24 மணி நேரமும் பொழுதுபோக்கு அம்சங்களை வீட்டுக்குள் கொட்டிக் கொண்டே இருக்கும் தொலைக்காட்சி யுகத்தில்,திரைக்கு வரும் படங்கள் அதே வேகத்தில் கையடக்க கருவியில் கிடைக்கும் காலத்தில் நாடகங்களை பார்க்க எத்தனை பேர் வருவார்கள்? யாரேனும் ஒரு பிரபல நட்சத்திரம் அந்த நாடகத்தில் நடித்தால், நாடகம் பார்ப்பதற்காக இல்லாவிட்டாலும் திரை நட்சத்திரங்களை பார்ப்பதற்காவது மக்கள் வரக்கூடும். அந்த நாடகம் கூட கருத்துக்களை பற்றி கவலைப்படாமல் துணுக்கு தோரணங்களை நெடுக கட்டித் தொங்க விட்டதாக இருக்க வேண்டும். வந்தவர்கள் சிரித்துவிட்டு போனால் போதும். எதற்காக சிரித்தோம் என்பதுப் பற்றி பின்னர் சிந்தித்துப் பார்க்க வேண்டியதில்லை என்பதுதான் இன்றைக்கு மிச்சம் இருக்கும் நாடகங்களின் இலக்கணமாக இருக்கிறது.
இப்படிப்பட்ட காலத்தில் இந்தியாவின் மிகப் பெரும் இதிகாசமான மகாபாரத்தை எடுத்துக்கொண்டு, அந்த புராதான நெடுங்கடையில் ஒரு கிளைக் கதையை பற்றி கொண்டு நாடகம் போட துணிந்தால் மக்கள் பார்க்க வருவார்களா?
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் ஓங்கி ஒலித்த குரல்களுள் உள்ளடங்கி ஒலித்துக் கொண்டிருந்த பெண் குரலை தேடிப் பிடித்து முன்னிறுத்தி, ஒரு கலை படைப்பாக தருவது காலத்தின் தேவை மட்டும் அல்ல. நம் வாழும் காலத்திற்கு செய்கின்ற சேவையும் கூட. மகாபாரதத்தில் உள்ளடங்கி ஒலித்துக் கொண்டிருந்த அம்பையின் குரலை ஊரறிய, உலகறியே வெளிப்படுத்தி அன்றைய குரலின் வேதனை இன்றும் அப்படியே இருக்கிறதே என்று வாசிப்பாளர்களின் மனதில் கருத்து விதையை ஊன்றச் செய்வது என்பது சமுதாய விழிப்புணர்ச்சியே இன்றி வேறென்ன?அதுவும் நல்ல தமிழில் அந்த விழிப்புணர்ச்சி இங்கு வெளிப்படுகிறது.
மசால் வடையை அன்றைய நாளிதழை கிழித்து மடித்துக் கொடுப்பது போல, சமுதாயத்தில் எது நடந்தாலும் அதனை துணுக்குத் தோரணமாக்கி கடை விரித்து கல்லாக்கட்டும் கிசுகிசுக்காளர்கள் இடையே, சமுதாயத்தில் இருந்து நாம் எதனை முன்னிலைப்படுத்தி கலை படிப்பை உருவாக்க வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையை ஆசிரியர் விதைத்திருக்கிறார்.
பீஷ்மரே! இப்போது நீர் அவமானப்படுத்திக் கொண்டிருப்பது ஒரு பெண்ணை அல்ல!ஒரு மகளை! ஒரு மனைவியை! உரிமை பெற்ற தாயை. நீர் உன் தாயின் கர்ப்பத்தில் மீண்டும் ஓடி மறைந்தாலும் அங்கும் தேடி வந்து உம்மை அழைப்பேன் என சபதம் செய்கிறாள் அம்பை. இந்தப் பெண்ணிய குரலை மகாபாரத்தில் இருந்து வெளிக்கொணர்ந்து வந்திருப்பதுதான் எழுத்தாளரின் சிறப்பு.
காசிநாட்டு மன்னனின் மகள்களான அம்பா,அம்பிகா,அம்பாலிகா ஆகிய மூவருக்கும் நடைபெற்ற சுயமர மண்டபத்தில் அழைப்பின்றி அத்துமீறி நுழைந்த பீஷ்மர் தனது பலத்தால் அந்த பெண்களை கடத்திச் செல்கிறார்.அவர் பிரம்மச்சாரி.அதனால், தன் தம்பி விசித்திர வீரியனிடத்தில் பெண்களை ஒப்படைக்கிறார். அம்பை காதலன் சால்வனின் நினைப்பாகவே இருக்கிறாள். அதனால் விசித்திரவீரியனை ஏற்க மறுத்து வெளியேறுகிறாள். கடத்தப்பட்டவள் என்பதால் காதலன் சால்வனும் அம்பையை புறக்கணிக்கிறான். அம்பையின் தந்தையும் அவளை ஏற்க மறுக்கிறான். ஒரு பெண் பலவந்தமாக கட்டாயப்படுத்தப்பட்டால் என்ற ஒரே காரணத்திற்காக பெற்றவனும் காதலனும் ஏற்க மறுத்த நிலையில், தன்னை பலவந்தமாக கடத்தி இந்த பிரச்சனைகளுக்கு காரணமான பீஷ்மரிடமே செல்கிறாள் அம்பை. பீஷ்மரும் அவளை நாட்டின் எல்லையை விட்டு வெளியேறுமாறு ஆணையிட்டு அவமானப்படுத்துகிறார். அப்போதுதான் பீஷ்மருக்கு எதிராக சபதம் செய்து அவரை அழிக்க உறுதி கொள்கிறாள். இந்த பிறவியில் பீஷ்மரை கொள்ள இயலாது என அறிந்த அம்பை மறு ஜென்மம் எடுத்து சிகண்டி ஆகி குருசேத்திர போர்களத்தில் பீஷ்மரை அழிக்கிறாள். இதுதான் இந்த ஜென்மா நாடகத்தின் சுருக்கம். இப்படி மறு ஜென்மம் எடுத்து, அதில் சிகண்டி எனும் பெண்ணாக பிறந்து, கந்தர்வனின் ஆண்மையை பெற்று, பீஷ்மரை அழிக்க உருவெடுத்திருக்கிறாள் அம்பை. அதனால் தான் ஆசிரியர் இந்த நாடகத்திற்கு ஜென்மா என பெயர் சூட்டி இருக்கிறார் என நினைக்கிறேன்.
மகாபாரதம் சரியாக கால வரையறை செய்யப்படாத காலத்தைச் சேர்ந்தது. அதனை காலத்திற்கு ஏற்ற வகையில் தந்திருக்கிறார் ஆசிரியர்.
மூன்றாம் தமிழான நாடகமும் நாட்டியமும் தமிழில் சிறப்பான இடத்தை பெற்றிருக்கின்றன.நாட்டிய மேடையின் அளவு,அதில் பொருத்தப்படும் விளக்குகளின் தன்மை, திரைகள் அமைக்கப்படும் விதம் என நுணுக்கமான நாட்டிய அரங்கம் குறித்த குறிப்புகள் எல்லாம் இருக்கிறது என்றால் அதற்கும் முன்பாகவே நாடகமும் நாட்டியமும் தமிழ் சமுதாயத்தில் முக்கிய இடம் பெற்று வந்திருக்கின்றன என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
காலத்திற்கேற்ற வகையில் கருத்துகளைச் சொல்லும் போது காலத்திற்கு ஏற்ற கலை வடிவங்களும் தேவைப்படுகின்றன.விஞ்ஞான வளர்ச்சியில் நாடகம் என்பது பின்னுக்கு தள்ளப்பட்ட கலையாக ஆகி வந்தாலும், விஞ்ஞானம் தந்துள்ள நுட்பங்களை நாடக காட்சிகளில் பயன்படுத்தும் போது அதற்கு புத்துயிர் கிடைக்கிறது. காட்சிகளை காண வருபவர்கள் பெரிய திரையிலும் சின்ன திரையிலும் கேட்க முடியாத நல்ல தமிழை கேட்கிறார்கள்.
பழைய கள் புதிய மொந்தை என்று சொல்வார்கள். ஆனால் இந்த ஜன்மா நூல் அதற்கு நேர்மாறாக இருக்கிறது. மகாபாரதம் எனும் பழைய மொந்தையில் பெண் உரிமை குரல் என்னும் புதிய கள்ளை ஊற்றி இருக்கிறார் ஆசிரியர். இது போதை தரும் கள் அன்று. விழிப்புணர்ச்சி தரும் கள்ளாகத்தான் என் கண்களுக்கு தெரிகின்றன. அதனால் இந்த விழிப்புணர்ச்சி தரும் கள்ளை புத்தக வாசிப்பாளர்கள் அனைவரும் பருக வேண்டிய ஒன்றாக இருக்கிறது. அதேசமயம் இந்த புத்தகத்தை நாடகத்தில் அடக்குவதா? இதிகாசத்தில் அடக்குவதா? இல்லை பெண்ணியத்தில் அடக்குவதா? என்ற குழப்பமும் நம்மை சூழ்ந்து கொள்கின்றது.
ஒரு அடிப்பட்ட புலியாகவும், ரணப்பட்ட பாம்பாகவும் என் கண்களுக்கு அம்பை தெரிகிறாள்.அவள் தனக்காக போராடும் சுயநலவாதியாக அல்லாமல், ஒட்டுமொத்த பெண் பிரதிநிதியாகவே திகழ்கிறாள். பெண் அடிமைத்தனத்திற்கு எதிராக ஆணாதிக்கத்தை எதிர்த்து மகாபாரத கதையில் குரல் கொடுக்கும் ஒரு பாத்திரமாக இருக்கிறாள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.அவளை ஒரு புதுமைப்பெண் போல் ஆசிரியர் சித்தரித்திருக்கிறார். இன்னொருபுறம் அவள் பாதிக்கப்பட்டு பல இன்னல்களுக்கு ஆளாகும் நிகழ்வுகளும் நம் மனதை கலங்கச் செய்து, சோக உணர்வுகளும் ஆக்கிரமித்துக் கொள்கின்றன.
புத்தகம்: ஜன்மா
ஆசிரியர்: முத்துவேழகன்
வெளியீடு: சீதை பதிப்பகம்
புத்தக வகை: நாடகம்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

