சிறுகதை: ஏழாம் நாள் – ஜெயஸ்ரீ பாலாஜிகாலையில் கைபேசியின் அலாரம் அடித்தது. நேரத்தை பார்த்தாள் நீலா. ஆறரை தான்.

“ஞாயிற்று கிழமை ஊரடங்கு. வெளியில் போக முடியாது. இன்னும் கொஞ்சம் தூங்குவோம்”. ஆனால் தூக்கம் வரவில்லை.

காபி ஞாபகம் வந்தது.

“அம்மா… காபி மா… ” மெத்தையில் படுத்தவாறே குரல் கொடுத்தாள். அவள் அம்மா கல்யாணி ஹாலில் கல் போல உட்கார்ந்திருந்தாள்.

மீண்டும் குரல். “அம்மா.. காபி எடுத்துட்டு வாம்மா… ” இம்முறையும் அதே மாதிரி தான் இருந்தாள் கல்யாணி. மெத்தையிலிருந்து இறங்கிய நீலா, சற்றும் எந்தவித சலனமும் இல்லாமல் அமைதியாக இருக்கும் கல்யாணியை பார்த்து பொறுமை இழந்து அவளே சமையலறைக்கு சென்று காபி போட்டு குடித்தாள்.

“செய்தித் தாள் எங்கே? இன்னும் வரவில்லையா அப்பா..? ”

அப்பா சுதாகரும் கல் போலவே அமர்ந்திருந்தார். எவ்விதமான பதிலும் இல்லை அவரிடமிருந்து. நீலா அவர்கள் இருவரையும் பார்த்து ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று திகைத்தாள். “ஏதாவது கோபமா இருக்குமோ..? சரி ஆயிடும்…” தனக்குள் பேசிக்கொண்டாள்.

அவளுக்கு பயங்கர பசி வேறு வயிற்றை கிள்ளியது. சமையலறை சென்று கடாய் சட்டி கிண்ணம் என ஒன்று விடாமல் துழாவி பார்த்தாள் சாப்பிட ஏதும் இல்லை.

“இவர்கள் இப்படி இருப்பதை பார்த்தால் இன்று சமையல் செய்ய மாட்டார்கள் போல. நாம் போய் ஹோட்டலில் வாங்க வேண்டியது தான்”.

நீலா முகத்தில் மாஸ்க்கை வேண்டா வெறுப்பாக மாட்டினாள். கையில் சானிட்டைசர் தடவிக் கொண்டாள். பையை எடுத்துக் கொண்டு வாசலுக்கு சென்றாள்.

வாசலில் அவள் அண்ணண் வசந்த். அமைதியாக அவளது வண்டியை துடைத்துக் கொண்டிருந்தான். “ஓரமா போடா.. எருமை மாடு.. ” வசந்த்தை வம்படியாக எட்டி உதைத்தாள் நீலா. வசந்த் ஏதும் சொல்லாமல் அமைதியாய் துடைத்துக் கொண்டிருந்தான்.

தெரு முனையில் ஆந்திர தத்தா மெஸ். பூரி கிழங்கின் வாசம் மேலும் அவள் பசியை அதிகரித்தது. “பாஸ்.. ரெண்டு செட் பூரி. ஒரு மெதுவடை பார்சல்” என்று கல்லா பெட்டி அருகே இருந்த ஹோட்டல் நிர்வாகியிடம் முப்பத்தி ஐந்து ரூபாய் கொடுத்தாள்.

அவள் பக்கத்தில் அப்போது ஒரு முதியவர் வந்து நின்றார். “தம்பி.. நாலு செட் இட்லி பார்சல்.. கூட வடைகறியும்”.

நீலா அந்த பெரியவரை சற்று விலகி இடைவெளி விட்டு நிற்குமாறு கேட்டுக் கொண்டாள். அவர் காதில் வாங்கிக் கொள்ளாமல் பார்சல் வாங்குவதில் மும்முரமாய் இருந்தாள். இதெல்லாம் சரிபட்டு வராது என்று அவளாகவே இரண்டு அடி தள்ளி நின்று கொண்டாள்.

பார்சல் வந்தது. கையில் வாங்கிக் கொண்டு வீடு நோக்கி நடந்தாள். தெருவில் நாய்கள் எல்லாம் அவளை பார்த்து வள் வள் என்று குரைத்துக் கொண்டே இருந்தது. அவள் கண்டுகொள்ளாமல் நடந்தாள்.

வீட்டை அடைந்து கையில் பார்சலோடு நுழைந்தவளுக்கு ஒரு பேரதிர்ச்சி. சில நிமிடங்களுக்கு இதயத்துடிப்பு நின்றது. உறைந்து விட்டாள் அவள்.

அவள் கண்ட காட்சி.நீலாவின் புகைப்படத்திற்கு ரோஜாப்பூ மாலை. ஊதுவத்தி. அவளுக்கு பிடித்தமான காதி காட்டன் சுடிதார், பாதாம் அல்வா, பாம்பே மிக்ஸர் என அவள் புகைப்படத்தின் முன்னே.

அவளின் அம்மா, அப்பா, அண்ணண் மூவரும் விம்மி விம்மி அழுதவாறு இருந்தனர்.

அதிர்ச்சி சற்று தளர்ந்து. தன்னை உணர்ந்த நீலா கண்களில் கண்ணீர் நிறைந்தது. மிக அமைதியாக அப்படியே வாசல் அருகே சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.

ஆம், கொரானா தொற்றில் உயிரிழந்த நீலாவுக்கு அன்று ஏழாம் நாள் படையல்.

என் பெயர் நீலா. கொரானா தொற்றில் உயிரை இழந்து ஒரு வாரம் ஆகிறது. என்னால் என் வீட்டை விட்டு செல்ல இயலவில்லை. நினைவுகள் என்னை பாடாய் படுத்துகிறது. அன்பான அம்மா. பாசமான அப்பா. அரவணைக்கும் அண்ணண். இவர்களையெல்லாம் விட்டு விட்டு செல்ல மனமில்லை. இன்னும் வாழ்ந்திருக்கலாம் போல.

இனி ஒரு போதும் என்னால் அம்மாவை சிரிக்க வைக்க முடியாது. அப்பாவின் பாசம் கிடைக்காது. அண்ணணோடு சண்டையிட முடியாது. என் உடலோடு சேர்த்து என் கனவுகளும் புதைக்கப்பட்டு விட்டது. என் குடும்பமே எனக்காக அழுகிறது.

“தயவு செய்து வீட்டில் இருங்கள், அத்தியாவசிய தேவைக்கு வெளியில் சென்றால் மாஸ்க் அணியுங்கள். சமூக இடைவெளி கடைபிடியுங்கள். மறவாமல் கைகளை சோப்பு போட்டு கழுவுங்கள். முடிந்தால் குளித்து விடுங்கள்”

“ஆரோக்கியமாக உண்ணுங்கள். நல்ல நீர் அருந்துங்கள். உடலுக்கு தேவையான ஓய்வினை கொடுங்கள். இரவில் நன்றாய் உறங்குங்கள். உடற்பயிற்சி மூச்சுப்பயிற்சி செய்யுங்கள். மனதை உற்சாகமாக வைத்துக் கொள்ளுங்கள். தொற்று அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்”

“பணம், பதவி, பாசம், சொத்து, புகழ்… இதெல்லாம் போனால் திரும்ப கிடைத்து விடும், ஆனால் உயிர் போனால் மீண்டும் வராது”

இவ்வாறெல்லாம் அவள் பேசியதை அவளது குடும்பத்தினரால் உணர முடியவில்லை. அவர்கள் துக்கத்தில் மூழ்கியிருந்தார்கள்.

அவள் மூதாதையர்கள் அவளை அழைத்துச் சென்றனர். அவள் சந்தோஷமாய் வாழ்ந்த வீட்டை ஏக்கமாய் பார்த்தபடியே விண்ணுலகை நோக்கி சென்றாள் நீலா.

முற்றும்.

தோழமையுடன்
ஜெயஸ்ரீ பாலாஜி