தமிழின் பல்லாயிரமாண்டுக்கால நீண்டநெடிய வரலாற்றில் படைக்கப்பட்ட இலக்கியங்கள் யாவும் யாப்பு, செய்யுள், வெண்பா எனும் வடிவங்களில் காப்பியங்களாகவே படைக்கப்பட்டு வந்தன. இலக்கண வரம்புகளுக்குள் நின்று எழுதப்பட்ட மரபுக்கவிதைகளே தமிழில் கோலோச்சிக் கொண்டிருந்த காலமது.

ஆங்கில கவிதைகளை வாசித்து, அதன் தாக்கத்தினால் உந்தப்பட்ட மகாகவி பாரதியார், 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சுதந்திரக் கவிதை எனப்படும் வசன கவிதைகளைத் தமிழில் முதன்முதலாக எழுதத் தொடங்கினார். அதுவரை இலக்கண வரையறைகளுக்குள் கட்டுண்டுக் கிடந்த, படித்த சில குழுக்களுக்கு மட்டுமே உரிய கைப்பொருளாக விளங்கிய தமிழ்க் கவிதை, வெகுமக்களின் வாசிப்புக்கான கவிதையாக உருமாற்றம் அடைந்தது. மரபுக்கவிஞர்களால் ‘மட்டக் குதிரை’ என்று அழைக்கப்பட்ட புதுக்கவிதையே, தமிழ்க் கவிதைகளின் புதிய இலக்கிய எழுச்சிக்கு வித்திட்டது.

தமிழில் இலக்கியம், இதழியல் துறைகளின் முன்னோடியாக இருந்து, பல சிறப்புக்குரிய மாற்றங்களை முன்மொழிந்த மகாகவி பாரதியே, 16-ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஜப்பானில் எழுதப்பட்ட ஹைக்கூ எனும் மூவரி கவிதை பற்றிய முதல் அறிமுகத்தைத் தமிழுக்குத் தந்த பெருமைக்குரியவர்.

‘மாடர்ன் ரிவ்யூ’ எனும் ஆங்கில இதழ் மேற்கு வங்காளத்திலிருந்து வெளிவந்தது. அதில் சில ஜப்பானிய ஹைக்கூ கவிதைகள் இடம்பெற்றிருந்தன. அதனைப் படித்த மகாகவி பாரதி, ‘சுதேசமித்திரன்’ இதழில் (1916 – அக்டோபர் 16) சிறுகட்டுரை ஒன்றினை எழுதினார். ‘ஜப்பானியக் கவிதை’ எனும் தலைப்பிடப்பட்ட அந்தக் குறுங்கட்டுரையில் –

“சமீபத்தில் ‘மாடர்ன் ரிவ்யூ’ என்ற கல்கத்தா பத்திரிகையில் உயோதே நோகுச்சி என்ற ஜப்பானிய புலவர் ஒரு லிகிதம் எழுதி இருந்தார். அதிலே அவர் சொல்வதென்னவென்றால், இங்கிலாந்து, அமெரிக்கா என்ற தேசங்களிலுள்ள இங்கிலீஷ் கவிதையைக் காட்டிலும், ஜப்பானியக் கவிதை சிறந்தது. காரணமென்ன? மேற்குக் கவிதையில் சொல் மிகுதி.

எண்ணத்தை அப்படியே வீண் சேர்க்கையில்லாமல் சொல்லும் வழக்கம் ஐரோப்பியக் கவிதையிலே இல்லை. எதுகை சத்தம் முதலியவற்றைக் கருதியும், சோம்பற் குணத்தாலும், தெளிவில்லாமையாலும் பல சொற்களை சேர்த்து வளர்த்துக்கொண்டே போகும் வழக்கம், ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் அதிகம் இருக்கிறது.

தம்முடைய மனதிலுள்ள கருத்தை வெளியிடுவதி மேற்குப் புலவர் கதைகள் எழுதுவோரைக் காட்டிலும் சக்தி குறைந்திருக்கிறார்கள்” என்று எழுதிய பாரதி,
“ஜப்பானில் அப்படியில்லை. வேண்டாத சொல் ஒன்றுகூடச் சேர்ப்பது கிடையாது. கூடை கூடையாகப் பாட்டெழுதி அச்சிட வேண்டும் என்று ஒரே
ஆவலுடன் எப்பொழுதும் துடித்துக் கொண்டிருப்பவன் புலவனாக மாட்டான்.

கவிதையெழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையை கவிதையாக செய்தோன் அவனே கவி. புலவனுக்கு பணம் ஒரு பொருளன்று. வானத்து மீன், தனிமை, மோனம், மலர்களின் பேச்சு இவற்றிலே ஈடுபட்டுப் போய் இயற்கையுடன் ஒன்றாக வாழ்பவனே கவி” என்று ஒரு கவிஞனுக்கான இலக்கணத்தை மிகச் சரியாக வரையறுத்துக் காட்டுகிறார்.

16-ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஜப்பானிய இலக்கியத்தில் ஏற்பட்ட மறுமலர்ச்சியின் காரணமாக உருவானவையே ஹொக்கு பாடல்கள். ஜப்பானிய இலக்கியத்தில் சோக்கா, தன்கா எனும் கவிதை வகைமைகளோடு ரென்கா எனும் கவிதை வடிவமும் புகழ் பெற்றிருந்தது. இந்த ரென்கா வகைக் கவிதையென்பது, ஒரு வகையான தொடர் கவிதையாகும். ஒரு கவிஞர் முதல் வரியைப் பாட, அடுத்த கவிஞர் மற்றொரு வரியைப் பாட… என அப்படியே சங்கிலித்தொடராகக் கவிதை போகும். இதன் தொடக்க மூவரிகளே ஹொக்கு என்றழைக்கப்பட்டு, பின்னாளில் உலகப்புகழ் பெற்ற ஹைக்கூ கவிதைகளாகின.

‘ஜப்பானிய ஹைக்கூவின் தந்தை’ என்றழைக்கப்படுபவர் மட்சுவோ பாஷோ. தனது ஆன்மீகத் தேடலுக்கான பயணத்தினை 1689-ஆம் ஆண்டில் தொடங்கிய பாஷோ, வடஜப்பானின் குக்கிராமங்கள் வழியாக, சுமார் 2450 கி.மீ தூரம் பயணம் செய்தார். பயண வழியெங்கும் ஹைக்கூ படைத்தார். பலருக்கும் ஹைக்கூ பயிற்றுவித்தார்.

‘ஒரு கவிஞனின் ஆழ்ந்த அனுபவ வெளிப்பாடாக கவிதையென்பது இருந்திடல் வேண்டும்’ எனும் கொள்கை உறுதியுடைய பாஷோ, ‘ஒரு பைன் மரத்தினைப் பற்றி தெரிந்துகொள்ளும்போது பைன் மரத்திலிருந்தே கற்க வேண்டும்; மூங்கில் மரம் பற்றி தெரிந்துகொள்வதற்கு மூங்கில் மரத்திலிருந்துதான் தெரிந்துகொள்ள வேண்டும்’ என்றுரைத்தார்.

பாஷோவோடுச் சேர்த்து ‘ஹைக்கூ நால்வர்’ என்றழைக்கப்பட்டவர்களில் ஏனைய மூவர்களான பூஸன். இஷா, ஷிகி ஆகியோர் ஹைக்கூவைச் செழுமைப்படுத்திய சிறப்புக்குரியவர்கள்.

‘ஹைக்கூ’ எனும் ஜப்பானியச் சொல்லுக்கு ‘ஒரு கோப்பை தேநீர்’ என்றும், ‘அணுக்கரு’, ‘அணுத்தூசி’ என்றும் பொருளுண்டு. ‘5-7-5 எனும் 17 அசைகளைடைய ஜப்பானிய மரபுக்கவிதையான ஹைக்கூவில் பருவகால மாறுதல்களை மட்டுமே பாட வேண்டும், சமூக விமர்சனங்களோ, காதல் உணர்வோ கூடவே கூடாது…’ என்று தமிழில் ஹைக்கூவை அறிமுகம் செய்த எழுத்தாளர் சுஜாதா போன்றோர் கூறினர். ஆனாலும் அவர்கள் அப்படி சொன்னதிலுள்ள சூட்சுமத்தை நன்கு அறிந்தே, தெளிந்தே, தமிழ்க் கவிஞர்கள் பலரும் ஹைக்கூ எழுத முனைந்தனர்.

ஜப்பானிய ஹைக்கூவானது மூன்று வரிகள் தொடங்கி, ஆறெழு வரிகள் வரை தொடர்ந்தாலும், தமிழ் ஹைக்கூ மூன்று வரிகள் எனும் வரையறையோடே இன்றைக்கு எழுதப்படுகின்றன.

வெகுசன இதழ்களில் எழுதிய கட்டுரைகளின் மூலமாகவும், வாணியம்பாடியில் ஒருங்கிணைத்த ‘ஏதேன் தோட்டம்’ எனும் இலக்கியப் பயிற்சி அமர்வுகளின் மூலமாகவும் தமிழில் ஹைக்கூவைப் பலரிடத்தும் கொண்டு சேர்த்தவர் கவிக்கோ அப்துல்ரகுமான். “தமிழில் ஹைக்கூவைச் சுண்டக் காய்ச்சிய இறுகிய மொழி நடையில் எழுத வேண்டும்” என்று சொல்லும் கவிக்கோ, 1972-இல் நேரடியான ஹைக்கூ கவிதைகளை எழுதத் தொடங்கினார். அந்தக் கவிதைகள் 1974-இல் வெளியான அவரது ‘பால்வீதி’ எனும் நூலில் இடம்பெற்றன. அதிலிருந்து ஒரு ஹைக்கூ;

‘மயான வாசலில்
பழுதாகி நின்றது
ஈனில் ஊர்தி.’

குறைவான சொற்களில் நிறைவான செய்தியைச் சொல்ல முற்படுவதே ஹைக்கூவின் தனிச் சிறப்பாகும்.

ஓவியக்கவிஞர் அமுதபாரதி எழுதிய ‘புள்ளிப்பூக்கள்’ நூலே, தமிழின் முதல் ஹைக்கூ நூலென 1984 ஆகஸ்டில் வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து பாவலர் அறிவுமதியின் ‘புல்லின் நுனியில் பனித்துளி’ (1984 நவம்பர்),கவிஞர் கழனியூரனின் ‘நிரந்தர மின்னல்கள்’ (1985 ஜனவரி), கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பனின் ‘சூரியப் பிறைகள்’ (1985 பிப்ரவரி) ஆகிய நூல்கள் வெளிவந்து, தமிழ் ஹைக்கூவிற்கான புதுவெளியை உருவாக்கித் தந்தன.

தமிழில் 1980-களில் ஹைக்கூ பரவலாக அறிமுகமாகத் தொடங்கிய போதே, மரபுக்கவிஞர்களும் புதுக்கவிஞர்களும் ஹைக்கூவை விமர்சனம் செய்கிறோம் எனும் பெயரில் ஏகடியம் செய்தனர்.

“மூன்றே வரிகளில் என்னத்தை எழுதுவது?”
“தமிழில் இல்லாத கவிதை வடிவமா? அந்நிய மோகம் ஹைக்கூ.”
“மூவரித் துணுக்கு!”
“அடுத்தவன் மனைவிக்கு ஆடை கட்டிப் பார்ப்பது…”

– என்றெல்லாம் ஹைக்கூ மீதான எதிர்க்கணைகளை வீசினர். இதையெல்லாம் கடந்து தமிழில் ஹைக்கூ கவிதை தனக்கான திசையைத் தானே தீர்மானித்து, தன்போக்கில் பயணத்தைத் தொடர்ந்தது.

தமிழில் ஹைக்கூ எழுதத் தொடங்கி, சரியாய் 40 ஆண்டுகளைத் தொட்டிருக்கும் இவ்வேளையில் இதுவரை சுமார் 750-க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான ஹைக்கூ நூல்கள் வெளிவந்துள்ளன. இன்றைக்குத் தமிழில் ஹைக்கூ எழுதும் அனைவருமே அதனைச் சரியாய் உள்வாங்கி எழுதுகிறார்கள் என்று சொல்வதற்கில்லை. மூவரிக் கவிதையெனும் மேலோட்டமான புரிதலில் எழுதுவோரோ அதிகம்.

தமிழில் ஹைக்கூ எழுதுவோர் சில அடிப்படையான புரிதல்களைக் கொண்டிருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

– செறிவான மூன்றடி சொற்கட்டு
– இயற்கையின் வழிநின்று, சமூகத்தைப் பாடுதல்
– காட்சிப் பின்புலத்தோடு கவிதையைக் கட்டமைத்தல்
– மூன்று வரிகளையும் ஒரே வாக்கியமாக எழுதாமல், ஏதேனும் ஒரு இடத்திலாவது தனி வாக்கியமாக எழுத வேண்டும். முடிந்தால் இரண்டு அல்லது மூன்று

தனித்தனி வாக்கியமாக அமைத்தல் நன்று.

மேலும், ஹைக்கூ கவிதைக்குரிய தனிச்சிறப்பினையும் அறிந்துகொள்ள வேண்டும். ஹைக்கூ கவிதையென்பது ஒரு கவிஞன் படைக்கும் படைப்பென்றாலும், அதில் வாசகரும் கூட்டுப்படைப்பாளியாகின்றார். ஹைக்கூ கவிதையை வாசிக்கிற வாசகரும் ஹைக்கூ படைக்கிற நிலைக்கு தன்னை உயர்த்திக்கொள்ளும் ரசவாதம் ஹைக்கூவில் மட்டுமே நிகழ்கிற சாத்தியமுண்டு.

ஹைக்கூ கவிதையில் கவிஞன் சொல்வதை வாசகரும் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டுமென்கிற எந்த நிர்ப்பந்தமும் கிடையாது. ஒரு வாசகர் அவரது பார்வையில் ஹைக்கூப் புரிந்துகொள்வதற்கான புதிய சிந்தனை திறப்பும் ஹைக்கூவில் நிகழும். இந்த நேரத்தில் கவிக்கோ அபுதுல்ரகுமான் சொன்ன ஒரு விஷயத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

“ஹைக்கூவைத் தமிழுக்குக் கொண்டு வருகிறபோது, அதன் எல்லா மரபுகளையும் தூக்கிக்கொண்டு வர வேண்டியதில்லை. ஜென் பார்வையில் தான், நாமும் இந்த உலகத்தைப் பார்த்தாக வேண்டும் என்ற கட்டாயமில்லை. எந்தத் தத்துவப் பட்டையும் போட்டுக் கொள்ளாமல், எந்தக் கோட்பாட்டுக் கண்ணாடியும் அணிந்து கொள்ளாமல் படைப்பாளன் சுதந்திரமாக, நேராக இந்த உலகத்தைப் பார்க்கலாம்” (புல்லின் நுனியில் பனித்துளி – முன்னுரை) என்று கூறியுள்ளது ஏற்றுக்கொள்ளத்தக்கதே.

இன்னமும்கூட புதுக்கவிதைக்கும் ஹைக்கூவிற்குமான நுட்பமான வேறுபாட்டை அறியாமல், மூன்று வரிகளில் எழுதும் புதுக்கவிதைகளெல்லாம் ஹைக்கூ என்று எண்ணும் போக்கு நிலவுகிறது.

தமிழில் ஹைக்கூ வடிவத்தோடு நில்லாமல், அதன் சகோதர வடிவங்களான சென்ரியூ, ஹைபுன் ஆகிய வகைமைகளிலும், ஹைக்கூவை ஆங்கில கவிதை வடிவமான லிமரிக் உடன் இணைத்து எழுதும் லிமரைக்கூ, லிமர்புன் ஆகிய வகைகளிலும் நூல்கள் வெளிவந்துள்ளன. இந்திய மொழிகளிலேயே தமிழில் தான் அதிகமாக ஹைக்கூ கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன. தமிழில் எழுதப்படும் ஹைக்கூ கவிதைகள் இன்றைக்கு ஜப்பானிய மொழியில் மொழியாக்கம் செய்யப்படும் சிறப்பினை எட்டியுள்ளன.

“தமிழில் ஹைக்கூ எழுதவே முடியாது”, “தமிழில் எழுதுவதெல்லாம் பொய்க்கூ” என்று சிலர் சொல்லும் அவசர தீர்ப்புகளைக் கண்டு தயங்கி நிற்காமல், வாசிக்கிற வாசகரையும் நேசிக்க வைக்கும், எழுதவும் வைக்கும் தூண்டுதலைத் தமிழ் ஹைக்கூ தொடர்ந்து செய்து வருகிறது. இன்றைக்குத் தமிழில் ஓராண்டில் 100 கவிதை நூல்கள் வருகிறதென்றால், அதில் நான்கில் ஒரு நாள் (அதாவது 25 நூல்கள்) ஹைக்கூ நூலாக இருக்கிறது.

1916-இல் தமிழ் மொழியில் ஹைக்கூ அறிமுகமாகி, இன்று பல நூறு நூல்களோடு பயணித்துக்கொண்டிருக்கும் வேளையில், தமிழின் பெருமைக்கு அடையாளமாக விளங்கும் சில ஹைக்கூ கவிதைகளைப் பட்டியலிட வேண்டியுள்ளது.

0
புல்லைப் பிடுங்க போனேன்
திகைத்தேன்
ஒளிவீசும் பனித்துளி

– அமுதபாரதி (1984)

 

0
தூரத்து மலைத் தொடர்கள்
விழுங்கிச் சிரிக்கும்
சிலந்தி வலையில் பனித்துளி

– அறிவுமதி (1984)

 

0
திரும்பத் திரும்ப
நிலா ஒளி – பாறை
திடீரென்று மலர்ந்துவிட்டது

– ஈரோடு தமிழன்பன் (1985)

 

0
சுட்டு வீழ்த்திய
கொக்கின் அலகில்
துடிக்கும் மீன்

– அவைநாயகம் (1988)

 

0
மழை இரவு
மூடிய ஜன்னலையும்
மயக்கி நழுவும் குளிர்காற்று

– இதயகீதா (1988)

 

0
அணிலே நகங்களை வெட்டு
பூவின் முகங்களில்
காயங்கள்

– மித்ரா (1990)

 

0
முயன்று முயன்று
திரியைத் தூண்டி விட்டேன்
விளக்கின் கீழ் இருட்டு

– துறவி (1993)

0
நேற்றே செத்துப்போனான் தோட்டக்காரன்
செடியில் இன்று
புதிதாய் பூ.

– மு.முருகேஷ் (1993)

 

0
திரும்பும்போதுதான் உணர்கிறேன்
மயானத்தின் பாதை
என் வீட்டில் முடிவதை

– செ.செந்தில்குமார் (1994)

 

0
திண்ணையிலிருந்து
நிலவை ரசிப்போம்
தொலைந்தது வீட்டுச்சாவி

– ராஜமுருகுபாண்டியன் (1994)

 

0
கண்ணில்லாதவர்கள்
கையேந்தும்போது
நாமெல்லாம் குருடர்கள்.

– தங்கம்மூர்த்தி (1994)

சங்கக் காலந்தோட்டே இயற்கையோடு இணைந்த வாழ்வியலையுடைய தமிழர்கள், இயற்கையைக் கொண்டாடும் ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளைத் தமிழ் வாழ்வியலோடு பொருத்தி எழுதி வருகிறார்கள். ஹைக்கூ வாசிப்பவரெல்லாம் ஹைக்கூ கவிஞராகப் பரிணமிக்கிறார்கள். இந்தக் கட்டுரையை வாசித்த பிறகு உங்களுக்குள்ளும் ஹைக்கூ கவிதையொன்று சுரக்குமானால், நீங்களும் ஒரு ஹைக்கூ கவிஞரே!

வாழ்த்துகள்!

எழுதியவர் 

பால சாகித்திய புரஸ்கார் விருது – கவிஞர் மு.முருகேஷ் | குவிகம் குழுமம் - குவிகம் மின்னிதழ்

மு.முருகேஷ்

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 One thought on “ஜப்பானிய மலர்களும் தமிழ் ஹைக்கூவும்- மு.முருகேஷ்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *