புத்தகம் : ஜமீலா
ஆசிரியர் : சிங்கிஸ் ஐத்மாத்தவ்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
பக்கங்கள் : 80
விலை : 70
புத்த்கம் வாங்க: https://thamizhbooks.com/product/jamila-chinghiz-aitmatov/

வெண்ணிற இரவுகளின் வெம்மையில் வெந்து தணிந்து ஏமாற்றமுற்றவர்களுக்கு ஜமீலா கொஞ்சம் இதமளிக்கிறாள். பொதுவாகவே சோசலிச இலக்கியங்களில் சாதாரண மனிதர்களோடு மண்ணும், மலையும், ஆடும் மரமும், ஓடும் ஆறும் துணை நாயகர்களாக இருக்கும். அப்படியே ஜமீலாவின் கதையை இயற்கையின் துணையோடு பெருமலைத்தொடர்களின் இறக்கங்களில் இன்பமுற அமைத்திருக்கிறார் சிங்கிஸ் ஐத்மாத்தவ்.

சோசலிச ரஷ்யாவின் அங்கமான கிர்கிஸ்தானின் கூட்டுப்பண்ணை வாழ்க்கை முறை, ஆரம்பகால சோசலிச சமூக கட்டமைப்பு , மக்களின் கூட்டு வாழ்க்கை, காதல், வெறுப்பு, மகிழ்ச்சி என ஸ்தெப்பி வெளியின் மலைப்பாதைகளில் நீள்கிறது நாவல். நாசகர ஜெர்மனியின் கொட்டத்தையடக்க ரஷ்ய குடும்பங்கள் கொடுத்த பலிகளின் எண்ணிக்கைதான் கணக்கிலடங்குமோ?

அப்படி போருக்கு போன கணவனின் மனைவியாக அறிமுகப்படுத்தப்படும் ஜமீலா, தனக்குத் தானே அரணாக இருக்கும் தைரியக்காரி. அவள் கணவனின் தம்பி கதை சொல்லியாக நாவலை இழுத்துச் செல்கிறான். அதே ஊரில் வாழும் போரில் அடிபட்டு ஊர் திரும்பிய புதிரான நாயகன் தானியார். யாரும் அண்டாத அவனும், எல்லோரும் வியக்கும் ஜமீலாவும் இணைந்து பணியாற்றும் சூழலில் ஏற்படும் காதலும், மணமான தடையால் மனவிருப்பம் பொய்த்துப் போகும் ஏமாற்றமும் என கதை நீண்டு அடையும் இறுதியே நாவலின் திருப்புமுனை.

Chingiz Aitmatov: Farewell, Gulsary! | Daily Sabah

குறிப்பாக மனம் ஆகிவிட்டாலே பெண் என்பவள் கணவன் எப்படியாயினும் பொறுத்துக்கொண்டு வாழவேண்டுமென்று நிலவும் ஆணாதிக்க சமூக பொது புத்தியை ஜமீலாவின் ஒரு முடிவில் உடைத்து நொறுக்கியிருப்பார் ஐத்மாத்தவ். தனித்திருந்த ஜமீலாவை ஊடல் கொள்ளத் துடித்த ஆண்களெல்லாம், அவள் விரும்பியவனை அடைந்தவுடன் “கீழானவள்” என்று இகழும்போது, “யார் கீழானவர்’ என்ற ஒரு கேள்வியில் கேவல ஆண் புத்தியை அம்பலப்படுத்தி இருப்பார் ஆசிரியர்.

இப்படி தனிமனித மனவெழுச்சி, உணர்வு, உணர்ச்சி, காதல், காமம், அழுகை, சோகம், கோபம், விரக்தி, ஏமாற்றம், வெறுப்பு, இவை யாவும் கலந்த வாழ்க்கை முறை, அதனை வழிநடத்தும் சமூக அமைப்பு, தனிநபர் சமூக பொறுப்பு, வாழ்வியல் நடைமுறை, கூட்டு வாழ்க்கை முறை என ஒரு சமூக பொறுப்புள்ள நாவலாக ஜமீலாவை படைத்திருக்கிறார் சிங்கிஸ் ஐத்மாத்தவ். அதை தமிழில் சுவை குன்றாமல் மொழி மொழிபெயர்த்துள்ளார் பூ சோமசுந்தரம், நாஸ்தென்காவை கண்டு ஏக்கமுற்றவர்கள், ஜமீலாவை கொண்டு கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக்கொள்ளுங்கள்.

சுபாஷ் சந்திர போஸ்
இந்திய மாணவர் சங்கம்

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.2021 – 05.05.2021 வரை மட்டும்)



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *