ஜனவரி 31: சர்வதேச வரிக்குதிரை தினம் (January 31 - International Zebra Day Article in Tamil) - ஏற்காடு இளங்கோ | வரிக்குதிரை (Zebra)

ஜனவரி 31: சர்வதேச வரிக்குதிரை தினம் – ஏற்காடு இளங்கோ

ஜனவரி 31: சர்வதேச வரிக்குதிரை தினம் (International Zebra Day)

– ஏற்காடு இளங்கோ

பூமியில் வாழக்கூடிய பாலூட்டிகளில் அழகானது வரிக்குதிரை (Zebra) ஆகும். இது உள்நாட்டு குதிரையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. இது 120 முதல் 140 சென்டிமீட்டர் உயரம் கொண்டது. இது வேகம் மற்றும் நீண்ட தூரம் இடம் பெயர்வுக்காக பெரிய ஒற்றைக் குளம்புடையது. இது மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும்.

வரிகள்
ஜனவரி 31: சர்வதேச வரிக்குதிரை தினம் (January 31 - International Zebra Day Article in Tamil) - ஏற்காடு இளங்கோ | வரிக்குதிரை (Zebra)
வரிக்குதிரைகள்

வரிக்குதிரையின் தோல் கருமையான நிறம் உடையது. இதன் வரிகள் அல்லது கோடுகள் மெலனோசைட்டுகள் (Melanocytes) எனப்படும் சிறப்பு தோல் செல்களால் உருவாகின்றன. அவை ரோமங்களின் நிறமியைத் தேர்ந்தெடுத்து தீர்மானிக்கின்றன. இந்தச் செல்களில் உள்ள மெலனின் என்பது கருமை நிறமியாகும். மெலனின் உள்ள முடிகள் கருப்பாகவும், மெலனின் இல்லாத முடிகள் வெள்ளையாகவும் தோன்றும்.

இதன் உடலின் மீது கருப்பு மற்றும் வெள்ளைக் கோடுகள் காணப்படும். ஒவ்வொரு வரிக்குதிரையின் மீதுள்ள கோடுகள் தனித்துவமானது. எனவே இரண்டு வரிக்குதிரைகள் அவற்றின் வடிவங்களின் அடிப்படையில் ஒரே மாதிரியாக இருக்காது. மனிதனின் கைரேகைகள் எப்படி மாறுபடுகிறதோ அது போலவே வரிக்குதிரையின் மீதுள்ள கோடுகளும் வேறுபடுகின்றன.

வரிக்குதிரையின் மீதுள்ள வெள்ளைக் கோடுகள் ஒளியைப் பிரதிபலிக்கின்றன. இவை உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகின்றன. இவை நாள் முழுதும் சூடான ஆப்பிரிக்க வெயிலில் நின்று மேய்கின்றன. இதன் கருப்பு கோடுகள் சூரியனின் வெப்பத்தை உறிஞ்சி காலையில் விலங்குகளை சூடேற்றுகின்றன.

நடத்தை

இது வெவ்வேறு முகபாவங்களை உருவாக்குகிறது. இதன் மூலமும், காதுகளை அசைத்து அசைப்பதன் மூலமும் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்கிறது. இது பல்வேறு புற்களை உண்ணுகிறது. இதற்கு ஏற்ப இதன் பற்களின் அமைப்பும் உள்ளது. இது நின்று கொண்டே தூங்கும், இருப்பினும் படுக்கும் போதும் தூங்கலாம்.

‌ சூடான வறண்ட காலங்களில் மேற்பரப்பு நீர் இதன் முக்கியமான தேவையாகும். வறண்ட நீரோடைகளில் குழிகளைத் தோண்டி நீரைப் பெறுகின்றன. இந்த நீர் நிலைகளை அந்நியர்களிடம் இருந்து பாதுகாத்துள்ளன. இவை அங்கிருந்து நகர்ந்த பிறகு மற்ற விலங்குகள் இந்த நீரை குடிநீராகப் பயன்படுத்துகின்றன.
இவைக் குழுக்களாக வாழ்கின்றன. உணவிற்காக வரிக்குதிரைகள் மற்றும் காட்டெருமைகள் தங்கள் இடம் பெயர்வின் போது ஒரு ஆற்றைக் கடக்கின்றன. அப்போது சிறிய குழுக்கள் பெரிய மந்தைகளாக ஒன்றிணையலாம். மேலும் காட்டெருமைகள் மற்றும் ஒட்டகச்சிவிங்கிகள் போன்ற பிற பாலூட்டுகளுடன் கலப்பு மந்தைகளை உருவாக்குகின்றன. இதனால் வேட்டையாடும் விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பைப் பெறுகின்றன.

ஆயுள்

இதன் கர்ப்ப காலம் 350 முதல் 390 நாட்கள் ஆகும். இது ஒரு குட்டியை மட்டுமே ஈணும். மிக அரிதாகவே 2 குட்டிகளைப் போடும். குட்டிகள் பிறந்த ஆறு நிமிடங்களில் எழுந்து நிற்கும். இது காடுகளில் 20 முதல் 30 ஆண்டுகள் வரை உயிர் வாழும். அதே சமயத்தில் உயிரியல் பூங்காக்களில் 40 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன.

இனங்கள்

வரிக்குதிரைகளில் மூன்று இனங்கள் உள்ளன. அவை சமவெளி வரிக்குதிரை (Plainszebra), மலை வரிக்குதிரை (Mountain zebra) மற்றும் கிரேவியின் வரிக்குதிரை (Grevy’s zebra) ஆகும். இந்த மூன்று இனங்களும் அவற்றின் கோடுகளின் வடிவத்தால் எளிதில் வேறுபடுகின்றன.

சமவெளி வரிக்குதிரை
ஜனவரி 31: சர்வதேச வரிக்குதிரை தினம் (January 31 - International Zebra Day Article in Tamil) - ஏற்காடு இளங்கோ | வரிக்குதிரை (Zebra)
சமவெளி வரிக்குதிரை

இது கிழக்கு மற்றும் தென் ஆப்பிரிக்காவின் பெரும் பகுதியில் வளமான புல்வெளிகளில் காணப்படுகிறது. இதன் விலங்கியல் பெயர் ஈக்வஸ் குவாக்கா (Equus quagga) என்பதாகும். இந்த இனத்தில் ஆறு கிளை இனங்களும் உள்ளன.

சமவெளி வரிக்குதிரைகளில் கோடுகள் அகலமாகவும், பரவலாகவும் இருக்கும். சில கிளை இனங்களில் முக்கிய கோடுகளுக்கு இடையில் இலகுவான நிழல் கோடுகளை கொண்டுள்ளன. வடக்கு கிளை இனங்கள் தெற்கில் உள்ளதை விட முழுமையாக கோடிட்டவை. இதன் கீழ் கால்களில் வெள்ளை நிறக் கோடுகள் இருக்கின்றன.

மலை வரிக்குதிரை
ஜனவரி 31: சர்வதேச வரிக்குதிரை தினம் (January 31 - International Zebra Day Article in Tamil) - ஏற்காடு இளங்கோ | வரிக்குதிரை (Zebra)
மலை வரிக்குதிரை

இதன் விலங்கியல் பெயர் ஈக்வஸ் ஜீப்ரா (Equus zebra) என்பதாகும். தென்னாப்பிரிக்கா, நமீபியா மற்றும் தென்மேற்கு அங்கோலாவின் திறந்த புல்வெளிகளில் மலை வரிக்குதிரைகள் வாழ்கின்றன. இதில் கேப் மலை வரிக்குதிரை மற்றும் ஹார்ட்மேனின் மலை வரிக்குதிரை என இரண்டு கிளை இனங்கள் உள்ளன.

மலை வரிக்குதிரை சமவெளி வரிக்குதிரையை விட சிறிய கோடுகளைக் கொண்டுள்ளன. அதன் கோடுகள் தலை மற்றும் தோள்களில் நெருக்கமான இடைவெளியில் உள்ளன. மேலும் இதன் இடுப்பு விலாவில் பறந்த ஒரு வினோதமான கட்டம் போன்ற கோடுகளைக் கொண்டுள்ளன.

கிரேவியின் வரிக்குதிரை
ஜனவரி 31: சர்வதேச வரிக்குதிரை தினம் (January 31 - International Zebra Day Article in Tamil) - ஏற்காடு இளங்கோ | வரிக்குதிரை (Zebra)
கிரேவியின் வரிக்குதிரை

இதன் விலங்கியல் பெயர் ஈக்வஸ் கிரேவி (Equus grevyi) என்பதாகும். இது கென்யாவில் வறண்ட, அரிதான மரங்கள் நிறைந்த பகுதிகளில் வாழ்கிறது. மேலும் எத்தியோப்பியாவில் ஒரு சில சிறிய பகுதிகளிலும் காணப்படுகிறது. இதில் ஆண் வரிக்குதிரைகள் பெண் வரிக்குதிரையை விட பெரியது.

இதன் கோடுகள் மிக குறுகலாகவும், மிக நெருக்கமாகவும் உள்ளது. இதன் வயிறு வெண்மையானது. தோள்களில் கோடுகள் குவியும் இடத்தில், அனைத்து வரிக்குதிரைகளும் முக்கோண செவ்ரான்களைக் (Chevron) கொண்டுள்ளன. கிரேவியின் வரிக்குதிரை மட்டுமே கோடுகள் சங்கமிக்கும் இடத்தில் இரண்டாவது செவ்வரானைக் கொண்ட ஒரே இனமாகும்.

ஆபத்து

வரிக்குதிரைகளின் வாழ்விடங்கள் அழிக்கப்படுகின்றன. உணவு மற்றும் தண்ணீருக்காக வரிக்குதிரைகள் போட்டியிடுகின்றன. அவற்றின் இறைச்சி மற்றும் தோலுக்காகவும் வேட்டையாடப்படுகின்றன. வரிக்குதிரைகள் தங்கள் மக்கள் தொகைப் பாதுகாப்பதற்காக போராடி வருகின்றன.

மூன்று வரி குதிரை இனங்களும் மனித நடவடிக்கைகளால் ஏராளமாக அழிந்துவிட்டன. குவாக்காஸ் சமவெளியில் வாழும் வரிக்குதிரை இனங்கள் அழிந்து வருகின்றன. குறிப்பாக ஈக்வஸ் குவாக்கா குவாக்கா என்ற கிளை இனம் முற்றிலும் அழிந்துவிட்டது. நேஷனல் ஜியோகிராஃபிக் படி வரிக்குதிரைகள் அழியும் அபாயத்தில் உள்ளன. காடுகளில் சுமார் 3 லட்சம் மிஞ்சியிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கிரேவியின் வரிக்குதிரை மிக ஆபத்தான அழியும் நிலையில் உள்ளது.1970 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 15,000 ஆக இருந்தது. அதன் பிறகு இதன் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. தற்போது 1,700 கிரேவியின் வரிக்குதிரைகள் மட்டுமே இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது சர்வதேச இயற்கைப் பாதுகாப்புக்கான ஒன்றியத்தின் (IUCN) சிவப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

சர்வதேச வரிக்குதிரை தினம் (International Zebra Day)
ஜனவரி 31: சர்வதேச வரிக்குதிரை தினம் (January 31 - International Zebra Day Article in Tamil) - ஏற்காடு இளங்கோ | வரிக்குதிரை (Zebra)
வரிக்குதிரைகள்

ஸ்மித்சோனியனின் தேசிய உயிரியல் பூங்கா மற்றும் பாதுகாப்பு உயிரியல் நிறுவனம் போன்ற பாதுகாப்பு அமைப்புகளின் கூட்டமைப்பால் சர்வதேச வரிக்குதிரை தினம் (International Zebra Day) நிறுவப்பட்டது. வரிக்குதிரைகளின் வாழ்க்கை நிலமை மற்றும் அவற்றின் எண்ணிக்கை மேலும் குறைவதைத் தடுக்க வேண்டும். அவற்றை பாதுகாத்தல், பராமரித்தல் மற்றும் வளர்ப்பது இதன் முக்கிய நோக்கமாகும்.

சர்வதேச வரிக்குதிரை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 31 அன்று கொண்டாடப்படுகிறது. இத்தினம் 2010 ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது. இத்தினத்தின் போது விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் நன்கொடை இயக்கமும் நடத்தப்படுகிறது. இது வரிக்குதிரைகளின் எண்ணிக்கையைப் பாதுகாக்க உதவுகிறது.

பாதுகாப்பு நடவடிக்கை

கிரேவியின் வரிக்குதிரையைப் பாதுகாப்பதற்காக கென்யா மற்றும் எத்தியோப்பாவில் கிரேவியின் வரிக்குதிரை அறக்கட்டளை நிறுவப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளையை இங்கிலாந்தின் மார்வெல் உயிரியல் பூங்கா ஆதரிக்கிறது. அவர்கள் கிரேவியின் வரிக்குதிரை தொழில்நுட்பக் குழுவில் நிறுவன உறுப்பினராகவும் உள்ளனர்.

இந்த அறக்கட்டளை மூலம் பள்ளிகள் மற்றும் கிராம மக்களிடம் வரிக்குதிரை பாதுகாப்புக் கல்வியை வழங்குகின்றனர். வரிக்குதிரைகளுடன் மக்கள் இணைந்து வாழ வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர். வரிக்குதிரைகள் பற்றி அறிவியல் பூர்வமான தரவுகளைச் சேகரிக்கின்றனர்.

அறக்கட்டளை சார்பாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. குழுவினர் வரிக்குதிரை வசிக்கும் பகுதிகளுக்குச் சென்று நீர் மற்றும் உணவு ஆதாரங்களை வழங்குகின்றனர். ஜிபிஎஸ் காலர்கள் மூலம் வரிக்குதிரைகளின் எண்ணிக்கையை கண்காணிக்கின்றனர். இனப்பெருக்க நிலை மற்றும் குட்டிகள் எப்போது பிறக்கின்றன என்பதை அறக்கட்டளை மூலம் அறியப்படுகிறது.

பல்வேறு நடவடிக்கையின் மூலம் கிரேவியின் வரிக்குதிரியின் மீதான துன்புறுத்தல் குறைந்துள்ளது. வரிக்குதிரைகளுடன் மனித மோதல் குறைந்துள்ளது. வரிக்குதிரை மற்றும் பிற வனவிலங்குகள் குறித்து சமூகத்தில் அதிக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. நோயாய்ப்பட்ட மற்றும் இறந்த விலங்குகள் பற்றிய தகவல் உடனே தெரிவிக்கப்படுகின்றன. இவைகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் குறைவதால், இதன் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகின்றன.

கட்டுரையாளர்:
ஜனவரி 31: சர்வதேச வரிக்குதிரை தினம் (January 31 - International Zebra Day Article in Tamil) - ஏற்காடு இளங்கோ | வரிக்குதிரை (Zebra)
– ஏற்காடு இளங்கோ
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *