மீள முகிழ்க்கும் பனிமலர்
விட்டுச் சென்றால் பரவாயில்லை
விடுதலை பெற்றால் நன்று
தூர இருந்தால் துயரம் தவிரும்
தீராத தலைவலி தீரும்
அப்படியெல்லாம் தோன்றும்
அப்படியெல்லாம் நடக்க ஏங்கும்
நிகழ்ந்து விட்டாலோ
நினைவுகள் ஏய்க்கும்
நேசத்தின் உஷ்ணத்தில்
ஞாபகங்கள் தீய்க்கும்
இரவின் தனிமை கொஞ்சம் பயம் தரும்
இரவின் நீளத்தில் எண்ண அளவுகோல் உடையும்
உறவாக்கும் வரைக்கும் ஏக்கம்
உள்வாங்கி விட்டால் காலப்பிரளயத்தில் வெறுப்பாகி
எட்டவே நிற்கும்
முற்றத்து மல்லிகை மணப்பதில்லை
முற்றத்து வெண்ணிலவு கண்களுக்குத் தெரிவதில்லை
விடுகையில்
நினைவுகளின் நெருக்கடி தரும் துயரத்தை விட
விட்டுச் செல்லாது உடனிருத்தல்
பரவாயில்லை
அது மீண்டும் முகிழ்க்கும் சிறுநேசத்தின் பனிமலராகக் கூடும்!!
பெருந்துயரக்கருந்துளை
அன்பு பிறழ்ந்து
வெறுப்பாகி விடுகையில்
அன்பு உடைந்து
விகாரமடைகையில்
அன்பு மடிந்து
மௌனம் கொள்கையில்
அன்பு கழிந்து
ஆழமாய் வலிக்கையில்
அன்பு அழிந்து
இல்லாமல் ஆகுகையில்
அன்பின்மை
நிரூபிக்கப்படும் தருணங்களில்
அன்பின்மை
உணரப்படும் தருணங்களில்
அன்பின்மை
வெளிப்படும் வேளைகளில்
அன்பின்மை
நெருக்கடி தருகையில்
கருந்துளைக்குள்
ஓடி ஒளிந்து கொள்கிறது
என் ஆன்மா…!
எழுதியவர்:
Dr. ஜலீலா முஸம்மில்
ஏறாவூர்
இலங்கை
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


மிகவும் அருமை