யாழ் ராகவன் கவிதைகள்பொருள் விளங்காத சொற்களின் பட்டியலில் மரணம் முதலில் நிற்கிறது
பிணத்தைசுற்றி கேட்கும்
  ஓலங்கள்   மூளையைப் புரட்டி எடுக்கிறது
விரும்பிய பகலோ விரும்பாத இரவோ கடந்துதான் போக வேண்டி இருக்கிறது
விரித்த கைகளில் காலபட்டாம்மூச்சி
 ஊர்ந்து செல்கையில் யாதும் புலப்படுவதில்லை
உதிர்வதும் துளிர்ப்பதும்
நம் வசம் இல்லை
சொல்வதும் கேட்பதும்
 ஒன்றா வேறொன்றா…


கவிதை 2
எனது வேதனகளை
மொழிபெயர்த்து பகர்கிறது
அறையின் ஐந்தாவது சுவர்
வெறுமையின் கோரம் கடித்த
தனிமையின் மீது பீறிடுகிறது ரத்தம்
நிகழின் தூக்குமேடையில்
பிசுபிசுத்தபடி நிற்கிறது
நிர்வாணம் கலையாத நிழல்
காலைச் சுற்றி
கழுத்தைக் கௌவிய மௌனத்திக்கு
குரல்வளைக் குருத்திக்கு முன்னேறுகிற அவசரம்
கடன் வாங்கியேனும் கழிக்க முனைந்து
மூளைக்குள் தடதடக்கும்
மகளின் கணிதப் பாட நேரலை
எங்கோவான நாயின் குரைத்தலில்
திரும்பிப் பார்த்த கண்களுக்கு
கொஞ்சம் காற்றிலசைகின்றன
சரக்கொன்றை மலர்கள்
                       – யாழ் ராகவன்