மறைந்திருக்கும் மூலை
(The Hidden Corner)
2016 / அஸ்ஸாமிய சினிமா / 90 நிமிடங்கள்
1979 இல் அஸ்ஸாம் மாநிலத்தில் நடைபெற்ற உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம் இது. அஸ்ஸாம் மாநிலத்தின் அன்றைய சமூக, அரசியல் சூழல் பற்றிய வரலாறு தெரிந்திருந்தாலே இப்படம் புரியும். 1971 இல் கிழக்கு பாகிஸ்தான், வங்காளதேசமாக விடுதலை அடைந்த காலத்தில் அங்கிருந்து லட்சக்கணக்கானவர்கள் அகதிகளாக இந்தியாவுக்குள் நுழைந்தனர். அவர்கள் நுழைந்தது அஸ்ஸாம் மாநிலத்துக்குள்தான். அக்காலத்தில் மாநிலத்தின் சமூக பொருளாதார நிலைமை மோசமானதைத் தொடர்ந்து அங்கு உல்ஃபா (United Liberation Front of Assam) என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. அவ்வமைப்பு, இந்தியாவிடமிருந்து அஸ்ஸாம் விடுதலை பெற வேண்டுமென போராடியது. பல்லாயிரக்கணக்கான அஸ்ஸாமிய இளைஞர்கள் உல்ஃபா அமைப்பில் இணைந்து ஆயுதமேந்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உல்ஃபா தீவிரவாதிகள் என்று இந்திய அரசும், இந்திய ஊடகங்களும் அவர்களை அழைத்தன. ஆனால் அவர்கள் தங்களை விடுதலைப் போராளிகள் என்றுதான் அழைத்துக்கொண்டனர். நீண்ட காலம் நீடித்த உல்ஃபா அமைப்பின் ஆயுதப் போராட்டத்தை இறுதியில் இந்திய ராணுவம் முறியடித்தது அல்லது அடக்கி ஒடுக்கியது. ஒரு கட்டத்தில் உல்ஃபா இரண்டாகப் பிரிந்து ஒரு பிரிவினர் ஆயுதங்களைப் போட்டுவிட்டு இந்திய அரசிடம் சரணடைந்தனர். இன்னொரு பிரிவினர் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தினர். சரணடந்தைவர்களுக்கு சொற்ப தண்டனை கொடுத்து பின்னர் அவர்களை விடுதலை செய்தது அரசு.
அந்த நீண்ட போராட்டத்தின் ஒரு பகுதியை இப்படம் பதிவு செய்திருக்கிறது. அஸ்ஸாமின் மோரோன் என்ற பிரிவைச் சேர்ந்தவர்கள் வாழும் பகுதியில் நிகழ்ந்தவை இவை. போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மட்டுமல்லாது அவர்களின் குடும்பத்தார்களும் இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்டார்கள் என்றும், போராட்டங்களில் கலந்து கொள்ளாத இளைஞர்கள் கூட ராணுவத்தால் கொல்லப்பட்டதாகவும் இப்படம் கூறுகிறது. ராணுவத்தால் பிடிபட்ட போராளிகள் கடுமையான சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டதாகவும் படம் கூறுகிறது.
முக்தி என்ற இளைஞன் காணாமல் போகிறான். காணாமல் போய்விட்ட 30000 க்கு மேற்பட்ட இளைஞர்களுள் அவனும் ஒருவன். அவன் என்ன ஆனான்? என்ற தகவல் இல்லாமல் அவனது தாய் துயருறுகிறாள். உயிரோடு இருக்கிறானா, செத்து விட்டானா? என்ற தாயின் தவிப்பு. முக்தியை நேசிக்கிற அவனது சிறுவயதுப் பெண் தோழியும் அவன் எப்படியும் திரும்ப வந்துவிடுவான் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறாள். சரணடைந்து விடுதலையாகி வரும் பிப்லாப் என்ற இளைஞன் தனது போர் அனுபவங்களால் மிகுந்த மன உளைச்சலாகி, அவதிப்படுகிறான். உடல் சிதைக்கப்பட்ட பிணம் ஒன்று ஆற்றில் கிடைக்கிறது. அது முக்திதான் என்று நம்பி அவனுக்கு இறப்புச் சடங்குகளை நடத்துகிறாள் தாய். பின்னர் முக்தி சாகவில்லை, உயிரோடுதான் இருக்கிறான் எனச் செய்தி வருகிறது. மன உளைச்சலுக்கு ஆளாகும் முக்தியின் தாய் தற்கொலை செய்து கொள்கிறாள். அவளுக்கு இறப்புச் சடங்கு நடக்கிறது. இது போன்ற பல நிகழ்வுகள் அஸ்ஸாமிய குடும்பங்களில் நீங்காத துயர வடுக்களை விட்டுச் சென்றிருக்கிறது.
புதிய இளம் இயக்குநர் ஜெய்செங் ஜெய் எழுதி இயக்கியிருக்கிறார். தொழில்முறை நடிகர்கள் இல்லை. தனக்குத் தெரிந்தவர்களையே நடிக்க வைத்திருக்கிறார்.. 36 ஆண்டுகளுக்குப் பின், தன் மாநிலத்தில் நடந்த போராட்ட இயக்கம் அஸ்ஸாமிய குடும்பங்களில், அஸ்ஸாமிய சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை கதையாக அமைத்து அதன் கதாபாத்திரங்கள் வழியாக ஆயுதப் போராட்டம், ராணுவ அடக்குமுறை, மரணங்கள், இழப்பின் துயரம் ஆகியவற்றை அற்புதமாக பார்வையாளனுக்கும் கடத்துகிறார் இயக்குநர்.
2017 இல் அஸ்ஸாம் மாநிலத்தின் சிறந்த படத்துக்கான மத்திய அரசின் விருது, மும்பை திரைப்படவிழாவில் நடுவர்களின் சிறப்பு விருது, கெளஹாத்தி சர்வதேச திரைப்பட விழா விருது என்று மாற்று சினிமாவுக்கான தளங்களில் விருதுகளையும் பாராட்டுக்களையும் குவித்த படம்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
Leave a Reply
View Comments