ஜமா Jama (2024) – திரைப்பட விமர்சனம்
நடிகர்கள் : பாரி இளவழகன், சேட்டன், ஸ்ரீ கிருஷ்ணா தயாள், அம்மு அபிராமி கே வி என் மணிமேகலை, சத்யா மருதாணி, உள்ளிட்ட பலர்.
எழுத்து இயக்கம்: பாரி இளவழகன்
இசை : இளையராஜா
ஒளிப்பதிவு: கோபாலகிருஷ்ணன்
படத்தொகுப்பு: பார்த்தா
“யே தனம்.. பத்திரமா போயிட்டு வாமே.. பெரியவன் கைய புடிச்சிகினு கூட்டிட்டு போ.. தோப்பு தெருலே மணி சாந்தா கோயிந்தம்மா கணேசன் ஊட்டுல கெளம்பி உங்கூட வருவாங்க. நா அண்ணாமலை போஸ் மாஸ்டர் கிட்டயும் பேசிட்டே .. அந்த ஜாங்கடா ஊட்ல தான் எல்லாத்துக்கும் சோறு.. ஐங்குணம் வாத்தியார் ஊட்டுகிட்ட கிற கம்பத்துல ஃபால்ட் பாத்துட்டு நேரா சைக்கிள்ல நா வந்துடறேமே..’ இப்படி என் அப்பா பேசி முடித்ததும் அம்மா வேக வேகமாக வீட்டு வேலைகளை செய்ய தொடங்கி விடுவார். மல்லாட்ட மறக்காமல் வறுத்து வைப்பார்.. கூடவே வெல்லம் கண்டிப்பாக இருக்கும்.. கடையில வாங்கின அஞ்சு பைசா முறுக்கு. ஒரு ரூபா கமர்கட்டு நிறைய வாங்கி வச்சுக்கிடுவோம். சாயங்காலம் எப்ப வரும்னு பாத்துக்கிட்டே இருப்போம் நானும் என் தம்பியும். எல்லாரும் வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் சோமாஸ் பாடியிலிருந்து இருட்ட தொவங்கும் போது கத்திரிக்கி (கலித்தேரி யை கத்திரி என்றே அழைப்போம். சோமாஸ்பாடிக்கு பக்கத்தில் இருக்கும் கிராமம்.. சரி பாதி முஸ்லிம்களும் இருப்பார்கள்.
அவர்கள் மந்தார இலையில் கட்டி கொடுக்கும் வெள்ளாட்டுக் கறி செம்ம ருசியா இருக்கும்) கிளம்பிடுவோம். கழனியங்கும் நடவு செய்து முடித்து இருப்பார்கள். ஈரம் கண்ட கழனி மண்ணை பிளந்து கரும்பு முளைவிட்டு இருக்கும் ஆங்காங்கே வரிசையாக. வயல் வரப்புகளில் வரிசையாக பலர் நடந்து சென்று கொண்டிருப்பார்கள்.
பச்சை புல் மூடி இருக்கும் வயல் வரப்புகளில் நடந்து செல்வதே ஒரு சுகம்.. அதைவிட இன்பம் வரப்பை ஒட்டி இருக்கக்கூடிய வாய்க்காலில் இருக்கும் நீரில் இறங்கியும் வரப்பில் ஏறியும் செல்வது சுகமோ சுகம். அதற்காக தலையில் கொட்டு வாங்கியதும் உண்டு அம்மாவிடம். கழனி காடுகளில் நடந்து போகும்போது தவளை சத்தம். பூச்சி பறக்கும் சந்தம். வண்டு சத்தம் இப்படி எல்லாமும் விட்டு விட்டு கேட்டுக் கொண்டே இருக்கும். நடவு வைத்த கழனிக்குள் தேங்கி இருக்கும் நீரைத் தடவி வரும் காற்று “சிலு சிலு” என்று நம் உடலைத் தழுவி போகும். இரவு ஏழு மணிக்குள் கத்தரி கிராமத்திற்கு சென்று விடுவோம். அண்ணாமலை போஸ்ட் மாஸ்டர் வீட்டில் எல்லோருக்கும் இரவு சாப்பாடு ரெடியா இருக்கும். கை கால் அலம்பி கொண்டு சாப்பிட உட்காரும்போது சூடான சோறில் சுடச்சுட போஸ்ட் மாஸ்டர் மகள் அமுதா அக்கா ஊத்தும் கத்திரிக்கா குழம்பு மனம் இப்பொழுதும் என்னுடைய நாசி ருசித்து கொண்டிருக்கிறது. முறுக்கு, பச்ச மல்லாட்ட, வறுத்த மல்லாட்ட, கமர்கட், பக்கத்தில் அமுதா அக்கா. கொஞ்ச நேரத்தில் தூக்கம் வந்துடும். கூத்து முடிஞ்ச விடியற்காலை, அன்பு டேய் என அக்கா குரல் கொடுக்க டவுசரை பின் பக்கம் தட்டிக் கொண்டே எழுவேன் கண்கள் தூக்கத்தோடு.
இப்படியான என் எட்டு வயது நினைவுகளை கிளர்ந்து எழச் செய்து மீண்டும் வயல் வரப்புகளிலும் வாய்க்கால்களிலும் கால் நனைக்கச் செய்தது #ஜமா திரைப்படம் (Jama)
ஒருவரை, அவர் முகத்துக்கு நேரா “ஏன் இப்படி எதுக்கெடுத்தாலும் கோபப்படுறீங்க?” அவர் காது படும்படியாக “அதோ போறாரே..அவரு சும்மா சும்மா கோபப்படக்கூடிய ஆளு..”
அவரை நேரில் பார்த்து
“அவங்க எல்லாரும், நீ எதுக்கு எடுத்தாலும் கோபப்படுற_ அப்படின்னு சொல்றாங்களே.. இப்படியாகத் தொடர்ந்து சொல்லி பாருங்கள், அவருடைய மன நிலை என்னவாயிருக்கும்.? அவர், தான் குறித்து என்ன மாதிரியான அவதானத்திற்கு வருவார் என்று.
அதேபோல் “எதுக்கடுத்தாலும் சிரிக்கிறார்.”..
“சிரிப்ப பாரு.. பச்ச சிரிப்பா இருக்கு.”
“லூசா நீ.. இப்படி சிரிச்சுக்கிட்டே இருக்குற..”
“பைத்தியம் மாதிரி எல்லாத்துக்கும் சிரிக்காதே..”
இப்படி ஒருவர் குறித்து நேரடியாகவோ இல்லை அவர் காதில் விழும்படியோ மற்றவர்கள் பேசுகிறார்கள் என்று தொடர்ந்து சொல்லுவது என்ன விதமான மாற்றத்தை அவருக்குள் நிகழ்த்தும்..? தான் அப்படித்தான் இருக்கிறோமோ அப்படித்தான் நடந்து கொள்கிறோமோ என்கிற சஞ்சலத்தை சலனத்தை அவருக்குள் ஏற்படுத்தும்.
அவர்கள் கோபத்தில் இருக்கக்கூடிய நியாயத்தையும்.. பேசும் வார்த்தையில் இருக்கக்கூடிய அறத்தையும்
நேர் எதிர் சந்திக்க முடியாதவர்கள் அல்லது கோபப்படுவதற்கான காரணத்தை இளகச் செய்யக் கூடியவர்கள் செய்யக்கூடிய செயல் இது. அதே போல் தான் சிரிப்பும். கோபமும் சிரிப்பும் மனிதர்களுக்கு அழகானது. இவை இரண்டுமே மற்ற விலங்கினத்தில் இருந்து மனிதனை தனித்துவம் மிகுந்தவனாக காட்டக்கூடியது. அதையே குறையாக்கி கூறும் மனிதர்களை எந்த கட்டத்திற்குள் நாம் வைத்துக் கொள்வது.?
மனிதர்களின் நளினமும்.. திமிர் நடையும் அவர் தன்னை பழக்கிக் கொள்வதின் காரணமாக மற்றவர்களுக்குள் அவர்கள் குறித்து அவதானிக்கிறது. இந்தத் திமிரு நளினமும் கோபமும் சிரிப்பும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கக் கூடியது. அளவு வேண்டுமானால் கூடுதலும் குறைவாகவும் இருக்கலாம்.
வீராப்பு மிகுந்த பெண் ஒருவரை திமிர் பிடித்தவள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். நளினம் மிகுந்தவனை பெண் என்கிற பார்வையில் பேசி அணுகுகிறோம். பெண்கள் குறித்தும் ஆண்கள் குறித்தும் மனித மனங்களுக்குள் அவர்களின் சிந்தனைக்குள் பல ஆயிரம் ஆண்டுகளாக கட்டமைத்து வைக்கப்பட்டு இருக்கக்கூடியவை இந்தத் தீர்ப்புகள். எழுதி வைத்திருக்கும் தீர்ப்புகள் திருத்தப்படும் பொழுது எல்லாமும் மாறும்.
சரி, நாம ஜமாகுள்ள போவோம்…
தன்னுடைய அன்பிற்குரியவள் பேரன்பிற்கு சொந்தமானவள் அவளின் சிரிப்பே தன்னுடைய மகிழ்வாக எண்ணக்கூடியவன் காலச் சூழலின் காரணமாக அவளின் பள்ளிப்படிப்பிற்காக தன்னுடைய உழைப்பை அளிக்கிறான் அவளின் குடும்பத்திற்காக. தன் காதலி தொடர்ந்து மேற்படிப்பிற்காக ஜமாவில் பெண் வேடமிட்டு தன்னுடைய காதலை கல்யாண் போற்றுகிறான்.
தெருக்கூத்து கலையில் பெண் வேடமிட்டு தான் படித்த உணர்ந்த கலைக்கு தன்னை அர்ப்பணித்துக் ஆகச் சிறந்த கலைஞ்சனாக வளர்கிறான். அன்றாட பழக்க வழக்கங்களிலும் நடை உடை பேச்சு பாவனை இப்படி எல்லாவற்றிலும் தன்னை உட்படுத்திக் கொள்கிறான். கலைஞனாக வாழ்ந்து வருகிறான். தன் வயது ஒத்த மற்ற ஆண்களோடு அவன் பேச விரும்பினாலும் எந்த ஒரு ஆணும் அவனோடு நட்பு கொண்டு பேசிட வருவது கிடையாது. அப்படிப் பேச வருபவர்களும் அவரை ஒரு பெண்ணாக பாவித்து பேசத் தொடங்குகிறார்கள்.
கேலியும் கிண்டலும் செய்கிறார்கள் அந்த கலைஞனை. இதுவே அவனை பெண்களோடு மட்டுமே தன்னை தினப்படி பழக்க வழக்கங்களை வாழ்வினைத் தொடரச் செய்து விடுகிறது. எதிரில் நின்று பேசும் ஆண் மகன்களின் நடவடிக்கையாலேயே சமூகத்தில் அந்தக் கலைஞனை பெண்களுடாகவே இருக்கச் செய்து விடுகிறது.
மனமும் அறிவும் உறுதியோடு ஒன்றிணை நோக்கி பயணம் செய்யத் தொடங்கி விட்டால் எத்தனை இடையூறுகள் வலிகள் நிகழ்த்தினாலும் அது நினைத்ததை நடத்திக் காட்டும் என்பதற்கு ஜமா ஒரு உதாரணம்.
ஜமாவை தொடங்கி வைக்கும் கலைஞர்கள்தான் கலையரசனும் தாண்டவமும். தாழ்வு மனப்பான்மை, நீயா நானா என்கிற போட்டியினை தாண்டவத்திற்குள் துளிர்க்கச் செய்கிறது ஜமாவுக்குள். தன்னால் என்ன முடியும்.? எது சாத்தியம்? என்பதை உணர முடியாத தாண்டவம் நேர் எதிர் நின்று எதிர்கொள்ள தைரியம் இல்லாமல் அறம் மறந்து நேர்மை துறந்து மனம் முழுவதிலும் வன்மத்தை நிரப்பி வஞ்சகத்தின் துணையோடு மேலே வந்து நிற்கிறான். வன்மத்தையும் வஞ்சத்தையும் நேரம் அறிந்து அறம் தாண்டவத்தின் வாழ்வினை முடித்து வைக்கும். ஜமா சொல்லும் செய்தி இதுதான் பார்வையாளர்களுக்கு.
தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வியலை வாழ்க்கையை படும் பாடுகளை துன்பங்களை பேசுகிறது. பெண்ணாக வேடமிடும் கலைஞர்கள் குறித்து சமூகத்தின் பார்வையை வலியோடும் சொல்கிறது. பெண் வேடமிட்ட கலைஞர்களுக்குள் நடைபெறும் உளவியல் போராட்டங்களை கலைஞன் என்கிற பொறுப்புணர்வோடு தமிழ்ச் சமூகத்தில் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார் திரை மொழி வழியாக ஜமா பாரி இளவழகன்.
சமூக அக்கறை மிகுந்த கலைஞனின் உணர்வும் ஆளுமையும் அவன் திரை மொழியில் பிரதானப்படுத்தும் கதாபாத்திரத்தை விட கதையை நகர்த்திச் செல்லும் துணை பாத்திரங்களே பல நேரங்களில் இயக்குனரில் மனதிலும் எண்ணத்திலும் இருக்கும் ஆழமான அர்த்தம் பேசும் கதாபாத்திரங்களாக நேர்த்தியாகப் படைக்கப்பட்டிருக்கும். அப்படித்தான் கல்யாணத்தின் காதலி ஜெகா, ஜெகாவின் அம்மா.. கல்யாணத்தின் அம்மா இந்த மூன்று கதாபாத்திரங்களும் தைரியம் மிகுந்தவர்களாக, அதிகாரத்தை எதிர்த்து கேள்வி கேட்பவர்களாக இயக்குனரின் பெண்கள் குறித்தான பார்வையில் இருந்து படைக்கப்பட்டிருக்கிறது. அன்பு கொண்டவர்களாக அறம் பேசுபவர்களாக ஜமாவில் பெண்கள் காட்டப்பட்டிருக்கிறார்கள்.
கூத்தில் பெண் கதாபாத்திரமாக மாறி நடிக்கும் கல்யாணத்தை பார்க்கும் ஆண்கள் அவனை பெண்ணாக நினைத்து அழைக்கும் பொழுதும் பேசும்பொழுதும் தான் ஆண் இல்லையோ என்கிற குற்ற உணர்வில் ஜெகாவின் காதலை ஏற்க மறுக்கிறான். பெண் நிலையிலிருந்து ஆண் என்கிறவன் எப்படிப்பட்டவன் என்பதை ஜெகா பேசும் வசனங்கள் பல ஆண்களுக்கும் பொருத்தப்பாடு கொண்டதாகவே இருக்கும் நம் சமூகத்தில். விருத்தி செய்வதையே ஆண்களுக்கான அடையாளமாக வைத்திருக்கும் பலருக்கும் ஜெகாவின் பேச்சு சாட்டையடி. ஜாமாவில் தான் அர்ஜுனன் வேஷம் கட்ட வேண்டும் என்று கல்யாணம் வந்து பேசும் பொழுது அவனை எடுத்தெறிந்து பேசி அவமானப்படுத்தி, தாண்டவம் அடிக்கும் பொழுது ஜகா அம்மாவின் எதிர்ப்பு. சம்மந்தம் பேச வரும்பொழுது தாண்டவத்தின் பேச்சால் நடவடிக்கையால் கல்யாணத்தின் அம்மா பேசும் எதிர் பேச்சு. இப்படி ஒடுக்கப்படும் பெண்களின் குரலாக கதாபாத்திரத்தின் தன்மைக்கு ஏற்றவாறு ஜமாவில் கட்டப்பட்டிருக்கிறார்கள். மூவரின் குரலும் வெவ்வேறு மீட்டரில் படம் முழுவதிலும் உள்ளீடாக நேரிடையாக அதிகாரத்தை எதிர்க்கும் சக்தி கொண்டதாக இருக்கும். தொடரும் ஆண் ஆதிக்க எதிர்ப்பு என்பது ஒரே கோர்வையாக ஏற்ற இறக்கங்களோடு கதாபாத்திரங்களின் தன்மைக்கேற்ப கோர்க்கப்பட்டு இருக்கிறது.
திரைப்படத்தில் பல இடங்களில் வசனங்கள் எதார்த்த வாழ்வினை பேசுவதாக அமைக்கப்பட்டு இருக்கிறது.
மனித மனங்களுக்குள் எழும் போட்டிகள் இன்னொருவரின் அடையாளம் அவரது வளர்ச்சியின் மீதான வன்மங்கள்.. அதன் தொடர்ச்சியாக வஞ்சகமாய் தங்களின் செயல்களுக்கான திட்டமிடல்.. மரபுகளின் மீறலும், வழக்கத்தின் மாற்றமும் நபர்களின் தேவை சார்ந்தே முன்னிறுத்தப்படுகிறது, தேவை சார்ந்து கையெடுப்பவர்களால் அவர்களின் நலன் சார்ந்து மரபும் வழக்கமும் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும் என்பதை முத்தாய்ப்பாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
முதல் படத்திலேயே தனி முத்திரை பதித்திருக்கிறார் இயக்குனர பாரி இளவழகன். நடிப்பிலும் அசத்தியிருக்கிறார் இயக்குனர். கூத்தில் அர்ஜுனனாக நடிக்க வேண்டிய கல்யாணத்தை, வஞ்சகமாய் குந்தியாக நடிக்க செய்கிறார் தாண்டவம். கர்ணனாக தாண்டவம் நடிக்கிறார். பாரதப் போர் கூத்தில் அர்ஜுனனால் கொல்லப்படுகிறான் கர்ணன்.
தன்னால் பழி வாங்கப்பட்டதாக நினைத்து குந்திதேவியாக நடிக்கச் சொன்ன கல்யாணத்தின் உளப்பூர்வமான நடிப்பால் படத்தில் நடைபெறும் கூத்து பார்வையாளர்களை அழ வைக்கிறது. செத்துக்கிடக்கும் கர்ணனாக நடிக்கும் தாண்டவமும் சேர்ந்து அழுகிறான். கூத்து நிறைவு பெறுகிறது. எல்லோரும் கல்யாணத்தின் நடிப்பை கொண்டாடுகிறார்கள். தான் தவறு செய்த குற்ற உணர்ச்சியில கல்யாணத்தின் கால்களில் விழுந்து தாண்டவம் மரணமடைகிறான். தாண்டவத்தின் மரணத்தோடு கல்யாணம் வெற்றி பெற்று விட்டான் என்கிற மாதிரி திரைப்படத்தை முடிக்காமல் விட்டது இயக்குனரின் வெற்றியாக; படத்தின் வெற்றியாக நான் பார்க்கிறேன். அதன் பிறகான காட்சிகளை அமைத்திருப்பதே திரைப்பட இயக்குனரின் திரைப்படம் குறித்தான மாற்று சிந்தனையாக.. திரைப்படம் குறித்தான சரியான புரிதலாக நான் கவனிக்கிறேன். சபாஷ் பாரி இளவழகன். புதிய பாதையில் உங்களின் பயணம் தொடர்ந்து இருக்கிறது. வெற்றி பெறட்டும்.
திரைப்படங்கள் பலதில் அம்மாவாக நடித்திருக்கும் கே வி என் மணிமேகலை இதிலும் தன்னுடைய பணியை சிறப்பாக செய்து முடித்து இருக்கிறார். தமிழ் திரைப்பட உலகிற்கு புதிய அம்மாவாக அடையாளம் காட்டி இருக்கிறார் சத்யா மருதாணி அவர்களை இயக்குனர். சின்ன சின்ன முக அசைவுகளில் பாவனைகளில் சத்யா மருதாணி சிறப்பாக செய்திருக்கிறார். ஜெகாவாக அம்மு அபிராமி மிக நேர்த்தியாக நடித்து தன்னுடைய பங்களிப்பை திரைப்படத்தில் கொடுத்திருக்கிறார். கூத்துக் கலைஞர்களின் முன்னோடியாக மூத்தவராக நடித்திருக்கும் பூனை என்பவரின் நடிப்பு மிகச் சிறப்பு.
தாண்டவமாக திரைக்கலைஞர் சேட்டன் மிரட்டி இருக்கிறார், தான் ஒரு நடிப்பு அரக்கன் என்பதை சொல்லி இருக்கிறார். ஆசை மிகுந்த அவரின் கண்களுக்குள் இருக்கும் வஞ்சத்தை உணர முடிகிறது பார்வையாளர்களால்.
கோபப்பட்டு கல்யாணத்தை அடிக்கும் பொழுதும் இதமாக பேசி கல்யாணத்திடம் வேலை வாங்கும் பொழுதும், குழுக் கலைஞர்களிடம் வஞ்சமாய் பேசி தன் பக்கம் அவர்களை இழுத்து வைத்துக் கொள்ளும் பொழுதும், இப்படி படம் முழுவதும் தான் வருமிடமெங்கும் நடிப்பால் தனக்கென தனித்துவம் மிகுந்த அடையாளத்தை பதித்திருக்கிறார் திரைக்கலைஞர் சேட்டன்.
ஜமாவின் இசை.. இளையராஜா.. தனி ராஜாங்கத்தை நடத்திக் காட்டி இருக்கிறார் இசை ராஜா. படத்தின் வழியாக இயக்குனர் பார்வையாளர்களுக்கு சொல்ல வந்திருக்கும் செய்தியினை கொண்டு போய் சேர்ப்பதில் பெரும் பங்காற்றி இருக்கிறது இசை ராஜா இளையராஜாவின் இசை.
கோபாலகிருஷ்ணனின் ஒளிப்பதிவில் திருவண்ணாமலையும். பள்ளிகொண்டா பட்டும் சுற்றி இருக்கும் கிராமங்களும் இன்னும் அழகாக காட்டப்பட்டு இருக்கிறது.
படத்தொகுப்பு பார்த்தா சிறப்பாக செய்திருக்கிறார். இன்னும் அவரின் கூடுதல் கவனம் இருக்க வேண்டும் என நினைக்கத் தோன்றுகிறது. இயக்குனர் எதைச் சொல்ல வருகிறார் என்கிற புரிதல் படத்தொகுப்பாளருக்கும் சரிவிகிதத்தில் இருந்திருந்தால் படத்தின் கால அளவு இன்னும் குறைக்கப்பட்டு இருக்கலாம்.
50 வருடங்களுக்கு முன்னால் எல்லோராலும் கொண்டாடப்பட்ட கூத்து இன்று கிராமங்களுக்குள் என்ன நிலையில் இருக்கிறது என்பதை எதார்த்தத்தில் இருந்து காட்டியிருக்கிறார்கள் ஜமாவில்.
ஜமாவை தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கிய பொழுது தமிழ் திரையுலகம் கொண்டாடத் தவறிய ஆகச்சிறந்த படைப்பு.
தங்களுக்கென தனிச் சிறப்பு ஒளி வட்டத்தோடு எதார்த்த வாழ்வில் சம்பந்தமில்லாமல், பிரம்மாண்டத்தின் பெயரில் கோடிக்கணக்கான பணம் செலவு செய்து திரைப்படத்தை கொண்டு வருகிறார்கள் அறிமுகமான அறிவார்ந்த மாற்று சிந்தனை கொண்ட திரைக் கலைஞர்கள் திரைப்பட இயக்குனர்கள். அவர்களுக்கென்று தமிழகம் முழுவதிலும் திரை அரங்குகளை நேரத்திற்கு ஏற்றவாறு தனித்தனியாக பிரித்து வைத்துக் கொள்கிறார்கள் அல்லது தனதாக்கி வைத்திருக்கிறார்கள்.
இப்படியான சூழ்நிலையில் மக்களின் வாழ்வியல் பேசும் படங்களும் எளிய தயாரிப்பில் மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு தியேட்டர்களில் வெளி வருகிறது. திரைப்படத்தை எப்படி அணுக வேண்டும் என்கிற மக்களின் பார்வைக்குள் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக பல இளம் இயக்குனர்கள் கோடம்பாக்கத்தின் தெருக்களில் மிகவும் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை பேசுகிறோம், ஓடுக்கப்பட்டவர்கள் பழிவாங்கப்பட்ட அரசியலை பேசுகிறோம் என்ற ஒளி வட்டம் கொண்ட இயக்குனர்களும் நடிகர்களும் பல புதிய இளம் இயக்குனர்கள் கடும் முயற்சிக்குப் பிறகு வெளிவரக்கூடிய திரைப்படங்கள் வரும்பொழுது அவர்களைக் கொண்டாட வேண்டும். அவர்களுக்கான அங்கீகாரத்தை வழங்க வேண்டும் என்று நினைத்து முன்வருவது பெருந்தன்மை மிகுந்தது. அப்படியான மூத்தவர்களின் செயல்கள் பாராட்டுக்குரிய ஒன்று. அது தான் கடந்து வந்த பாதையை திரும்பி பார்த்து பல புதியவர்களுக்காக பூங்கொத்தோடு வரவேற்பதாகும். அப்படியான மேன்மைக்குரியவர்கள் தங்களின் திரைப்படம் வெளியிடும் தேதியினை ஒத்தி வைக்கலாம், தள்ளி வைக்கலாம். அவரைக்க யாரும் கேள்வி கேட்க முடியாது. அவர் முடிவு செய்தாலே அனைவரும் முடிவு செய்ததாக கொள்ளப்படும். அப்படியான செயல்கள்தான் தாம் முற்போக்கு பேசும் கருத்தாயிதத்திற்கு ஒத்திசைவாக இருக்கும்..
அதை விடுத்து ஜமா போன்ற படங்கள் வெளிவந்து அதைப் பார்த்து எல்லோரும் பேச வேண்டும் என்கிற மனநிலைக்கு வரும்பொழுது தங்களின் படத்தை வெளியிட்டு மடைமாற்றம் செய்வது ஆகப் பெரிய வன்முறையாகும். அந்த வன்முறை தான் நிகழ்த்தப்பட்டது தங்கலான் திரைப்படத்தை வெளியிட்டு. ஜமா படம் குறித்தான பார்வையாளர்களின் பேச்சினை முழுவதுமாக தங்கலான் விழுங்கிச் செரித்தான். தங்கலான் காலதாமதமாக வந்தாலும் தியேட்டரில் கிடைக்காது என்று எவரும் மறுக்கப் போவதில்லை தைரியமாக யாரும் சொல்லப் போவதுமில்லை. ரஞ்சித் விக்ரம் இவர்களின் கூட்டணிக்கு தனித்தனி ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால் பாரி இளவழகன் குழுவினர்களுக்கு இங்கு எவருமே கிடையாது. படம் பார்த்து பலர் பேசினால் மட்டுமே அந்த படம் வெற்றி பெறும். வெற்றி பெற வேண்டிய படத்தை பல நாளும் பேச வேண்டிய படத்தை மூன்று நாட்களுக்குள் மூழ்கடித்தான் தங்கலான்.
ஜமா திரைப்படத்தில் “பூனை” பேசும் வசனம் தான் எனக்கு கவனத்திற்கு வந்தது..
“நமக்கு புடிச்சவன் தோள் மேல தட்டி கொடுத்து மேலே வரவைப்பான்..
நம்மை பிடிக்காதவன் தட்டி விட்டு அமுக்கத்தான் பார்ப்பான்”
இதுதான் நடந்தது ஜமா படத்திற்கு.
எழுதியவர் :
கருப்பு அன்பரசன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.