ஹைக்கூ கவிதைகள் – ஜெயஸ்ரீபுதைந்த நிலா
********************-

அர்த்தமில்லா வாழ்க்கை
அகராதி ஆனது
தாய்மை

இரண்டு நிமிட நிசப்தம்
கிளப்பியது பீதியை
குழந்தையின் சலங்கை ஒலி

மடிக்கணினியுடன் பெற்றோர்
பேசிக் கொண்டிருந்தது குழந்தை
தலையாட்டி பொம்மையிடம்கவனக்குவிப்பு குவியம் வகுப்பு
கவனித்தனர் மாணவர்கள்
பகிரியில் பேசியவாறு

பெண் சுதந்திரம் ஆய்வுக்கட்டுரை
பரிசளிப்பு மேடையில் அவன்மட்டும்
மனைவி வீட்டுவிலக்கில்

பெரியவன் கனடா சின்னவன் துபாய்
பெருமிதம் பேசினாள் அவள்
முதியோர் காப்பகத்தில்

இன்று தன் கடைசிநாள்
அறியாமல் அசைபோடுகிறது
இரண்டு வெள்ளாடுகள்பூதம் ஐந்து வேதம் நான்கு
திசை எட்டு கிரகம் ஒன்பது
சாதிகள் மட்டும் கணக்கின்றி.

வீசிய வலை கடலை அடைவதற்குள்
விதியின் வலையில் சிக்கினான்
மீனவன்

தேடப்படும் வேளைகளில்
தானாகவே தொலைகிறது
ஆறுதல்

எத்தனை கொலை செய்தும்
இன்னும் கைது செய்யப்படவில்லை
வறுமைஏழை வீட்டுப் பெண் குழந்தை
படிக்க உதவிய இலவச மின்சாரம்
நிலா வெளிச்சம்

கோபமா வெட்கமா புரியவில்லை
என்னிடம் சொல்லவும் இல்லை
தொட்டாச்சிணுங்கி

புதைந்த நிலவை தேடுகிறோம்
இன்னும் கிடைக்கவில்லை
ஆழ்குழாய் கிணற்றில் குழந்தை

நன்றியுடன்
ஜெயஸ்ரீ
திருநின்றவூர்