ஜமீலா ரசீக் (Jamila Rasiq) எழுதி ஹெர் ஸ்டோரிஸ் (Her Stories) வெளியிட்டுள்ள "அது ஒரு பிறைக்காலம்" (Athu Oru Piraikkaalam) புத்தகம் அறிமுகம் - https://bookday.in/

ஜமீலா ரசீக் எழுதிய “அது ஒரு பிறைக்காலம்” (Athu Oru Piraikkaalam) – நூல் அறிமுகம்

“அது ஒரு பிறைக்காலம்” (Athu Oru Piraikkaalam) நூலிலிருந்து

ஒவ்வொரு வீட்டுக்கும், ஒவ்வொரு ஊருக்கும், ஒவ்வொரு நாட்டுக்கும் வாழ்வியல் என்பது மாறுபடுகிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் அனுபவிக்கக் கூடியதும், நினைவு கூர்ந்து அசை போடுவதற்கு மகிழ்ச்சியை அளிப்பதுமாகவே உள்ளன. நான் பிறந்து, வளர்ந்த மதுரை சாந்திநகரை நினைக்கும்போது இன்றும் என் உள்ளம் துள்ளும். அதைப் போன்றதொரு உணர்வைத் தனது ஊரான ஏரல் முஸ்லிம் மக்களின் வாழ்வியலை எடுத்துரைத்துள்ள ஜமீலா ரசீக்கின் “அது ஒரு பிறைக்காலம்” (Athu Oru Piraikkaalam) புத்தகத்தைப் படிக்கும்போதும் உணர்ந்தேன்.

பிறப்பு முதல் இறப்பு வரையிலான காலம்தான் வாழ்க்கை. அதே போல், ஏரல் மக்களின் பிறப்பு முதல் சுபுர்க்குழிக்குச் செல்லும் வரையிலான வாழ்க்கையைத் தனது அனுபவங்களுடன் குழைத்துக் கொடுத்துள்ளார்.

இன்று  (31.3.25) ரம்ஜான் பெருநாள். இன்று அவர்களுக்கு வாழ்த்துச் சொல்வது போல் நான் எழுதிக் கொண்டிருக்கிறேன். புத்தகம் ஏரல் மக்கள் ரமலான் கொண்டாடுவதிலிருந்து தொடங்குகிறது. பிறை எப்போது தெரிகிறது என்பதை இலங்கை வானொலியைக் கேட்டுத் தெரிந்து கொண்டதை அவர் நினைவு கூரும்போது, நான் என் சிறுவயதில் இலங்கை வானொலியைக் கேட்டு வளர்ந்தது நினைவுக்கு வந்தது.

ஒரு மாதம் நோன்பு. அதிகாலை நோன்புக்கு முன் உண்ணும் சஹர் உணவு, நோன்பு துறக்கும்போது உண்ணும் இஃப்தார் என கலகலப்புடன் தொடங்குகிறார். இதில் இஃப்தார் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும்தானே. அதுதான் ஒவ்வொரு அரசியல்வாதியும் அந்த நோன்பில் கலந்து கொண்டு முஸ்லிம் மக்களுக்கு தான் மட்டும்தான் பாதுகாப்பு என்று அவர்களுக்கே குல்லாய் மாட்டுவதைப் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்.

நோன்பு மாதம் முழுதும் இரவில் நடக்கும் தராவீஹ் தொழுகைக்கு கட்டிப் போக ஒழுங்கான தாவணியைத் தேடும் அக்காக்கள், முதன்முறையாக நடு இரவில் விழித்து நோன்பு பிடிக்கப் போகிறோம் என்ற தலைகொள்ளாப் பெருமையோடு நாளெல்லாம் பச்சைத் தண்ணீரும் குடிக்காமல் நோன்பு நூற்க வேண்டிய பெரும் பொறுப்பையும் ஏற்கப் போகும் பரவசத்துடன் சிறுவர்கள் . . .” என்று தொடக்கமே அமர்க்களமாகச் செல்கிறது புத்தகம்.

அவர்கள் கூட்டாஞ்சோறு ஆக்கும் நினைவைப் பகிரும் போது, நாமும் அங்கு இருந்திருக்க மாட்டோமா என்ற ஏக்கத்தையே ஏற்படுத்தி விட்டார் ஜமீலா. நான் பிறந்ததிலிருந்து சைவம் மட்டுமே உண்டு பழகியவன். அவர் ஏரலில் அசைவம் சமைக்கும் முறைகளை விளக்கும் போது, அடடா, எச்சில் ஊறுவதைத் தடுக்க முடியவில்லை. ஆனால் என்னால் உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்ள முடியவில்லை என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.

பள்ளி சென்று கல்வி கற்கா விட்டாலும், தாமே அரபி கற்று நபிமார்கள் சரித்திரத்தை வாப்புமாக்கள் படிக்க மற்றவர்கள் சுற்றி அமர்ந்து கேட்டிருக்கிறார்கள். நம் பாட்டிமார்கள் கதை சொல்ல நாம் உட்கார்ந்த் கேட்டது போல!

நோன்புக் கஞ்சி எப்போதுமே ஸ்பெஷலாகத்தான் இருந்திருக்கிறது. ஏரலிலும். அங்கு நான்கு ஐந்து ஜமாத்துகளுக்குச் சென்று வெவ்வேறு வட்டில்களில் வாங்கி வந்து அருந்தியதையும், அதைப் பெருமையுடன் பகிர்ந்து கொண்டதையும் மகிழ்ச்சியுடன் சொல்லும் அழகே தனி. நோன்புக் கஞ்சி எப்படிக் காய்ச்சப்படுகிறது என்பதையும் சுவையுடன் விளக்கியுள்ளார்.

இன்று அனைவரும் கேட்பது போல் பாய், ரம்ஜானுக்கு பிரியாணி கிடையாதா என்று கேட்பதெல்லாம் அங்கு இல்லையாம். அப்போது பிரியாணி ஏரலுக்குள் நுழையவே இல்லை என்கிறார் ஜமீலா. வெறும் பேரிச்சம்பழம், மண்பானைத் தண்ணீரில் வயிறும், நெஞ்சமும் குளிர்ந்து விடும் என்கிறார். ரம்ஜானுக்கு என்று புது உடைகள் எடுத்தது, ரப்பர் வளையல்கள், கண்ணாடி வளையல்கள் தேடித் தேடி வாங்கி அணிந்தது என்று சுற்றிச் சுழல்கின்றன நினைவுகள்.

நாங்கள் சிறுவர்களாக இருந்த போது நவராத்திரி நாட்களில் ஒவ்வொரு வீடாகச் சென்று சுண்டல் கலெக்‌ஷன் செய்வோம். எங்களுக்குப் பிடித்த சுண்டல் போட்டிருக்கும் வீட்டைத் தெரிந்து கொண்டு அங்கு படையெடுப்போம். ஜமீலா சொல்கிறார் சம்சு ஓதுவது என்று ஒரு நடைமுறை உண்டு. சிறு குழந்தைகள் சேர்ந்து சில பாடல்களைக் கற்றுக் கொண்டு வீடு வீடாகச் சென்று அவற்றைப் பாடி அதில் கிடைக்கும் பரிசை ஆலிம்சாவுக்குக் கொடுத்து விடுவது. உற்சாகமாக சம்சு ஓதியிருக்கிறார்கள் குழந்தைகள்.

அடுத்து வரும் அத்தியாயங்களில் ஏரல் முஸ்லிம்களின் உணவு வகைகளை வகைவகையாகச் சொல்லி எச்சில் ஊறச் செய்திருக்கிறார். இவர்கள் செய்த உணவைப் புரிந்து கொள்ளாமல் கலக்கி விட்ட கலக்கலான நகைச்சுவை சம்பவத்தைச் சேர்த்துச் சொல்லிச் சிரிக்க வைக்கிறார். ஊருக்கு ஊர் ஸ்பெஷல் இருக்கத்தான் செய்கிறது.

குழந்தைப் பிறப்பைப் பற்றிக் கூறும் அத்தியாயத்தைப் படிக்கும் போது கிராமங்களில் எல்லாம் ஒரே மாதிரிதான் இருந்திருக்கும் போல என்று தோன்றியது. அவர்கள் சொல்லும் பக்குவங்கள் எல்லாம் எங்கள் வீடுகளிலும் செய்ததாக நினைவு. பிள்ளைப்பெத்தா லேகியம் என்று ஒன்று கொடுப்பார்கள். அதற்காக அலைவோம். பிள்ளை பெற்ற வீட்டுக்குள் நுழைந்தாலே வாசம் காட்டிக் கொடுத்து விடும். அதே போன்ற நினைவுகளைப் பகிர்ந்துள்ளார் ஜமீலா.

அதன் பிறகு முஸ்லிம் பெண்களின் படிப்பு மெதுமெதுவாக படிப்படியாக உயர்ந்து சென்றது என்பதைப் பதிவு செய்கிறார். திருமணம் எப்படிச் செய்யப் பட்டது, எப்படிப்பட்ட சடங்குகள் கடைப்பிடிக்கப்பட்டன, அந்தக் கால உடைகள் என்ன என்பதையெல்லாம் விவரித்துச் செல்கிறார். எந்தத் திருமண வீட்டையும் போல் கலகலக்கிறது மனம்.

ஊரிலுள்ள அனைவரும் எப்படி ஒருவருக்கொருவர் அணுக்கமான அன்புடன் இருந்திருக்கிறார்கள், எப்படி எதிர்த்த வீட்டுப் பெண்ணுக்கு, குழந்தைக்குப் பிடிக்குமே என்று தாமே தன் வீட்டில் செய்ததை எடுத்துச் சென்று கொடுத்தனர் என்பதெல்லாம் நெகிழ்ச்சியானவை.

அந்தக் காலத்தில் ராவுப் பிச்சை அம்மா என்ற குரல் ஒலிக்கும். வீட்டில் மீதமிருப்பதைக் கொண்டு போட்டதெல்லாம் நினைவில் உள்ளன. இப்போது மீதமிருப்பதை ஃபிரிட்ஜ் எடுத்துக் கொண்டு விடுகிறது. ராப்பிச்சை என்ற குரலே இல்லை. இந்த நினைவை, இப்படிச் சொல்கிறார் ஜமீலா: “இது என்ன கொதரத்து? மனசார ஆக்குன சோத்தைத் தூக்கி இந்தப் பொட்டிக்குள்ள வைக்கணுமாமே . . . இத இங்க வாசலுக்கு வர்ற மிஸ்கின்வொளுக்கு போட்டாலும் அதுவொ வயிறு நிறையுமே? அந்த ஒரு வாய்ச் சோத்த இந்த பொட்டிக்குள்ள வச்சுப் பூட்டி மறுநாளைக்கு வச்சுத் திங்கிற காலமா வந்து எறங்கிட்டுது உலகத்துல? வல்ல ரஹ்மானே! என்னப் படச்ச ரப்பே!

நாம் பல நாட்களுக்குப் பின் அந்தப் பண்டங்களை எடுத்து உண்டு நம் வயிறையே கெடுத்துக் கொண்டிருக்கிறோம் இப்போது!

எனக்கு இது என் நினைவுகளைக் கிளறி விட்டது. நான் ஒருமுறை நுரையீரல் தொடர்பான ஒரு நோயில் வாடிய போது, பிள்ளையின் உடல் தேறுவதற்காக என் எதிர்த்த வீட்டு அத்தை தினமும் மூன்று மாதங்கள் தொடர்ந்து எனக்கு ஆட்டுக்கால் சூப் வைத்துக் கொடுத்ததை நினைவு கூர்கிறேன். அந்த அன்பே என்னைத் தேற்றியது எனலாம்.

இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்று ஜகத். தாம் ஆண்டு முழுதும் சேமித்ததில் இரண்டரை சதவீதத்தை ஏழைகளுக்கு வழங்குவது. அது குறித்தும் விரிவாகப் பதிவு செய்துள்ளார் ஜமீலா.

ஏரலிலும் குழந்தைகளை லட்சுமி என்றும், சீதேவி என்றும் கொண்டாடியிருக்கிறார்கள். செவனே என்று இருக்கிறேன் என்று வாப்பாக்கள் பேசியிருக்கிறார்கள். எந்த மதப்பாகுபாடும் அவர்களைப் பிரித்ததாகத் தோன்றவில்லை. இன்று நடப்பவையெல்லாம் செயற்கையாக அரசியல் காரணங்களுக்காக வலிந்து உருவாக்கப்படுபவை என்று புரிகிறது.

அதேபோல் இந்துக்கள் கட்டுவது போன்ற தாலி கட்டும் சடங்குகளும் இருந்துள்ளன. தவ்ஹீத் ஜமாத், சுன்னத் ஜமாத் என்ற பிரிவுகள் உண்டான பின் பல சடங்குகள் காணாமல் போயுள்ளன. அதில் தாலி கட்டுதலும் அடங்கும் என்கிறார் ஜமீலா. அவர் விவரித்த பல சடங்குகள் இந்துக்கள் கடைப்பிடிக்கும் சடங்குகள் போலவே உள்ளன.

தலாக் பற்றியும், பெண்கள் கொடுக்கக் கூடிய விவாகரத்தான குலா பற்றியும் விவரிக்கிறார். பலரும் நினைப்பது போல் முத்தலாக்கை நினைத்த படியெல்லாம் கொடுத்து விட முடியாது என்பதை விவரிக்கிறார். அப்படிப்பட்ட தவறான விவரிப்புகள்தான் பலரையும் குழப்பிக் கொண்டிருக்கின்றன.

பிறப்பில் தொடங்கிய புத்தகம் கடைசியில் இறுதியாத்திரையில் முடிகிறது. இந்துக்களைப் போலவே குளிப்பாட்டி, புதுத் துணி அணிவித்து, வெள்ளைத் துணியைப் போர்த்தி சந்தூக்கில் ஏற்றி சுபுர்க்குழிக்குள் இறக்கும் சடங்குடன் முடிகிறது புத்தகம். அப்போதும், அருகில் இருக்கும் அண்டை வீட்டாரெல்லாம் கொடுக்கும் ஆதரவையும் குறிப்பிட்டு முடிக்கிறார். கொண்டாட்டத்தில் தொடங்கி, மரணத்தில் புத்தகம் முடிவது சற்று சோகத்தை உண்டாக்கவே செய்தது. முடிவையும் கொண்டாட்டமாக முடித்திருக்கக் கூடாதா என்று தோன்றியது.

எனினும் ஏரல் முஸ்லிம் மக்களின் ஐம்பதாண்டுகளுக்கு முந்தைய வாழ்க்கை முறையைப் படித்ததும், அனுபவித்ததும் அலாதியான இன்பத்தை அள்ளிக் கொடுத்தது. அனைத்துக்கும் மேல் அவர்களது பேச்சு வழக்கு அலாதியாக இருந்தது. ஒவ்வொரு பேச்சு வழக்கும் ஒரு இனிமை!

எனக்குத் தோன்றியது என்னவென்றால், இந்துக்கள் கொண்டாடும் தீபாவளியாக இருக்கட்டும், கிருத்துவர்களின் கிருத்துமசாக இருக்கட்டும், முஸ்லிம்களின் ரமலானாக இருக்கட்டும், அனைத்தும் நம் கொண்டாட்டங்களே. பேதங்கள் காணாமல் போகட்டும். மக்களின் வாழ்வில் இன்பம் மட்டுமே நிறையட்டும்.

ஜமீலாவுக்கும், அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் இனிய ரமலான் வாழ்த்துகள்.

நூலின் தகவல்கள் : 

நூல்: “அது ஒரு பிறைக்காலம்” (Athu Oru Piraikkaalam)
ஆசிரியர்: ஜமீலா ராசிக்
பதிப்பகம்: ஹெர் ஸ்டோரிஸ்
பக்கங்கள்: 48
விலை: ₹.300/-

நூல் அறிமுகம் எழுதியவர் :

கி.ரமேஷ்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *