சாதியற்ற தமிழர்- சாதியத்  தமிழர் : (சாதிக்கு முந்தைய பிந்தைய தமிழ்ச்சமூகம்) – பக்தவத்சல பாரதி | மதிப்புரை  ப.மோகன்குமாரமங்கலம்

சாதியற்ற தமிழர்- சாதியத் தமிழர் : (சாதிக்கு முந்தைய பிந்தைய தமிழ்ச்சமூகம்) – பக்தவத்சல பாரதி | மதிப்புரை ப.மோகன்குமாரமங்கலம்

நூல் : சாதியற்ற தமிழர்- சாதியத்தமிழர் : (சாதிக்கு முந்தைய பிந்தைய தமிழ்ச்சமூகம்)
நூலாசிரியர் : பக்தவத்சல பாரதி மானிடவியல் அறிஞர் , மேனாள் இயக்குநர்
புதுச்சேரி மொழியியல் மற்றும் பண்பாட்டு ஆய்வு நிறுவனம்.
வெளியீட்டகம் : பாரதி புத்தகாலயம், 
நூல் அறிமுகம்: ப.மோகன்குமாரமங்கலம்

இந்தியத் துணைக்கண்டத்தின் சமூகச்சிக்கலின் அடிப்படையான வடிவங்களில் முக்கியமானது சாதியம் என்ற அக மற்றும் புறநிலை எதார்த்தம். சாதியத்தை ஒழித்து சாதியற்ற  சமத்துவ சமூகம் அமைக்க  உணர்ந்து செயல்படும் சிந்தனையாளர்களும்  செயற்பாட்டாளர்களும் சாதியத்தின் இருப்பை உணர்கிற அதே நேரத்தில் சாதியத்தின் தகர்ப்பிற்கு , சாதியற்ற சமூகம் எப்படி சாதியச்சமூகமாக உருமாறியது என்ற பின்புலத்தையும் அதன் அசைவியக்கத்தையும் அறிந்து கொள்வது மிக அவசியம்.

சிறுத்த உருவமும் செறிந்த உள்ளடக்கமும் கொண்ட இந்த நூல் தமிழ்ச்சூழலில் சாதியற்ற சமூகம் இயங்கியதையும் அது மெல்ல மெல்ல சாதியத்தின் முந்து வடிவத்தை அடைந்ததையும் இயங்கியல் அடிப்படையில் நமக்கு விளக்குகிறது.

தமிழ்ச்சமூகப் படிமலர்ச்சியை சாதியற்ற சமூகம், சாதியச் சமூகம் என்ற இரு பெருவெட்டாகப் பிரித்தால் சாதியச்சமூகத்தின் வளர்நிலையை மூன்றாகப் பிரிக்கமுடியும்.

1.சாதியத் தோற்ற காலம் ( பக்தி இலக்கிய காலம் – கி.பி. 6-9)

2.சாதியம் இறுக்கமடைந்த காலம் ( பிற்கால சோழ, பாண்டிய காலம் – கி.பி. 10- 13).

3. சாதியம் விரிவடைந்த காலம் ( விசயநகர காலம் தொட்டு..)

யாருக்கு கிடைக்கும் சொர்க்கம் ...

ஒப்பீட்டளவில் சாதியச் சமூகத்தின் தோற்றம், வளர்நிலை  பற்றி தமிழ்ச்சூழலில் பெரிதளவு விவாதம் நடைபெற்றதைப்போல  சாதியற்றிருந்த  பண்டைத்தமிழ்ச்சமூகம் குறித்தும் அதன் படிமலர்ச்சி பற்றியும் பெரிதும் விவாதிக்கப்படவில்லை.  மானிடவியல் அறிஞர் பக்தவத்சலபாரதி அவர்களின் இந்நூல் அதை முன்னெடுக்கிறது.

இதில் இரண்டு முக்கியமான விவாதங்களை முன்வைக்கிறார்.
ஒன்று  செங்குத்துப் படிநிலையிலான சாதியச் சமூகத்தை அடைவதற்கு முன் சாதியற்ற சமூகம் கடந்து வந்த மூன்று படிநிலைகள் குறித்த விரிவான விவாதம். மற்றொன்று சாதியத்தோற்றம் குறித்த அண்ணல் அம்பேத்கர், ஹோகார்ட், லூயிடூமன் ஆகிய மூன்று அறிஞர்களின். கோட்பாடுகளை ஒப்பிட்டு அவற்றை தமிழ்ச்சூழலில் சாதிய உருவாக்கத்தைப் புரிந்து கொள்ள உதவுமாறு அறிமுகப்படுத்துவது. (சாதி தோன்றிய முறை குறித்து இந்நூலாசிரியர் ,” பண்பாட்டு உரையாடல் ” என்ற நூலில் விரிவாக விவாதித்துள்ளார்).

சாதியற்ற சமூகத்திலிருந்து சாதியச் சமூகம் நோக்கி:

சங்க இலக்கியத்தை மானிடவியல், தொல்லியல் ஆகிய துறை சார்அறிவு வெளிச்சத்தில் நுணுகி ஆய்ந்து குடியமைப்புடைய தமிழ்ச்சமூகத்தில் சாதிமுறை எவ்வாறு தோன்றியது என்பதை விளக்குகிறார்.

1. கால்வழிக்குழுக்களால் அமைந்த குடி நிலைச்சமூகம்.

2. வேந்தனை குவிமையப்படுத்திய சுற்றுவட்டச் சமூகமுறை.

3. சாதிக்கு நெருக்கமான தரநிலைச் சமூகமுறை .

என்ற மூன்று கட்டங்களையடுத்து கி.பி 4-5  ஆம் நூற்றாண்டுகள் வரை  நீர்மைத்தன்மையுடன் தொடர்ந்து இயங்கி செங்குத்துப் படிநிலைச் சமூகமாக மாறியது என்பதைப் படிப்படியாக விளக்குகிறார்.

1. குடிநிலைச்சமூகம்:

சங்க காலத் தமிழரின் வாழ்க்கை முறை

ஏற்கனவே ஜார்ஜ் எல் ஹார்ட் அவர்கள் இலக்கியத்தரவுகளைக் கொண்டு ஆய்வு செய்து ஆதித்தமிழ்ச்சமூகத்தில் சாதி இருந்ததென்று கூறியுள்ள நிலையில் இந்நூலாசிரியர் இலக்கிய, மானிடவியல், தொல்லியல் தரவுகளின் அடிப்படையில் சங்ககாலத்தில் குடி என்னும் சமூக அமைப்பே முதன்மையான வடிவமாக இருந்தது என்றும் சாதிக்குரிய பண்புகளான படிநிலை, தீட்டு, தூய்மை, அகமணம், தீண்டாமை, பஞ்சமர் பிரிவு முதலானவை முழுமையான வடிவத்தில் இல்லாமல் ஒவ்வொரு குடிக்கும் ஒரு தொழில் என்பதாக மட்டுமே  இருந்தது என்று தெளிவுபடுத்துவது முக்கியமானதாகும்.

திணைக்குடிச்சமூகமான குறிஞ்சி , நெய்தல், முல்லை நில ஆண்கள் முறையே வேட்டை, கடல்வேட்டை, கால்நடை ஆகியவற்றைச் சார்ந்தும்; பெண்கள் முறையே காடுபடு பொருட்கள், கடல்படு பொருட்கள், பால்படு பொருட்களைச் சார்ந்தும் தொல்குடித்தன்மையில் வாழ்ந்தார்கள் என்றும் ;

சங்க இலக்கியத்தில் களவும் – கற்பும் ...

குறிஞ்சி, முல்லை, நெய்தல், பாலை ஆகிய நிலை குடிகளும் இவற்றுக்கூடான பண்பாட்டுப் பாலமாக இருந்த பாண் சமூகம் என்ற அலைகுடிகளும்  தன்னரசுச் சமூகமாக இருந்தன என்றும் தரவுகளுடன் விளக்குகிறார்.

அதனால் படிநிலை அமைப்புடைய சாதியக்கட்டுமானத்திற்கான கூறு  திணைக்குடிகளிடம் இல்லை என்றும் வேந்தர்களின் பேரரசு உருவாக்கத்தாலும் மருதநில வேளாண் சூழலாலும்தான் பல்வேறு குடிகள் ஓரிடத்தில் ஒன்று கூடி ஒருவரையொருவர் சார்ந்து வாழ வேண்டிய  ஒரு புதிய சமூக உருவாக்கம் நிகழ்ந்தது என்றும் விளக்குகிறார்.

2. வேந்தனை குவிமையப்படுத்திய சுற்றுவட்டச் சமூகமுறை:

குடித்தலைமையிலிருந்து காலப்போக்கில்  வேந்தர் தலைமைச்சமூகம் உருவானது. இதில் வேந்தன் மையத்திலும் மற்ற குடிகள் அவனைச்சுற்றி வட்டமாகப் பக்கவாட்டிலும் இருந்தனர்.  எனவே மக்களுக்கும் வேந்தனுக்கும் நேரடியாகத் தொடர்பு இருந்ததால் , இடையில் யாருடைய தொடர்பும் இல்லாமல் வேந்தனோடு நேரடியாக வினையாற்றும் நிலையில் குடியினர் இருந்தனர். இதனைத்தான் சுற்றுவட்டச் சமூகமுறை என்கிறார். இதில் படிநிலையும் , தகுதி வேறுபாடும் இல்லை ஆனால் சார்ந்திருத்தல் இருந்தது.

பொதிகைத் தமிழ் வளர்த்த புகழ் வாணி ...

அதே நேரத்தில் பிராமணர்களின் நிலை என்ன என்பதையும் தெளிவுபடுத்துகிறார். அக்காலத்தில் திருமணம் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கு வண்ணார், அம்பட்டர், குயவர் ஆகியோர் எப்படி ஊழியம் பெற்றார்களோ அப்படியே பிராமணரும் ஊழியம் பெற்றுவந்தனர் என்றும் அக்காலம்  வேந்தரை , பிராமணர் ஆதிக்கம் செலுத்தும் நிலையை அடையாத காலம் என்றும் கூறுகிறார்.

மேலும் இச்சுற்றுவட்டச் சமூகத்தில்  சீறூர் மன்னர், குறு நில மன்னர், முதுகுடி மன்னர் என்ற திணைக்குடித் தலைமையிலிருந்து வேந்தர் உருவானபோது திணைக்குடித் தலைமைகள் வேந்தருக்குப் படை உதவிகள் செய்து அதற்கீடாக  வேந்தர்களிடம் வள ஆதாரங்களைப் பெற்ற மறுபங்கீட்டுச்சமூகமாகவும்  உருவானது என்கிறார். இதில் படிநிலையும் ,மேல், கீழ் என்பதும் இல்லை. இந்த மறுபங்கீட்டுச் சமூகத்திலிருந்து புதிதாக உருவானதுதான் மேல், கீழ் என்ற தரநிலைச்சமூகம்.

சாதிக்கு நெருக்கமான தரநிலைச் சமூகமுறை :

சங்ககாலத்தின் இறுதியிலும் சங்கம் மருவிய காலத்திலும் தரநிலைச்சமூகம் வலுப்பெறத் தொடங்கியதை ஆதாரத்துடன் நிறுவுகிறார். வேந்தனின் ஆட்சி மேலும் விரிவாக்கம் அடையும் போது சீறுர், முதுகுடி,  குறுநில மன்னர்கள் துணை அரசமைப்பு என்ற நிலையிலிருந்து வேந்தனுக்குக் கட்டுப்பட்ட குடிகளாக, திறை செலுத்தும் குடிகளாக  மாறுகின்றன. வேந்தனுக்குக் கீழ் அவனுடைய நாட்டுக்குடிகளும் அடுத்து அவனுடைய ஆட்சிப்பரப்புக்குள் கொண்டுவரப்பட்ட பிறகுடிகளும் பலவேறு தரவரிசையில் வைக்கப்பட்டனர். இதுவே  பின்னாளில் ஏற்பட்ட செங்குத்து படிநிலைச் சமூகத்திற்கு அடித்தளமாக விளங்கியது.

இனக்குழுக்களின் வன்புல  வேளாண்மையில் உற்பத்தி  உறவுமுறை சார்ந்ததாக இருக்க  மருத நிலத்தில் நடைபெற்ற மென்புல வேளாண்உற்பத்தி உறவுமுறை சாராத உற்பத்தியாக  மாறுகிறது. இப்புதிய உற்பத்தி முறையில்  பல்வேறு குடிகளும் கைவினைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்முறைக் குடிகளும் இணைந்து பொருள்களையும் ஊழியங்களையும் பரிமாறிக்கொண்ட புதிய சமூக உறவுகள் உருவாகின்றன. பொருளுற்பத்தியில் அவர்கள் வகித்த இடம் மற்றும் தேவைக்கேற்பவும் பங்கேற்ற பல்வேறு குடிகளின் தன்மைக்கேற்பவும்  தரநிலைப்படுத்தி சாதியச் சமூகத்தை நோக்கி நகர்ந்தது என்பதற்கும் போதிய சான்றுகள் உள்ளன.

Caste As Gang: Why Hindu Society Is 'Anti-Social' | Outlook India ...

இதில் விவசாயத்தில் ஈடுபடாத சிறு குடிகளை  விவசாயக் குடிகளாக மாற்றியதில் பிராமண முன்னீடுகள் இருந்திருப்பதும்,  பிராமணர்கள் அதிகாரமும் சமூகத்தகுதியும் பெற்றிருப்பதை சங்க இலக்கியம் காட்டிய பொழுதும், ஒட்டுமொத்த மேலாதிக்க நிலையை அவர்கள் எட்டியதாகச் சான்றுகள் இல்லை. காலகதியில்தான் வேள்விச்சடங்குகளின் வழி உயர்நிலையை அடைந்தனர். என்று விளக்குகிறார்.

பிராமணர் முற்றிலும் ஆதிக்கம் பெற்றுவிடாத; கராரான மேல் கீழ் வடிவம் பெற்றுவிடாத இந்தத்தரநிலைச் சமூகம்தான் சங்கம் மருவிய காலத்திற்குப் பின்பு சிறுகச் சிறுக நீர்த்து செங்குத்துப் படிநிலைச்சமூகமாக மாறியது என்ற முடிவுக்கு வருகிறார்.

சாதி தோற்றக் கோட்பாடுகள்:

அண்ணல் அம்பேத்கர், ஹோகார்ட், லூயிடூமன் ஆகிய மூன்று அறிஞர்களின். கோட்பாடுகளை சாதியச்சமூகத்தை விளங்கிக்கொள்ள சுருக்கமான அறிமுகத்தை வழங்குகிறார்.

* மற்றவர்களிடமிருந்து பிராமணர்கள் தம்மைத் தனிமைப்படுத்திக் கொண்டதையும் ; அவர்களைப் பார்த்தொழுகி மற்றவர்களும்  தமக்குத்தாமே தனிமைப்படுத்திக் கொண்டதையும் அம்பேத்கர் முன்வைத்த  அகமணம் (endogamy)   பார்த்தொழுகுதல் (imitation) கோட்பாடு மூலம் மொழிபெயர் தேயத்தைக் கடந்துவந்த பிராமணர்கள் சுற்றுவட்டச் சமூகமுறையைச் செங்குத்துச் சமூகமாக மாற்றியதை விளக்குகிறார்.

* லூயி துய்மோன் அவர்களின் முக்கிய கருத்தாக்கமான புனிதம் / தீட்டு ( pure/ impure) கோட்பாடும் அதில் புனிதத்தின் மீது உயர்வும் தீட்டின் மீது தாழ்வும் கற்பிக்கப்பட்டதானது தகுதி அடிப்படையில் சாதியப்படிநிலைக்கு இட்டுச்செல்வதைச் சுட்டிக்காடுகிறார்.

* பிராமணர்கள் , வேதமயப்பட்ட வேள்வி, யாகச் சடங்குகள் மூலம் வேந்தனின் அரசுமுறைச் சடங்குப் பூசகர்கள்  ஆனார்கள் என்ற அம்பேத்கரின் நிர்ணயிப்பும் ; ஹோகார்ட் முன்வைத்த  ‘முடியாட்சியின் தேவைக்காக உருவான வடிவம் சாதி ‘ என்ற  கோட்பாடும்;  ‘வேந்தர்களின் அரசதிகாரம், பிராமணர்களின் சமூகத்தகுதிக்குக் கீழ்க்கட்டுப்பட நேர்ந்ததே சாதியத்தின் தோற்றத்தின் அடிப்படை ‘என்ற லூயி துய்மோனின் கோட்பாடும்.

India Growth- Caste as Social Capital

அரசதிகாரத்தை வேந்தர்க்கு நீட்டித்துக்கொடுக்கும் ஆற்றல் அந்தணர்களின் வேள்வி, யாகம் என்ற சடங்கியல் ஆற்றலுக்குத்தான் உள்ளது என்று வேந்தர்களையும் ஒட்டுமொத்த சமூகத்தையும் நம்பச்செய்ததன் மூலம் சமூகத்தர மேலாண்மையை பிராமணர்கள் பெற்றார்கள் என்ற அடிப்படையான அம்சத்தோடு இணைந்திருப்பதை இந்நூல் தெளிவுபடுத்துகிறது.

“ஆன்ற கேள்வி யடங்கிய கொள்கை
நான்மறை முதல்வர் சுற்ற மாக
மன்னரேவல் செய்ய மன்னிய
வேள்வி முற்றிய வாய்வாள் வேந்தே”
என்ற புறநானூற்றுப்பாடல் ஹோகர்ட்டின் கோட்பாட்டோடு பொருந்துவதையும்  விளக்குகிறார்.

குடிச்சமூகத்திலிருந்து பொருளியல் உற்பத்தி மாறமாற சமூக வடிவம் மாறிவந்திருப்பதை படிப்படியாக விளக்கிய முறையும் ; வேறுபடுத்துதல் , சார்ந்திருத்தல், படிநிலை ஆகிய சாதியத்தின் மூன்று முதன்மையான பண்புகளைத் தெளிவுபடுத்தியும் ; நூலாசிரியரின் கீழ்க்கண்ட நிர்ணயிப்புகளோடும் ஆதியில் சாதியற்ற தமிழராய் வாழ்ந்த நாம் , வருங்காலத்திலும் அவ்வாறே அடையாளம் பெற வேண்டும்  என்ற நம்பிக்கையோடும் முடித்திருக்கிறார்.

* ‘சாதியத்தில் அடிப்படையாக உள்ள படிநிலை என்பதைச் சமத்துவமற்றது என்ற வகையில் இன்று நாம் பார்க்கிறோம் , ஆனால் மரபார்ந்த பழமைச் சமூகம் படிநிலையை முழுமைக்குள் வைத்துப் பார்த்தது ‘

* ‘ பணப் பொருளாதாரத்திற்கு முந்தைய நிலையில் சமூகத்தேவைகளை நிறைவு செய்த குடி ஊழியமுறையின் சமூகவடிவமே சாதி முறை ‘

* ‘ஆதியில் பரிசில் பெற்ற குடி அமைப்பில் சாதிகள் இல்லை ‘.

சாதியற்ற சமத்துவ சமூகத்தைப் படைக்கும் செயற்களப் பணியாளர்கள் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய அறிவாயுதங்களுள் ஒன்று இந்நூல். தமிழ்ச்சமூகம் கற்கவேண்டிய மிகமுக்கியமான நூல்.

குறிப்பு:
புதுச்சேரி மொழியியல் மற்றும் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர் மானிடவியல் அறிஞர் பக்தவத்சல பாரதி அவர்கள் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 14 வது மாநில மாநாட்டில் ஆற்றிய உரையின் விரிவுபடுத்தப்பட்ட பகுதியே சாதியற்ற தமிழர்- சாதியத்தமிழர் : (சாதிக்கு முந்தைய பிந்தைய தமிழ்ச்சமூகம்) என்ற  இந்நூல்.

வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை 18. அக்டோபர் 2008,
விலை : ரூ 60.
பக்கம்: 72.]

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/sathiyatra-thamizhar-sathiya-thamizhar/

தோழமையுடன் ….
ப.மோகன்குமாரமங்கலம்
4/411 பிஸ்மி நகர்,
குன்னூர் அஞ்சல், தேனி மாவட்டம்.
9486163898.
[email protected]

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *