5 நாள் வாரம் என்கிற ஒற்றைக் கோரிக்கைக்காக 9 சங்கங்களின் ஐக்கிய மேடையின் அறைகூவலில் ஜனவரி 27 செவ்வாய்க்கிழமை நாடு முழுவதுமுள்ள வங்கி ஊழியர் அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் இறங்குகின்றனர். வங்கித் துறை ஸ்தம்பிக்க உள்ளது.
தங்களது ஊதிய உயர்வுக்காகவோ, சலுகைகள் ஏதேனும் கோரியோ நடத்தப்படும் போராட்டம் அல்ல இது. சனிக்கிழமைகளில் வங்கி இயங்காது என்று அறிவிக்குமாறு வற்புறுத்தியே இந்தப் போராட்டம்.
பத்து ஆண்டுகளுக்கு முன் வரை, அனைத்து சனிக்கிழமைகளிலும் அரை நாள் இயங்கி வந்தன வங்கிகள். 5 நாள் வாரம் வேண்டும் என்ற நெடிய காலப் போராட்டத்தை, வங்கிகள் நிர்வாகத் தலைமை 2015இல் வித்தியாசமாக முடிக்கப் பார்த்தது. பேச்சு வார்த்தைகளின் ஒரு கட்டத்தில், மாதத்தில் இரண்டாம், நான்காம் சனிக்கிழமைகளில் விடுமுறை, மற்ற சனிக்கிழமைகளில் முழு நாள் பணி என்று ஒப்பந்தத்தில் முடிவானது. ஆனாலும், இது இடைக்கால ஏற்பாடு தான், எல்லா சனிக்கிழமைகளையும் விடுமுறை என்று அறிவிக்கத் தொடர்ந்து வற்புறுத்துவோம் என்று சங்கங்கள் நிலை எடுத்தன.
அதற்குப் பிறகு பலமுறை போராட்ட அறிவிப்புகள், தயாரிப்பு இயக்கங்கள், கடைசி கட்டத்தில் அழைத்துப் பேசி அரசுக்குப் பரிந்துரை செய்வோம் என்று சமாதான வார்த்தைகள் பேசி இந்திய வங்கிகள் கழகம் (INDIAN BANKS ASSOCIATION) என்ற கண்ணா மூச்சி ஆடி, அவர்களும் ஒன்றிய அரசும் சேர்ந்து இந்த 10 ஆண்டுகளை நகர்த்தி விட்டன.
இப்போதைய வேலை நிறுத்த அறிவிப்பின் மீதான முத்தரப்பு பேச்சு வார்த்தையில் கூட, நேரடி உறுதி அளிக்க மறுத்து ஏதேதோ கதைகள் நிர்வாகத் தரப்பில் இருந்து பேசவே, சங்கங்கள் உறுதியாக வேலை நிறுத்தத்தில் இறங்குகின்றன.
சுமக்க மாட்டாத வேலை பளு
வங்கிகளில் எழுத்தர் ஆறரை மணி நேரமும், கடைநிலை ஊழியர் ஏழு மணி நேரமும் அன்றாடம் உழைக்க வேண்டும். ஆனால், நடைமுறையில் மாநகரங்களிலோ கிராமப்புறமோ சட்டென்று ஆறரை மணி நேரம் முடிந்தது என்று ஊழியர்கள் எழுந்து போகும் நிலைமையே இல்லை. குவிகிறது வேலை. ஒடிகிறது முதுகு. வேறு பக்கம் திரும்பி உட்கார்ந்திருக்கின்றன நிர்வாகங்கள். வாடிக்கையாளர் பார்த்துக் கொள்ளத் தான் கடிகாரங்கள், வங்கியில்! அதை நிமிர்ந்து பார்த்து நேரம் முடிந்தது என்று பணியாளர்கள் யாரும் வெளியேற முடியாது! அதிகாரிகளுக்கு இன்னும் வரையறுக்கப்பட்ட பணிநேரம் என்கிற ஒன்றே நடைமுறையில் இல்லாத நிலை.
லட்சக் கணக்கில் காலி இடங்கள். பல மடங்கு வேலை பளுவைச் சுமக்கின்றனர் பணியில் இருப்போர். பணி நிறைவு செய்த மூத்த ஊழியர்களைக் கண்டால், நீங்கள் பாக்கியசாலி என்பார்கள், தன்னோடு பணியாற்றும் ஊழியர்களின் பணி ஓய்வு நாளின்போது, நீங்க புண்ணியம் செஞ்சவங்க, தப்பிச்சுப் போறீங்க என்பார்கள்.
ஏன் என்று கேட்கவே வேண்டியதில்லை, வங்கி ஊழியர்கள், அதிகாரிகளது அன்றாடம் எப்படி தொடங்குகிறது, எப்படி நிறைவு பெறாத உணர்வோடு முடிகிறது என்று பார்த்தாலே புரிந்து கொண்டு விடமுடியும். ‘காலை அரும்பிப் பகல் எல்லாம் போதாகி மாலை முடியும் இந்நோய்’ என்று தலைவி படும் பிரிவின் ஏக்கத்தை வள்ளுவர் எழுதி இருப்பார். மாலை என்ன, இரவில் கூட நிம்மதியாகக் கண்ணுறங்க முடியாத தன்மைக்கு இன்றைய வங்கிப் பணி மாறிவிட்டிருக்கிறது.
மன அழுத்தத்திற்கு சமூகம் கொடுக்கும் விலை….
உயரதிகாரிகள் அழைப்பு ஒலித்தாலே நெஞ்சு பதறும் அதிகாரிகள். விடுப்பு விண்ணப்பத்தை ஏற்பாரோ மாட்டாரோ கிளை மேலாளர் என்ற துடிப்போடே அவரது அறைக்குள் நுழையும் ஊழியர்கள். வைப்புத் தொகை இலக்கு என்ன ஆயிற்று, வராக்கடன் வசூல் ஏன் குறைந்து போயிற்று, சந்தைப்படுத்தவே தெரியாதா வங்கியின் புதிய திட்டங்களை என்று அலுவலகத்தினுள் நுழையும்போதே சகிக்க மாட்டாத முகத்தோடும் கேட்கக் கூசும்படியான சொற்களோடும் எதிர்ப்படும் உயர் நிர்வாகிகள் எதிரே எந்த மரியாதையும் அற்று நிற்கவேண்டிய கொடுமையை எல்லோரும் வெளியே சொல்லி விடுவதில்லை.
“எனக்கு ஒரு கயிறு வேண்டும்ப்பா, வாங்கி வந்து கொடுக்கிறாயா?” என்று கடந்த ஆண்டு ஜூலை 17ம் தேதி, தன்னிடம் மேலாளர் சிவ சங்கர் மித்ரா கேட்டபோது அந்த வார்த்தைகளில் எந்தக் குறிப்பும் அறிய முடிந்திருக்கவில்லை, பொதுத் துறை வங்கி ஒன்றின் புனே மாநகரக் கிளையின் அந்த ஊழியர் வாங்கித் தந்து விட்டுப் போனார். எல்லோரும் வெளியேறிய பிறகும் அலுவலக வேலை இருக்கிறது என்று தான் மட்டும் உள்ளே இருந்து கொண்டுவிட்ட மித்ரா, கதவை உள்ளிருந்து தாளிட்டுவிட்டு அந்த இரவில் அந்தக் கயிறைப் பயன்படுத்திக் கொண்டுவிட்டார். நள்ளிரவு கடந்தும் வீடு திரும்பாத கணவரைத் தேடி அவருடைய மனைவி வந்து மற்றவர்களை அழைத்துக் கதவைப் போராடித் திறந்து பார்க்கையில் நேரம் கடந்து விட்டிருந்தது. தாங்க மாட்டாத வேலை பளு தான் காரணம் என்று எழுதிவிட்டுச் சென்றிருந்த மித்ராவின் கடிதம் மௌன சாட்சியாக இருந்தது.
ஏப்ரல் 26, 2024: தனது திருமண நாளைக் கொண்டாடிக் கொண்டிருக்க வேண்டிய அந்த இரவு நேரத்தில் குஜராத் மாநிலத்தின் பொதுத் துறை வங்கியில் பணியாற்றிக் கொண்டிருந்த அந்த இளம் அதிகாரி நின்று கொண்டிருந்த இடம், அடுத்த சில நிமிடங்களில் ரயில் ஒன்று கடக்க இருந்த தண்டவாளம். எப்படியோ தகவல் அறிந்து அவரோடு பேசிய உடன் பணியாற்றும் அதிகாரிகள் சிலர் அவரது மனத்தை மாற்றி அவரை அன்று மீட்டு விட்டனர். இந்த பணிச்சுமையை இதற்கு மேலும் என்னால் தாங்க முடியாது என்பதாக இருந்தது அவரது குமுறல்.
அதே மாநிலத்தில் யூனியன் வங்கி அதிகாரி ஒருவர் அதே ஆண்டு பிப்ரவரி மாதத்தில், “இனியாவது வேறு யாருக்கும் எட்ட முடியாத இலக்குகளை திணிக்காதீர்கள், என்னோடு போகட்டும் இந்தக் கொடுமை” என்று எழுதி வைத்துவிட்டுத் தூக்கில் தொங்கி விட்டிருந்தார். அதை அடுத்த இரண்டாம் வாரம், தன்னுடைய 2 வயது மகளை, மனைவியை விட்டுவிட்டுத் தனது வாழ்வை முடித்துக் கொண்டார் தமிழ்நாட்டில் ஒரு வங்கி அதிகாரி.
அடுத்தடுத்து வெவ்வேறு வங்கிகளில் இருந்து தெரியவரும் தற்கொலை செய்திகள். கடந்த பத்து ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை, கடந்த ஆண்டே 500ஐக் கடந்து வளர்ந்து விட்டிருந்தது.
எல்லா விதத்திலும் மன அழுத்தம்
பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடந்த ஆண்டு 29 வயது பெண் அதிகாரி ஒருவர், அரசுப் பணி குறித்த தனது கனவுகள் எல்லாம் கருகிப் போன நிலையில், இதற்கு மேலும் மன அழுத்தத்தோடு அநியாய பணிச்சுமையைத் தன்னால் சுமக்க முடியாது, எதிர்காலம் பற்றி எந்தத் திட்டமும் இல்லை, ஆனால், இங்கே தொடரும் பேச்சுக்கு இடமில்லை என்று பணியைத் துறந்துவிட்டு வெளியேறிய செய்தி பல்வேறு வங்கிகளிலும் சிறிது காலம் பேசுபொருளாக இருந்தது.
விடுப்பு கேட்டு விண்ணப்பம் அனுப்பிய மூத்த மேலாளர் ஒருவரது கடிதத்திற்கு, நீங்கள் அடுத்த மாதம் எத்தனை நாள் வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாமே, இப்போது எதற்கு என்று குதர்க்கமாக பதில் வந்தது உயர் நிர்வாகியிடம் இருந்து. அந்த மாதம் பணி ஓய்வு பெற வேண்டியவர் அந்த மேலாளர். அறுபதாம் பிறந்த நாள் ஒட்டிய குடும்ப நிகழ்ச்சிக்காகத் தான் அவர் விடுப்பு கேட்டிருந்தது. எத்தனை திமிர்த்தனமான பதில் அது.
சுயமரியாதையோடு வாழ விடாது, அன்றாடப் பணிகளுக்குப் போதுமான ஊழியர்களும் இல்லாது, வாடிக்கையாளரோடு நேரடியாக வங்கி பணியாளர்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்கின்றன வங்கி நிர்வாகங்களும், ஒன்றிய அரசும்.
ஒன்றிய அரசின் ஒவ்வாத நடவடிக்கைகள்
பாரத ஸ்டேட் வங்கி தனியாகவும், துணை வங்கிகள் தனியாகவும் இயங்கி வந்ததை இணைத்தனர். பின்னர், 2019ம் ஆண்டில், 12 வங்கிகளை வெவ்வேறு முறையில் இணைத்து 4 வங்கிகளாகச் சுருக்கினர். இப்போது மீதம் உள்ள மிகச் சில வங்கிகளை எப்போது இணைக்கலாம் அல்லது தனியார்மயத்தை நோக்கித் தள்ளலாம் என்று துடிக்கின்றனர். இத்தனை வங்கிகள் வேண்டாம் என்பது ஒன்றிய அரசின் குரல். பொதுத்துறை வேண்டாமே என்கிற முதலாளிகளின் குரலில் இப்போது ஆட்சியாளர்களே கூச்சமின்றிப் பேசுகின்றனர், அதுவும் கடந்த பத்தாண்டு காலம் ஆட்சி நடத்துவதே கார்பொரேட் கூட்டம் கவலை இல்லாது பார்த்துக் கொள்ளும் பொருட்டே என்று எழுதி வைத்துக் கொண்டிருப்பது போல் தெரிகிறது. அதன் பிரதிபலிப்பு, எத்தனை லட்சம் கோடி வராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது என்கிற புள்ளிவிவரத்தில் தெறிக்கிறது.
வங்கிகள் தனியார்மயம் என்பது, 1969இல் தொடங்கப்பட்ட நாட்டுடைமை எனும் முக்கிய அரசியல் நடவடிக்கைக்கு நேர் எதிரான செயல். எளிய மக்களை மீண்டும் கந்துவட்டிக்கார்களிடம் முற்றாகக் கொண்டு தள்ளும் அராஜகம். வங்கி ஊழியர், அதிகாரிகள் இந்தத் தனியார்மய முயற்சிகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடிக் கொண்டு வருகின்றனர்.
5 நாள் வாரம் என்று கேட்பது எதற்காக ?
5 நாள் வாரம் என்ற கோரிக்கை கூட வலியில்லாமல் வாழ்வதற்கான பேராசை அல்ல…. எப்படி இரண்டாம், நான்காம் சனிக்கிழமைகளில் விடுமுறை கொடுத்ததற்காக, மற்ற சனிக்கிழமைகளில் முழு நாள் பணியாற்ற வேண்டிய கூடுதல் சுமையை ஏற்றுக் கொண்டனரோ, இப்போது மீதமுள்ள சனிக்கிழமைகளை எங்களுக்கு விட்டுக்கொடு என்பதற்கு, மற்ற 5 நாளில் கூடுதல் பணிநேரம் உழைக்க வேண்டும். ஏற்கெனவே காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை என்பது ஆறு, ஏழு என்று போய்க் கொண்டிருக்கையில், இப்போது கூடுதல் பணிநேரம் என்பது வார நாட்களில் தங்களது நிம்மதியை இன்னும் தொலைதூரத்திற்குத் தள்ளி வைக்கும் என்பதையும் அவர்கள் அறிவார்கள். ஆனாலும், ஏன் 5 நாள் வாரம் என்று கோரிக்கை வைக்கின்றனர்?
பணிநேரம் சுருக்கப்பட்டால் உழைப்புத் திறன் கூடும் என்ற அறிவு பெற்ற நாடுகள் பலவும் வேலை நேரத்தைக் குறைத்துக் கொண்டிருக்கிறதே, கொஞ்சம் மூளையைப் பயன்படுத்து என்று வங்கி பணியாளர்கள் குரல் எழுப்புகின்றனர். வார இறுதியில் சொந்தக் குடும்பத்தோடு நேரம் செலவிட எங்களை அனுமதி என்று உரத்துக் கேட்கின்றனர். குடும்ப விசேஷங்கள், உறவினர் நண்பர் சந்திப்புகள், பொழுது போக்கு, கலை இலக்கிய ரசனை எதற்குமே வாய்ப்பின்றி வாழ்க்கையைத் தொலைத்துவிடப் போகிறோமா என்று தான் அவர்கள் கூட்டாக நின்று தங்களது உள்ளத்திலிருந்து பேசுகின்றனர்.
நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை, ஞாயிற்றுக் கிழமையும் பெண்களுக்கு இல்லை என்றார் கவிஞர் கந்தர்வன். சனிக்கிழமை பெண் தோழர்களுக்கு எத்தனை முக்கியமானது என்பதை இதிலிருந்தே புரிந்து கொண்டுவிட முடியும்.
இதோடு முடியப்போவதில்லை….
ஜனவரி 27 வெறும் வேலை நாட்கள் குறித்தான உரையாடல் அல்ல. இதோடு எல்லா பிரச்சனைகளும் தீர்ந்துவிடப் போவதும் சாத்தியம் அல்ல. கண்ணியத்தோடு தங்கள் பணியிடத்தில் தங்களது கடமைகளை நிறைவேற்றவும், சஞ்சலங்கள் பதட்டங்கள் இன்றி அன்றாடம் வீடு திரும்பவும் அடிப்படையான தேவைகளில் இந்த முக்கிய மாற்றம் ஓரளவு தங்களுக்கு உளவியல் அமைதியை மீட்டுத் தரும் என்று நம்புகின்றனர். அதற்குப் பிறகு இன்னும் மேலான தன்மையில் தங்கள் செயல்பாடுகளை செப்பனிட்டுக் கொள்ளக் கூட இந்த ஓய்வு பயன்படும் என்றும் அறிந்திருக்கின்றனர்.
ஜனவரி 27 போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள் !
எழுதியவர்:

எஸ்.வி.வேணுகோபாலன்
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
சமத்துவப் பொருளாதாரத்திற்கான போராட்டமும் இந்திய முதலாளித்துவமும் – வே. மீனாட்சிசுந்தரம்
நாட்டைச் சூறையாடுவதை அனுமதிக்க முடியாது – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் (தமிழில்: ச.வீரமணி)

