ஜமா – ஓர் உலக சினிமா
தமிழ்த் திரையுலகம் கூத்துக் கலைஞர்களுக்கு முதலும் முடிவுமாக செய்த ஆகச்சிறந்த கலைமரியாதையும், முதல் மரியாதையும், ஜமா.
இன்றைய திரைவடிவின் ஆதி கலைவடிவமாக இருக்கும் தாய்க் கலையான கூத்துக்கலை குறித்த தமிழின் முதல் படமும் முழுமையான படமும் ஜமா.
கூத்துக்கலைக்காக தன் கல்வியையும் காதலையும் தியாகம் செய்யத்துணியும் ஒரு புதிய தலைமுறை இளைஞனின் கதாபாத்திர ஆக்கம் மிக மிக அற்புதமானது. மெய்சிலிர்ப்பானதும் கூட.
தான் விரும்பிய ஒருத்திக்காகவும் தன்னை விரும்பிய அவளுக்காகவும் பண்ணையத்தில் தன்னை ஒப்புக்கொடுக்கும் அந்த வெள்ளந்தியான ஆன்மா, இப்படத்தில் அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
திரௌபதியாக சேலையணிந்து நளினம் செய்யும்போதும் குந்தியாக ஒப்பாரியிட்டு கதறி அழும்போதும் இறுதியில் அர்ஜுனனாக தினவெடுத்து தாண்டவம் ஆடும்போதும் தன் உட்சபட்ச நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
அந்தக் காட்சிகளில் இயக்குனர் நம்மை ரசிக்கவைக்கிறார், கதறவைக்கிறார், உணர்ச்சிவசப்படவைக்கிறார்.
நடிகர் இயக்குனராக இருப்பதும் இயக்குனரே நடிகராக களம்காண்பதும் எத்தனை சவாலானது. அதை மிக இயல்பாக செய்துகாட்டியிருக்கிறார்.
அர்ஜுனனின் கிரீடம் கதாநாயகனின் தந்தையின் தலையில் வெகுகாலம் இருந்த பின்னணிக்கதையானது, உணர்வானது மட்டுமல்ல, உருக்கமானதும் கூட .
தந்தையின் கூத்துக்கலையைப் பார்த்துதான், மகனுக்கு நாடகத்தின் மீது ஈர்ப்பு வந்தது என்பதைக் குறிப்பிடும் இடம், அழகான ரசவாதம்.
உள்ளங்கை நிறைய கைத்தட்டல்களையும், வாய் நிறைய வாழ்த்துக்களையும், பெரிய செல்வமாக கருதி, தீராத வறுமையிலும் கூட, தங்கள் வாழ்வை ஒரு கொண்டாட்ட மனநிலையில் வைத்துக்கொள்ளும் ஆகச்சிறந்த கூத்துக்கலைஞர்கள் எப்போதும் மரியாதைக்கு உரியவர்கள்.
கலைகளை அடுத்த தலைமுறைக்கு சேதாரமில்லாமல் கைமாற்றிவிடும் அக்கலைஞர்கள், இச்சமூகத்தால் பாதுகாக்கப்படவேண்டியவர்கள்.
பேராசையின் காரணமாகவும், தன்முனைப்பின் காரணமாகவும், நயவஞ்சகமாகவும், திருடப்படுகிற அப்பாவின்கிரீடம் தந்தையின் கூத்துப் பட்டறையில் நடிக்கும் மற்றொரு சீடனின் தலையை அலங்கரிப்பதை, பார்வையாளர்களால் கூட சகித்துக்கொள்ள முடியவில்லை. அந்த ஏமாற்றத்தை ஆதங்கத்தை இயக்குனர் திரையில் அழகாகக் கடத்தி இருக்கிறார்.
அர்ஜுனன் கிரீடத்தை தொலைத்துவிட்டு சக கலைஞர்களால் புறக்கணிக்கப்பட்டு உச்சி வெயிலில் மொட்டைப்பாறையில் பித்துப்பிடித்ததைப் போல அழுதுகொண்டே தனியாக கதறியபடி கூத்துக்கட்டும் அப்பா, நம்மையும் விழிப்பனிக்கச் செய்கிறார்.
அர்ஜுனன் இறந்த பிறகு குந்தியின் ஒப்பாரி உலகத்தரமான கையறுநிலை காட்சி. அத்தனை தத்ரூபம். இயக்குனரும் நடிகருமான பாரி இளவழகன் அந்தக் கதாபாத்திரத்திற்கு நூறு சதவிகித நியாயம் கற்பித்திருக்கிறார் . இந்தச் சினிமாவில் திரைக்கலைஞர்கள் ஒவ்வொருவரும் கூத்துக் கலைஞர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.
கூத்து வாத்தியார் தாண்டவம் இந்தத் திரைப்படத்தின் மைய உயிராக இருக்கிறார். எத்தனை எத்தனை உணர்வுகளின் கலவைகளைத் தன் முகபாவங்களில் மாற்றி மாற்றி தந்திருக்கிறார். மகிழ்வாக இருக்கும்போது ஆனந்த தாண்டவமும், கோபமாக இருக்கும்போது ருத்ரதாண்டவமும், என்று தாண்டவம் இந்தத் திரைப்படத்தில் நடிப்பில் தாண்டவமாடி இருக்கிறார். தமிழின் மிக முக்கியமான திரைக் கலைஞராக அவர் திகழ்கிறார்.இன்னும் இதுபோன்ற நல்ல நல்ல படங்களுக்கு அவரது பங்களிப்பு இருந்தால் சினிமா கலையின் தரம் மேலும் உயரும்.
இப்படத்தின் திரைக் கதையும், கதை நகரும் அழகான கிராமம் ஒன்றின் பின்னணியும் ஒளிப்பதிவில் மின்னுகிறது.
சினிமாவுக்காக எந்த அரிதாரமும் பூசாத ஒளிப்பதிவு, ஓர் உயிருள்ள கலையாக இத்திரைப்படத்தில் மிளிர்கிறது. ஒவ்வொரு காட்சியும் நேரில் நடப்பதைப் போன்ற அனுபவத்தை, இப்படத்தைப் பார்க்கிற ஒவ்வொருவரிடமும் உருவாக்குகிறது.
சம்பந்தம் பேசவந்த இடத்தில் அவமானப்படுத்தி வீட்டிலிருந்து வெளியேற்றும் காட்சி அத்தனை இயல்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வீட்டிலிருந்து வெளியில் வந்து சண்டையை வேடிக்கைப் பார்க்கும் அந்த குறிப்பிட்ட வீதியில் இருக்கும் வரிசை வீட்டுக்காரர்களின் பின்னணிக்காட்சி அமைப்பு பாராட்டுதலுக்கு உரியது.
மரபு சார்ந்த புழங்கு பொருட்களோடு பல நிறமிகளில் காட்சியளிக்கும் கூத்து நடக்கும் இடமும், பகட்டுத்தனமில்லாத எளிய மேடையும் நிஜ நாடகத்தைப் பார்ப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தும் கதாபாத்திரங்களும் அர்த்தம் பொதிந்த உரையாடல்களும் எத்தனை நுட்பமானவை!!!
முகம் பார்த்து பளிச்சென காதலை சொல்லும்போதும், துவண்ட இடங்களில் காதலனுக்கு தைரியம் சொல்லும்போதும், அப்பாவின் தவறுகளைத் தகிக்கும் சொற்களோடு அதிர்ந்து சுட்டிக்காட்டும் போதும், வம்பிழுத்தவர்களின் கன்னங்களை அறைந்து பதம் பார்க்கும் போதும் கதாநாயகி கைத்தட்டலை பெறுகிறார். மிக மிக கச்சிதமான கதாபாத்திர வடிவமைப்பு. இந்தப் பாராட்டு இயக்குனரையும் சாரும்.
இந்தப் படத்தின் வெற்றியின் பெரும் பங்கைக் கலைஇயக்குனரும் ஆடைவடிவமைப்பாளரும் இயக்குனரோடு சேர்ந்து பங்குபோட்டுக் கொள்கிறார்கள்.
கூத்துக்கலையை எந்த இடத்திலும் கொச்சையாக சித்தரிக்காமல் இருந்ததும், அக்கலையைக் கேலிக்குரியதாக அடையாளப்படுத்தாமல் தவிர்த்ததும் இயக்குனரின் கலை அறத்திற்கு மற்றுமொரு சாட்சியம்.
மிருதுவாகவும் உணர்வாகவும் நகரும் இந்த படத்தின் மைய இழையாக விளங்கும் கதையின் உயிரை இளையராஜா உருகி உருகி மீட்டி இருக்கிறார். நவரசங்கள் இசையில் வழிந்தோடுகின்றன.
இந்தக் காலகட்டத்தில் கூட கூத்துப்பித்தன் என்று அடைமொழி வைத்துக்கொண்டும், மற்ற கதாபாத்திரங்களோடு மிக நேர்த்தியாக வாழ்ந்து காட்டி இருக்கும் சாரதி கிருஷ்ணன் முதலான கலைஞர்களை வணங்குவதைத் தவிர வேறெப்படி பாராட்ட முடியும்.
நல்ல கலையையையும் நல்ல கலைஞர்களையும் காலம் ஒருபோதும் இருட்டடிப்பு செய்யாது.
ஜமா, தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத திரைப்படம். கூத்துக்கலைஞர்களின் வாழ்வியலை பேசிய இந்தப்படம் ஓர் உலக சினிமா.
இத்திரைப்படம் பல சர்வதேச விருதுகளை நிச்சயமாக அள்ளிக்குவிக்கும்.
“ஜமா” என்ற பெயரில் தமிழில் ஆகச்சிறந்த திரைப்படத்தைத் தந்ததற்காக இந்த படத்தில் நடித்த ஒவ்வொரு கலைஞர்களும் பெருமிதம்பட்டுக்கொள்ளலாம்.
திரைவிமர்சனம் எழுதியவர் :
போ.மணிவண்ணன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
ஆஸ்கார் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் இந்த ஜமா திரைப்படம் நிச்சயம் ஆஸ்கார் விருதை வென்றெடுத்து தமிழ் திரையுலகிற்கு சர்வதேச அடையாளத்தைத் தரும் என்று நம்புகிறேன்.பாராட்டி வாழ்த்துகிறேன்.
எனது திரைவிமர்சனத்தை வெளியிட்ட BookDay க்கு நன்றி!
அருமை. வாழ்த்துகள்