விழிகளின் உப்பரிகையில்….
நொடியெல்லாம்
புதிதாகத் தோன்றத் தொடங்க
சொற்களால் அலங்காரம்
செய்த கவிதைக்காடு
பற்றியெரிகிறது…
இறங்குமிடத்தை நிர்ணயம்
செய்யமுடியாத
அவசரப் பயணத்தில்
இதயம் அல்லாடுகிறது…
பாலை நிலத்தில்
விழுந்த ஒரு மழைத்துளியாய்
காணாமல் போய் அலைகிறேன்…
முளைத்துப் பெருக்கெடுக்கும்
ரகசியங்களைக் கிசுகிசுத்து
கிச்சுகிச்சு மூட்டியே
களைத்துக்கிடக்கும்
குரல் வழி இழையும் பேரன்பு…
தீச்சுடருக்குள் தண்ணீரும் நீர்க்குவளைக்குள் பெருஞ்சுவாலையுமென
திடீர் மாயங்கள்…
நாடி நாளங்களுக்குள் குருதியின் கடலலைகள்
கொந்தளித்துச்சென்று
நெஞ்சக்கதவைத் திறக்க
எத்தனிக்கும்….
என் விழிகளின்
உப்பரிகையில்
ஏறி உட்கார்ந்த
தேவதையின்
மந்திரக்கோலில்
இதெல்லாம் நொடியில்
நிகழும்!
******
Dr ஜலீலா முஸம்மில்
ஏறாவூர்
இலங்கை