ஜனவரி 21 – லெனின் நினைவு தினம்:
“மாமேதை லெனின்- புரட்சி உத்திகளின் நாயகன்”
– என். குணசேகரன்
மாமேதை லெனின் 1924 ஆம் ஆண்டு ஜனவரி 21 அன்று தனது 53-வது வயதில் மறைந்தார். மானுட வரலாற்றின் பயணத்தை புதிய தடத்தில் கொண்டு சென்ற சாதனையை நிகழ்த்தியதால், அவர் இன்றும் நிலைத்து நிற்கும் மாமனிதராகத் திகழ்கிறார்.
சோசலிசம் என்ற புதிய பொன்னுலகத்தை பாட்டாளி வர்க்கத்தினால் படைக்க முடியும் என்று மார்க்ஸ் கண்டறிந்த உண்மையை சாதித்துக் காட்டியவர் லெனின்.
கம்யூனிஸ்டுகளின் பொதுவான தொலைநோக்கு இலட்சியம் சோசலிசம்.
போல்ஷ்விக் கட்சி அந்தப் புரட்சிகர மாற்றத்திற்கான திட்டங்களை உருவாக்கியது.
’சோசலிசம் உறுதியாக வந்தே தீரும்”என்பது வரலாற்று நோக்கில் சரியானது.நடைமுறையில் இதை மட்டும் உச்சரிப்பது வெறும் வேத மந்திரமாக முடியும்.ஒன்று,இது செயலின்மையை ஏற்படுத்துகிறது.மற்றொன்று,பு
”சோசலிசம் வந்தே தீரும்” என்று லெனின் அமைதியுடன் இருந்ததில்லை.புரட்சிக் கடலில் இடையறாமல் வியூகங்கள் அமைத்து நீந்திக் கொண்டே இருப்பது அவரது இயல்பு.தோல்விகள் வரும்போது,அடுத்தத் தாக்குதலை முதலாளித்துவத்தின் மீது தொடுத்திட லெனினியம் பணிக்கிறது. ரஷ்யப் புரட்சி வரலாறு இதற்கு சான்று.
சோசலிசத்தை அடைவதற்கு தொலைநோக்கு உத்திகளை கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்குகிறது. அதை அடைவதற்கு உடனடி நிலைமைகள் பக்குவப்படாத சூழலில்,இலக்கு நோக்கி செல்வதற்கான அரசியல் செயல்திட்டம், இலக்குகளை உத்தி என்கிறோம்.புரட்சியின் எதிரிகள்,திரட்ட வேண்டிய சக்திகள், புரட்சி வியூகம் கொண்டதாக தொலைநோக்கி உத்தி அமைந்திடும்.
தொலைநோக்கு உத்தி நிறைவேறும் வரை அவ்வப்போது எழுகிற சவால்களை சந்திக்கும் வகையில் செயல்திட்டங்களையும் இலக்குகளையும் , அணி திரட்ட வேண்டிய சக்திகளையும் கம்யூனிஸ்ட் கட்சி வரையறுக்கிறது.இவை நடைமுறை உத்தி எனப்படும்.
உத்திகளின் நாயகனாக..
தொலைநோக்கு உத்தி நடைமுறை புத்தி என்பன கம்யூனிஸ்ட் கட்சியின் அறிவியலான செயல்பாடாகும். ரஷ்யப் புரட்சிக்காலம் முழுவதும் உத்திகளின் நாயகனாக லெனின் திகழ்ந்தார்.
தொழிலாளி-விவசாயி வர்க்க கூட்டணி லெனின் வகுத்த உத்தி.இதுவே, ரஷியாவில் புரட்சிக்கு இட்டுச் சென்றது.அது உலகப் புரட்சிகளுக்கும் உன்னதமான வழிகாட்டும் அனுபவமாக இது திகழ்ந்தது.
இன்று, உழைப்புச் சுரண்டலையும், வேலை இழப்பையும் ஏற்படுத்தி வரும் நவீன தாராளமயம் தொழிலாளர்களை போராட்டக்களத்தில் ஒன்று சேர்க்கிறது.
ஆசியா ஆப்பிரிக்கா லத்தீன் அமெரிக்க நாடுகளில் நவீன தாராளமய கொள்கைகளால் விவசாயப் பிரிவினர் கடும் சுரண்டலுக்கு ஆளாகி வருகின்றனர்.இந்தியா உள்பட பல நாடுகளில் விவசாயமும், நிலமும் கார்ப்பரேட் வேட்டைக்கு இரையாகி வருகிறது.நில உரிமை, உணவுப்பாதுகாப்பு போன்ற விவசாயிகளின் உடனடி கோரிக்கைகளுக்காக போராடுவது அவசியமே. ஆனால் இது தொழிலாளி விவசாயி வர்க்க கூட்டணியாக முதலாளித்து வத்தை வீழ்த்துவதை நோக்கி முன்னேறிட வேண்டும்.
வர்க்க உணர்வு
முதலாளித்துவ அமைப்பில் மக்கள் சந்திக்கும் ஏராளமான பொருளாதாரப் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். மக்களைத் திரட்டும் இயக்கங்கள் அவர்களது கோரிக்கைகளை முன் வைப்பதோடு, ஏன் முதலாளித்து அரசு அவற்றை நிறைவேற்றவில்லை என்பதையும் விளக்கிட வேண்டும். இது உழைக்கும் மக்கள் உணர்வை மேம்படுத்திடும்.
இதை லெனின் ‘வர்க்க உணர்வு’ என்று குறிப்பிடுகிறார். உழைக்கும் வர்க்கங்களுக்கு முதலில் பொருளாதார கோரிக்கை சார்ந்த உணர்வு மேலோங்கும்.அரசியல் கல்வி முதலாளித்துவத்தை வீழ்த்தி சோசலிச சமூகம் அமைவதற்கான உணர்வு மட்டத்தை உயர்த்தும். இதனை “என்ன செய்ய வேண்டும்” நூலில் லெனின் விளக்கினார்.
அன்று ரஷ்ய மக்களை போரும், நிலப்பிரபுத்துவக் கொடுமைகளும், வறுமையும் வாட்டிக் கொண்டிருந்தது. அமைதி, நிலம் ,உணவு கோரிக்கைகளை முன்வைத்து போராடியதால் மக்களின் போராட்ட உணர்வு உயர்ந்தது.இது பொருளாதார உணர்வு.
இதற்கு அடுத்தக் கட்டமாக ஜார் கொடுங்கோன்மையையும் அடுத்து வந்த முதலாளித்துவ ஆட்சியையும் வீழ்த்தி சோசலிச அரசு அமைத்திட வர்க்கங்களின் உணர்வினை கம்யூனிஸ்ட்கள் மேம்படுத்தினர். இது சோசலிச உணர்வாக மாறி புரட்சி வெற்றி கண்டது. நவம்பர் புரட்சி எடுத்துரைக்கும் முக்கியமான படிப்பினை இது.
ஜனநாயகவாதிகள், இடதுசாரிகள் பலர் லெனின் கருத்தினை ஏற்காமல் இருக்கலாம்.ஆனால் வர்க்கப் போராட்டங்களோடு இணைந்து, உழைக்கும் வர்க்கங்களின் உணர்வை மேம்படுத்தாமல் மாற்றத்தை சாத்தியப்படுத்த இயலாது.
இடதுசாரி ஆட்சி நடந்து கொண்டிருக்க கூடிய நாடுகளில் மக்களின் உணர்வு மட்டத்தை மேம்படுத்திட இடதுசாரிகள் பணியாற்றி வருகின்றனர்.
மக்களின் உணர்வுரீதியான பிடிப்போடு இடதுசாரி அரசாங்கங்கள் நீடிக்கின்றன. வெனிசுலாவில் நிக்கோலஸ் மதுரோ அரசாங்கம் மக்கள் ஆதரவோடு செயல்பட்டு வந்தது. மக்கள் நல நடவடிக்கைகளை கடந்த கால சேவாஸ் அரசாங்கம் எடுத்ததன் தொடர்ச்சியாக மதுரோ அரசாங்கமும் முன்னெடுத்து வந்தது.
இதனைப் பொறுக்காத அமெரிக்க ஏகாதிபத்தியம் வெனிசுலா மீது தாக்குதல் நடத்தி மதுரோவை கடத்திச் சென்றது.
வெனிசுலாவை ஆக்கிரமித்து சுமார் 300 பில்லியன் பேரல் எண்ணெய் வளத்தை கொள்ளையடிக்க ராணுவ முஸ்தீபுகளை அமெரிக்கா செய்து வருகிறது. இடதுசாரி உணர்வுடன் மக்கள் இடதுசாரி அரசாங்கத்தை பாதுகாப்பதில் முனைப்பாக போராடி வருகின்றனர். கியூபாவையும் மக்கள்தான் பாதுகாக்கின்றனர். சீனாவிற்கும் மக்களே பாதுகாப்பு அரண்.மேம்பட்ட வர்க்க உணர்வு கொண்ட மக்கள் பலமிக்க எதிரிகளையும் வெற்றி கொள்வார்கள்.
ரஷ்யப் புரட்சி வரலாற்றில் வர்க்கங்களின் உணர்வை மேம்படுத்த போல்ஷ்விக்குகள் அயராது பாடுபட்டனர்.லெனின் அதற்கு முன்னோடி. 60 தொகுதிகளாக வெளிவந்த லெனின் எழுத்துக்களே இதற்கு சான்று.
ஏப்ரல் ஆய்வுரைகள்
மாறி வரும் சூழலுக்கு ஏற்ப தங்களது உத்திகளை போல்ஷ்விக்குகள் உருவாக்கினர்.
1917 பிப்ரவரியில் முதலாளித்துவப் புரட்சி நடந்த அடுத்த மாதமே லெனின் பிரசித்தி பெற்ற “ஏப்ரல் ஆய்வுரைகளை”முன்வைத்தார். முன்பு எழுப்பிய ஜனநாயக குடியரசு போன்றவற்றைக் கைவிட்டு அனைத்து அதிகாரங்களும் சோவியத்துக்களுக்கே போன்ற புதிய முழக்கங்களை லெனின் முன் வைத்தார்.
*பிப்ரவரி மாத ஆட்சிமாற்றத்துடன் புரட்சியின் முதல் கட்டம் முடிவு பெறுகிறது. .புரட்சி அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறுகிறது,
*புரட்சியின் முதல் கட்டத்தில் முதலாளிகள் கையில் அதிகாரம் சென்றடைந்துள்ளது,இதற்குக் காரணம்,ரஷியப் பாட்டாளி வர்க்கத்தின் வர்க்க உணர்வு குறைவாக இருந்ததுதான்.அத்துடன்,அமைப்பு ரீதியாகத் திரள்வதில் பாட்டாளி வர்க்கத்திற்கு இருந்த பலவீனமும்தான் அந்த நிலைமை ஏற்பட்டதற்குக் காரணம்.
*புரட்சி இரண்டாவது கட்டத்திற்கு முன்னேறிட வேண்டும்.
*இந்தக் கட்டத்தில், பாட்டாளி வர்க்கத்திடமும்,ஏழை விவசாயிகளிடமும் அதிகாரம் சென்றடைய வேண்டும்.
வரலாற்றை மார்க்சிய அடிப்படையில் ஆய்வு செய்து லெனின் இந்த இலக்குகளை முன்வைத்தார்..
இவை வெறும் முழக்கங்களாக இல்லாமல் அவற்றை சாத்தியமாக்கும் பாதையில் லெனின் தலைமையில் போல்ஷ்விக் கட்சி முன்னேறியது. உழைக்கும் மக்களின் சுயாட்சி கொண்ட “சோவியத்” அமைப்புக்களில் கம்யூனிஸ்டுகள் மேலாண்மை பெற்றனர்.
லெனின் ஏற்கனவே கருத்துப்போர் நடத்தி கட்சிக் கோட்பாடுகளை உருவாக்கி இருந்தார். அந்த கோட்பாடுகள் அடிப்படையில் உருவான கம்யூனிஸ்ட் கட்சி புரட்சியை சாத்தியமாக்கியது.
கருத்துப் போராட்டம் நடத்தி லெனின் தனது முடிவுகளை முன்னெடுத்தார். புரட்சி வெற்றி பெற்று போல்ஷ்விக்குகள் தலைமையில் ரஷ்யப் பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றியது. மாறுகிற சமூக,பொருளாதார,அரசியல் நிலைமைகளுக்கேற்ப செயல்திட்ட வியூகங்களை உருவாக்க வேண்டும் என்பது ரஷ்யப் புரட்சியின் படிப்பினை.
லெனின் உருவாக்கிய உத்திகள் அன்றைய ரஷியப் புரட்சியை சாத்தியமாக்கியது . அவற்றை அப்படியே நகல் எடுத்து பயன்படுத்துவதை லெனினியம் ஏற்காது. குறிப்பிட்ட நிலைமைகளை ஆய்வு செய்து அதற்கேற்ப உத்திகள் உருவாக்கிட வேண்டும் என்பது லெனின் வழிகாட்டுதல்.
லெனின் உருவாக்கிய பொதுக் கோட்பாடுகள் இன்றும் பொருந்துவன.
சோசலிச ஜனநாயகம்
இன்றும் சோசலிசம் உயிர்த்துடிப்பு கொண்ட இலட்சியமாகத் திகழ்கிறது. இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.
2024-ல் “ஜனநாயக கூட்டணி’ என்ற அமைப்பின் சார்பில் உலக அளவில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.ஜனநாயகத்திற்கு எதிலிருந்து ஆபத்து வருகிறது என்பதுதான் கேள்வி. பதிலளித்த பெரும்பான்மையானவர்கள் மூன்று காரணங்களை பட்டியலிட்டார்கள்.
1.சிலரிடம் சொத்து வருமானம் மேலும் மேலும் குவிந்து வருவது.
2.அதிகரித்து வரும் ஊழல்.
3.கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசியலை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது.
இந்த கருத்துக் கணிப்பு முதலாளித்துவம் மீதான குற்றப்பத்திரிகை.முதலாளித்துவ அமைப்பை பெரும்பான்மையினர் நிராகரிக்கிறார்கள் என்பதே இது உணர்த்தும் அழுத்தமான செய்தி.
கருத்துக் கணிப்பில் 79 சதமான சீனர்கள் தங்கள் நாட்டில் மற்ற மேற்கத்திய நாடுகளை விட சிறந்த ஜனநாயகம் நிலவுவதாக கருத்து தெரிவித்துள்ளனர். கருத்துக்கணிப்பு நடத்திய மேற்கத்திய ஆதரவு நிறுவனத்துக்கு இது பெரும் அதிர்ச்சியாக இருந்திருக்க கூடும்.ஏனெனில் சர்வாதிகார சீன அரசு என்பது அவர்களால் நாள்தோறும் பரப்பப்படும் அவதூறு. சீன மக்கள் தங்களது அரசு தங்கள் நலனை அரசு பாதுகாப்பதாக கருதுகின்றனர். சீன சோசலிசத்தின் வெற்றி இது.இன்றைக்கு முதலாளித்துவம் மீதான வெறுப்பும்,சோசலிச நேசமும் அதிகரித்துள்ளது.
“என்ன செய்ய வேண்டும்?’
லெனின் புதிய சோசலிச சமூகம் எவ்வாறு இருக்க வேண்டுமென்ற கோட்பாடுகளை மானுடத்திற்கு வழங்கியுள்ளார். உயரிய ஜனநாயகம் சோசலிசத்தில்தான் சாத்தியம் என்பதை லெனின் நிறுவியுள்ளார்.
ரஷ்ய புரட்சி வரலாறு இன்றைய சூழலில் பல கடமைகளை முன்னிறுத்துகிறது.
*அமெரிக்க ஏகாதிபத்தியம் காலனித்துவ அராஜகங்களை கட்டவிழ்த்துள்ளது. அடுத்தடுத்து உழைக்கும் மக்கள் மீது தாக்குதல்களை தொடுத்துக் கொண்டிருக்கிறது.ஒவ்வொரு நாட்டிலும் ஏகாதிபத்தியம் எதிர்ப்புடன் உழைக்கும் மக்களின் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
*உலக அளவில் உழைக்கும் மக்கள் இயக்கங்களின் ஒற்றுமை வளர வேண்டும்.
*வலதுசாரி நவபாசிச சக்திகளின் சித்தாந்தப் பிடியிலிருந்து உழைக்கும் மக்களை விடுவித்து, வர்க்க உணர்வை மேம்படுத்த வேண்டும்.
*காலனிகளாக அடிமைப்பட்டு இருந்த தெற்கு நாடுகளான(Global South) 100-க்கும் மேற்பட்ட நாடுகள் ஏகாதிபத்திய கொள்கைகளால் பின்தங்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. உலக வர்க்க இயக்கத்திற்கு அந்த நாட்டு மக்களின் ஒற்றுமையும், பங்களிப்பும் முக்கியமானது.
*இந்தியாவில் வகுப்புவாத உணர்வு வளர்வது தடுக்கப்பட வேண்டும். வர்க்க ஒற்றுமை உருவாக்கி வர்க்க உணர்வை வளர்த்தெடுக்க வேண்டும்.
*தமிழகத்தில் மதச்சார்பற்ற உணர்வினை அழிக்கும் முயற்சியில் சங்கப் பரிவாரங்கள் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில் வர்க்க உணர்வை வளர்ப்பதற்கான அத்துணை வாய்ப்புகளையும் பயன்படுத்த வேண்டும்.
புரட்சி, ரஷியாவில் நடந்தாலும் அது உலக சோசலிசத்திற்கான திறவு கோல்.இன்றைய நிலையில் லெனின் வாசிப்பு சோசலிசத்தை அடைவதற்கான புதிய சிந்தனைகளை வழங்குகிறது. லெனின் லெனினியமாக நம்மோடு வாழ்கிறார்!
==============================
– என். குணசேகரன்
மத்தியக் குழு உறுப்பினர்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
