சிறுகதை: அன்பில் அவள் – ஜெயஸ்ரீ

சிறுகதை: அன்பில் அவள் – ஜெயஸ்ரீஅந்தி சாயும் நேரம், பை நிறைய பொருட்களோடு கனம் தாளாமல் தூக்கிக் கொண்டு ஃபார்முலா கார் வழித்தடத்தை போல விர்ரென்று பறக்கும் இருவழித்தட வாகங்களுக்கு மத்தியில் பையோடு சேர்த்து பயத்தையும் தாங்கி பிடித்துக் கொண்டு எப்படியோ ரோட்டை கடந்துவிட்டாள் கண்மணி. அப்பாடா..  பெருமூச்சு.
இப்போது ஷேர் ஆட்டோவிற்கு காத்திருக்க வேண்டும். மாலை நேரம் என்பதால் நீண்ட நேரமாகியும் ஆட்டோ கிடைக்கவில்லை. “திண்ணணூர் பட்டாபிராம் நெமிலிச்சேரி….” பரபரப்பாக மக்கள் கூட்டம் ஷேர் ஆட்டோக்களை நிரப்பிய வண்ணமே இருந்தது. “நமக்கு சாமர்த்தியம் போதவில்லை போலும்” என்றெண்ணியவாறே பையை கீழே வைத்து தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தாள். அவளது காலில் முன் சக்கரத்தை ஏற்றுவது போல சர்ரென்று ஆட்டோ முன் வந்து நின்றது. “ஏன்..  இன்னும் ரோட்ல நின்னு தண்ணிய குடிக்க வேண்டியது தானே..  ஓரமா போமா.. “
இ. பி. கோ சட்டத்தின் கீழ் பெருங்குற்றத்தை செய்ததை போல ஆட்டோ ஓட்டுனர் சவாரி கிடைக்காத எரிச்சலை அவள் மீது உமிழ்ந்தான்.
பயத்திற்கு பெண்ணுருவம் குடுத்தாற் போல கண்மணி. பாட்டிலை அவசரமாய் மூடி பையினுள் வைத்து “சாரி அண்ணா.. ” ஓரமாய் நின்று கொண்டாள்.
இருட்டத் தொடங்கியது. பயம் சற்று அதிகரித்தது. சேரன் ரைஸ் மில் சப்வே தாண்டி போவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல அதுவும் தன்னந்தனியாக ஒரு பெண்.
பல வருடம் ஆகியும் குண்டும் குழியுமாக பாலத்திற்கு கீழே ஒரு சப்வே. ஆள் அரவமில்லாத கும்மிருட்டாக மிரட்டும் ஒரு சிறிய வழித்தடம். இரவினில் அகோர விபத்துக்கள் பல நிகழ்ந்துள்ளது. நாலு கால் நாய்களும், சில சமயங்களில் இரண்டு கால் நாய்களும் தாக்கக் கூடிய இடம் அது.
இருபக்க புதர்களிலிருந்து விஷப்பூச்சிகள், பாம்புகள் என கிட்டத்தட்ட அமேசன் காட்டினை ஒத்த அடர்ந்த இருள் படந்திருக்கும். சென்ற வாரம் அதே இடத்தில் ஒரு பெண்ணின் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்டதும் நினைவிற்கு வந்தது.
அதை தாண்டி தான் இல்லத்திற்கு செல்ல வேண்டும். நேரம் ஆக நேரம் ஆக இதயத்துடிப்பு அதிகரித்தது. இல்லத்தில்  அனைவரும் பசியோடு இருப்பார்களே. “இறைவா சீக்கிரமாக ஒரு ஆட்டோவை அனுப்பிவிடு”
ஆட்டோ வந்தது. “சேரன் ரைஸ் மில்.. “என்று ஏறினாள்.


இறங்குமிடம் வந்தது. “அண்ணா.. அந்த சப்வே தாண்டி அந்தப்பக்கமா இறக்கி விட்ருங்க. மேல இருபது ரூபா தாரேன்.” என்றாள். மறுத்துவிட்டார். இறங்கினாள். நடப்பது நடக்கட்டும் என்று சப்வே கடக்கத் தொடங்கினாள். சுற்றும் முற்றும் நோட்டம் விட்டபடி சஷ்டி கவசத்தை முணுமுணுத்தபடியே.
எப்படியோ ஒரு வழியாக இல்லத்திற்கு வந்தாயிற்று. வாசலில் அவள் கொலுசு சத்தத்தை கேட்ட அடுத்த வினாடி குட்டிப்பட்டாளம் சூழ்ந்து கொண்டது. “ஹை..  கண்மணி வந்தாச்சு…” கையிலிருந்து பையை பிடுங்கி உள்ளே எடுத்துச் சென்று என்ன இருக்கிறது என்று ஆராயத் தொடங்கியது வாண்டுப் படை.
கட்டிலில் படுத்திருத்த கிருஷ்ணவேணி பாட்டி “யம்மாடி.. சாப்பிட்டியா மா நீ” என்றாள். “சாப்டேன் ஆச்சி.. நீங்க எல்லாரும் சாப்பிட்டீங்களா. இந்த தாத்தா ஏன் இப்படி சோந்து போய் கிடக்கு.. ” அருகில் சென்று “முனுசாமி தாத்தா.. கால் வலிக்குது. கொஞ்சம் சொடுக்கு எடுத்து விடேன்” காலை நீட்டினாள்.
“அடடா.. இப்ப தான் கனவுல ஜெயமாலினி என்னோட டூயட் பாடிட்டு இருந்தா. டிஸ்டர்பன்ஸ்… ஹும்ம்… ” காலை தன் மடியில் வைத்து சொடுக்கு எடுத்துக் கொண்டிருந்தார். வேணிப் பாட்டி தோசை ஊற்றி இட்லி மிளகாய் பொடியோடு ஊட்டி விட்டாள்.
கண்மணியின் அக்கா தங்கைகள் அனைவரும் துவைத்து காயவைத்த துணிகளை எல்லாம் மடித்து வைத்த வண்ணம் இருந்தனர்.
கௌரி ஓரமாய் படுத்திருந்தாள் மாத வலி தாளாமல்.
குட்டிஸ் இன்னும் பையினை ஆராய்ந்து முடிக்கவில்லை. உள்ளிருந்து பொருட்களை எல்லாம் திசைகொன்றாய் பரப்பி வைத்தனர். ஒரே சலசலப்பு சத்தம்.
சற்று வயதில் பெரியவரும் விபத்தில் இருகால்களை இழந்தவருமான ஞானவேல். செய்தித் தாள்களை அடுக்கிய வண்ணம் இருந்தார். ஞானவேலுக்கு இனிய குரல்வளம்.
“செல்வி அக்கா மூட்டுவலிக்கு தைலம் வாங்கிட்டு வந்திருக்கேன். அப்புறம் ஞானவேல் மாமா உங்க கண்ணாடி ரெடி. ரோஸி குட்டிக்கு புது செருப்பு வாங்கியாச்சு. அனிதாவுக்கு பெரிய கவுன் வாங்கியாச்சு. எல்லாரும் கேட்ட பாப்கார்ன் இருக்கு. அரிசி மூட்டை நாளைக்கு வந்துடும். அப்புறம் நாளைக்கு கவின் செல்லத்திற்கு பிறந்த நாள் கேக் நாளை வந்திடும்.. “
அனைவரும் கவின்கு கைதட்டி மகிழ்வித்தனர். சிரித்தது அந்த ஐந்து வயது மழலை.


வாசலில் உட்கார்ந்து வாசவியின் தலையில் பேன் பார்த்துக் கொண்டிருந்த சல்மா. “அக்கா.. காதர் பாய்க்கு பிரியாணி டபரா.. அல்போன்ஸ் அம்மாக்கு போர்வை.. இதெல்லாம் லிஸ்ட்ல வரலயே” வழக்கமான தேவைகளை லிஸ்ட் போட்டு தரவரிசை படுத்துவது சல்மா தான்.
“நான் திரும்பி வர்றதுக்கு மட்டும் தான் கையில காசு இருந்தது. அதான் அடுத்த மாசம் பாத்துக்கலாம் னு விட்டுட்டேன்” என்றாள் கண்மணி சற்றே சோகம் தழுவிய குரலில்.
பையிலிருந்து சாக்லேட்களை கண்டெடுத்த குழந்தைகள் “ஹே…  சாக்லேட்.. ” என்று பெருங்கூச்சலிட. கண்மணியின் கைப்பேசி ஒலித்தது.
“ஷ்..  அமைதி..” போனை எடுத்தாள் “ஹலோ.. சாரதா அவ்வை ஆதரவற்றோர் இல்லம்..”
கணவனாலும் கணவர் குடும்பத்தாராலும் மலடி என்ற மகுடம் சூட்டி நிராகரிக்கப்பட்ட கண்மணியை சாரதா அவ்வை ஆதரவற்றோர் இல்லம் அணைத்துக் கொண்டது.
தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு இருந்தவளை திசை திருப்பி வாழ்க்கைக்கான அர்த்தத்தையும் உயிரின் மீதான மதிப்பையும் ஏற்படுத்தி தந்தவர் ஞானவேல் தான். அவரின் பாடல் வரிகள் தான்.
“ஹேப்பி பர்த் டே டு யூ.. ” பாடல் முழங்க கவின் குட்டியின் பிறந்தநாள் விழா முடிந்தது. ஐந்து வருடங்களுக்கு முன்பு குப்பைக் கிடங்கில் இருந்து கண்டெடுக்கப்பட்டவன் கவின். அம்மா அப்பா யாரென்று தெரியாத அந்த இளங்கன்று அன்பு உறவுகள் புடை சூழ பிறந்தநாளை கொண்டாடியது.
பிறந்தநாள் விழா வழக்கம் போல ஞானவேலின் பாட்டுடனும் முனுசாமி தாத்தாவின் நடனத்தோடும் குதூகலமாய் முடிந்தது.
அன்பில் அவள் – கண்மணி.
முற்றும்.
தோழமையுடன் 
ஜெயஸ்ரீ

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.2021 – 05.05.2021 வரை மட்டும்)Show 4 Comments

4 Comments

  1. சாந்தி சரவணன்

    அன்புக்கு உண்டோ அடைக்கும் தாழ். சிறப்பு தோழர். வாழ்த்துகள்

  2. Rathika vijayababu

    வாழ்த்துகள் தோழர்

  3. மூ.ஜெயபால்

    கதை அருமை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *