ஆங்கில நாவல் இலக்கிய உலகின் தனித்துவமான நாவலாசிரியர் ஜேன் ஆஸ்டின் எழுதிய “பிரைட் அண்ட் பிரஜுடிஸ் (Pride and Prejudice)” நாவல்
– பெ.விஜயகுமார்.
நாவல் இலக்கியம் பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய மொழிகளில் மிகப் பெரும் வெற்றி பெற்றது. காவியமும், கவிதையும் கோலோச்சிய சூழலில் எளிய மனிதர்களும் படித்து இன்புற உரைநடையில் எழுதப்பட்ட நாவல் பரந்த வாசிப்பு உலகை உருவாக்கியது. ஐரோப்பிய மொழிகள் அனைத்திலும் நாவல் இலக்கிய வகைமை மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. நவீன காவியம் என்று போற்றப்பட்டது. ஆங்கிலத்திலும் பதினெட்டாம் நூற்றாண்டில் சாமுவேல் ரிச்சர்ட்சன் தொடங்கி இன்றுவரை ஆங்கில நாவலாசிரியர்கள் இலக்கிய உலகில் சிறந்து விளங்குகின்றனர்.
ஆங்கில நாவல் உலகிற்கு ஜேன் ஆஸ்டின் அளித்துள்ள கொடை அளப்பரியது. பெண்கள் நாவல் எழுத்துலகில் நுழைந்திட முடியாத காலத்தில் தன் அடையாளத்தை மறைத்தே நாவல்கள் படைத்தார். ’எம்மா’ ’மான்ஸ்ஃபீல்டு பார்க்’, ’சென்ஸ் அன் சென்சிபிலிடி’, ’நார்த்தங்கர் அபி’, ப்ரைடு அன் ப்ரஜுடிஸ், ’பெர்சுவேஷன்’ ஆகிய ஆறு நாவல்கள் மட்டும் எழுதி உலகின் சிறந்த நாவலாசிரியர்களுள் ஒருவராகப் போற்றப்படுகிறார் ஜேன் ஆஸ்டின்
இங்கிலாந்தின் ஹெர்ஃபோர்ட்ஷையர் எனும் கிராமப்புறப் பகுதியில் வாழ்ந்தது ஜேன் ஆஸ்டின் குடும்பம். அவர் தந்தை ஜார்ஜ் ஆஸ்டின் அந்த கிராமத்தின் பாதிரியார். ஆறு மகன்கள், இரண்டு மகள்கள் என்று எட்டு குழந்தைகளைக் கொண்ட பெரிய குடும்பம். தன்னுடைய குடும்ப வருமானத்தைச் சற்று அதிகரிக்க ஜார்ஜ் ஆஸ்டின் சிறிது விவசாயமும், ஐந்தாறு மாணவர்களுக்கு டியூசனும் எடுத்தார். வீட்டில் மிகச் சிறந்த நூலகம் வைத்திருந்தார். கெசண்டரா, ஜேன் ஆகிய இரு பெண் குழந்தைகளும் தொடக்கக் கல்விக்குப் பின்னர் வீட்டிலிருந்தே கற்றனர். தந்தையின் வழிகாட்டுதல் அவர்களை அறிவார்ந்த குழந்தைகளாகத் திகழச் செய்தது. அவர்களின் எழுத்துப் பணிக்கும் உற்ற துணையாக ஜார்ஜ் ஆஸ்டின் இருந்தார். ஜேன் சிறுவயதிலேயே எழுத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். தந்தை வாங்கிக் கொடுத்த நோட்டுப் புத்தகங்கள் முழுவதையும் ஜேன் ஆஸ்டின் கவிதை, நாடகம், போன்ற படைப்புகளால் நிறைத்திருந்தார். மாலை நேரங்களில் குடும்ப உறுப்பினர்கள் சூழ்ந்திருக்க ஜேன் தான் எழுதியவற்றை வாசிப்பார். அனைவரும் அவரின் எழுத்துத் திறனை வியந்து பாராட்டுவார்கள். இப்படி அமைதியாகத் தொடங்கியது ஜேன் ஆஸ்டினின் எழுத்துப் பணி. இன்று உலகம் போற்றும் எழுத்தாளராகப் பரிணமித்திருக்கிறார்.
கெசண்டரா, ஜேன் இருவரும் அன்பினால் பிணைக்கப்பட்டிருந்தார்கள். சிநேகிதிகள்போல் பழகினார்கள். 1775இல் பிறந்த ஜேன் ஆஸ்டின் 1822இல் தன்னுடைய 41ஆம் வயதில் இறந்தார், குறைந்த காலமே வாழ்ந்தாலும் ஆறு செவ்வியல் நாவல்கள் படைத்து உலகம் போற்றும் எழுத்தாளராக மதிக்கப்படுகிறார். ஜேனின் அனைத்து நாவல்களும் சிறப்பானவை. ‘ப்ரைடு அன் ப்ரஜுடிஸ்’ (Pride and Prejudice) ஜேன் ஆஸ்டினின் சிறந்த நாவலாகக் (Masterpiece) கொண்டாடப்படுகிறது. ஜேன் இருமுறை காதலில் விழுந்தார். இருப்பினும் அந்த வலையில் சிக்கிக்கொள்ளாமல் வெளிவந்தார். இறுதிவரை திருமணம் செய்துகொள்ளாமல் தனது சகோதரர்களின் குழந்தைகளுக்குச் சிறந்த maiden aunt ஆகவே இருந்து அன்பைப் பொழிந்தார்.

ஜேன் ஆஸ்டின் காலத்தில் பதிப்புத்துறை பெரிய வளர்ச்சி பெற்றிருக்கவில்லை. அதிலும் பெண்களின் படைப்புகளை வெளியிடத் தயங்கினார்கள். ஜேன் ஆஸ்டின் தன்னுடைய வாழ்நாளில் நான்கு நாவல்களின் பிரதிகளை மட்டுமே பார்த்து மகிழ்ந்தார். அதுவும் அவர் பெயரில் வெளியிடப்படவில்லை. அவர் மறைவுக்குப் பின்னரே ’நார்த்தங்கர் அபி’, ’பெர்சுவேஷன்’ ஆகிய இரு நாவல்களும் அச்சேறின. நாவல்கள் வெளிவந்ததும் விமர்சகர்கள் பாராட்டினார்கள். நாவல்கள் அதிகளவில் விற்றன. பொதுமக்கள் ஆவலுடன் படித்து மகிழ்ந்தனர். அன்றைய சிறந்த வரலாற்று நாவலாசிரியர் சர் வால்டர் ஸ்காட்டின் பாராட்டைப் பெற்றார்.
ஜேன் ஆஸ்டின் தான் நன்கறிந்த உலகத்தை மட்டுமே தன் நாவல்களில் எழுதினார். தான் வாழ்ந்த கிராமப்புறத்தில் இருந்த மத்தியதரக் குடும்பங்களின் வாழ்வியல் மட்டுமே அவரின் கருப்பொருளானது. தான் நன்கு அறிந்த குடும்பங்களில் வாழ்ந்தவர்களின் சபலங்கள், சஞ்சலங்கள், சலனங்கள் மட்டுமே அவரின் நாவல்களில் பதிவாகியுள்ளன. ஜேன் ஆஸ்டின் படைப்புகள் தந்தத்தில் நேர்த்தியாகச் செதுக்கப்பட்ட நுட்பமான அழகுப் பொருட்கள் போன்றவை. அவர் காலத்தில் நடந்த சமூக, அரசியல், பொருளாதார கொந்தளிப்புகளைச் சித்தரிப்பதை முற்றிலும் தவிர்த்தார். இக்காலத்தில் பிரான்சு-இங்கிலாந்து இடையில் நடந்த ’நெப்போலியானிக் போர்’ பற்றிய செய்தியும் இல்லை. ஜேன் ஆஸ்டின் சகோதரர் இருவர் ராயல் நேவியில் பணியாற்றி இப்போரில் நேரிடையாகக் கலந்துகொண்டவர்கள். இருப்பினும் ஜேன் ஆஸ்டின் போர் குறித்த எதையும் தன் நாவல்களில் குறிப்பிடவில்லை.
இக்காலத்தில்தான் பிரிட்டிஷ் அரசு ‘Corn Law’ என்ற புதிய வரியை கோதுமை, பார்லி, ஓட்ஸ் போன்ற தானியங்கள் மீது விதித்தது. இதனால் தானியங்களின் விலை விஷம்போல் ஏறி மக்கள் பரிதவித்தனர். ஜேன் ஆஸ்டின் தன் நாவல்களில் மக்கள் அனுபவித்த இந்தக் கொடுமையையும் பதிவு செய்யவில்லை.
இங்கிலாந்து அரச குடும்பத்தில் மிகப் பெரிய மாற்றம் நடந்ததும் ஜேன் ஆஸ்டின் எழுத்தாளராகப் பரிணமித்த காலத்தில்தான். மூன்றாம் ஜார்ஜ் மன்னர் மனநிலை பாதிக்கப்பட்டார். அவரால் ஆட்சியை நடத்த முடியாது என்பதால் அவர் மகன் அரச பொறுப்பை ஏற்று ஆட்சி நடத்தினார். அரசன் அல்லாது அவரது இடத்தில் இளவரசர் ஆட்சி செய்வதை ’ரீஜென்சி காலம்’ என்ற அழைத்தது இங்கிலாந்து அரச குடும்பம். இங்கிலாந்தின் ரீஜென்சியாக பொறுப்பேற்ற இளவரசன் (பின்னர் மன்னர் நான்காம் ஜார்ஜ்) அதிக கேளிக்கைகளில் ஈடுபட்டு அரச குடும்பத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தினான். இதனால் அரசின் கருவூலம் காலியானது.
ஜேன் ஆஸ்டினின் எழுத்துத் திறன் பற்றி கேள்விப்பட்ட இளவரசர் ஜேன் ஆஸ்டினை தன் அரண்மனைக்கு அழைக்கிறார். ஜேன் ஆஸ்டின் இந்த அழைப்பை விரும்பவில்லை. இருப்பினும் இளவரசனின் அழைப்பு என்பதால் மறுக்க முடியாமல் அரண்மனைக்குச் செல்கிறார். ஜேன் எழுதிக்கொண்டிருக்கும் ’எம்மா’ நாவலைத் தனக்குச் சமர்ப்பணம் செய்யும்படி கேட்டுக்கொள்கிறான். ஜேன் ஆஸ்டின் ரீஜென்சி கால அசிங்கங்கள் எதையும் தன்னுடைய படைப்புகளில் எழுதவில்லை.
ஜேன் ஆஸ்டின் தனக்கான எல்லையை அறிந்தவர். நாவலில் அவரைச் சுற்றியிருந்த குடும்பங்களின் பழக்க வழக்கங்கள், கொண்டாட்டங்கள், காதல், திருமணம், பிறப்பு மற்றும் இறப்பு தொடர்பான நிகழ்வுகளை மட்டுமே சித்தரிக்கிறார். நாவல் திரு & திருமதி பென்னட் குடும்பத்தினரைச் சுற்றியே கதை நகர்கிறது. டார்சி, எலிசபெத் பென்னட் இருவரும் கதையின் நாயகர்கள். டார்சியைப் பற்றிய தப்பான புரிதல்களுடன் (Prejudice) அவனைத் தேவையின்றி எலிசபெத் வெறுக்கிறாள். டார்சி தன்னுடைய அன்பு, அடக்கம், அறம் ஆகிய நற்குணங்களை தனக்குள் புதைத்துக் கொண்டு தன் குடும்பத்தின் சொத்து, செல்வாக்கு, பாரம்பரியம் பற்றிய பெருமைகளுடன் சற்றே கர்வத்துடன் (Pride) வலம் வருகிறான். இறுதியில் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு மனமாற்றம் அடைகிறார்கள். கதை இனிதே முடிகிறது.
‘’திருமண வயதில் இருக்கும் ஒரு பணக்கார இளைஞனின் தேவை அவனுக்கான மனைவி என்பது உலகறிந்த உண்மை. அவன் மனதில் என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளாமல், அவனது வருகையை தங்கள் மகள்களில் யாரேனும் ஒருவருக்கு ஏற்ற கணவனாக எதிர்கொள்வது திருமண வயதில் இருக்கும் பெண்களைப் பெற்றவர்களின் இயல்பாகிறது.’’ என்ற காத்திரமான வார்த்தைகளுடன் தொடங்குகிறது நாவல். பென்னட் குடும்பத்தில் ஜேன், எலிசபெத், மேரி, கிட்டி, லிடியா என்று ஐந்து பெண்கள். குடும்பத் தலைவர் பென்னட் பாதிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். நாள் முழுவதையும் வீட்டு நூலகத்தில் அமர்ந்து படித்தே கழிக்கிறார். திருமதி பென்னட்டின் கவலை எல்லாம் தன் ஐந்து பெண்களுக்கும் சரியான, பணக்கார மாப்பிள்ளை அமைய வேண்டும் என்பது மட்டுமே.
ஹெர்ஃபோர்ஷையரில் இருக்கும் பென்னட் குடும்பத்தினர் வீட்டுக்கு அருகில் இருக்கும் நெதர்ஃபீல்டு பங்களாவை லண்டனில் இருக்கும் பிங்லி குடும்பத்தினர் சில நாட்கள் தங்குவதற்கு வாடகைக்கு எடுத்துள்ளனர் என்ற செய்தியை திருமதி லாங் மூலம் அறிகிறார் திருமதி பென்னட். செய்தி அறிந்தவுடன் கணவர் பென்னட்டை பிங்லி குடும்பத்தினர் வந்ததும் அவர்களை மரியாதை நிமித்தம் சந்திக்க வேண்டும் என்று நச்சரிக்கிறார். பிங்லி தன்னுடன் அவரின் சகோதரிகள் கெரலைன், லூயிஷா, கெரலைனின் கணவர் ஹர்ஸ்ட், தன்னுடைய நண்பர் டார்சி சகிதம் வந்து சேருகிறார். மனைவியின் ஆசையை நிறைவேற்ற திரு.பென்னட் பிங்லி குடுமபத்தை முறையாக வரவேற்கச் செல்கிறார். உடனே பென்னட் குடும்பத்திற்கு பிங்லி குடும்பத்திடமிருந்து அழைப்பு வருகிறது. திருமதி பென்னட் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறார்.

பிங்லி வீட்டில் ஹெர்ஃபோர்ட்ஷையர் குடும்பங்கள் ஆடல், பாடல் என்று மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றன. ஜேன் பென்னட்டுடன் இரு முறை பிங்லி நடனம் ஆடுகிறார். எலிசபெத்துடன் நடனம் ஆட டார்சி மறுத்துவிடுகிறார். டார்சியைப் பற்றி எலிசபெத்திடம் அங்கிருந்த விக்ஹேம் என்ற இளைஞன் தரக் குறைவாகப் பேசுகிறான். தான் இராணுவத்தில் இருப்பதாகவும், அவன் பாதிரியாராக வர முடியாமல் டார்சி தடுத்துவிட்டதாகவும் கூறுகிறான். டார்சியைப் பற்றிய தவறான எண்ணங்கள் எலிசபெத் மனதில் குடிபுகுகின்றன. டார்சி தன்னுடன் நடனம் ஆட மறுத்ததற்கு அவனுடைய தற்பெருமையே காரணம் என்று எலிசபெத் கருதுகிறாள்.
ஒருமுறை பிங்லி வீட்டுக்குச் செல்லும்போது ஜேன் பென்னட் மழையில் நனைந்துவிடுகிறாள். காய்ச்சலில் விழுந்து சில நாட்கள அங்கேயே தங்க நேரிடுகிறது. பிங்லியுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைக்கிறது. இருப்பினும் பிங்லி இறுதிவரை ஜேனிடம் அவனுடைய காதலைத் தெரிவிக்கவில்லை. பிங்லி-ஜேன் இணைவார்கள் என்று ஆசையுடன் எதிர்பார்த்த திருமதி பென்னட்டுக்கு பெருத்த ஏமாற்றம். உடல்நிலை பாதிக்கப்பட்டு பிங்லி வீட்டில் தங்கியிருக்கும் தன் அக்கா ஜேனைப் பார்க்க எலிசபெத் நெதர்ஃபீல்டு வருகிறாள். இம்முறை டார்சி அவளிடம் அன்புடன் பழகுகிறான். எலிசபெத்-டார்சி நெருங்கிப் பழகுவது பிங்லியின் சகோதரி லூயிசாவுக்குப் பிடிக்கவில்லை. அவள் மனதுக்குள் டார்சி இருக்கிறார். பிங்லி குடும்பம் லண்டன் திரும்புகிறது.
காலின்ஸ் ஹெர்ஃபோர்ஷையரின் தற்போதைய பாதிரியார். பென்னட் குடும்பத்தின் நெருங்கிய உறவினன். திரு.பென்னட்டுக்கு ஆண் வாரிசு இல்லாததால் பென்னட் குடும்பம் இருக்கும் வீடு பென்னட்டின் மறைவுக்குப் பிறகு காலின்ஸுக்குச் சொந்தமாகிவிடும். ஒரு நாள் காலின்ஸ் எலிசபெத்திடம் தன்னுடைய காதலைச் சொல்லி திருமணத்திற்கு ஒப்புதல் கேட்கிறான். காலின்ஸ் தனக்கு எந்தவகையிலும் பொருத்தமானவன் இல்லை என்பதால் எலிசபெத் அந்த முன்மொழிவை மறுத்துவிடுகிறாள்.
இதை அறிந்த திருமதி பென்னட் மிகவும் கோபமடைகிறார். அவரைப் பொறுத்தவரை எலிசபெத் – காலின்ஸ் திருமணம் இரண்டு வகையில் நல்லது. ஒன்று எலிசபெத்துக்கு ஓரளவுக்கு வசதியான வாழ்வு கிடைக்கும். இரண்டாவதாக திரு.பென்னட்டின் மறைவுக்குப் பின்னர் அவர்கள் வீட்டைவிட்டு வெளியேற வேண்டியதில்லை. ஆனால் திரு.பென்னட் தன் மகள் எலிசபெத்தின் முடிவைப் பாராட்டுகிறார். காலின்ஸுடனான திருமணத்தை நிராகரித்தது குறித்து மகிழ்ச்சி அடைகிறார். திருமணம் என்பது இரண்டு மனங்களின் சேர்க்கை. அது அன்பின் அடிப்படையில் மட்டுமே நடக்க வேண்டும். அதில் பணம், வசதியான வாழ்க்கை போன்ற விஷயங்கள் குறுக்கிடக்கூடாது என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர். பென்னட் தன் ஐந்து குழந்தைகளில் எலிசபெத்தை அதிகம் நேசித்தார். இருவரும் ஒரே மாதிரி சிந்திப்பவர்கள். அன்பின் வழிப்பட்டவர்கள்.
எலிசபெத் தன்னுடைய காதலை ஏற்க மறுத்ததும், காலின்ஸ் அதே ஊரில் வசிக்கும் லூக்காஸ் குடும்பத்தைச் சேர்ந்த சார்லெட் லூகாஸிடம் தன்னுடைய காதலைத் தெரிவிக்கிறான். சார்லெட் அவனை ஏற்றுக்கொள்கிறாள். எலிசபெத்தும், சார்லெட்டும் நெருங்கிய தோழிகள். ஆனால் இருவரும் திருமணம் குறித்த வேறுபாடான முடிவை எடுக்கிறார்கள். காலின்ஸ்-சார்லெட் லூகாஸ் திருமணம் இனிதே முடிகிறது.
ஜேன் மனதளவிலும் உடலளவிலும் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறாள். பென்னட் குடும்பத்தின் நெருங்கிய உறவினர்களான திரு. & திருமதி கார்டினர்கள் லண்டனில் வாழ்கிறார்கள். ஜேன் அவளின் மாமா கார்டினர் வீட்டில் சிறிது காலம் இருந்தால் அவள் மனம் அமைதி அடைவாள் என்று திருமதி பென்னட் நினைக்கிறார். லண்டனில் பிங்லியைச் சந்திக்கும் வாய்ப்பும் கிடைக்கலாம் என்ற் எண்ணமும் அவருக்கு இருந்தது. கார்டினர் தம்பதிகள் ஜேன் பென்னட்டை அன்புடன் அரவணைக்கின்றனர்.
புதிதாகத் திருமணம் செய்துகொண்ட சார்லெட்- காலின்ஸ் தம்பதிகள் கெண்டில் வசிக்கிறார்கள். தன்னுடைய சிநேகிதி சார்லெட் வீட்டுக்கு எலிசபெத் செல்கிறாள். லேடி கேதரின் தி போர்க் எனும் சீமாட்டி காலின்ஸ் குடும்பத்தை விருந்துக்கு அழைக்கிறார். லேடி கேதரின் செல்வச் செழிப்பில் வாழ்பவர். காலின்ஸ் அவரின் நிழலில் வாழ்பவன். சற்று அடிமைப் புத்தி கொண்டவன். லேடி கேதரின் முன் அடிமைபோல் கைகளைக் கட்டிக் கொண்டு நிற்பவன். லேடி கேதரினின் ஆடம்பரம், அகங்காரம், ஆணவம் எல்லாம் எலிசபெத்துக்குப் பிடிக்கவில்லை. லேடி கேதரினுக்கு தன் மகளை டார்சிக்கு மணமுடித்து வைக்க வேண்டும் என்று ஆசை இருந்தது.
டார்சி அவன் நண்பன் கெனல் ஃப்ரிட்ஜ் வில்லியம்ஸ் இருவரும் தற்செயலாக லேடி கேதரின் வீட்டுக்கு வருகிறார்கள். டார்சிக்கு தன் அத்தை லேடி கேதரின் வீட்டில் எலிசபெத்தை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறான். டார்சி லண்டனில் இருக்கும் அவன் நண்பன் ஒருவனைத் தப்பான திருமண பந்தத்தில் இணைவதைத் தடுத்து நிறுத்தினான் என்று ஃப்ரிட்ஜ் வில்லியம்ஸ் கூறியதும் எலிசபெத் மனம் பதறுகிறது. டார்சி தடுத்து நிறுத்தியது தன் சகோதரி ஜேன் – பிங்லி திருமணத்தை என்று தப்பாக நினைத்துக் கொள்கிறாள். டார்சி மீதான அவளின் கோபம் கூடுகிறது. ஆனால் எலிசபெத்தை தற்செயலாக தன் அத்தையின் வீட்டில் சந்தித்த மகிழ்ச்சியில் டார்சி அவளிடம் தன் காதலைச் சொல்கிறான். எலிசபெத் அவன் காதலை நிராகரிக்கிறாள்.
டார்சி தன் அத்தை வீட்டிலிருந்து விடைபெறும்போது எலிசபெத்திடம் ஒரு கடிதம் கொடுக்கிறான். கடிதத்தில் விக்ஹேம் குறித்த நீண்ட விளக்கம் இருக்கிறது. விக்ஹேம் தங்கள் வீட்டில் வேலை பார்த்த ஒருவரின் மகன் என்றும், அவன் படிப்புக்கு தன் தந்தை நிறைய பண உதவி செய்ததையும் குறிப்பிடுகிறான். ஆனால் அந்த உதவியை விக்ஹேம் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாமல் ஊதாரியாக இருந்து பணத்தை எல்லாம் வீணடித்துவிட்டான் என்பதையும் கடிதத்தில் தெளிவாக எழுதியுள்ளான். எலிசபெத்தின் தங்கை யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் விக்ஹேம்முடன் ஓடிப் போனச் செய்தியைக் கேட்டதும் தான் மனம் பதறியதாகவும், அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்ததையும் அந்த நீண்ட கடிதத்தில் எழுதியிருக்கிறான். கடிதத்தைப் படித்த எலிசபெத்தின் கண்கள் கலங்குகின்றன. டார்சி பற்றி தான் கொண்டிருந்த தப்பான அபிப்பிராயங்களுக்காக மனம் வருந்துகிறாள். வருத்தத்துடன் வீடு திரும்புகிறாள்.
எலிசபெத் மனம் சஞ்சலம் அடைந்திருப்பதைக் கவனித்த அவள் தந்தை அவளை லண்டனில் இருக்கும் கார்டினர் வீட்டுக்கு அனுப்பிவைக்கிறார். லண்டனில் டார்சியின் நினைவுடனேயே எலிசபெத் இருக்கிறாள். ஒருநாள் கார்டினர் தம்பதிகள் டார்பிஷெயர் சுற்றுலா செல்கிறார்கள். அங்கிருக்கும் பெம்பர்லி ஹவுஸ் டார்சியின் வீடு. டார்சியைப் பார்க்க விரும்பும் கார்டினர் அவன் வீட்டுக்குச் செல்கிறார். டார்சி அன்று வீட்டில் இல்லை. டார்சியின் தங்கை எலிசபெத்துடன் அன்புடன் பழகுகிறாள். தன் அண்ணனின் பெருமைகளை எல்லாம் எலிசபெத்திடம் சொல்கிறாள். டார்சி வீட்டு ஹவுஸ் கீப்பர் ஒரு வயதான பெண்மணி. அவர் டார்சியின் நல்ல பண்புகளையும், பரிவான குணத்தையும் எலிசபெத்திடம் பகிர்ந்து கொள்கிறார். எலிசபெத்’’நான் எவ்வளவு பெரிய தவறு செய்துள்ளேன்! இந்த அன்பின் வடிவமான மனிதரைத் தவறாகப் புரிந்து கொண்டேனே!’’ என்று மனதுக்குள் வருந்துகிறாள்.
டார்சி தன்னுடைய பயணத்தை விரைவில் முடித்துக் கொண்டு அடுத்த நாளே வீடு திரும்புகிறான். அவனைச் சந்தித்ததில் கார்டினர் தம்பதிகள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றனர். எலிசபெத் உள்ளம் பூரிப்படைகிறது. டார்சி அவனிடம் இரண்டாவது முறையாக தன் காதலைச் சொல்கிறான். இந்தமுறை எலிசபெத் அவனின் காதலை நன்றியுடன் ஏற்றுக்கொள்கிறாள். இறுதியில் டார்சி கர்வம் கொண்டவன் என்பது பொய்யாகிறது. டார்சி பற்றிய எலிசபெத்தின் எண்ணங்கள் தவறானவை என்பதும் உறுதியாகிறது. இருவரும் திருமண பந்தத்தில் இணைகிறார்கள். எலிசபெத்தின் முடிவு குறித்து திருமதி பென்னட் பெருமை கொள்கிறார். தன் தந்தையிடம் எலிசபெத் தான் டார்சியிடம் மனதைப் பறிகொடுத்தது அவனின் பணத்துக்காக அல்ல. அவனின் நல்ல உள்ளத்துக்காகவே என்று சொன்னதும் அவர் எலிசபெத்தைப் பாராட்டுகிறார்.
பிங்லி குடும்பம் மீண்டும் நாஃபீல்டு வருகிறது. இம்முறை பிங்லி தன்னுடைய காதலை ஜேன் பென்னட்டிடம் கூறுகிறான். இருவரும் இணைகிறார்கள். திருமதி பென்னட் மகிழ்ச்சியில் திளைக்கிறார்.
இந்நாவல் வெளிவந்த நாளிலிருந்து பல கோடி பிரதிகள் விற்றுள்ளன. பலரும் திரைப்படமாக எடுத்துள்ளனர். டிவி தொடராகவும் எடுக்கப்பட்டுள்ளது. நாடக வடிவமும் பெற்றுள்ளது. ஜேன் ஆஸ்டின் நாவல்களின் சிறப்பு அதன் மென்மையான நகைச்சுவை. மனிதர்களின் பலவீனங்களை நினைத்து எள்ளி நகையாடுகிறார். அவரின் பகடி மிருதுவானது. யாரையும் புண்படுத்தாதது. அவரின் கதை மாந்தர்களிடம் பலவீனங்கள் இருக்கும். ஆனால் யாரும் வில்லன்கள் இல்லை. வன்முறைகள் அற்ற அமைதியான குடும்பங்களின் கதையே ஜேன் ஆஸ்டினின் தேர்வு. அதில் அவர் முழு வெற்றி பெற்றுள்ளார்.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | “பிரைட் அண்ட் பிரஜுடிஸ் (Pride and Prejudice)” நாவல் |
| ஆசிரியர்: | ஜேன் ஆஸ்டின் (Jane Austen) |
| வெளியீடு: | ஃபிங்கர்பிரிண்ட் பப்ளிஷிங் (Fingerprint Publishing) |
| விலை: | ₹.279 |
| அறிமுகம் எழுதியவர்: | ✍🏻 பெ.விஜயகுமார் |
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது ஏப்ரல் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

