ஜல்லிக்கட்டு – மனித மிருகத்தின் இருண்மைப் பக்கங்கள் | இரா.இரமணன்2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட மலையாள மொழித் திரைப்படம். ஹரீஷ் என்பவர் எழுதிய ‘மாவோயிஸ்ட்’ என்கிற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. லிஜோ ஜோஸ் பெல்லிசெரி இயக்கியுள்ளார். ஆன்டணி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ், சபுமோன் அப்டுசமத், சாந்தி பாலச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பரந்த பாராட்டுகளைப் பெற்றது; 24ஆவது பூசன் பன்னாட்டு திரைவிழாவிலும் பங்கேற்றது; 50ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனர் விருது பெற்றது; எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல் 27 திரைப்படங்களுடன் போட்டியிட்டு ஆஸ்கார் விருதிற்கு நியமனம் செய்யப்பட்டிருக்கிறது. முதல் வாரத்தில் கேரளாவில் ரூபாய் பத்து கோடியும் உலக அளவில் நாற்பது கோடியும் வருவாய் ஈட்டியுள்ளது.

கேரளா மலைக்கிராமம் ஒன்றில் காளன் வர்க்கி என்பவர் மாட்டிறைச்சி விற்கிறார். அந்தக் கிராம மக்கள் எல்லோரும் அவரிடம் நல்ல முறையில் பழகுகிறார்கள். ஒருநாள் வெட்டுவதற்காக கட்டி வைத்திருந்த எருமை அவிழ்த்துக்கொண்டு தப்பி ஓடிவிடுகிறது. அதைப் பிடிப்பதற்காக மொத்த கிராமுமே திரள்கிறது. அந்த நிகழ்வினூடே மக்களின் இயல்புகள், பழைய பகைமைகள், இருண்ட பக்கங்கள் ஆகியவை நகைச்சுவையோடு சொல்லப்படுகிறது.

പോത്തിന് പിന്നാലെ അമ്പരപ്പിക്കുന്ന ഒാട്ടം; 'കണ്ണുതള്ളിച്ച്' ജല്ലിക്കെട്ട്  ടീസര്‍: വിഡിയോ | Jellikettu | Social Media | Viral Video | Entertainment  News | Manorama News

காலை சிற்றுண்டிக்காக மனைவியிடம் கடுமையாக சண்டை போடும் காவல் ஆய்வாளர், மகள் திருமணத்திற்காக மாட்டுக்கறியுடன் பல்வேறு உணவுவகைகளை நாக்கில் நீர் ஊறும் வண்ணம் திட்டமிடும் ஒரு தந்தை, எருமையும் ஒரு உயிர்தான் அதை விட்டுவிடுங்கள் என்று கூறிவிட்டு தன் தோட்டத்தை அது நாசமாக்கியதைப் பார்த்ததும் கோபப்பட்டு புகாரளிக்கும் பால் என்பவர், பல்வேறு விதிகளை கூறி எருமையை சுட முடியாது என்று கூறும் காவல் அதிகாரி, இந்த சூழ்நிலையிலும் கடனையும் வட்டியையும் கேட்கும் ஒருவர், கட்சிக் கொடிக்கம்பத்தை சாய்த்துவிட்டதற்கு ஒரு மோதல் என பல்வேறு நிகழ்வுகள் நடக்கின்றன. திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தன் காதலனுடன் ஓடிப்போக முயற்சிக்கிறாள். மாட்டுக்கறி கிடைக்காது என்று தெரிந்த அவளது தந்தை கோழி வாங்கப் போன இடத்தில் திருடனாகப் பார்க்கப்பட்டு அவமானப்படுத்தப்படுகிறார். கஞ்சா விற்றது, சர்ச்சில் சந்தன மரம் வெட்டியது என பல குற்றச்சாட்டுகளினால் ஊரை விட்டு துரத்தப்பட்ட குட்டியச்சன் துப்பாக்கியுடன் திரும்பி வருகிறான். தன்னைக் காட்டிக் கொடுத்த ஆண்டனியை பழிவாங்க முயற்சி செய்கிறான். ‘பூமாலை வாலிபர்கள்’ என்ற கூட்டம் பாட்டு பாடிக்கொண்டு இந்த தேடலில் கலாட்டா செய்கிறது. எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையின் ஜீப் எரிக்கப்படுகிறது. பிறகு காவல் அதிகாரியும் ஊர் மக்களுடன் சேர்ந்து தேடுகிறார். இப்படி பல்வேறு நிகழ்வுகள் எருமையை தேடுவதின் ஊடாகக் காட்டப்படுகிறது.

தப்பி ஓடும் எருமை கிணற்றில் விழுந்து விடுகிறது. எல்லோரும் சேர்ந்து மிக சிரமப்பட்டு அதை மீட்கிறார்கள். ஆனால் இறுதியில் அது பிடிபட்டவுடன் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வது சற்று முரணாகத் தெரிகிறது.

രാഷ്ട്രീയം ഇങ്ങനെ തന്നെ പറയണം; ജല്ലിക്കട്ട് ഞെട്ടിക്കും മലയാളികളെ
படத்தின் இறுதிக் காட்சியில் பிடிபட்ட எருமை தங்களுக்குதான் சொந்தம் என்று ஊர் மக்கள் ஒருவரோடு ஒருவர் அடித்துக் கொள்கிறார்கள். இந்தக் காட்சியில் மக்கள் கூட்டம் பல்வேறு திசைகளிலிருந்து வந்து கூடுவதாகவும் பன்மடங்கு பெருகுவதாகவும் காட்டப்படுகிறது. அதாவது கதை முதலிலிருந்து பார்த்த நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டு ஒரு பொது தளத்திற்கு செல்கிறது. ஆதி மனிதர்கள் எருமையைக் கொன்று குகையில் கூடி நின்று ஆடிக் களிக்கும் காட்சியுடன் படம் முடிகிறது. மனிதனின் பரிணாமத்தின் ஒரு பகுதியை கலையம்சத்தோடு சொல்வதால் இந்தப் படம் ஆஸ்கார் விருதிற்கு நியமனம் செய்யப்பட்டிருக்கலாம். படத்தின் ஒளிப்பதிவு, தொழில்நுட்ப மேன்மை ஆகியவற்றிற்காகவும் தேர்வு செய்யப்பட்டிருக்கலாம். சில வசனங்களும் கூர்மையாக உள்ளன. எடுத்துக்காட்டாக் ‘இந்தக் காடு விலங்குகளுக்கு சொந்தம். நாம்தான் இங்கு வந்து ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறோம். நாமெல்லாம் இரண்டு கால் விலங்குகள்’ என்பது.

ஒற்றுமையாக வாழ்ந்த ஆதி மனிதன் கொஞ்சம் கொஞ்சமாக சுயநலத்தில் வீழ்ந்ததும் இன்று அடித்துக் கொண்டு சாவதற்கும் காரணம் என்ன என்பது மில்லியன் டாலர் கேள்வி.