ஆய்வுத் தடம்: உளவியல் நோக்கில் ‘மெய்ப்பாட்டியல்’ – ஓர் ஆய்வு | முனைவர் இரா.ஜெயஸ்ரீ  உலகில் மக்களின் அறிவையும், மனத்தையும் பண்படுத்தி நல்ல  இயல்புகளையும், நாகரிகத்தையும் வளர்த்து அவர்களுக்கு மேன்மையை  அளிப்பவை சான்றோர்களால்  இயற்றப்பட்ட நல்ல நூல்களேயாகும். அவ்வகையில்,  உலகின் மூத்த தமிழ்மொழியையும், தமிழரின் வாழ்வியலையும் காத்திடும்  முதன்மை இலக்கணம் தொல்காப்பியமே, அறிவியல் துறைக்கும் ஆற்றலைத்  தரக்கூடிய வலிமைமிக்க நூலாக விளங்குவது இது.

தொல்காப்பியரோடு கல்விக்கூடத்தில் ஒருங்கு உடன்பயின்ற பனம்பாரனார் தொல்காப்பியத்தின் சிறப்புப் பாயிரத்துள் இந்நூல்  பற்றிக் கூறும்போது,  “வடவேங்கடம் தென்குமரிக்கு இடைப்பட்ட பெருநிலப்பரப்பின் கண் உரையும்,  செய்யுளுமாக வழங்கிவரும் முத்தமிழை அடிப்படையாகக் கொண்ட சொற்களை  உருவாக்கும் எழுத்தொலிகளையும், கருத்துக்களை உருவாக்கும் தனிச்சொல்  தொகைச் சொற்களையும், அச்சொற்களால் ஆக்கம் பெறும் அகமும், புறமுமாகிய  பொருள்களையும் செவியானும், கண்ணானும், மனத்தானும், அறிவானும்  ஆராய்ந்து தேர்ந்து நெறிப்படுத்தப்பெற்ற செந்தமிழ் மரபு சிதையாமல் பலமுறை  இலக்கிய நூல்களையும், இலக்கண நூல்களையும், கணித நூல்களையும் கண்டு  பயின்று பலவாறாக வளர்ச்சி,  ஆக்கம் என்னும் நிரல் முறைப்படச் செம்மையாக  வகுத்துத் தொகுத்துச்  செய்யப்பெற்ற நூல்”1 என்று உரைக்கின்றார்.

தமிழில்தோன்றிய முதல் நூல், முதன்மையான நூல் தொல்காப்பியம்,  அந்நூல் தோன்றுவதற்கு முன் பன்னூறு ஆண்டுகளாவது தமிழ் இலக்கியம் ஓங்கிச் செழித்துப் பரந்திருந்தால்தான் இதுபோன்ற திண்மையான, மிக  நுண்மையான இலக்கண நூல் தோன்றியிருக்க முடியும்.

எழுத்து,  சொல்,  பொருள் என்ற முப்பெரும் பிரிவுகளாகவும்,  ஒவ்வொரு  பிரிவுக்கும் ஒன்பது இயல்களாக இருபத்தேழு இயல்களையும் தொல்காப்பியம்  கொண்டுள்ளது. எழுத்தும், சொல்லும் மொழி பற்றிய இலக்கணமாகும். பொருள் அதிகாரம் தமிழ் சமுதாயம்,  உளவியல்,  உடலியல் இவை பற்றிய  இலக்கணமாகும். இன்று வளர்ந்துள்ள மொழியியல் அடிப்படையில்  தொல்காப்பியத்தை அணுகும்போது முன்னைப் பழும் பொருட்கும் முன்னைப்  பாழம்பொருளாய்ப் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் அமைந்துள்ளது.

அடிக்குறிப்பு: 1. சிங்காரவேலன்,  தொல்காப்பியம் எளிய உரை,  ப.1தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் ஆறாவதாக அமைந்திருப்பது  மெய்ப்பாட்டியல்.

மெய் – உடம்பு,  பாடு –  படுதல்,  தோன்றுதல் எனப் பொருள்படும். அதாவது  உள்ளத்து உணர்ச்சிகள் பிறருக்குப் புலனாகுமாறு புற உறுப்புகளில்  தோன்றுதலே மெய்ப்பாடாகும்.

தொல்காப்பியர், ஒருவரின் மெய்வேறுபாடறிந்து மற்றவர் ஒழுக வேண்டிய  திறப்பாடு பற்றியே மெய்பபாட்டியலை அமைத்துள்ளார். மேலும் செய்யுள்  உறுப்புகளில் ஒன்றாக மெய்ப்பாட்டை.

உய்த்துணர் வின்றித் தலைவரு பொருண்மையின்
மெய்ப்பட முடிவது மெய்ப்பா டாகும்.
எனக் கூறுகிறார்.

இளம்பூரணர்,  “யாதானும் ஒன்றைக் கூறிய வழி அதன்கண் அமைந்த  பொருண்மையை விசாரித்து உணர்தலின்றி அவ்விடத்து வரும் பொருண்மையானே  மெய்ப்பாடு”3 என்று விளக்கமளிக்கிறார்.

ஒருவன் புலியையோ, கொடும் விலங்கையேh கண்டு அஞ்சிய நிலையில்  கலங்கும் கலக்கமும்,  பிறகு எவ்வாறாவது அவற்றிடமிருந்து தப்பிக்க வேண்டும்  என்று கருதுவதும் இயல்பே, அப்போது அவனுடம்பிலே நடுக்கமும், வியர்த்தலும்  உண்டாகும். இங்கு,

அச்சத்திற்குக் காரணமான புலி போன்ற விலங்குகள் – கலைப்பொருள்

அவற்றைக் கண்ட காலந்தொட்டு நீங்காது நின்ற அச்சம் – சுவை

அதனால் ஏற்படும் மயக்கமும், கரத்தலும் – குறிப்பு

நடுக்கமும், வியர்த்தலும் – சத்துவம்

என்று மேலும் இளம்பூரணார் விளக்கமளிக்கிறார்.

அடிக்குறிப்பு: 


1. தொல். பொருள். செய்யு., நூ.169.
2. தொல். பொருள். ;. மெய்ப். 1.
3. தொல். பொருள். மெய்ப். 1(பேர.).மெய்ப்பாடென்பது,  “உலகத்தார் உள்ள நிகழ்ச்சி ஆண்டு நிகழ்ந்தவாறே  புறத்தார்க்கும் புலப்படுவதோராற்றாள் வெளிப்படுத்தல். 4

மகிழ்ச்சி,  துக்கம்,  அதிர்ச்சி,  பயம்,  கோபம்,  அருவருப்பு ஆகிய ஆறு  அடிப்படை மனித உணர்ச்சிகளும் முகத்திலே வெளிப்படுத்தப்படுகின்றன. ஒருவர்  கோபத்துடன் பயத்தையும், மகிழ்ச்சியுடன் அதிர்ச்சியையும், கோபத்துடன்  அருவருப்பையும் வெளிப்படுத்தலாம்.

உலகில் வாழும் அனைத்து மக்களும் ஒரே மாதிரியான மனக்கிளர்ச்சியைத்  தூண்டும் சூழ்நிலையில் ஒரே மாதிரியான முகபாவங்களையே  வெளிப்படுத்துகின்றனர். இந்த மனித உணர்வுகளையே தொல்காப்பியர்  பொருளதிகாரத்தின் மெய்ப்பாட்டியலில் குறித்துள்ளார்.

“சுவையுணர்ச்சியே விருப்பு,  வெறுப்பு முதலியவைகளைத் தந்து  கண்ணீரரும்பல், மெய்ம்மயிர் சிலிர்த்தல் முதலிய மெய்க்குறிகளுடன்  வெளிப்படுவதாதலின் சுவையெனினும், மெய்ப்பாடு எனினும் ஒக்கும்”5 என்பர்.

இனிப்பு,  கசப்பு,  புளிப்பு,  உவர்ப்பு,  துவர்ப்பு,  உறைப்பு என்பன  அறுசுவைகள். இவை நாவாகிய பொறி வழியாக ஒருவர் உள்ளத்தே தோன்றும்  உணர்ச்சிகள். இவ்வுணர்ச்சிகளைத் தரும் சுவைப் பொருள்கள் முறையே கரும்பு,  வேம்பு, புளி, உப்பு, கருக்காய், மிளகு போன்றவை.

கரும்பினைச்  சுவைக்கும் போது விருப்பமும், வேம்பினைச் சுவைக்கும்  போது வெறுப்பும் தோன்றுவதை உள்ளக் குறிப்புகள் எனலாம்.

இத்தகைய உள்ளக் குறிப்புகளைக் கொண்டு இச்சுவையுணர்ச்சிகள்  வெளிப்படுங்கால் முகமலர்ச்சி, முகச்சுளிப்பு முதலாய மெய்க்குறிகளை “விறல்;” அல்லது “சத்துவம்” என்பர்.

“விறல்பத்து வகைப்படும். அவை மெய்ம்மயிர் சிலிர்த்தல், கண்ணீர்  வார்தல், நடுக்கமெடுத்தல், வியர்த்தல், தேற்றம், களித்தல், விழித்தல், வெதும்பல்,  சாக்காடு, குரற்சிதைவு என்பன. அவ்விறல் சுவைகளிலே மனக்குறிப்பு உளதாய வழி உடம்பிலே தோற்றும் உடம்பினும் முகத்துமிகத் தோற்றம் முகத்தின்  மிகத்தோற்றும் கண்ணில் கண்ணின் மிகத்தோற்றும் கண்ணின் கடையகத்து.  இவை எட்டென்பது வடநூலார் மதம்.

இங்ஙனம் இலக்கண நூலார் கூறும் சுவைக்கப்படும் பொருள், சுவை,  குறிப்பு, விறல் என்பனவற்றையே உளவியலார் முறையே பொருள் புலன்காட்சி (Perceptionn), பொது உணர்வு அனுபவம், உடல்நிலை மாறுபாடுகள் (Organic States) என்பர்.

“மெய்ப்பாடு என்பது இலக்கியத்தில் வரும்போது மெய்ப்மைப் பாடாகிறது.  மனித உணர்வு அருவம் அதனைப் பருப்பொருளாக்கித் தர இலக்கியம்  முயல்கிறது. மீண்டும் படிக்கும் உள்ளம் அதனை வாங்கிக் கொண்டு  அருவமாகவே உணர்கிறது. மெய்ப்பட – உருப்பட – மெய்மைப்படத் தோன்றிப்  படிப்பவருக்குச் சென்று சேர்வதற்கு உதவுதலால் இது மெய்ப்பாடு எனப்பட்டது”7  என்பர்.

பேச்சு மொழி தோன்றுவதற்கு முன்பே மனிதன் தன்  கருத்தைப் பிறர்க்கு  உணர்த்துவதற்கு அவனுக்குப் பயன்பட்டவை சைகை மொழியாகிய  மெய்ப்பாடுகளே.

 “மெய்ப்பாடு” குறித்து பிற இலக்கண நூல்கள்.

தண்டியலங்காரம்

பெருங்காப்பிய இலக்கணம் கூறவந்த தண்டியாசிரியர்,

நெருங்கிய சுவையும் பாவமும் விரும்பக்
கற்றோர் புனையும் பெற்றியதென்ப 8 

என்கிறார். எட்டு வகைப்பட்ட சுவையும், மெப்பாட்டுக் குறிப்பும்,  இடைவிடாமல் கேட்போர்  மதிக்கததக்க வகையில் புலவரால் புனையப்படுதல்  பெருங்காப்பியம் என்கிறார்.

உண்ணிகழ் தன்மை புறத்துத் தோன்ற 
எண்வகை மெய்ப்பாட்டின் இயல்வது சுவையே 9

என்று பாடலுக்கு அணி செய்கின்ற சுவையணி நிலையில் வைத்து  மெய்ப்பாட்டைக் குறிப்பிடுகின்றார். எட்டு வகைப்பட்ட மெய்ப்பாட்டானும் நடப்பது  சுவையென்னும் அலங்காரம் என்கிறார்.

அடிக்குறிப்பு: 

4. “Meyppatu means of passion or sentiment, by gesture or any other signs as tears for sorrow, the erection of thehairs of the body from love, joy, transport, experience of truth. etc. Here it demotes physical manifestations”. S.V.Sbramanian, Tolkappianin English Content and Cultural Translation. p.502.
5. உ.வே.சா.ஐயர் (ப.ஆ.), சிலப்., 11.84.
6. தமிழண்ணல், தொல்காப்பியரின் இலக்கியக் கொள்கை. ப.53.
7. தண்டி., பொதுவணியியல், பா.8.
8. தண்டி., பொருளணியியல், பா.18.அந்த எட்டு வகை மெய்ப்பாடுகள் எவை என்பதை,

அவை தாம்

வீர மச்ச மிழிப்பொடு வியப்பே
காம மவல மருத்திர நகையே 

என்று குறிப்பிடுகிறார். இவற்றை

தொல்காப்பியம்

தண்டியலங்காரம்

நகை

அழுகை

இளிவரல்

மருட்கை

அச்சம்

வெகுளி

பெருமிதம்

உவகை

நகை

அவலம்

இழிப்பு

வியப்பு

அச்சம்

உருத்திரம்

வீரம்

காமம்

என வகைப்படுத்தலாம்.

தொல்காப்பியம் கூறும் மெய்ப்பாட்டிற்கான நிலைக்களன்கள் தண்டியில்  விரிவாகப் பேசப்படவில்லை. இரண்டு நூலிலும் மெய்ப்பாடுகள் செய்யுள்  உறுப்புகளாகக் கூறப்பட்டுள்ளன. வடமொழியை அடியொற்றி தண்டி  எழுதப்பட்டாலும் “சாந்தம்” எனும் மெய்ப்பாட்டினைத் தவிர்த்து மெய்ப்பாடுகள்  எட்டு எனத் தொல்காப்பியத்தை அடியொற்றியே குறிப்பிடுகிறது.

அடிக்குறிப்பு:

1. தண்டி., பொருளணியியல், பா.19.வீரசோழியம்  

மெய்ப்பாடாவது கண்டது போலத் தோன்றும் கருத்து. இவை  நாட்டியத்திலும், காப்பியத்திலும், செய்கைத் திறத்தினாலும், சொல் திறத்தினாலும்,  தூண்டப்பட்ட வாசனையின் திண்மையால் தம்மவையே போல அனுபவ நிலையில்  வந்து ஆனந்தமாக நிற்பன என்கிறது.

தொன்னூல்

சுவையணி என்ப கடுஞ்சினம் காமம்
வியப்பு அவலம் இழிவு நகை என
எண் மெய்ப்பாட்டின் இவையெனக் கூறி
உள்மெய்ப்பாட்டை உணர்த்தித் தோற்றலே

என்கிறது. உள்மெய்ப்பாடாகிய சுவையின் காரணமாக மெய்யின் புறத்தே  அமைவது மெய்ப்பாடாகும்.

முடிவுரை:  

உளவியல் நோக்கில் மெய்ப்பாட்டியலை ஆய்வு மேற்கொண்டதன்  வாயிலாக அறியவரும் முடிவுகளாவன:

மெய்யின்கண் உண்டாகிய உணர்வு பிறர்க்குப் புலப்படும் வகையில்  வெளிப்படுவது மெய்ப்பாடு ஆகும். காப்பியக் கவின் மெய்ப்பாட்டில் தங்கியுள்ளது  எனலாம்.

மனித மூளையின் வளர்ச்சியானது தனது பாரம்பரியத் தன்மையோடு, சமூக  நிகழ்வுகளையும் உள்வாங்கிக் கொண்டு அன்றாடம் தன்னைப் புதுப்பித்துக்  கொள்கிறது. உடலின் உள் உறுப்பாகிய மூளையின் பகுதிகள் ஊனமுற்றால்  ஏற்படும் விளைவால் மனிதர்க்குரிய இயல்புகளில் இருந்து மாறுபட்டவனாகிறான்  மனிதன். இதற்கான காரணங்கள் அறிய உளவியல் நமக்குப்  பெருந்துணைபுரிகிறது.

முதல் மெய்ப்பாடாக நகைச்சுவையையும், இறுதி மெய்ப்பாடாக உவகைச்  சுவையையும் தொல்காப்பியர் கூறுதல் அரவது பழுத்த உளவியல் தேர்ச்சியைக்  காட்டும். இத்தேர்ச்சியின் விளைவே, திருவள்ளுவர் ‘நகையும் உவகையும்  கொல்லும் சினம்’ என முதலும் முடிவுமாகியவை இணைத்த இணைப்பாம்.

அனைவரும் விரும்பும் நகைச்சுவையை முதலாவதாகவும் அதற்கு  மறுதலையாகிய அழுகையை அதன்பின்னும் அழுகையை ஒத்த இளிவரலை  அடுத்தும், தான் இளிவரலுற்றால் பிறர் பொருளை வியப்பதால் பின்வியப்பையும்,  வியப்புப் பற்றியும் அச்சம் பிறக்குமாதலால் பின் அச்சத்தையும், அச்சத்திற்கு  மறுதலையாகிய வீரத்தை அதன்பின்னும், வீரத்தின் பயனாகிப் பிறர்க்கு வரும் வெகுளியை அதன்பின்னும், வெகுளிக்கு மறுதலையான உவகையை இறுதியிலும்  வைத்திருக்கும் அமைப்பு முறையே உளவியல் தன்மையில் அமைந்துள்ளது  எனலாம்.

படைப்பின் தொடக்கம், வளர்ச்சி, முடிவு ஆகியவற்றில் படைப்பாளரின்  ஆளுமையும், அகமனச் சார்புகளும் மிகுதியாய் ஆளுமை செய்கின்றன. ஒரு  படைப்பாளர்கள் படைப்புகளை ஒப்ப நோக்கி அப்படைப்புகளில்செயல்படும்  அமைப்பொழுங்கைக் கண்டறிய முடியும்.அவ்வகையில் தொல்காப்பியரின் உளவியல் ஆளுமை அவர் எண் வகை  மெய்ப்பாடுகளை வகைப்படுத்தியிருக்கும் விதத்திலேயே அறிந்து கொள்ள  முடிகிறது.

உவகைச் சுவையனுள் ஒன்றாக “புணர்வு” என்பதைக் குறிப்பிடும்  தொல்காப்பியர் தேர்ந்த மருத்துவராகவே விளங்குகிறார். ‘அல்லல் நீத்த உவகை’ என்பதால் உவகை ஆண், பெண் இருபாலருக்கும் ஒப்ப இருக்க வேண்டியது  என்று கோடிட்டுக் காட்டுகிறார். இந்நாள் மருத்துவ அறிவியலும் இதனை  வலியுறுத்துகிறது.

பிறந்தகணம் முதல் உள்ளுணர்ச்சிகள்  இயக்கங்களுக்கு உள்ளாகின்றன அவற்றின் தேவைகள் அனுபவத்தின் வழியில்தான் பூர்த்தியாகின்றன. ஒவ்வொரு  உணர்ச்சிகளுக்கென்றும் தனித்தன்மைகள் இருப்பினும் அனைத்திற்கும் ஆற்றல்  வழங்கும் பாலுணர்ச்சி உளக்கட்டமைப்பிற்கும், ஆளுமைக் கட்டமைப்பிற்கும்  ஆதாரமாகின்றது. உளவியறிஞர்களின் இந்த முடிவுகள் மெய்ப்பாட்டியலின்  எதிரொலியாக அமைந்திருக்கின்றன. மனித ஆளுமையை பசி, தாகம்,  பாலியல்தேவை என்ற அடிப்படை இயல்பூக்கங்கள் நிர்ணயிக்கின்றன என்ற  பிராய்டின் கருத்து இங்கு எண்ணத்தக்கது.

ஒரு தனிமனிதனின் பால்நிலை பற்றிய அறிவும், அவருக்குள் ஏற்படுகின்ற  பாலியல் மாற்றங்கள், வளர்ச்சி பற்றிய எண்ணங்களும் உள்ளத்தில்  கருத்துக்களாகப் பொதிக்கின்றன. உடல்தேவையை நிறைவு செய்ய மட்டுமே

பாலுணர்ச்சி என்ற நிலையில்லாமல் மனநிறைவுக்காகவும் பாலுணர்ச்சி  இடம்பெறுகின்றது. இக்கட்டத்தில் உள்ளம் முதல் நிலையிலும், உடல் இரண்டாம்  நிலையிலும் அமைந்து விடுகின்றன. இதனால் கருத்துக்களின் உறவுகள் வழியாக  இன்புற உள்ளம் நாடுகிறது. இது எந்த உயிரினங்கிலும் இல்லாத சிறப்பு. எனவே,  மனிதனுக்குரிய சிறப்புப்பண்பென்று உளவியல் குறிப்பிடுகின்ற  ‘உளப்பாலுமையை’ பல மெய்ப்பாடுகள் வழி தொல்காப்பியர் கட்டியுள்ளார்.

தலைவனைப் பிரிந்த நிலையில்  தனிமையில் தலைவியின் மெப்பாடுகளாக  இன்பத்தை வெறுத்தல், துன்பத்துப் புலம்பால் முதலிய இருபதைக் குறிப்பிடுவார்  தொல்காப்பியர். இவை பெண்ணிய உளவியலை கண்முன்னே காட்டி நிற்கின்றன.  பெண்ணின் உணர்வுகளும் போற்றப்பட வேண்டியவையே, பாதுகாக்கப்பட  வேண்டியவை. ஆனால், உலகத்தின் ஒரு பாதியான பெண் நாடுகள் தோறும்.  இனங்கள் தோறும் வெவ்வேறு வழிமுறைகளில் ஒடுக்கப்படுகின்றாள். சமூகத்தில்  நிலவி வரும் பாலின வேற்றுமை அடிப்படையிலான ஆழ்மனப் பாதிப்புகளும்,  விடுதலை நோக்கிய பெண்மனப் போராட்டங்களும் கூர்ந்து கவனிக்கப்பட  வேண்டியவை, என்ற கருத்துரு மெய்ப்பாட்டியலில் பதிவாகி உள்ளது. ஆய்வில்  பெண்ணிய உளவியலைச் சித்தரிக்கும் இலக்கியங்களும், நாளிதழ் செய்திகளும்  சுட்டிக்காட்டப் பெற்றுள்ளன.குடும்ப அமைப்பு என்பது காலங்காலமாக இருந்து வரும் மரபு சார்ந்த  மனப்போக்குகளால் அமைக்கப் பெறுவது. கணவன் – மனைவி இருவரின் உள  நடத்தைகளால் அவர்களுடைய உறவுமுறையில் ஊடாட்டம் நிகழ்கிறது. அதனால்  அவலமும், விரக்தியும், தாங்கள் யார் என்பது பற்றிய சிக்கலும், கொலை  உணர்வும், தற்கொலை உணர்வும் எனப் பல்வேறு நடத்தைப் போக்குகள்  உருவாகின்றன.

இவற்றை மனத்தில் கொண்டே, காதலுக்காக மெய்ப்பாடுகளாக பிழையைப்  பொறுத்துக்கொள்ளாமை, கொடுமை, தன்னைப் பெருமையாகப் பாராட்டல்,  புறங்கூறுதல், வடுவாக்கும் சொல், மறதி, சோம்பல், குடிப்பெருமை பேசி  இன்புறுதல், நிலையில் தாழ்வெனக் கருதுதல், ஒப்பிட ;டுக் காட்டிக் பேசுதல் என்று  நிரல்படக் கூறியிருக்கும் தன்மை தொல்காப்பியரை உளவியல் வல்லுநராகவே  காட்டுகிறது. இவற்றையெல்லாம் உணர்வுடை மாந்தர் உணர்வர். பிறர் எண்ணி அறிதல் அரிது என்று அவர் கூறுவதும் சுட்டிக்காட்டப் பெற்றுள்ளது.

எதிர்வரும் காலங்களில் அறிவியல் நோக்கில் தமிழ் இலக்கியங்கள்  ஆராயப்படவும், இருதுறை ஆராய்ச்சிகள் பெருகவும் குறிப்பாக இலக்கண  ஆய்வுகள் பெருகவும் இவ் ஆய்வு வழிகோலுகிறது.

முனைவர் இரா.ஜெயஸ்ரீ,  

உதவிப் பேராசிரியர், 

கல்வியியல் துறை, 

சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம், 

தஞ்சாவூர். 

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.2021 – 05.05.2021 வரை மட்டும்)