்வேறு தேசிய, பிராந்திய திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளதாம்.