ஜமீலா – நூல் அறிமுகம்
இன்றைய உலகத்தில் மிக அதிகமாக படிக்கப்படுகிற எழுத்தாளர் அணியைச் சேர்ந்த சோவியத் கிர்கீஸிய எழுத்தாளரும் லெனின் மற்றும் அரசுப் பரிசு பெற்றவருமான சிங்கிஸ் ஐத்மாத்தவ்.
1958 ல் எழுதப்பட்ட ஜமீலா அவரது முதலாவது மிகப்பெரும் படைப்பு. இந்நூலினுடைய தூய்மையும் எதார்த்தமும் வாசகர்களைத் கவர்ந்தன. மக்களின் உழைப்பையும் வாழ்க்கையையும் அழகையும் சோசலிச இலக்கியங்கள் தான் வெளிக் கொணர்கின்றன நேசிக்கின்றன. மக்களின் சமூக ஒருங்கிணைப்பு உணர்வினை ஊட்டி வளர்க்கவும் செய்கின்றன.
பரந்து வளர்ந்த சமூக வாழ்க்கையில் இரண்டாம் உலகப்போர் ஏற்படுத்திக் கொண்டிருந்த கொடும் துன்பங்களையும் அழிவுகளையும் வீரம் செறிந்த போராலும் கடின உழைப்பாலும் மக்கள் வெற்றி கொள்கின்றனர். இந்த சமூக பின்னணியில் சோவியத் சோசியலிச ஒன்றியத்தில் இருந்த கிர்கீஸிசிய நாட்டு விவசாய மக்களின் உன்னத வாழ்க்கையையும் உயிர்த்துடிப்பையும் இக்கதையில் ஆசிரியர் அழகுபடுத்தியுள்ளார்.
வாருங்கள் நாமும் ஜமீலாவை உற்று நோக்குவோம்…
———————————————————
ஆம். அந்த கருப்பழகியை அனைவரும் அப்படித்தான் உற்று நோக்கினார்கள். ஸாதிக் எனும் அவன் கணவன் வேறு ராணுவத்தில் இருக்க சொல்லவா வேண்டும். இந்த கதை ஒரு கதைசொல்லியின் பார்வையில் நகர்கிறது. கதை மாந்தர்கள் என்று பார்க்கப் போனால் விரல் விட்டு எண்ணி விடலாம். ஆனால் அதில் முக்கிய கதைமாந்தர்கள் மூவர் மட்டுமே. கதை சொல்லியான “கிச்சினே பாலா” அதாவது சின்ன பையன் என்று பொருள் கொள்ளும் 15 வயதான பாலகன் , அவனுக்கு மதனியாக வரும் ஜமீலா, ராணுவத்திலிருந்து திடீரென்று ஊருக்குள் பிரவேசம் செய்யும் தானியார் எனும் வினோதமான இளைஞன்.
கூட்டுப் பண்ணையில் அவர்களின் உழைப்பு , அங்கு நடக்கும் உரையாடல்கள் , பெரிய குடும்பமான இரண்டு வீடுகளுக்குமாக முழு அதிகாரமாய் இல்லக் கிழத்தியாய் காப்பாற்றும் ஜமீலாவின் மாமியார் , அப்பாவைப் போல் இல்லாமல் துடிப்பும் சாமர்த்தியமுள்ள விவசாயியாக வரவேண்டும் என துடிக்கும் பாலகன், தான் கொண்டிருப்பது அன்பா காதலா என்று அறிய முடியாத இனம் புரியாத காதலில் ஜமீலா மீது சிக்கித் தவிக்கும் நெருடல்கள், ராணுவத்தில் இருக்கும் கணவனை நினைத்து தன் உள்உணர்ச்சிகளை வெளிக்காட்ட முடியாமல் தவிர்க்கும் ஜமீலா , ராணுவத்தில் உள்ளோரின் மனைவிகளை எல்லாம் வேலை வாங்கும் ஒரோஸ்மாத் போன்ற பணியாளர்கள் இவையெல்லாம் சேர்ந்து கதைக்கு மெருகூட்டுகிறது.
பக்கயிர் என்னும் மலைக் கிராமத்தைச் சேர்ந்த திரைப் பண்ணைக்காரரின் மகளான ஜமீலா குதிரை ஏற்றத்தில் தேர்ச்சி பெற்றவள் என்ற போதிலும் ஒருவகையான ஆண் தன்மை கூர்மையும் சிற்சில வேலைகளில் முரட்டுத்தனமும் கூட அவளிடம் காணப்பட்டது . ஆண்மகனைப் போன்ற தீவிரமும் அழுத்தமுமாக அவள் வேலை செய்த விதம், பெண்களைப் போல் சில சமயம் சுமூகமாகப் பழகினாலும் குற்றங்களை கூறியவர்கள் மீது கோபத்தால் பிற பெண்களின் தலைமையிரைப் பற்றி இழுப்பதும் அவளது சுபாவமாக காட்டப்படுகிறது. ஜமீலாவின் மனதில் வெளி சொல்ல முடியாத ஒரு ஏக்கம் இருப்பதை அவளின் குணாதிசய முரண்கள் எடுத்துரைக்கின்றன.
குழந்தை போல மிகுந்த கிளர்ச்சியும் சில சமயம் திடீரென்று உரக்கவும் மகிழ்ச்சியுடனும் காணப்படுவாள். தன் கணவனிடம் இருந்து வரும் முக்கோண கடிதத்தை பிரித்து படிக்கும்போது அதற்கான காரணத்தை நம்மால் அறிய முடிகிறது. தனக்கென ஒரு முக்கியத்துவம் அளிக்கப்படாமல் இருப்பதே அவளின் ஏக்கத்திற்கான காரணமாகவும் இருக்கலாம். ஆனால் அந்த காலகட்டத்திலும் நெருங்கிய உறவினர்களும் மூத்தோர்களும் நிறைந்திருக்கும் போது முதன் முதலில் மனைவியின் பெயரை குறிப்பிடுவது கடிதத்தில் முறையற்றதாக கருதப்பட்டிருக்கிறது. அதேபோல அவளுக்கென்று தனிப்பட்ட கடிதம் எழுதுவதைப் பற்றியும் கேட்க வேண்டாம். இதை சுயமரியாதை உள்ள ஒவ்வொரு மனிதனும் கருத வேண்டும் என்ற கோட்பாடு அவர்கள் சமூகத்தில் நிலவி இருக்கிறது.
தன் மருமகளின் கருத்துக்களை உள்வாங்க முடியாமல் மாமியாராக தான் கொண்ட எண்ணத்தையே அவள் மீது திணிக்க முயற்சிக்கும் பொழுது இல்லக் கிழத்தியாக சற்றே தடுமாறுகிறாள். இதுதான் ஒரு பெண் ஒரு பெண்ணுக்கு இழைக்கும் அநீதியின் தொடக்கமாக நான் கருதுகிறேன்.
இந்த நிலையில் தான் ராணுவ சேவையிலிருந்து சொந்த கிராமத்திற்கு திரும்பி வந்த தானியார் அறிமுகமாகிறான். எல்லோருக்கும் அவன் ஒரு மர்ம முடிச்சாகவே இருக்க காரணம் அவன் பேசுவதே கொஞ்சம் . அப்படியே பேசினாலும் மனப்பேச்சுக்கு தொடர்பே இல்லாத ஏதோ ஒரு விஷயத்தைப் பற்றி சிந்தித்து கொண்டு இருப்பது தான் .
அனாதையாக அவன் கழித்த துன்பகரமான குழந்தை பருவம் உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் அழித்துக் கொள்ளவும் இப்படி ஒதுங்கி இருக்கவும் அவனுக்கு கற்பித்திருக்கலாம் என்று நினைத்துக் கொள்ள வேண்டும் போல. இந்த இரண்டு முரண்பட்ட கதாபாத்திரங்களான ஜமீலா மற்றும் தனியார் 15 வயதான பாலகன் கண் முன்னே எப்படி பழகுகிறார்கள்? பின்பு இவர்களுக்குள் ஏற்படும் ஈர்ப்பு அவர்கள் அந்த கிராமத்தை விட்டு வெளி செல்லும் நொடிகள் , தற்செயலாக தன்னுள்ளே இருந்த வரைதல் கலைத்திறனை வெளிக்கொணந்து, அதன் மூலம் வரையப்பட்ட ஓவியம் இக்கதையில் ஏற்படுத்திய தாக்கம் என உணர்ச்சிகளின் வெளிப்பாடுகளாய் இந்த நாவல் இருக்கிறது.
ஆண் பெண் சமம் என்ற வார்த்தைகள் எல்லாம் ஏட்டளவில் நம் மண்ணில் மட்டுமல்ல கிர்கிஸ்ஸ்தானிலும் இருந்திருக்கிறது என்பதை நிரூபிக்கிறது இந்த நாவல். முதன்முதலாக சாதாரண உழைப்பு மக்களை கதாநாயகர்களாக கொண்டு வெளியிடப்பட்ட இந்நூலில் கூட்டுப் பண்ணையின் விவசாய வாழ்க்கையின் சூட்சமம் புரிகிறது.
ஒருவர் உணரக்கூடிய எல்லாவற்றையும் சொற்களால் எப்போதும் வெளியிட முடியாது என்பதை தானியாரின் பாடல் ஜமீலாவுக்கு புரிய வைத்திருக்கிறது. அவளுக்கு மட்டுமல்ல கிச்சினி பாலனுக்கும் தான். ஒருவன் தன் தாய் நாட்டை இந்த அளவுக்கு நேசித்திருக்க முடியுமா என்பதனை அவனது பாடல் வரிகள் நினைவூட்டுகிறது. ஸ்தெப்பி சமவெளியில் ஜமீலாவை நினைத்து தனியார் பாடிய பாடலும் சுற்றியுள்ள மலைத்தொடரும் பாறை இடைவெளிகளும் பனிக்கட்டி போல குளிர்ந்த நீர்த்திவளைகளை நம் மீது வீச….
இவர்கள் இருவரும் தூரதேசம் போவதைக் காணும் பாலகனாய் நாமும் இருக்கிறோம். ஜமீலாவின் வாழ்வில் ஒளிமயமான தொடுவானம் கிடைக்கும் எனும் நம்பிக்கை நாவலின் இறுதியில் நமக்கு கிடைக்கிறது.
ஜமீலா இல்லாத இடத்தில் சாதாரண ஒரு பெண்ணின் இன்மையை பலவித கோணங்களில் அலசி ஆராயும் எளிய புரம் பேசும் மனிதர்களைக் காண முடிந்தாலும் அவள் அவளுக்கான வாழ்வைத் தேடி சென்றதில் நாவல் மகிழ்வுடன் நிறைவடைகிறது. மொழிபெயர்ப்பு நாவலுக்கு உரிய சில இடங்களில் புரிதல் தடுமாறினாலும் கருப்பொருள் மாறா வண்ணம் ஜமீலாவை அறிவதற்கு சிங்கிஸ் ஐத்மாத்தவ் முயன்றிருக்கிறார்.
“கலைஞனுக்கும் கவிஞனுக்கும் ஏற்படுவது போன்ற உள்ளக் கிளர்ச்சியை ஒரு கால் காதலும் தூண்டிவிடுமோ…?”, என்ற எண்ணத்தை கலைஞனான இந்த பாலகன் மூலம் நாமும் அறியலாம். வாசித்து பாருங்கள்.
நூலின் தகவல்கள் :
நூல் பெயர்: ஜமீலா
ஆசிரியர்: சிங்கிஸ் ஐத்மாத்தவ்
விலை : 80
பக்கங்கள்: 80
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்
நூல் அறிமுகம் எழுதியவர் :
பா விமலா தேவி
பட்டுக்கோட்டை
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
சிறப்பான அறிமுகம். மீண்டும் வாசிக்கத் தூண்டும் வகையில் எழுதப்பட்டுள்ளது. ஐத்மாத்தவ்வின் படைப்பில் இது முக்கியத்துவம் வாய்ந்தது. மாறிவரும் சூழலை (அன்றைய சோவியத் சமூகம்) அதன் மீதான விமரிசனத்தை முன்வைத்த அவரது மற்றொரு படைப்பான குல்சாரியை வாசிப்பதன் மூலம் இருவேறு களங்களை எப்படி கையாண்டுள்ளார் என்பதை வாசகர்கள் அறியலாம்.