ஜானகி அம்மாள் (Janaki Ammal) – நூல் அறிமுகம்
அந்த காலத்துல எங்க அப்பத்தாவோட அம்மாவுக்கு 8 பிள்ளைகள். அம்மாச்சியோட ஆத்தாளுக்கு 12 பிள்ளைகள் . இப்ப அத்தி பூத்த மாதிரி ஒண்ணு வச்சுக்கிட்டும், இல்லாமலும் தடுமாறுறீகனு ஏதோ ஒரு குரல் என் காதில் ஒலிக்கிறது.
ஆமாங்க இந்த மாதிரி 18 பிள்ளைகள் உள்ள குடும்பத்துல பிறந்தவங்க தான் இன்னைக்கு நம்ம கதையோட நாயகி. 1800 – களில் பிறந்த நம்ம கதாநாயகி அப்பவே , நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் … படிப்பு தான் எனக்கு வேணும்னு சொல்லி அடம்பிடிச்சிருக்காங்க. பிறந்தது கேரள மண்ணாக இருந்தாலும் கல்லூரி படிப்புக்கு சென்னைக்கு வந்து ஹோம் சயின்ஸ் எடுத்து படிக்கிறாங்க.
வாசிப்பு ஒருவரது வாழ்க்கையில மாற்றங்களை எப்படி ஏற்படுத்தும் அப்படிங்கறதுக்கு, நம்ம கதாநாயகியோட வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டு . ஆமாங்க ஒரு புது பிரஃபஷரோட வகுப்பறையில் அறிமுகம் கிடைக்க , ஏதாவது டவுட் என்றால் கேளுங்க அப்படின்னு கேட்க , “ நீங்க எழுதின புத்தகத்தை நான் படிச்சிருக்கேன் என்று சொல்லிவிட்டு, உங்க புத்தகத்துல இந்த இடம் தப்புன்னு “, சுட்டிக்காட்டுற தைரியம் வேற யாருக்கு வரும். நம்ம கதாநாயகிக்கு மட்டும் தான் வரும்.
இப்படி பல படிகளை கடந்து அமெரிக்காவிலும் படிக்க ஆசைப்படுறாங்க . இந்த காலத்துல பெண்கள் வெளிநாடுகளில் போய் படிக்கிறது அது ஒரு தனி கதை . ஆனால் 1900 – களிலேயே நான் வெளிநாட்டில தான் போய் படிப்பேன் என்று ஆசைப்பட்டதோடு இல்லாமல் , அதுக்கு தன்னை தகுதியும் ஆக்கிக்கிட்டு அப்ளை பண்றாங்க.
ஒரு நாட்டில் ஒரு நபருக்கு மட்டுமே கிடைக்கும் பார்ப ஸ்காலர்ஷிப் மெக்ஸிகன் பல்கலைக்கழகத்தில் இவருக்கு கிடைக்க , அதையும் உபயோகித்து படித்து அமெரிக்காவிலே முதன் முதலாக (பெண்களில்) முனைவர் பட்டம் பெற்றவரும், இந்தியாவிலும் ஒரு பெண் முனைவர் பட்டம் பெற்றதும் தான் என்று தன் பெயரை பறைசாற்றுகிறார். உண்மையில் இவங்கள “இரும்பு பெண்மணி” என்று தான் சொல்லி இருக்கணும். ஆனா “கரும்பு பெண்மணி” என்று சொல்கிறோம்.
இன்னைக்கு நம்ம வீடுகள்ல சமையலறையில் சக்கரை இருப்பதற்கு காரணமான கரும்பு பெண்மணி இவங்கதான். கோவை கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆய்வாளராக தன் பணியை தொடங்கிய நம் நாயகி , இந்தியாவில் அப்போது நிலவிய சர்க்கரைத் தட்டுப்பாட்டை தீர்க்க வேண்டும் என்ற முனைப்பில் தீவிரமாக உழைத்து இனிப்பான கரும்பை கண்டறிகிறார்.
இப்படி பல இனிப்பான ஆய்வுகளையும் சேவைகளையும் நாட்டுக்காக செய்தவரின் வாழ்வு கசப்பாக இருந்தது என்று சொன்னால் நம்ப முடிகிறதா..? . ஆம், பிறப்பைக் காரணம் காட்டியும், பெண் என்பதாலும் அவருக்கு தலைவர் என்ற தகுதி கிடைக்க மறுக்கிறது. ஆண்கள் நிரம்பிய அவையில் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார். இருப்பினும் அதையெல்லாம் ஒரு தடையெனக் கருதாமல் தொடர்ந்து நம் தேசத்துக்காக ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவருள் இருந்திருக்கிறது. ஒரு சமயம் அவமதிப்பு தாங்க முடியாமல் இந்திய நாட்டை விட்டு வெளிநாட்டில் போய் குடியேறுகிறார்.
ஆனால் அறிவும் திறமையும் வாய்ந்த இவர் போன்ற ஆராய்ச்சியாளர்கள் நம் நாட்டில் தான் வாழ வேண்டும் என்று ரோஜாவின் ராஜா என்று அழைக்கப்படும் திரு . ஜவஹர்லால் நேரு அவர்களின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு மீண்டும் இந்தியாவுக்கு வருகை புரிகிறார்.
அதனால்தான் அவர் கண்டுபிடித்த ரோஜாவிற்கும் , கத்தரிக்காய்க்கும் , தேடி திரிந்து கண்டுபிடித்த தாவர சேகரிப்பு நிறுவனத்திற்கும் நம் கதாநாயகியின் பெயரைச் சூட்டி இருக்கிறார்கள்.
ஒரு குறிப்பிட்ட துறையில் சந்தேகம் இருந்தால் அதனை நிவர்த்தி செய்ய விக்கிபீடியா இருப்பது போல அப்போதைய காலகட்டத்தில் செடிகளைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிய வேண்டும் என்றால் அறிவதற்கு எந்த புத்தகமும் இல்லை . ஆனால் அதனை ஈடு செய்யும் விதம் நம் கதாநாயகி “குரோமோசோம் அட்லஸ் ஆப் கல்டிவேட்டட் பிளாட்ன்ஸ் “ என்று ஒரு புத்தகத்தை எழுதுகிறார். இதுதான் அன்றைய காலகட்டத்தில் தாவரம் பற்றிய படிப்புகளுக்கு கூகுளாக இருந்திருக்கிறது.
நம்ம வீட்டுல மண்பானையில இருந்த விதை சேகரிப்பு எல்லாம் காணாமல் போய் , எப்படி கடையில் சென்று ஹைபிரிட் விதைக்கு கையேந்தி நிற்கிறோமோ ….. அப்பவே அது நடந்திருக்கு . இதை தடுக்கனும்னு நம் கதாநாயகி முடிவெடுத்து பல இடங்களில் பல தாவரங்களோட விதைகளை சேகரிக்கிறாங்க . இனிமேல் எந்த விதைக்காகவும் பிரிட்டன் அரசாங்கத்திடம் போயி நாம கை நீட்டி நிக்க கூடாதுன்னு முடிவு செய்றாங்க . அப்படி சேகரித்த அந்த விதை சேகரிப்பு நிறுவனத்துக்கு அவருடைய பெயர் வைத்து கௌரவப் படுத்துறாங்க. எனக்கு தலைவர் பதவி கொடுக்கலன்னா பரவாயில்ல இந்த நிறுவனத்தின் பெயரே என் பெயர்தான் அப்படின்னு நெத்தியடி அடிச்சிருக்காங்க.
ஒரு முறை கேரளாவில் அமைதி பள்ளத்தாக்கில் செயற்கை அணை கட்ட வேண்டும் என்று முயற்சி மேற்கொள்ள, அதற்காக போராடி இயற்கையை பாதுகாக்கும் பொருட்டு அந்த பள்ளத்தாக்கைப் பாதுகாக்கவும் முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறார். அப்பொழுது இவருக்கு வயது 87 என்றால் நம்ப முடிகிறதா..?
எந்த ஒரு வசதி வாய்ப்புகளும் இல்லாத காலகட்டத்திலேயே இப்படி வாழ்ந்த இந்த அம்மாவை இதுவரையிலும் நாம் எந்த இணையத்திலும் , பாடப் புத்தகத்திலும் கண்டதில்லை. சொல்லப் போனா இவங்க பேரே நமக்கு தெரியாது. இப்படி ஒரு விஞ்ஞானி நம்ம நாட்டுல வாழ்ந்தாங்கன்னு கேட்டா பதில் இல்லன்னு தான் சொல்லுவோம் இந்த புத்தகத்தை படிக்கும் வரை. இதுதான் ரொம்ப வேதனையான விஷயம்.
சரி , இப்பவாவது தெரிந்துகொள்வோம் வாங்க . “கரும்பு பெண்மணி “ என்று பட்டம் வாங்கின நம் கதாநாயகியின் பெயர் “ஜானகி அம்மாள்” . இனி இந்த பெயரை நாம் மறப்போமா…??
பரப்புவோம். பெண்கள் எப்படி முன்னுதாரணமாக வாழனும்னு இனிவரும் தலைமுறைகளுக்கு அவரின் புகழையும் பெயரையும் பரப்புவோம்.
நூலின் தகவல்கள் :
புத்தகத்தின் பெயர் : ஜானகி அம்மாள்
ஆசிரியர் : இ.பா.சிந்தன்
தலைப்பு : துறை சார் நூல்கள் – தாவரவியல்
பதிப்பகம் : ஓங்கில் கூட்டம்
பக்கங்கள் : 40
விலை: 40
நூலைப் பெற : https://thamizhbooks.com/product/janaki-ammal/
நூல் அறிமுகம் எழுதியவர் :
பா விமலா தேவி
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.